Published:Updated:

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வாசகர்கள் குதூகலம்

‘திருப்புகழ் பூஜை பஞ்சாமிர்தம்... வில்லுப்பாட்டு தேவாமிர்தம்!’வி.ராம்ஜி

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வாசகர்கள் குதூகலம்

‘திருப்புகழ் பூஜை பஞ்சாமிர்தம்... வில்லுப்பாட்டு தேவாமிர்தம்!’வி.ராம்ஜி

Published:Updated:

'தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்’ என்று சொல்வார்களே... சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், அப்படியொரு பிரமாண்டத் திருவிழாக் கூட்டத்தால் ஏழு நாட்களாகத் ததும்பி வழிந்துகொண்டிருந்தது. 

ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை அறக் கட்டளை அமைப்பு, வருடந்தோறும் இந்து ஆன்மிக சேவை மற்றும் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த முறை 7வது ஆண்டாக இந்த விழா, கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஏழு நாட்கள் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

ஆசிரியர்களையும், பெண்களையும், பசுக்களையும் போற்றவேண்டும் என வலியுறுத்து கிறது இந்து மதம். அதேபோல் இயற்கையைப் பாதுகாப்பதும், தேசத்தின்மீது பற்று வைப்பதும், நாட்டைப் பாதுகாப்பவர்களை மதிப்பதும் மிக மிக முக்கியம்! இவற்றை இந்தத் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், ஆசிரியர்களைப் போற்றித் துதிக்கும் ஆச்சார்ய வந்தனம். சக்தியின் வடிவமாகக் கொண்டாடப்படும் பெண்களை வணங்கி மகிழும் கன்யா வந்தனம், இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவுமான விருட்ச வந்தனம், தேசப்பற்றை உணர்த்தும் வகையிலான பாரதமாதா வந்தனம், தேசத்தைக் காக்கும் வீரர்களுக்கு பரம்வீர் வந்தனம் என, மாணவ மாணவிகளையும் இளைய தலைமுறையினரையும் கருத்தில்கொண்டே, ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருபக்கம் மாணவர்களின் கூட்டம் என்றால், இன்னொரு பக்கம் ஆன்மிகத்தை பக்தியாகவும், சேவையாகவும் கொண்டு செயலாற்றி வரும் அன்பர்களின் அமைப்புகள், ஆன்மிகப் புத்தகங்கள் என பிரமாண்டக் கூட்டத்துடன் மாநாடு போல் நடைபெற்ற இந்த ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, இளைய சமுதாயத்துக்கு நிச்சயம் ஒரு புத்துணர்வை ஊட்டும் என்பதிலும், ஒரு புதிய பாதையை வகுத்துத் தரும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வாசகர்கள் குதூகலம்

கோலாகலமாக நடைபெற்ற ஆன்மிக சேவை கண்காட்சியின் ஓர் அங்கமாக 3ம் நாள் மதியம், அதாவது 5.2.15 வியாழக்கிழமையன்று திருப்புகழ் மகா மந்திர பூஜையையும், 'கந்தன் கருணை’ என்னும் தலைப்பில் வில்லிசைக் கச்சேரியையும் நடத்தியது 'சக்தி விகடன்’.

விழா மேடையில், விநாயகர், சிவபெருமான், அம்பாள் என இந்தப் பக்கம் மூன்று தெய்வங்களின் படங்களும், அந்தப் பக்கத்தில் ஸ்ரீஒமகாவிஷ்ணு, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீஅனுமன் ஆகிய தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்க, நடுநாயகமாக, திருப்போரூர் முருகப்பெருமான் கம்பீரமாகக் காட்சியளித்தார்.

ஏழு ஸ்வாமிகளுக்கு உகந்த தளங்களாக அருகம்புல், வில்வம், செண்பகம், செந்தாமரை, பவழமல்லி, கதம்பம், துளசி என வைக்கப்பட்டிருக்க, அவரவருக்கும் உரித்தான பிரசாதங்களாக சுண்டல், சீரக சம்பா சாதம், பாயசம், தினைமா, புளியோதரை, நெய் அப்பம், மிளகு வடை என நைவேத்தியங்களும் வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து ஒவ்வொரு ஊரிலும் திருப்புகழ் மகா மந்திர பூஜையை நடத்தி வரும் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன், இங்கேயும் இந்த பூஜையை மிகச் சிறப்பாக நடத்தித் தந்தார்.

