மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்!

எஸ்.கண்ணகோபாலன்

ம்முடைய புண்ணிய பூமியில் அவதரித்த எண்ணற்ற மகான்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீராகவேந்திரர். தம்முடைய ஜீவித காலத்திலும் சரி, பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகும் சரி... தம்மைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் சந்தோஷமும் சாந்தியும் நிலைத்திருக்கும்படியாகச் செய்து வருகிறார். 

அவர் விபுதேந்திர மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற நாளும், அவருடைய ஜயந்தியும் ஒருவார காலத்துக்குள்ளேயே அமைந்திருப்பதால், அதை முன்னிட்டு வருடத்துக்கு ஒருமுறை 'ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்ஸவம்’ என்ற பெயரில், ஏழு நாட்களுக்குத் திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சென்னை தர்மபிரகாஷ் மண்டபத்தில் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்ற வைபவத்தில், 20ம் தேதி அன்று நடைபெற்ற ஸ்ரீ ராகவேந்திரரின் பீடாரோஹண வைபவத்தை தரிசிக்க, அன்று காலை 9 மணிக்கே சென்றுவிட்டோம்.

அந்த வைபவத்தின் தாத்பர்யம் குறித்து யாரைக் கேட்கலாம் என்று நாம் யோசித்துக்கொண்டிருந்தபோது, அருகில் வந்த சர்வோத்தமன் என்ற அன்பர், ''ஏன் இங்கேயே நின்று கொண்டு இருக்கிறீர்கள்? லக்ஷ்மி ஷோபான பூஜை தொடங்கப் போகிறது. மண்டபத்துக்குள் சென்று உட்காரலாமே?'' என்றார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவர் யாரிடமோ ஏதோ விசாரித்துவிட்டு, 'வாருங்கள் என்னுடன்’ என்று, மண்டபத்தில் இருந்த ஓர் அறைக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்!

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அருளுரைகள் ஆற்றும் உடுப்பி பாலிமார் மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ வித்யாதீச தீர்த்த ஸ்வாமிகளிடம் நம்மை அறிமுகப்படுத்தியவர், நம்முடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார்.

''மத்வாச்சாரியரின் துவைத சித்தாந்த தத்துவத்தைப் பரப்புவதற்காக மத்வரால் ஏற்படுத்தப்பட்ட விபுதேந்திர மடத்தின் பீடாதிபதியாக இருந்து, அரிய பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவர் பீடாதிபதி யாகப் பட்டாபிஷேகம் செய்துகொண்ட தினமும், அவர் அவதரித்த ஜயந்தி தினமும் அடுத்தடுத்து வருவதால், வருஷம்தோறும் இந்த சப்தாஹ வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த வைபவம் வெறும் விழாவாக மட்டும் இல்லாமல், ராகவேந்திரரின் நூல்கள் சார்ந்த விவாதங்கள் மற்றும் அதுகுறித்த விளக்கங்கள் தருவது போன்றவையும் நடப்பதால், இந்த ஏழு நாள் வைபவத்திலும் நான் கலந்துகொள்கிறேன். மத்வரின் சித்தாந்த விளக்கங்களைப் பாமரரும் புரிந்துகொள்ளும்படியாகத் தம்முடைய நூல்களில் எளிமையாக விளக்கியவர் ராகவேந்திரர். அவருடைய இந்த சப்தாஹ வைபவத்தில் கலந்துகொள்வது எல்லோருக்கும் மனச் சாந்தியையும் சந்தோஷத்தையும்  தரக்கூடியது'' என்றவர், மத்வர் நிறுவிய உடுப்பி அஷ்ட மடங்கள் மற்றும் பல விவரங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் நாம் மண்டபத்துக்குச் சென்றோம். மண்டபத்தில் சுமார் 2000 பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும் துளசிச் செடியுடன் கூடிய துளசிமாடம் மற்றும் பூஜைக்கான புஷ்பம் முதலான திரவியங்களும் வழங்கப்பட்டன. நடக்கவிருக்கும் 'லக்ஷ்மி ஷோபான பூஜை’ பற்றி, அருகில் இருந்த ரகோத்தமன் என்ற அன்பரிடம் கேட்டோம்.

சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்!

''லக்ஷ்மி ஷோபான ஸ்தோத்திரம், ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது. இதைப் பாராயணம் செய்யும் பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனவே, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இந்த லக்ஷ்மி ஷோபான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது உண்டு'' என்று அந்த பூஜையின் தாத்பர்யத்தை விளக்கினார் ரகோத்தமன். இந்த பூஜை முடிய பகல் 1 மணிக்கு மேல் ஆகும் என்று தெரிய வரவே, நாம் அந்த மண்டபத்தைச் சுற்றி வந்தோம். மற்றோர் இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, நவகிரக சாந்தி ஹோமம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் ஒரு ஹோமம் நடைபெற இருப்பதாகத் தெரிந்துகொண்ட நம்முடைய பார்வையில், 'கண்காட்சிக்குச் செல்லும் வழி’ என்ற அறிவிப்புப் பலகை பட்டது. மாடியில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றோம்.

ச்ராகவேந்திரரின் பூர்வ ஜன்மம் மற்றும் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்திரிக்கும் வகையில் ஒளிஒலி அமைப்புடன் அழகழகான பொம்மைகளைக் கொண்டு, கொலு வைப்பதுபோல் அமைக்கப் பட்டிருந்த அந்தக் கண்காட்சியை அமைத்திருந்த அனுராதா ஸ்ரீ ராம் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்!

''ஸ்ரீ ராகவேந்திரரின் சப்தாஹ வைபவம் இந்த வருஷம் சென்னையில் நடைபெற இருப்பதாகத் தெரிந்ததுமே, எனக்குள் இப்படி ஒரு கண்காட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. நான் ஏற்கெனவே ராகவேந்திரர் தொடர்பான பொம்மைகளை நவராத்திரி கொலுவில் வைப்பது வழக்கம். இந்தக் கண்காட்சிக்காக மேலும் தேவைப்பட்ட பொம்மைகளைத் தேடி வாங்கி, ராகவேந்திரரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை விளக்கும் வகையில் உரிய விளக்கங்களுடன் ஒளி ஒலி வடிவத்தில் அமைத்திருக்கிறேன்'' என்றார். ஒலிபரப்பாகும் ஒவ்வொரு விளக்கத்துக்கும் ஏற்ப, அது தொடர்பான பொம்மைகள் வைக்கப்பட்டி ருக்கும் இடத்தில் மட்டும் ஒளிபடுவது போன்று அந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே ராகவேந்திரரின் வாழ்க்கை முழுவதையும் படித்தது போன்ற ஒரு மனநிறைவு நமக்குக் கிடைத்தது.

கண்காட்சியில் இருந்து மண்டபத்துக்கு நாம் வரவும், லக்ஷ்மி ஷோபான பூஜை முடியவும் சரியாக இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு, திரும்பவும் மண்டபத்துக்கு வந்தோம்.  

மண்டப மேடையின் நடுவில் கிருஷ்ண விக்கிரஹம் வைக்கப்பட்டு, அதைச் சுற்றிப் பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு 'ஆட்டதல்லி அத்யாத்மா’ என்று பெயர். அது எதற்காக நடைபெறுகிறது என்று, ஆட்டத்தை மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்த, நமக்கு ஏற்கெனவே அறிமுகமான அன்பர் சர்வோத்தமனிடம் கேட்டோம்.

சந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்!

