ஸ்ரீ மத்வ விஜயம்
த்வைத சித்தாந்தத்தின் சிற்பியும் அவதார புருஷருமான ஸ்ரீ மத்வரின் புனித வாழ்க்கை வரலாறுகளைக் கண்டு இன்புறு முன்பு, உடுப்பி ஸ்ரீ அநந்தேச்வரர் ஆலயத்தில் உள்ள அம்மகானின் திவ்ய உருவச் சிலையை இங்கு தரிசிக்கிறோம்.
ஏறக்குறைய எழுநூறு வருடங்களுக்கு முன் பரசுராம பிரதேசத்தில் உடுப்பியை அடுத்துள்ள பாஜக க்ஷேத்ரம் என்னும் திவ்ய ஸ்தலத்தில், தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்து வந்த ஓர் அன்யோன்ய தம்பதிக்குப் புத்திரனாக வாசுதேவன் அவதரித்தான். ஜனன காலத்திலும், அதற்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த சில தெய்விக சுப சூசகங்களிலிருந்து வாசுதேவன் வாயுபகவானின் அவதாரம் என ஊரார் கொண்டாடிக் குதூகலித்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாசுதேவனின் உபநயனம் சாஸ்திர ரீதியாக நடந்தது. ஒரு நாள் வழக்கம் போல் வாசுதேவன் தன்னந்தனியாகக் குன்றின் உச்சியில் இருந்த துர்கையின் ஆலயத்துக்குச் சென்றான். அக்குன்றில் மணிமான் என்ற அசுரன் பிரும்மாண்டமான சர்ப்ப உருவத்தில் வாசம் செய்து கொண்டு ஊராருக்குத் தொல்லை விளைவித்து வந்தான். துர்கை தரிசனத்திலும், குன்றின் மீது சுற்றியலைந்து பொழுது போக்குவதிலும் உற்சாகம் காட்டி வந்த வாசுதேவன், ஒரு நாள் அசுரன் மணிமானிடம் சிக்கினான். ஆனால் வாசுதேவனின் கால் விரல் ஒன்றே அசுரனின் ஆவியைப் போக்கிவிட்டது.

உபநயனத்தையடுத்து வாசுதேவனின் குருகுல வாசம் ஆரம்பமாகியது. கண்டவரும் கேட்பவரும் பிரமிக்கும் அளவுக்கு வாசுதேவன் குருகுலத்தில் முன்னேறவில்லை. சக மாணவர்கள், கருத்துடன் பாடங்களைக் கேட்டும் படித்தும் வரும்போது, வாசுதேவனின் கவனம் விளையாட்டிலும் குறும்புத்தனத்திலும் சென்று கொண்டிருந்தது. குருதேவர் ஒரு நாள் பாடங்கள் முடிந்தபின் வாசுதேவனின் அசிரத்தையைக் கண்டித்தார். அந்தக் கணமே அவன், அன்று வரை நடந்து முடிந்த பாடங்களோடு இனி நடக்கவிருக்கும் பாடங்களையும் தெளிவாகச் சொல்லி, குருவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினான்.

குருகுல வாசம் முடிந்தது. வாசுதேவனின் மனம் துறவறத்தை நாடியது. தந்தை மத்யகேஹருக்கு வாசுதேவனைப் பிரிய மனமில்லை. அவர், அவன் முடிவை ஏற்கவில்லை. சிறிது காலம் வாதப் பிரதிவாதங்களிலும் சின்னஞ்சிறு குடும்பப் பூசல்களிலும் வாசுதேவனின் சன்யாச ஆசிரமப் பிரவேசம் தடைப்பட்டு நின்றது. தந்தையின் கொள்கையை எதிர்த்தபோதிலும் வாசுதேவன், அவருக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும்வரை தீர்மானத்தை ஒத்திப்போடுவதாகக் கூறினான். உரிய காலத்தில் அந்தச் சம்பவமும் நிகழவே வாசுதேவன், அச்சுதப்ரேக்ஷாசார்யாரை குருவாக வரித்து அவரிடம் ஆசிரமம் பெற்றான்.
உடுப்பி அநந்தேச்வரர் ஆலயத்தில் நடந்த இந்த வைபவத்தின்போது 'பூர்ணப்ரக்ஞர்’ என்று வாசுதேவனுக்கு நாமகரணம் செய்விக்கப்பட்டது. சன்யாச ஆசிரமத்தில் பூர்ணப்ரக்ஞர் என்ற பெயருடன் பிரவேசித்த வாசுதேவனுக்கு ஸ்ரீ ஆனந்த தீர்த்தர்,ஸ்ரீ மத்வர் என்ற பெயர்கள் வரலாயின. சிறிது காலம் உடுப்பியில் தங்கியிருந்தவர், பிறகு தென்னக யாத்திரை சென்று திரும்பினார். பிறகு, நூதனமான தனது கருத்துக்களைப் புகுத்தி கீதைக்கு சிறந்த பாஷ்யம் ஒன்றைச் செய்து, குருநாதரிடம் சமர்ப்பித்து ஆசிபெற்றார்.

தொடர்ந்து பிரும்ம சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்ய விழைந்தார். அந்த மகத்தான கைங்கரியத்தில் ஈடுபடுமுன் ஸ்ரீ வியாஸ பகவானின் அருளை நேரில் சென்று பெற விரும்பி இமயமலைச் சாரலுக்கு யாத்திரையைத் துவங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிஷ்யர்களுடன் இமயத்தை அடைந்து, வானளாவி நின்ற வெண்பனிச் சிகரங்களைக் கடக்க முற்பட்டார். சிஷ்யர்கள் திகைப்புற்று நிற்கையில் வாயு பகவானின் அவதாரமான ஸ்ரீ மத்வர், சிகரத்துக்கு சிகரம் அமானுஷ்ய சக்தி கொண்டு தாவிச் சென்றார்.

ஸ்ரீ வேத வியாஸரின் தரிசன பாக்யம் ஸ்ரீ மத்வருக்குக் கிட்டியது. அந்த திவ்ய சந்நிதியிலேயே தாமும் இருக்க வேண்டி ஸ்ரீ வியாஸரிடம் வரம் கோரினார். ஆனால் மகரிஷி வேதவியாஸர் அதற்குரிய காலம் அதுவல்ல என்றும், சிறிது காலம் ஸ்ரீ மத்வர் புனித காரியங்களைச் செய்து கொண்டு, ஜனங்களோடு வாழ்ந்து வர வேண்டியது அவசியமென்றும் கூறி, ஸூத்ரபாஷ்யம் செய்வதற்கான உபதேசங்களையும் அருளினார்.ஸ்ரீ வியாஸ பகவானின் ஆக்ஞையைச் சிரமேற் கொண்டு திரும்பிய ஸ்ரீ மத்வர் காலங் கடத்தாது ஸூத்ர பாஷ்யம் செய்து முடித்தார்.