Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 11

மாயை எனும் அறியாமை!பி.என்.பரசுராமன்

றைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு, இறைவனுக்கு உண்டான தன்மைகள் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. துயரமும் தொல்லைகளும்தான் மேலோங்கி இருக்கின்றன. ஏன் அப்படி? 

ஓர் உதாரணம் பார்த்தால், எளிமையாகப் புரியும். வீட்டில் சமைப்பதற் காக சில ஆண்டுகளுக்கு முன் புத்தம்புது வாணலி வாங்கி இருப்போம்.ஆனால், இப்போது அந்த வாணலி எப்படி இருக்கிறது? கன்னங்கரேல் என்று அடிபிடித்து, தூய்மையே செய்யமுடியாதபடி ஆகிவிட்டதல்லவா? அந்த வாணலி வாங்கும்போது சுத்தமாக, பளிச்சென்றுதானே இருந்தது! சரி, அது எப்போதிருந்து அழுக்குப் பிடிக்க ஆரம்பித்தது? சொல்லமுடியாது அல்லாவா?

இனிமேல் இது கதையல்ல! வாணலியைக் கொண்டு விளக்குகிறார் குரு நாதர். வாணலி என்கிற பாத்திரம்தான் நாம். நம்முடைய அலட்சியம், அக்கறையின்மை, சோம்பேறித்தனம் இவற்றின் காரணமாகத்தான் வாணலியில் அழுக்கு சேர்ந்தது. அப்படி வாணலியில் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு சேர்ந்துகொண்டே வந்ததைப் போல, நமக்குப் பிறவிகள்தோறும் ஏராளமான வினைகள் சேர்ந்து இருக்கின்றன. அந்த வினை அழுக்குகளை நீக்கவேண்டிய நாம், அதைச் செய்யாமல் மேலும் மேலும் வினை அழுக்குகளைச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி வினை அழுக்குகள் சேர்வது கூடத் தெரியாமல் இருக்கிறோம். அப்புறம், துன்பம் வந்துவிட்டதே எனக்

கலங்குகிறோம். இவ்வளவுக்கும் காரணம், அறியாமை என்னும் மாயைதான்!

நமது அறியாமையின் காரணமாகவே பிறவித் துன்பம் விளைகிறது.

தோற்றமாம் சக்திதானே

துன்பமாம் பவம் ஆனாலும்

ஆற்றலான் முத்தி சேர்வார்க்கு

அனுகூல சகாயம் ஆகும்

ஊற்றமாம் பகற்காலம் போல்

உபகார(ம்) நிசியில் உண்டோ

மாற்றம் என் உரைப்பேன் மைந்தா

மறைப்பது மிகப் பொல்லாதே!

'மாயை எனும் மயக்கத்தால் துன்பமயமான பிறவிக்குக் காரணமானாலும், கேட்டல் முதலான முயற்சிகளால் முக்தி அடைபவர்களுக்கு, அது மிகவும் உதவியாக இருக்கும். அறிவதற்கு (தெளிவு பெற) பகல் காலம் உதவியாகும். இரவில் உதவி உண்டா? மைந்தனே! இந்த மாயையின் மறைப்பை, அறியா மையின் சக்தியை என்னவென்று சொல்வேன்? அது மிகவும் பொல்லாதது!’

மனிதனும் தெய்வமாகலாம்! - 11

குருநாதர் தன் சீடனுக்குச் சொல்வதைப்போல அமைந்துள்ள இப்பாடலில் பிறவிக்குக் காரணம், முக்தி அதாவது அமைதி, நிம்மதி ஆகியவற்றை அடையும் வழி, பகல் இரவு எனும் இரண்டு காலங்கள், நம்மை மூடுகின்ற மாயையான அறியாமையின் சக்தி, அனைத்துக்கும் மேலாக 'மைந்தா’ எனும் சொல் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை வரிசையாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன்னால், பாடலின் முடிவில் இடம் பெற்றுள்ள 'மைந்தா’ என்பதை, பாடலின் தொடக்கத்தில் போட்டு, விளக்கம் காண வேண்டும்.