''நவவித பக்திகளில் கீர்த்தனம், அதாவது பாடல்களால் இறைவனை வழிபடுவது ஒரு வகை. ஆரம்பத்தில், பெண்கள் தங்கள் கைகளைத் தட்டி கும்மி அடித்தபடி இறைவனின் புகழைப் பாடினார்கள். இதற்கு 'கும்மிப் பாட்டு’ என்று பெயர். இப்போது, கைகளில் இரண்டு கோல்களை வைத்துத் தட்டியபடி பாடுகிறார்கள். இங்கே இவர்கள் புரந்தரதாசரின் கீர்த்தனைகளைப் பாடி, கிருஷ்ணனை வழிபடுகிறார்கள். பொது வாக இதுபோன்ற வைபவங்களில் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்'' என்றார் அவர். கோலாட்ட நிகழ்ச்சி முடிந்ததும், மேடை யின் ஒரு பாதி திரையினால் மறைக்கப்பட்டு, முன்பகுதியில் பிரபல சாஸ்திர வல்லுநர்களின் பிரவசனம் நடைபெற்றது. பிரவசனம் கன்னட மொழியில் இருந்ததால், நமக்குப் புரியவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடைபெறப்போகும் பிரவசனத்தை அந்தப் பகுதிக்கான மொழியில் அச்சிட்டுக் கொடுத்தால் எல்லோரும் புரிந்து கொள்ள உதவியாக இருக்குமே என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது. பிரவசன நிகழ்ச்சி முடிந்ததும், மேடையின் ஒரு பகுதியை மறைத்திருந்த திரை விலகியது. அங்கே ஒரு பந்தல் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தது. அதற்குள் என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள நமக்கு ஆர்வமாக இருந்தது.

சற்று நேரத்தில், மண்டபத்தில் அமர்ந்திருந்த பெண்கள், மலர்களும் தீபமும் வைக்கப்பட்டிருந்த தட்டை ஏந்தியபடி வரிசையாக நிற்க வைக்கப் பட்டனர். அதையடுத்து, சுமார் 8 மணியளவில், நன்றாக அலங்கரிக்கப்பட்ட விக்கிரஹத்தை பூமாரி பொழிய, மண்டபத்தின் உள்ளே இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து மேடையில் வைத்தார்கள். ராகவேந்திரரின் விக்கிரஹம்தான் அது என்று நினைத்த நாம், அதைத் தெளிவு படுத்திக்கொள்ள விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் கேட்டோம்.

''நீங்கள் நினைப்பதுபோல் அது ராகவேந்திரர் இல்லை. ராகவேந்திரரின் பூர்வ அவதாரமான பிரகலாதனின் விக்கிரஹம்தான் இப்போது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இவருடைய முன்னிலையில்தான் ராகவேந்திரரின் பட்டாபிஷேக வைபவம் நடைபெற இருக்கிறது'' என்றவரிடம், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் என்ன இருக்கிறது என்று விசாரித்து அறிவதற்குள், மேடையின் பக்கமாகச் சென்றுவிட்டார்.

நாம் மேடையையே பார்த்துக் கொண்டிருந் தோம். மேடையில் பிரகலாதனின் விக்கிரஹம் வந்து சேர்ந்ததும், பந்தலின் ஒரு பக்கத் திரை மெள்ள மெள்ள விலக, உள்ளே துளசிமாடம் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த பிருந்தாவனமும்,ஸ்ரீ ராகவேந்திரரின் விக்கிரஹமும் அழகாகக் காட்சி அளித்தன. அப்போது, 'ஜெய் ராகவேந்திரா’, 'ஜெய் குருராயா’ என்ற பக்தர்களின் பரவச முழக்கம் மண்டபத்தையே நிறைத்தது. சற்றைக் கெல்லாம் பிரகலாதனின் முன்னிலையில், அனைவரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ வைபவத்தின் 2ம் நாள் வைபவமான 'பட்டாபிஷேக வைபவம்’ இனிதே நிறைவுபெற்றது.

கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் வேண்டியது அனைத்தையும் அருளும் மந்த்ராலய மகானின் பட்டாபிஷேக வைபவத்தை தரிசித்த மன நிறைவுடன் அங்கிருந்து திரும்பினோம்.

படங்கள்: ச.ஹர்ஷினி