மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

நாட்டியாஞ்சலி அவசியமா?

'ஆடல் கலை ஆண்டவன் தந்தது’ என்பார்கள். இன்றைக்கு அந்தக் கலையானது பலப் பிரிவுகளாகப் பிரிந்து, நாகரிக உட்புகுத்தலால் தரம் தாழ்ந்து, தன்னிலை இழந்து தவிக்கிறது என்பது எனது கருத்து. இதில், 'இறைவன் அருளும் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நடத்தலாமா, கூடாதா’ எனப்போன்ற சர்ச்சைகள் வேறு!  

என் தோழிகளோ, 'ஆடல் கலை வெறும் பொழுதுபோக்கு அம்சமே தவிர, ஆராதனைக்கு உரியதல்ல’ என்கிறார்கள். இது குறித்து தங்களின் மேலான விளக்கம் தேவை!

பவித்ரா நடராஜன், திருநெல்வேலி

முதல் கோணம்!

ஒட்டுமொத்தமான வேதத் தொகுப்பில் இருந்து ஆங்காங்கே சிதறியிருக்கும் சிறப்பான பகுதிகளை ஒன்றுசேர்த்து, நாட்டிய வேதத்தை உருவாக்கினார் பிரம்மன். அதை நடைமுறைப்படுத்த சொல் வடிவம் (தியரி), செயல் வடிவம் (ப்ராக்டிகல்) ஆகிய இரண்டையும் பரத முனிவர் தொகுத்து அளித்தார். ஈசனும் உமையும் இருவகை நாட்டியப் பிரிவுகளை அரங்கேற்றினர். ஈசனின் நடனத்துக்குத் 'தாண்டவம்’ என்றும், உமையின்

நடனத்துக்கு 'லாஸ்யம்’ என்றும் பெயர் (உத்திருத்யோத்திரத்யஸாரம்... நாட்ய வேதம் விரிஞ்சி: சக்ரே. யஸ்யப்ரயோகம் முனிரபிபரத: தாண்டவம் நீலகண்ட: சர்வாணீ லாஸ்யம்...).

? அற்புதமான தகவல். ஆனால், இப்பேர்ப்பட்ட ஆடல் கலை இன்று களையிழந்துவிட்டது என்பதுதான் எங்கள் வாதம்?!

அதன் மகத்துவத்தை நீங்கள் பூரணமாக அறிந்தால், இப்படியொரு வாதத்தை முன்வைக்க மாட்டீர்கள். ரசனையில் மாறுபட்ட அனைத்து ரசிகர்களையும் ஒட்டுமொத்தமாக மகிழ்விக்கும் தகுதி படைத்தது நாட்டியம் (நாட்டியம் பின்னரூசேர்... ஏகம்சமாரதனம்). பதினெட்டு வித்யா ஸ்தானங்களில், 'காந்தர்வம்’ எனும் வித்யையில் நாட்டியம் அடங்கும். பாட்டுக்கு அபிநயிப்பதால், வித்யா ஸ்தானத்தில் இடம் பிடித்துவிட்டது நாட்டியம். அபிநயம், நாட்டியம். பாவத்தைப் புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்தும் அபிநயம் நிர்த்யம்.தாளம், லயம் ஆகியவற்றையொட்டி அபிநயம் பிடிப்பது நிர்த்தம். அமரஸிம்ஹன் நாட்டியத்தின் பிரிவுகளைக் கோடிட்டுக் காட்டுவார் (தாண்டவம், நடனம், நாட்டியம், லாஸ்யம், நிருத்தம், சநர்த்னம்).

கேள்வி - பதில்

காளிதாசன், நாட்டியத்துக்கு முன்னுரிமை அளித்து நாடகங்களை அளித்திருக்கிறார். 'மாளவிகாக்னிமித்திரம்’ என்ற நாடகத்தில், நாட்டியத்துக்கு அவர் நுணுக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார். இன்னொரு நாடகம்... இந்திர சபையில் ஊர்வசி நாட்டியமாடிய போது, அபிநயத்தில் தவறு வந்ததால் பரதமுனி சபித்தார்; அவள் பூலோகத்துக்கு வந்தாள்; அங்கு விக்ரமனோடு இணைந்தாள் என்ற தகவலை வைத்து, காளிதாசன் 'விக்ரமோர்வசியம்’ நாடகத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தார்.

? பழைய இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பது இருக்கட்டும். நடனம் குறித்து வேதத்திலும் குறிப்புகள் உண்டா?

உண்டு. 'நீர்க்குடத்தை ஏந்தி நடனமாடினர்’ என்ற தகவல் வேதத்தில் உண்டு (உதகும் பானதிநிதாய தாஸ்யோமார் ஜாலீயும் பரிநிருத்யந்தி). 'இதம்மதும்’ என்று பாடிக்கொண்டு ஆடினார்கள் என்ற தகவல், பாவத்துக்கு அபிநயம் பிடிக்கும் முறையைக் கையாண்டார்கள் என்பதை விளக்குகிறது (இதம்மதும் காயந்த்ய:). இப்படியான கானத்துடன் இணைந்த நாட்டியம் குறித்த தகவல், 18 வித்யைகளில் காந்தர்வம் நாட்டியத்தில் அடங்கியிருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது. வேள்வியில் இணைத்திருப்பது அதன் பெருமைக்கு எடுத்துக்காட்டு. தவத்தில் ஆழ்ந்த முனிவர்களின் தவத்தைக் கலைக்க நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற அப்ஸரஸுகளை அனுப்பிவைப்பான் இந்திரன். விஸ்வாமித்திரரின் தவம் மேனகையின் நாட்டியத்தில் திசை திரும்பியது. பஸ்மாசுரனின் இறுமாப்பு மோஹினியின் நடனத்தில் செயல் இழந்தது.

? பலே! உங்களுடைய உதாரணங்கள் எல்லாம் எங்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளன. நாடகம் முதலான பொழுதுபோக்குக்கும், முறையற்ற அணுகுமுறைக்காகவுமே நடனம் பயன்பட்டிருக்கிறது; அப்படித்தானே?

பதிலை முடிப்பதற்குள் துணைக் கேள்வி எழுப்பினால், எதையும் அறைகுறையாகத்தான் புரிந்துகொள்ள முடியும். பண்டைய நாட்களில், கோயில்களில் நடனம் வாயிலாக கடவுளை மகிழ்விப்பது உண்டு. உற்சவம் முடித்து விடையாற்றி உற்ஸவம் நடக்கும் போது, பாட்டுடன் நாட்டியமும் இணைந்திருந்தது. பக்தர்களை எதிர்கொண்டு காட்சியளிக்க, தேரில் பவனி வருவார் இறைவன். அப்போது அவர் ஆடைஆபரணங்கள் அணிந்துகொண்டு மலர்ந்த முகத்துடன் பக்தர்களுக்குக் காட்சி யளிப்பார். அவரை வரவேற்கும் நோக்கிலும், அவர் ரசிக்கும் வகையிலும் பாட்டும், நடனமும், பஜனையும்  முன்னே செல்லும். வேதமும், தேவாரமும் தேருக்குப் பின்னே ஒலிக்கும். ஆண்டவனின் பட்டணப்ரவேசம் முன்னும் பின்னும் ஆராதனையோடு இணைந்துவிடும்.

இறையுருவங்களுக்கு 16 உபசாரங்களை அளித்துப் பணிவிடை செய்வது உண்டு. அதற்குப் பிறகு சிறப்பு உபசாரங்களும் நிகழும். வேத ஒலியோடு புஷ்பத்தை அளிப்பது (மந்திர புஷ்பம்),

தங்கத்தில் உருவாக்கிய புஷ்பத்தை அளிப்பது (ஸுவர்ணம புஷ்பம்), வெண்குடை பிடிப்பது (சத்ரம்), வெண்சாமரம் வீசுவது (சாமரம் வீஜயாமி), நாட்டியமாடி மகிழ்விப்பது (நிருத்தம்தர்சயாமி), ஊஞ்சலில் உட்காரவைத்து ஆட்டுவது (ஆந்தோளிகாமாரோபயாமி), குதிரையில் ஏற்றி வைத்து மகிழ்விப்பது, யானையில் ஏற்றுவது, ரதத்தில் ஏற்றி வைத்து மகிழ்வது (அச்வான் ஆரோஹயாமி, கஜானாஷே ஹயாமி), அரசனுக்கு உகந்த உபசாரங்கள் அத்தனையையும் ஆண்டவனுக்கும் அளிப்பது... இப்படிச் சிறப்பு உபசாரங்களில் நடனத்துக்கும் இடம் இருக்கும்.

ஆக, ஆண்டவனை ஆராதிக்கும் நோக்கத்தில் நாட்டியம் உதயமானது. அவனது மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சியாக மாறிவிடும். பார்த்து ரசிக்கும் ஆராதனையில், நாட்டியம் முதலிடம் பெறுகிறது. அது கண்ணுக்கும், காதுக்கும், எண்ணத்துக்கும் விருந்தளிக்கிறது.

இரண்டாவது கோணம்...

பாரதத்துக்கு வெளியேயும் பாட்டும் நாட்டியமும் உண்டு. ரசிகர்களை மகிழ்விப்பது அதன் குறிக்கோளாக இருக்கும். அதில்  தெய்விகப் பூச்சு இல்லை. கடவுளை மறுப்பவர்களிடமும் பாட் டும் நாட்டியமும் உண்டு.  பேசும் படம் ஆரம்பித்த நாட்களில், பாட்டு

களே ரசிகர்களை ஈர்த்து படங்களின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கதையோடு ஒட்டாமல் இருந்தாலும், பாட்டோடு இணைந்த நாட்டி யத்தை இணைத்து, ரசிகர்களைக் கவர்ந்து, வெற்றியைச் சந்தித்த திரைப்படங்களும் உண்டு. சபாக்களில் நிகழும் நாட்டியக் கச்சேரிகளும் ரசிகர்களின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாக வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டன. பேசும் படத்தின் ஆரம்ப காலங்களில், நடிகைகள் தேர்வில் பாட்டும் நாட்டியமும் சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டிருந்தன. இன்னும் சொல்லப்போனால், அழகு இருந்தும், பாட்டும் நாட்டியமும் இல்லை என்பதால், நேர்க்காணலில் வெற்றி பெறாதவர்களும் உண்டு. திரை உலகம் ரசிகர்களை நம்பிச் செயல்படுகிறது. அவர்களை மகிழ்விக்க நாட்டியத்தைக் கையாண்டார்கள்.

? நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. உங்களின் கருத்து, நடனத்தின் புனிதத்தை கொச்சைப்படுத்துகிறது!

நிதர்சனத்தை ஏற்பதுதான் புத்திசாலிகளுக்கு அழகு! அரசர்களின் வரவேற்பு உபசாரத்தில் நாட்டிய விருந்தும் இருக்கும். கிராமங்களில் விழாக்காலங்களில் கூத்து நடைபெறும். அதுதான் வளர்ந்து நாட்டிய வடிவில் விரிவடைந்தது என்று புது ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். ரசிகர்களுக்கு விறுவிறுப்பை அதிகப்படுத்துவதற்காக, போட்டி நடனங்கள் அரங்கேறிய திரைப்படங்களும் இருந்தன.

மாற்றான் அரசனை மதிமயக்க நாட்டியத்தைப் பயன்படுத்திய கதைகள், மதன்காமராஜனின் கதைத் தொகுப்பில் உண்டு. வெளிநாட்டில் ஆணும் பெண்ணும் கைகோத்து நடனமாடும் நிகழ்வுகள் உண்டு. ரசிகர்களைக் கவரும் கூட்டு நடனங்களும் உண்டு. ஆக, ரசிகர்களின் மனப்போக்குக்கு இணங்கவே நாட்டியம் புது வடிவம் பெற்றிருக் கின்றது. காதலர்கள் அன்பைப் பரிமாறிக்

கொள்ள புதுமுறை நாட்டியத்துடன் இணை கிறார்கள். ஆண்களும் பெண்களும் கூட்டாக நடனமாடிக்கொண்டு, காதலர்களின் சந்திப்புக்கு மெருகூட்டுவார்கள். தாளத்துக்கு முன்னுரிமை அளித்து, அதற்கேற்பவே அந்தப் பாட்டுக்கான அபிநயமும் இருக்கும். அதில் எந்த பாவமும் வெளிப்படாது. நடையும் ஓட்டமும்கூட அவர்கள் நாட்டியத்தில் இணைந்திருக்கும்.

வெளிநாட்டுக் கலாசாரத்தின் கலப்படத்தில் புது வடிவம் பெற்ற நாட்டியங்கள் பெரிய திரையில் தென்படுகின்றன. நாட்டின் பெருமையை விளக்க நாட்டியத்தைக் கையாளுவது உண்டு. அதற்கு

இலக்கணமோ பாவமோ இருக்காது. ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும். இப்படி, பண்டைய கூத்துகளில் இருந்து விரிவடைந்த நாட்டியம், ரசிகர்களை மகிழ்விக்க ஏற்பட்ட ஒரு பொழுதுபோக்கு அம்சமே! அதில் இறை வழிபாட்டின் வாசனை இருக்காது.

? நீங்கள் நமது பொக்கிஷங்களை எல்லாம் மறந்துவிட்டு வெளிநாட்டு விஷயங்களை தூக்கிப்பிடிப்பதால்தான், இங்குள்ளவை எல்லாம் உங்களுக்கு விஷமாகத் தோன்றுகின்றன. இதை உங்களால் மறுக்க இயலுமா?

வெளிநாடுகள் என்றில்லை... இங்கேயே தகுந்த உதாரணங்களை அடுக்க இயலும். பொருட் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள்; அங்கு வியாபார நோக்கில் நடனம் அரங்கேறும். நாட்டியத்துக்கு உகந்த ஆடை அணிகலன்களோ, நவரசங்களை வெளிப்படுத்தும் அபிநய பாவங்களோ இருக்காது.

விற்பனைப் பொருட்களின் பெருமையை விளக்க நாட்டியம் பயன்படும். இப்படி, பல்வேறு வகையில் நாட்டியம் திசைதிரும்பி, ரசிகர்களின் சிந்தனை மாற்றத்துக்கு உகந்த வகையில் வளர்ந்து, தன்னுடைய தனித் தன்மையை இழந்துவிட்டது. இறைவழிபாட்டுக்காக உருவெடுத்தது என்றால், இப்படியான மாற்றங்களை அது ஏற்றிருக்காது.

நாட்டியக்கல்வி, அதற்கு ஒரு பாடசாலை, ஒரு நட்டுவாங்கம், அதற்கு உகந்த ஆடைஆபரணங் கள், ஆடும் பாதத்துக்கு சலங்கைகள் ஆகியவை இன்றைய ரசிகர்களுக்கு அறிமுகமாகாத ஒன்று. இவர்கள், உடுத்தும் உடையிலேயே நடனத்தைப் பார்த்துப் பழகியவர்கள். நவரசங்களை ரசிக்கும் திறமை குன்றியவர்களும் உண்டு.

எனவே, பொதுமக்களின் ரசனைக்கு இணங்க மாறி மாறித் தென்படும் நாட்டியத்தை, வேதத்தில் இருந்து வந்த கலையாகவும், இறைவழிபாட்டுக்கு பயன்படுத்தும் ஆராதனைப் பொருளாகவும் சித்திரிப்பது மிகையான ஒன்று. அதன்பொருட்டு ஈசனையும் உமையையும் அரங்கேற்றவைத்து தெய்விகமாகப் பறைசாற்றுவதும் பக்தர்களை ஈர்க்கப் பயன்படுத்தும் வியாபார நோக்கமே!

மூன்றாவது கோணம்...

அஞ்சலி முத்திரையில் நறுமணம் கமழும் புஷ்பத்தை அள்ளி இறைவனுக்கு அளிப்பது புஷ்பாஞ்சலி. அதேபோன்று, இறை பக்தியை அபிநயத்தின் வாயிலாக வெளிப்படுத்தி, அஞ்சலி பந்தத்துடன் இறைவனுக்கு அளிப்பது நாட்டியாஞ்சலி. இறை வணக்கத்துடன் நாட்டியம் ஆரம்பமாகும். முடிவிலும் இறை வணக்கம், நாட்டு வணக்கத்தோடு இணைந்து இருக்கும்.

? சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கட்டும். அதை ஆலயங்களிலும் உட்புகுத்துவது அவசியமா?

நிச்சயமாக! நாட்டியத்தை அறிமுகம் செய்தவன் அதை ரசித்து அனுபவிக்க இயலாது. அவனே ரசிகனாக மாறி தனது படைப்பைப் பார்த்து ரசிக்கும்போது, படைப்பின் பெருமை புலப்படும். அதற்கேற்ப, படைத்தவனை ரசிகனாக வைத்து, அவன் படைத்த படைப்பைப் பார்த்து ரசிக்கும் சூழலை நாம் ஏற்படுத்தவேண்டும். அவனுக்

கான ஆராதனையில் அவனுடைய திருமுன் நாட்டியாஞ்சலி இணையும்போது, அதைப் பார்த்து ரசித்து மகிழ்வான் ஈசன். அவனுடைய மகிழ்ச்சி

மக்களின் மகிழ்ச்சியாக மாறிவிடும். அபிநயத்தில் ஈடுபடும் வேளையில் அவனே அதை ரசிக்க இயலாது.

ரசிகனாக மாறி மற்றவருடைய அபிநயத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். தன்னுடைய அழகை தான் பார்த்து ரசிக்க ஒரு கண்ணாடி தேவைப்படும்.

நீர் ஈசனின் படைப்பு; அபிஷேகம் பண்ணி மகிழ்விக்கிறோம். புஷ்பம் அவன் படைப்பு; புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து வழிபடுவோம். ஒளிப் பிழம்பு அவனுடைய படைப்பு; தீபாராதனையின் மூலம் அதைப் பார்க்கச் செய்து மகிழவைப்போம். பழம் அவன் படைப்பு; நிவேதனம் செய்து மகிழ்வோம். அதேபோன்று நாட்டியமும் அவனுடைய படைப்பே! அதை நாட்டியாஞ்சலி மூலம் அவனுக்கு அர்ப்பணிப்போம்.

? எனில், நாட்டியம் என்பது பொழுதுபோக்கு அம்சம் அல்ல என்கிறீர்களா?

பொழுதுபோக்கு என்ற பகுதி பாரதப் பண்பாட்டில் இல்லை. இறைப்பணியில் பொழுது போதவில்லை என்று சொல்வார்கள்.  பொழுதுபோக்கு என்பது மாற்றுக் கலாசாரத்தில் இருந்து நம்மையும் மீறி நுழைந்ததாகும். கதாகாலட்சேபத்தில் இறைவனின் பெருமை விளக்கப்படும். இறைவன் படைப்பை இறைவனுக்கு அளித்து, அவனுடைய அருளோடு திரும்பப் பெற்றுக்கொள்வது நம் நாட்டின் உயர்ந்த பண்பாடு.

நாட்டுப்புறக் கூத்தில் நாட்டியத்தின் இலக்கணம் இருக்காது. ஆனாலும் ராமாயணம், மகா பாரதம் போன்ற இதிஹாசப் பகுதிகள் விளக்கப்படும். ரசிகர்களின் மனதில் பதியவைக்க அதற்கு உகந்த கை கால் அசைவுகளைப் பயன்படுத்துவார்கள். அதில் தெய்விக அம்சம் மிளிரும். கடவுளை மறுப்பவர்கள், அவர் படைத்ததை ஏற்கமாட்டார்கள். நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான். மனதில் உதிக்கும் நவரச பாவங்கள் அபிநயம், முத்திரைகள் வாயிலாக வெளிப்பட்டதை அறிந்து, ஏற்று மகிழமாட்டார்கள். அப்படி அறிந்து மகிழ, இறையருள் கைகூட வேண்டும். பகுத்தறிவு இருப்பவன் படைத்தவனைப் புரிந்துகொள்வான்.

? அப்படியென்றால், திருவிழாக்களில் எல்லா வகை நடனங்களையும் ஏற்றுக்கொள்ளலாம்தானே?

எல்லாமும் நம் நடனத்துக்கு ஈடாகி விடாதே! பாரதத்துக்கு வெளியே தென்படும் நாட்டியங்கள் பரதத்தின் இலக்கணத்தில் அடங்காது. அவற்றை இறைவன் படைத்த நாட்டியத்துடன் ஒப்பிடுவது அறியாமை!

பாவத்தை உள்வாங்கி ரசித்து மகிழும் பாங்கு பாரதப் பண்பாட்டில் ஊறிய வனிடம் இருக்கும். பிரிவாற்றமையில் பொங்கிவரும் பாவத்தை அசை போட்டு அணு அணுவாகச் சுவைத்து மகிழும் பாங்கு, பாரதத்தில் பிறந்தவனின் தனிச்சிறப்பு. ஆக, தகவலைத் திரட்டி ஆராய்ச்சியில் இறங்காத புதுச் சிந்தனையாளர்களின் கூற்று சிறுபிள்ளைத்தனம்.

தெய்விகம் தொடாத எந்தப் பொருளும் இல்லை. தெய்விகம்தான் அந்தப் பொருளின் தகுதியைக் காப்பாற்றுகிறது. ஆராதனைக்கு உகந்த கலைக் கோயிலை விட்டு வெளியேறி, தகாத இடத்தில் மாட்டிக்கொண்டு, அலங்கோலமாகக் காட்சியளிக்கும் சிற்பங்களை எல்லாம் காலத்துக்கு உகந்த விரிவாக்கமாகச் சித்திரிக்கும் புதுச் சிந்தனையாளர்களின் கூற்று ஏற்கத்தக்கது அல்ல. தீவிரவாதியாக மாறும் மனித சிந்தனையை மனிதப் பண்பின் விரிவாக்கமாகக் கூற இயலாது. வெள்ளைக்காரன் என்றோ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டான். ஆனால், அவன் படைப்புகளுடன் நமது கலாசாரத்தை ஒப்பிடும் பழக்கம் மட்டும் இன்னமும் நம் மனதில் இருந்து அகலவில்லை. நமது பண்புகளை ஏற்க நம் நாட்டுக்கு வந்து சேரும் வெளிநாட்டவர் குறித்து இன்னமும் இவர்கள் அறியவில்லை. மனம் இருந்தால் வழிபடலாம் என்ற எளிமையான வழிபாடு நாட்டியாஞ்சலி. அவன் அளித்த ஜடமான மனதை பக்தி பாவத்தோடு, அபிநய முத்திரை வாயிலாக அர்ப்பணிக்கும் சிறந்த வழிபாடு நாட்டியாஞ்சலி.

மேலுலகில் இருந்த கங்கை பகீரதனின் பக்தியில் வசமிழந்து பூமிக்கு வந்தாள். விண்வெளியில் இருந்து கீழே இறங்கியவள், இன்னும் ஒரு படி கீழே இறங்கி, பாதாளத்தில் ஒடுங்கிவிட்டாள். பூமியில் கங்கை களை இழந்து போனாள். இன்னும் பல ஆறுகள் நீரோட்டம் இழந்து, நிலத்தடி நீரும் குறைந்துபோய்விட்டது. அதுபோல், நாட்டியமும் களையிழந்து, ஆதரவற்று நிற்கிறது. அதில் ஒட்டியிருந்த தெய்விகம் விலகியவுடன், எடுப்பார் கைப் பிள்ளையாக மாறிவிட்டது. நாட்டியாஞ்சலி தெய்விகத்துடன் இணைந்தது. என்றென்றும் அது இறைவன் சந்நிதியில் விளங்கும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

நாக்கு இறைவன் பெயரை ஓத வேண்டும்; மனம் இறைவனை நினைக்கவேண்டும்; கைகள் அவனைப் புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவேண்டும்; கால்கள் அவனை வலம் வரவேண்டும்; கண்கள் அவனைப் பார்க்கவேண்டும்; காதுகள் அவன் புகழைக் கேட்க வேண்டும்; மூக்கு அவன் கால் பட்ட தூசியை நுகரவேண்டும்; சிரம் அவனை வணங்க வேண்டும் என்று குலசேகரப் பெருமாள் சொல்வார். அதுபோல், மனதில் உதித்த பாவத்துடன் உடலில் இருக்கும் அத்தனை உருப்படிகளும் இறைவன்பால் ஈர்க்கப்பட்டு, முத்திரைகளின் வாயிலாக அவனோடு இணைந்து மகிழும் உயர்ந்த வழிபாடே நாட்டியாஞ்சலி!

பதில்கள் தொடரும்...