'மைந்து' என்ற சொல்லுக்கு மயக்கம், ஆற்றல் என்ற அர்த்தங்கள் உண்டு. தமிழ் அகராதிகள் சொல்லும் அந்த முறைப்படி, மயக்கம்

கொண்ட சீடனை 'மைந்தா’ (மயங்கி இருப்பவனே) என அழைக்கிறார் குரு. மேலும், தீமைகளில் இருந்தும் அறியாமையில் இருந்து விடுபடும் ஆற்றல் சீடனுக்கு உண்டு. ஆகையால் 'மைந்தா’ (ஆற்றல் கொண்டவனே) எனவும் அழைக்கிறார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 11

எதிலிருந்து விடுபட வேண்டுமானாலும், முதலில் நம்மைச் சுற்றியிருப்பனவற்றை உணர வேண்டும்; அவற்றில் இருந்து வெளியேறும் ஆற்றல் வேண்டும். இப்படிப்பட்ட தன்மை கொண்டவன் சீடன். அதனால்தான் அவனை 'மைந்தா’ என அழைக்கிறார் குரு நாதர். அந்த மைந்தனின் இடத்தில் நம்மை நிறுத்தி, மேலே பாடலைப் பார்க்கலாம்.

மருந்து உண்பது, ஆரோக்கியத்துக்குதான். அதாவது, இனிமேல் மருந்து உண்ணாமல் (நோய் வராமல்) இருக்கத்தான். அதுபோல, நாம் பிறந்தது, இனிமேல் பிறவாமல் இருக்கவே! இனி பிறவாத அந்த நிலை 'முக்தி’ எனப்படும். அந்த நிலையை அடைய, இந்த மனிதப் பிறவியே பெரும் உதவியாக இருக்கிறது. அதன் மூலம் நாம் நான்கு செயல்களில் ஈடுபட்டால், பிறவித் துயர் தானே நீங்கிவிடும் என, ஞான நூல்கள் கூறுகின்றன. அந்த நான்கு செயல்கள்... கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை கைகூடுதல். முதலில், நல்லனவற்றைக் கேட்டல்; பிறகு, அந்த நல்லனவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது; அதன்பின், அவற்றிலிருந்து தெளிவு பெறுவது; நிறைவாக, கலங்காத சித்தம். இந்த நான்கையும் இன்னும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் நம் மனதில் பதியும்படி சொல்வார் புலவர் கீரன்.

மாங்காய் உண்ணவேண்டுமென்று ஆசை. யார் வீட்டுத் தோப்பில் அது இருக்கிறது என்பதைக்

மனிதனும் தெய்வமாகலாம்! - 11

கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டோம். அடுத்து, தோப்பில் இருக்கிற அதை எப்படி எடுப்பது எனச் சிந்திக்கிறோம். அதன்பின், பகல் 12 மணிக்குக் காவல்காரர் இருக்கமாட்டார் என்பதை அறிந்து, அப்போது போய் மாங்காயை அடிக்க வேண்டியதுதான் என்று தெளிவு பெறுகிறோம். அப்புறம் என்ன? அந்த மாங்காயை அப்படியே கல்லால் ஒரு தட்டு தட்டிப் பிளந்து, இரண்டு மூன்று துண்டுகளாக ஆக்கி, மிளகாய்ப் பொடியில் தோய்த்துத் தின்னும்போது... அடடா! நாக்கில் உப்பும் உறைப்பும் புளிப்புமாக... ஸ்ஸ்... ஆஹா! டாப்! இதுதான் 'நிஷ்டை கைகூடுதல்’ என்பார் கீரன். ஒரு சாதாரண மாங்காய்க்கே இந்த நான்கும் தேவையாக இருக்கிறதே! முக்தி பெற வேண்டுமானால்..?

அதையே, 'சிரவணம் (கேட்டல்) முதலான முயற்சிகளால் முக்தியை அடைபவர்களுக்கு’ என்கிறது உரை நூல். பிறவி எடுத்ததே உயர்வு பெறுவதற்காக! அந்த உயர்வை, 'கேட்டல்’ மூலம் அடையலாம். இவ்வாறு சொன்ன பாடல், அடுத்ததாக 'ஊற்றமாம் பகற்காலம்’ என்று காலத்தைக் குறிப்பிடுகிறது. இங்கே சொல்லப் படும் பகற்காலம், நமக்குத் தெரிந்த காலை நேரமல்ல. பகலும் இரவும்தான் மாறி மாறி வந்து போய்க்கொண்டிருக்கின்றனவே! ஆகவே, கைவல்லிய நவநீதம் சொல்லும் 'ஊற்றமாம் பகற்காலம்’ என்பது வேறு! ஊற்றம் என்றால், அறிவுடைமை என்பது பொருள். அதன்படி, நல்அறிவுடைமையே பகற்்காலம். அது இல்லாமையே இரவாகும்.

''இதெல்லாம் தெரியவிடாமல், தெரிந்தாலும் கடைப்பிடிக்கவிடாமல் மறைக்கும் அந்த அறியாமை எனும் மாயை யின் சக்தி பற்றி நான் என்ன சொல்ல? அது மிகவும் பொல்லாதது!'' என்கிறார் குருநாதர்.

தொடரும்