ஒவ்வொரு ஸ்வாமி குறித்தும் திருப்புகழில் சொல்லப்பட்டுள்ள வரிகளைச் சொல்லி, ஸ்வாமியின் பெருமைகள், அந்த ஸ்வாமி குடிகொண்டிருக்கும் தலத்தின் விசேஷங்கள், இந்தப் பூஜையைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என அவர் விவரித்தபோது, மொத்தக் கூட்டமும் பேச்சிலும் பூஜையிலுமாக லயித்துப் போனது.

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வாசகர்கள் குதூகலம்

நைவேத்தியம் செய்து முடித்து, வந்திருந்த வாசகர்களின் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷத்துடன் முருகக் கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

''வேல்மாறல் பாராயண பூஜையைப் போலவே இந்த திருப்புகழ் மகா மந்திர பூஜையும் மனதுக்கு நிம்மதியைத் தரும் விதமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து இந்த பூஜையை ஒவ்வொரு ஊரிலும் சக்திவிகடன் நடத்தவேண்டும்'' என வாசகர்கள் பலரும் கோரிக்கை விடுத்தார்கள்.

அதையடுத்து, தன் இசையாலும் குரலாலும் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போட்டார் வில்லிசைக் கலைஞர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம். மகன் காந்தி, மகள் பாரதி, பேரன் கலைமகன் மற்றும் குழுவினருடன் சேர்ந்து இவர் நடத்திய வில்லிசையும் சொல்லிசையும் கேட்போரைச் சுண்டி இழுத்தது. வேடுவர்களிடம் இருந்த வில் எனும் கொலைக்கருவி எப்படி இசைக்கருவியானது என்பதை அவர் நகைச்சுவையோடு விளக்கிய விதத்தில், மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை இங்கே நடத்தப்போகி றோம் என்று கேட்டு அணுகியபோது, ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ராஜலட்சுமி, 'தாராளமாக நடத்துங்கள். எங்களுடன் சக்திவிகடனும் இந்த ஆன்மிக விழாவில் இணைவதில் பெருமையும் மகிழ்வும் அடைகிறோம்' என்று முழு மனத்துடன் சம்மதம் தெரிவித்தார்.

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வாசகர்கள் குதூகலம்

திருப்புகழ் மகா மந்திர பூஜைக்கான ஸ்வாமி படங்களை அகில உலக ஷீர்டி சாயிபாபா அறக்கட்டளையின் நிறுவனர் லிங்கமும், இந்த பூஜைக்குத் தேவையான பூக்களை திருச்சி வாசகர் பரிமணம் காத்த பெருமாளும், பூஜையின் நிறைவில் வாசகர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை வாசகர் எழில்வண்ணன் மற்றும் உமாசங்கர் கேட்டரிங் சர்வீஸ் வேங்கடசுப்ரமணியனும் வழங்கினார்கள். திருக்கயிலாயம், மானசரோவர் என புண்ணிய ஸ்தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீஸ், சுப்பு ஆறுமுகத்தின் அற்புதமான வில்லிசைக் கச்சேரியை வழங்கியது.

''திருப்புகழ் மகாமந்திர பூஜை பஞ்சாமிர்தம் என்றால், சுப்பு ஆறுமுகத்தோட வில்லுப்பாட்டு, தேவாமிர்தம்! இப்படி ஒரு மகத்தான பூஜையையும் அற்புதமான வில்லிசைக் கச்சேரியையும் ஏற்பாடு செஞ்ச சக்திவிகடனின் பணி தொடரட்டும். இதுபோன்ற விழாக்களும் பூஜைகளும் எல்லா ஊர்களிலும் நடக்கட்டும். அதுல எப்படியெல்லாம் நாங்க பங்கெடுத்துக்க முடியுமோ, அப்படி சக்திவிகடனோடு கைகோக்கத் தயாரா இருக்கோம்'' என்று உற்சாகத்துடன் சொன்னார்கள் வாசகர்கள்.

அவர்களின் இந்த ஆர்வம் நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது.

வாருங்கள் வாசகர்களே, ஆன்மிகத் தேரை ஊர் கூடி இழுப்போம்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism