Published:Updated:

சக்தி சங்கமம் - 3

வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சுவாமி சுகபோதானந்தா... (தொடர்ச்சி)

சக்தி சங்கமம் - 3

வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சுவாமி சுகபோதானந்தா... (தொடர்ச்சி)

Published:Updated:

''சங்கீதம், கல்வி என எதைக் கற்றுக் கொள்வதற்கும் குரு என்பவர் மிக மிக அவசியம். குருதான் நமக்கு மார்க்க தரிசனம். நல்வழிப் பாதையைக் காட்டக்கூடியவர். குரு என்பவர் வழிகாட்டி. நம் அறியாமையை அகற்றுபவர். எனவே, அவருக்கான மரியாதையை  நாம் அவருக்கு அளித்தாக வேண்டும். ஆனால் தவறான ஒருவரை குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவரை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி அவதிப்படுபவர்களே இன்றைக்கு அதிகம்'' என்று சுவாமி சுகபோதானந்தா சொன்னதும், வாசகர்களிடையே மெல்லிய அமைதி! அடுத்த கேள்வியை எதிர்கொள்ளத் தயாரானார் சுகபோதானந்தா. ஒவ்வொருவர் முகத்தையும் ஊடுருவிப் பார்த்தார். 

? 'உலகம் ரொம்பவே மாறிவிட்டது. மக்கள் அதைவிட வேகமாக மாறிவிட்டார்கள். இன்றைய தலைமுறை மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'

வாசகர் சுந்தரம் இந்தக் கேள்வியைக் கேட்டதும், சுகபோதானந்தா, ''மாற்றம் தான் வாழ்க்கை. அதாவது 'சேஞ்ச்’தான் வாழ்க்கை!'' என்று சொல்லி, சுட்டு விரலைக் கட்டைவிரலால் சுண்டி, காசுக் கான ஜாடையைச் செய்ய... வாசகர் களிடம் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மாற்றம் வேண்டியதுதான். காலத் துக்குத் தக்கபடி மாறுவதில் தவறே இல்லை. ஆனால், அந்த மாற்றத்தில் மனிதநேயமும், பேரன்பும், ஒற்றுமையும் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இப்போது எனக்கு ஐம்பதைத் தொட்டு விட்ட வயது. என் 24 வயதில் மிக வேகமாக, ரொம்ப தூரம் ஓடுவேன். இப்போது என்னால் அப்படி ஓட முடியுமா? முடியாதுதானே! இந்த உண்மையை, இந்த மாற்றத்தை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

சக்தி சங்கமம் - 3

இப்போதைய மாற்றங்களில் எதை எதை ஏற்பது? எதை எதை விடுப்பது? நம் வயதுக்குத் தகுந்த மாதிரியான விஷயங்களைக் கற்றுக் கொள்வது எப்படி? இதையெல்லாம் ஒரு குருவால்தான் நமக்குத் தெளிவாகப் புரியவைக்க முடியும்!'' என்றார் சுகபோதானந்தா.

? 'ஓடி விளையாடு பாப்பா' என்றார் மகாகவி பாரதி. ஆனால், இன்றைக்குக் குழந்தைகள், வீடியோ கேம்ஸில்தான் விளையாடுகிறார்கள். கம்ப்யூட்டரிலும் செல்போனிலும்தான் விளையாடுகிறார்கள். இதை என்னவிதமாகப் பார்க்கிறீர்கள்?’  என்று வாசகர் ஜி.பாண்டி கேட்டார்.

''ரொம்ப மோசமான சூழலில் இதுவும் ஒன்று. உடல், புத்தி, உணர்வு என்று நமக்கு இருக்கிறதுதானே! இந்த மூன்றும் கலந்த அந்தக் கால விளையாட்டுகள் எல்லாமே உடல்ரீதியான பலத்தையும், புத்திக்குள் தெளிவையும் உணர்வு ரீதியான ஓட்டத்தையும் கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது.

