தண்பொருநை தவழ்ந்தோடும் வழியெங்கும் எத்தனை எத்தனை திருத்தலங்கள்..! அந்தத் திருத்தலங்களில்தான் எத்தனை எத்தனை அற்புதங்கள்!
நெல்லை மாவட்டம், சொரிமுத் தையனார் கோயிலில் இருந்து புறப்பட்ட நாம் அடுத்துச் சென்றது, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரி திருத்தலத்துக்கு. இந்தத் திருத்தலத்தில்தான் நம்மாழ்வார் அவதரித்தார். விஷ்வக்சேனரின் அம்சமாக காரிஉடையநங்கை தம்பதிக்குப் பிறந்த குழந்தை, பிறந்ததில் இருந்தே பால் உண்ணாமலும், அழவோ சிரிக்கவோ செய்யாமலும் ஜடம் போல் இருந்ததால், பெற்றவர்கள் அதைக் கொண்டு போய், ஆதிநாதர் கோயிலில் இருந்த ஒரு புளியமர பொந்தில் வைத்துவிட்டு வந்துவிட்டனர். அங்கேயே வளர்ந்து வந்த அந்தக் குழந்தைதான் நம்மாழ்வார். அவர் இருந்த அந்தப் புளியமரமே 'உறங்காப்புளி’ என்ற பெயரில் இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக இன்றைக்கும் உள்ளது.
பேசாமலே இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரால் பேசத் தொடங்கியதும், தாம் இருக்கும் இடத்திலேயே 36 திவ்வியதேச பெருமாள்களின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் செய்து அற்புதம் நிகழ்த்தியது இந்தத் திருத்தலத்தில்தான். இங்கேதான், நாதமுனிகளுக்கு அவர் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை உபதேசித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தக் கோயிலில், பெருமாளின் விமானத்தை விடவும் நம்மாழ்வார் சந்நிதியின் விமானம் பெரியதாக இருப்பது ஓர் அற்புதம் என்றால், நம்மாழ்வாரின் திருமேனி விக்கிரஹம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி வடித்துச் செய்தது என்பதும் ஓர் அற்புதம்தான்!

இந்தத் திருத்தலத்தில்தான் பெருமாள் முதன்முதலாக எழுந்தருளினார் என்பதால், இது ஆதிக்ஷேத்திரம் ஆகும். பெருமாள் ஆதிநாதர் என்ற திருப்பெயர் ஏற்றார். பெற்றவர்களைப் பிள்ளைகள் மதித்துப் போற்றவேண்டும் என்பதை மனித குலத்துக்கு உணர்த்திய திருத்தலமும் இதுதான். ஆம்... பெற்றவர்களை மதிக்கத் தவறிய இந்திரன், அதனால் அடைந்த பாவத்தை இத்தலத்து ஆதிநாத பெருமாளை வழிபட்டுப் போக்கிக் கொண்டதாக தலவரலாறு கூறுகின்றது.
'மாதா பிதாவே முதன்மை தெய்வம்’ என்பதை உலக மக்களுக்கு தல வரலாற்றின் மூலமாக முதன்முதலில் எடுத்துச் சொன்ன திருத்தலம் தாமிரபரணித் தாயின் மடியில் அமைந்திருக்கும் இந்த ஆழ்வார்திருநகரி திருத்தலம்தான் என்பது பெருமைக்கு உரிய விஷயம். இந்தத் தாமிரபரணி நதிக்கரையில்தான் உலகின் முதல் நாகரிகம் தோன்றியது என்கிறது ஒரு தொல்லியல் ஆய்வு. அதுமட்டுமா, உலகப் பொதுமறையாகப் போற்றப்பெறும் திருக்குறள் அரங்கேற்றம் கண்டதும் இந்தத் தாமிரபரணி நதிக்கரையில்தான் என்பது காலம்காலமாகச் சொல்லப்பட்டு வரும் செவிவழிச் செய்தி.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதரை தரிசித்துவிட்டு, அடுத்து நாம் சென்ற திருக்கோயில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில். இந்தத் தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார், இந்த ஊரை எல்லோரும் விரும்பிப் புகும் ஊர் என்று போற்றுகிறார். இந்த ஊரில்தான் குபேரனுக்கு இழந்த செல்வத்தை மீட்டுக் கொடுத்தார் பெருமாள். எனவே, இந்த வைத்தமாநிதி பெருமாள் தன்னை வணங்கி வழிபடும் அன்பர்கள் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் வழங்கக்கூடியவர் என்பதால்தான், நம்மாழ்வார் இந்தத் திருக்கோளூர் திருத்தலத்தை அனைவரும் விரும்பிப் புகும் ஊர் என்று புகழ்ந்து போற்றுகிறார்.
அடுத்து நாம் சென்று தரிசித்தது, வைகுண்டம் அருள்மிகு கள்ள பிரான் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் அருள்புரியும் பெருமாள், கள்ளபிரான் என்ற திருப்பெயர் ஏற்றதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் தலவரலாற்றில் சொல்லப்பட்டு இருக்கிறது.

காலதூஷகன் என்பவன் திருட்டுத் தொழிலையே பிழைப்பாகக் கொண்டவன். அதேசமயம் ஸ்ரீ வைகுண்ட பெருமாளிடம் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தான். அவன் தினமும் திருடச் செல்வதற்கு முன்பு கோயிலுக்கு வந்து, தான் திருடி வரும் பொருளில் சரிபாதியை பெருமாளுக்குக் கொடுத்துவிடுவதாக வேண்டிக்கொண்டு திருடச்செல்வான். வேண்டிக்கொண்டபடியே, திருடியதில் சரிபாதியை பெருமாள் சந்நிதியில் சேர்த்துவிடுவான்.
ஒருநாள், அவன் அரண்மனை கஜானாவில் இருந்து பெருமளவு செல்வத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு திரும்பும்போது, அவனுடைய கூட்டாளிகள் சிலர் அரண்மனைக் காவலர் களிடம் பிடிபட்டுவிட்டனர். அவர்களின் மூலம் காலதூஷகனின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட அரசன், அவனைப் பிடித்து வரும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டான். நடந்ததைக் கேள்விப்பட்ட காலதூஷகன் கோயிலுக்குச் சென்று வைகுண்டநாதனைச் சரணடைந்து, பிரார்த்தித்தான்.
சரண் அடைந்தவர்களைக் காப்பதுதானே பரந்தாமனின் இயல்பு?! காலதூஷகனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், அவனுடைய வடிவத்தில் அரண்மனைக்குச் சென்றார். காலதூஷகனாக வந்த பெருமாளைக் கண்ட அரசன், ''உன்னைப் பார்த்தால் எனக்குக் கோபமே வரவில்லையே! உண்மையில் நீதான் காலதூஷகன் என்ற திருடனா?'' என்று கேட்டான். உடனே பெருமாள் அரசனுக்கு தரிசனம் தந்து, ''மன்னனே, நீ உன் செல்வத்தை தர்மமுறைப்படி பயன்படுத்தவில்லை. அதனால்தான் உன் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டது. இனியாவது நீ தர்மத்தின் வழியில் நடந்துகொள்!'' என்று கூறினார். அரசனும் மனம் திருந்தியதுடன், திருடனான காலதூஷகனையும் மன்னித்து விட்டதாக அறிவித்தான். கள்வனைக் காப்பாற்றியதால், பெருமாள் அன்று முதல் கள்ளபிரான் என்ற திருப்பெயர் கொண்டார்.

கள்வனின் வடிவம் கொண்டு காலதூஷகனைக் காப்பாற்றியதால் மட்டுமல்ல, நம்முடைய உள்ளங்களை எல்லாம் கவர்ந்துவிடும் காரணத்தினால்கூட அந்த வைகுண்ட நாயகனுக்கு கள்ளபிரான் என்ற பெயர் மிகவும் பொருத்தம்தானே?!
ஒருமுறை, பூமியில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் மற்றும் புனித க்ஷேத்திரங்கள் பற்றி மகரிஷிகள் விவாதித்துக்கொண்டு இருந்தபோது, அந்த இடத்துக்கு வந்த சூத மகரிஷி, ''ஏன் வீணாக விவாதம் செய்துகொண்டு இருக்கிறீர்கள்? இந்த பூமியில் மிகச் சிறந்த புண்ணிய தீர்த்தம் தாமிரபரணிதான். புனித க்ஷேத்திரம் தாமிரபரணிக் கரையில் அமைந்திருக்கும் வைகுண்டம் க்ஷேத்திரம்தான்!'' என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
நிகரில்லாத தனிப்பெரும் சிறப்புடன் திகழும் ஒப்பற்ற புனித நதியான தாமிரபரணிக் கரையில் இருப்பதாலேயே கம்பீரப் பெருமையுடன் தோன்றும் வைகுண்டம் திருத்தலத்தை தரிசித்த பிறகு, நாம் சென்று சேவித்த திருத்தலம் பெருங்குளம் என்னும் திருத்தலம் ஆகும். நவகிரகங்களுக்கு உரிய நவதிருப்பதிகளில் இந்தத் திருத்தலம் சனி கிரகத்துக்கு உரிய தலமாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் திருத்தலத்தில், வேத சாஸ்திரங்களில் சிறந்து விளங்கிய வேதசாரன் என்பவன், மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து வந்தான். அல்லும்பகலும் அனவரதமும் அந்த வேங்கட வணனை வணங்குவதையே பிறவிப்பயனாகக் கருதிய அவர்களுடைய தவப்பயனாக அலர்மேல்மங்கையே மகளாகப் பிறந்தாள். கமலாவதி என்ற பெயர் கொண்டு வளர்ந்தவள், பெற்றவர்களைப் போலவே வேங்கடவணனிடம் பக்தி கொண்டாள். அந்த வேங்கடவணனையே திருமணம் செய்துகொள்ள விரும்பி தவம் புரிந்தாள். அவளின் தவத்துக்கு இரங்கிய வேங்கட வண பெருமாள் அவளைத் தன் கெளஸ்துப மாலையுடன் ஆலிங்கனம் செய்துகொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி பூச நட்சத்திர நாளில் அவளைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இமயமலையில் இருந்த ஓர் அவுணன் 1000 அழகான பெண்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, 998 பெண்களைக் கவர்ந்து சென்று, இமயமலையில் சிறை வைத்தான். அடுத்த பெண்ணைத் தேடிக்கொண்டு வந்தவன் கண்களில் பெருங்குளத்தில் வேதசாரனின் மனைவியாகப் பேரெழிலுடன் திகழ்ந்த குமுதவதி பட்டுவிட்டாள். உடனே, அவளைக் கவர்ந்துகொண்டு சென்றுவிட்டான் அவுணன். தன் மனைவியை மீட்டுத் தரும்படியாக வேங்கடவண பெருமாளிடம் மனமுருக வேண்டினான் வேதசாரன். தன் பக்தனின் துன்பத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், இமயமலைக்குச் செல்ல ஆயத்தமானார். அப்போது, தன் துணை இல்லாமல் பெருமாள் செல்லமுடியாது என்று கருடன் ஆணவத்துடன் நினைத்தது. அதன் கர்வத்தை அடக்க நினைத்த பெருமாள், கருடனைத் தம் கால்களின் இடையில் இடுக்கிக்கொண்டு, இமயமலைக்குச் சென்றார். வேதசாரனின் மனைவி குமுதவதியை மீட்டுக்கொண்டு திரும்பினார். இதனால் அந்த அவுணன் கோபம் கொண்டு, பெருமாளின் பின்னாலேயே இந்தத் திருத்தலத்துக்கு வந்து, அவருடன் போர் செய்தான். பெருமாள் அவனுடைய தலையின் மீது கால் பதித்து, நடனம் செய்தார். பெருமாளின் திருவடி ஸ்பரிசத்தினால் அந்த அவுணன் சாப விமோசனம் பெற்று கந்தர்வனாக மாறி, பெருமாளை நன்றியுடன் வணங்கிப் பணிந்து தன் இருப்பிடம் சென்றான். அவனுடைய தலையின் மேல் நடனம் புரிந்ததால், பெருமாள் மாயக்கூத்த பெருமாள் என்னும் திருப்பெயர் கொண்டார்.
இந்தப் பெருங்குளம் திருத்தலத்துக்கு, நாமெல்லாம் பெருமைப்படும் விதமாகச் சொல்லப்படும் ஒரு செவிவழிச் செய்தியும் உள்ளது. இங்கே அருள்புரியும் திருவழுதீஸ்வரர் திருக்கோயிலில்தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டது என்பதுதான் அந்தச் செய்தி.