கம்ப்யூட்டர் கேம்ஸ் என்பது இன்டெலக்ச் சுவல் விளையாட்டு. புத்திசாலித்தனம் மட்டும் நம் வாழ்க்கைக்குப் போதாதே! உடலில் ஆரோக்கியம் இருந்தால்தானே வாழ முடியும். அதை அந்தக் கால விளையாட்டுகள் கொடுத்தன.

இந்தக் காலத்தில் குழந்தைகளை வெளியிலேயே விடுவதில்லை. விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் கையில் ஒரு செல்போனையோ, கம்ப்யூட்டர் மவுஸையோ கொடுத்துவிட்டு, ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்.

சக்தி சங்கமம் - 3

இப்போது, எந்த விஷயமாக இருந்தாலும், புத்தியைக்கொண்டே பார்க்கிறோம்; செயல் படுகிறோம். இதயத்தின் வழியே பார்ப்பது அரிதாகிவிட்டது. கல்விச் சூழலும் அப்படித்தான் மாறிவிட்டது. பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் பாருங்கள், 'ஹெட் ஆஃப் தி டிபார்ட்மென்ட்’ என்றுதான் இருக்கிறது. 'ஹார்ட் ஆஃப் தி டிபார்ட்மென்ட்’ என்று எங்கும் கிடையாது.

கோயிலுக்குப் போவதோ, கணவன் மனைவி என்று ஒருமித்திருப்பதோ, சக மனிதர்களுடன் பழகுவதோ... எல்லாமே இதயத்தில் இருந்து செயலாற்ற வேண்டிய விஷயங்கள். ஆனால், இப்போது எங்கும் புத்தி, எதிலும் புத்தி என்றாகி விட்டது. பெற்றோர்தான், மனசு வைக்க வேண்டும். அவர்கள் மாறினால், குழந்தைகள் அருமையாக வளருவார்கள்.''

? ''இன்றைக்குக் கணவன்் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை. அவர்களைப் பெற்றவர்கள் கிராமங்களில் இருக்க, இங்கே குழந்தைகள் தனிமையில்! இதுகுறித்து உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்களேன்?'’  இது வாசகர் ராஜசேகரனின் கேள்வி.

''முன்பு, இப்படியெல்லாம் இல்லவே இல்லை. ஏனென்றால், அன்றைய வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. வாழ்வதும் எளிது. இன்று உலகம் வெகு வேகமாக மாறிவிட்டது. இன்றைக்கு நமக்கு லேப்டாப் வேண்டும்; செல்போன் வேண்டும்; ஐபாட் வேண்டும். வீட்டிலும் மெஷின், பாக்கெட்டிலும் மெஷின். எது இல்லாமலும் முடியாது. எல்லாமே வேண்டும். அவற்றை வாங்குவதற்குப் பணம் தேவை. அதற்கு இரண்டு பேரும் வேலைக்குப் போனால்தான் முடியும் என்கிற பரிதாபம்!

முன்பு, குவாலிட்டி, குவான்டிட்டி இரண்டுக் குமான நேரங்கள் இருந்தன. அதாவது, தேவையான நேரமும் இருந்தது. தகுதி வாய்ந்த நேரமாகவும் அதை மாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றைக்கு, அதிகப்படியான நேரம் என்பதே இல்லை. இருக்கும் சொற்ப நேரத்தைத் தகுதி வாய்ந்த நேரமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். அவசரம்.

கணவனோ மனைவியோ... யார் வேலைக்குப் போனாலும் ஆபீஸை வீட்டுக்குள் கொண்டு வரவே கூடாது. வீட்டுக்கு வந்தால், கணவனாக, மனைவியாக, அப்பாவாக, அம்மாவாக வாழ வேண்டும். உதவி மேலாளராக, ஸ்டெனோவாக, கிளார்க்காக இருக்கக் கூடாது. இந்தத் தெளிவு நம்மிடம் இருந்தால், ஒரு குழப்பமும் இல்லை.''

? ''உணவுக்கும் மன உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா?’' என்று கேட்டார் வாசகி சாந்தி.

''நிச்சயமாக உண்டு. தாய்ப்பாலின் மகத்துவத் தையும் அந்தப் பாலினூடே பொதிந்து கிடக்கிற பாசத்தையும் நாம் அறிவோம்தானே! அந்த அம்மாவின் 'லவ்' மிகச் சத்தான உணவு. அதிகப்படியான எனர்ஜி! அம்மா கையால் சமைத்துப் போடும் உணவின் வழியே அவளின் அன்பும் நம்மை வந்தடைகிறது. 'ஞானம் அன்னம்’ என்று ஒரு வாசகம் உண்டு. அதாவது, அறிவுகூட உணவுக்கு இணையானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்பாகச் செய்து கொடுக்கிற உணவுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதில் ஆரோக்கியமும் கலந்திருக்கிறது.

என் அம்மாவுக்கு 82 வயது. ஆஸ்ரமத்தில் நான் என்ன சாப்பிடுவேன் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை அப்படியே எனக்குச் செய்து பரிமாறினார். அவரின் அதீத அன்பில் நான் நெகிழ்ந்து போனேன். அந்த உணவில், அம்மாவின் அன்பை உணர்ந்தேன்.

ஹோட்டலில் சுவையான உணவு சாப்பிட் டாலும், ஒன்றை நம்மால் உணரமுடியும். அதாவது, அவர்கள் நமக்கு ஏன் சாப்பாடு தருகிறார்கள்? அதுவொரு வியாபாரம். லாபம் சம்பாதிக்க வேண்டும். அவர்களும் வாழ வேண்டுமல்லவா? ஆக, காசு குறித்த சிந்தனையிலும், பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையிலுமே நிறையப் பேர் இருக்கிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட் அப்படித்தான். ஏனென்றால் இது ஃபாஸ்ட் வேர்ல்டு ஆகிவிட்டது அல்லவா! அதே நேரம், சேவை மனப்பான்மையுடன் உணவு வழங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

சக்தி சங்கமம் - 3

அதற்காகத்தான், சாப்பிடுவதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்யச் சொல்கிறது வேதம். உணவை சுத்தமாக்கிக்கொள்ள ஸ்லோகங்கள் கூட இருக்கின்றன'' என்றார் சுகபோதானந்தா.

? ''மனிதனுக்கு மத உணர்வு அவசியமா? ஒருவன் சந்தோஷமாகவும் நிறைவாகவும் வாழ்வதற்கு பத்துக் கட்டளைகள் என்ன, சொல்லுங்களேன்?'’

வாசகி குமுதாவின் கேள்வி இது.

ஒழுக்கத்தை உணர்த்துவதற்கான மார்க்கங் களே மதங்கள். அவற்றிலிருந்து வெளிப்படுவதே மனித உணர்வு. ஆக, மனித உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம். சரி! இனி, பத்துக் கட்டளைகளுக்கு வருவோமா?

அதென்ன பத்துக் கட்டளைகள்? ஏன் அஞ்சு கட்டளைகள் போதாதா? சரி, அதில் எதற்குக் கஞ்சத்தனம்? இருபது என்று வைத்துக் கொள்வோமா? அஞ்சோ, பத்தோ, இருபதோ... கட்டளைகள் எத்தனையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்தோஷமாகவும் நிறைவாகவும் வாழ்வது நம் கையில்தான் இருக்கிறது. நம்முடைய ப்ளஸ்மைனஸ்கள்தான் அஞ்சா, பத்தா, இருபதா... எவ்வளவு கட்டளைகள் என்று தீர்மானிக்கின்றன. இருந்தாலும், நீங்கள் கேட்டதால் ஒரு பட்டியல் போடுவோம்...

1. உலகில் இருக்கிற நிறைய விஷயங்கள் நம்மிடம் இல்லை. போகட்டும்! ஆனால், உலகில் இருக்கிற விஷயங்களில் சில, நம்மிடம் இருக்கிறதுதானே! கார் இல்லை; ஆனால், பைக் இருக்கிறதே! பைக் இல்லை; ஆனால், சைக்கிள் இருக்கிறதே! ஆக, நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மரியாதை செலுத்த வேண்டும்.