திருவழுதி என்னும் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் கி.மு.300 கி.மு.200 காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இறைவனின் கருவறைக்கு உள்ளேயே அக்னிப் பிராகாரம் எனப்படும் உள் பிராகாரம் அமைந்திருக்கிறது. மிகமிகத் தொன்மை வாய்ந்த திருக்கோயில்களிலேயே இப்படியான பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவழுதி என்னும் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இந்த ஆலயத்தில், மன்னன் பெயரையே தன் திருப்பெயராகக் கொண்டு, கோமதி அம்பிகையுடன் திருக்காட்சி தருகிறார் திருவழுதீஸ்வர பெருமான்.
இந்தத் திருத்தலத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றம் பெற்றிருக்கக்கூடும் என்பதை முனைவர் ச.லோகம்பாள் தம்முடைய 'திருவள்ளுவர் வரலாறுஆய்வு’ என்ற நூலில், சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார்.
அவருடைய கூற்றின்படி, பாண்டிய மரபில் உக்கிரப்பெருவழுதிப் பாண்டியனின் தம்பியாகத் தோன்றிய நம்பி நெடுஞ்செழியன், அரசாட்சியில் உரிமையோடு முடிசூட்டிக்கொண்டு அரசுப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், அமைதியாக விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தான் பெற்ற கல்வியறிவு மற்றும் அனுபவ அறிவு ஆகியவற்றின் துணையோடு, நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயரில் திருக்குறளை இயற்றினார் என்று கூறுகிறார் இந்நூலாசிரியர். தொடர்ந்து...
''உக்கிரப்பெருவழுதிப் பாண்டியன், தன் இளவலான நம்பி நெடுஞ்செழியன் இயற்றிய திருக்குறளை, பாண்டியர் குடிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரங்கேற்றம் செய்ய விரும்பி, அவையைக் கூட்டுவதற்கான இடம் எது என்று சிந்தித்தபோது, தன் முன்னோர்களில் ஒருவரான முதுகுடுமிப் பெருவழுதி வழிபட்ட இந்த வழுதீஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருவழுதி நாடுதான் அவனுடைய நினைவுக்கு வந்தது...'' என்றும்,
இந்தத் திருவழுதிநாடுதான் பிற்காலத்தில், அதாவது கி.பி.900920 காலகட்டத்தில் இருந்த மூன்றாம் இராசசிங்க பாண்டியன் காலத்துக்கு முன்பாகவே பெருங்குளம் என்று அழைக்கப்பெற்றதாகத் தெரியவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கோயிலில்தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டது என்பதற்கு ஆதாரமாக, கோமதி அம்பாள் சந்நிதியில் கருவறைக்கு வெளியில் ஒரு சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைந்திருக்க, எதிரில் கையில் ஏடும் எழுத்தாணியும் இல்லாமல் ஒரு சிவயோகியைப் போன்ற கோலத்தில், அமர்ந்த நிலையில் காட்சி தருபவர்தான் திருவள்ளுவர் என்று காலம்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
ஒருசில சங்க இலக்கியங்களில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய சான்றுகளில் இருந்து, இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
உலக நாகரிகத்தின் முன்னோடி நாகரிகமாகத் திகழ்வது தாமிரபரணி நதிக்கரையில் தழைத்துச் செழித்திருந்த தமிழர் நாகரிகம்தான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால், நாம் எல்லோரும் பெருமிதப்படும்படி செய்த அந்தத் தாமிரபரணி தேவியின் இன்றைய நிலையைப் பற்றிச் சொல்ல வந்த நாம் இடையில், தாமிரபரணி தேவியைச் சற்றே மறந்துவிட்டு, அவளுடைய இரு கரைகளிலும் அருளொளி பரப்பி நிற்கும் ஆலயங்களின் பெருமிதத்தைத் தரிசிக்கச் சென்றுவிட்டோம். ஒன்றைப் பற்றி சொல்லத் தொடங்குவதற்கு முன்பாக இறைவழிபாடு அவசியம் என்ற இலக்கணத்தின்படி, நாம் கோயில்களின் பக்கம் சென்றதும் சரிதான். அப்படி நாம் திருத்தலங்களாகப் பயணித்தபோதுதானே, தாமிரபரணி தேவியின் இன்றைய நிலையைப் பற்றிப் பரிபூரணமாக நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது?!
நாம் கண்டும் கேட்டும் தெரிந்துகொண்டு மனம் பதைபதைத்த அந்தத் தகவல்கள் பற்றி இனி பார்ப்போம்.
நதி தவழும்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்