2. மூளையாலேயே எதையும் அணுக வேண் டாம். கொஞ்சம் இதயத்தாலும் அணுகிப் பார்ப் போம். 20 வருடங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் எனக்குப் பரிசாக ஒரு லேப்டாப் வழங்கினார். அப்போது எனக்கு அதை இயக்கத் தெரியாது. எனவே, சில காலம் அந்த லேப்டாப்பை பேப்பர் வெயிட்டாகத்தான் பயன்படுத்தினேன். இப்போது லேப்டாப் ஆபரேட் பண்ணத் தெரியும். ஆனால், எது ஒன்றும் கிடைக்கிற காலத்

தில் அதன் அருமையைத் தெரிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டாட வேண்டும். அதுதான் உற்சாகம்.

3. எல்லாவற்றையும் நல்ல நல்ல அனுபவத்துக் கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். 'மனைவி ஊருக்குப் போய்விட்டாள்; சாப்பாட்டுக்குத் திண்டாடுகிறேன்' என்று புலம்பாதீர்கள். முட்டி மோதி, கையைச் சுட்டுக்கொண்டாவது சமைக்கப் பழகுங்கள். இல்லையா... சட்டையை மாட்டிக்கொண்டு, நல்ல ஹோட்டலாகத் தேடுங்கள். இரண்டுமே நல்லதொரு அனுபவம் தான்! சகலத்தையும் ஏற்கப் பழகுங்கள்.

சக்தி சங்கமம் - 3

4. இங்கு யாருக்குத்தான் பிரச்னை இல்லை? பணக்காரருக்கும் பிரச்னை; ஏழைக்கும் சிக்கல்.

'பிராப்ளம் இல்லேன்னாதான் நிம்மதி’,

'பிரச்னை வந்து இம்சை பண்ணுதுப்பா’ என்றெல்லாம் அலுத்துக்கொள்ளக்கூடாது. அந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதே சுவாரஸ்யம்.

வாழ்க்கை என்பது ஒரு புதிர். அந்த முடிச்சை அவிழ்க்கிற சுவாரஸ்யமான விளையாட்டைத்தான் நாமெல்லோரும் ஆடிக் கொண்டிருக்கிறோம். எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு, சாமர்த்தியமாக அதில் இருந்து மீள்வதே அழகான பயணம்!

5. சந்தோஷம் வேண்டும், சந்தோஷம் வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அந்த சந்தோஷம் என்பது என்ன, எங்கே இருக்கிறது என்கிற புரிதல் நம்மிடையே இல்லை. ஒருவருக்கு லட்டு சந்தோஷம்; இன்னொருவருக்கு அல்வா சந்தோஷம். பணம் சந்தோஷம். பொருள் சந்தோஷம். ஆனால், இவையெல்லாம் அல்ல உண்மையான சந்தோஷங்கள். அது, நம்மிடம்தான் இருக்கிறது. நமக்குள்ளேயே, நம் மனசுக்குள்ளேயே இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, தெளிவதுகூட ஒரு வகையில் சந்தோஷம்தான்! 'வெளியே சந்தோஷத்தை தேடிக்கிட்டே இருக்கோம். ஆனா, சந்தோஷம்  நமக்குள்ளேதான் இருக்கிறது’ என்கிறது வேதம்.

6. நண்பர் வீட்டுக்குச் செல்கிறோம். உணவு பிரமாதம். 'அடடா’ என்று சொல்லிவிட்டு வந்தால் போதாது. ரெசிப்பி கேட்கவேண்டும். வீட்டுக்கு வந்து செய்து பார்க்கவேண்டும்.செய்ததில் உள்ள குற்றம் குறைகளைக் களைய வேண்டும். இன்னும் சிறப்பாகச் செய்ய உறுதி எடுக்க வேண்டும். இது உணவுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. உணவு என்பது ஓர் உதாரணம்தான்.

இங்கே, இந்தப் பரந்த உலகில் எல்லா வற்றையும் கற்றுக்கொள்ளுங்கள். கற்றுக் கொள்ள ஆசைப்படுங்கள். ஆத்மார்த்தமாக ஈடுபட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும்

சுவாரஸ்யம்தான்; சுகம்தான்!'' என்றபடி, விடை கொடுத்தார் சுவாமி சுகபோதானந்தா.

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism