Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னைவியின் குடும்பத்தில் இருந்து கிடைக்கிற மரியாதைக்குத் தனி கௌரவம் உண்டு. அவளது பிறந்த வீட்டில், எந்தவொரு நல்லது கெட்டதாக இருந்தா லும், மாப்பிள்ளைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருவது மரபு. ஒருவேளை, மாமனார் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை எனில், ஏதேனும் விசேஷத்துக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தால், 'நீ வரத் தேவையில்லை’ என்பதுபோல் புறக்கணித்தால், மாப்பிள்ளைக்கு ஏற்படுகிற மன வலியும் உளைச்சலும் சொல்லிமாளாது. ஊரே துக்கம் விசாரிக்கும்; உலகமே 'அடக் கடவுளே..!’ என அங்கலாய்க்கும்!

உலகையே ஆளுகிற ஈசனுக்கே இந்த கதி ஏற்பட்டதெனில், நாமெல்லாம் எம்மாத்திரம்?! மாமனார் தட்சன், தான் நடத்தும் யாகத்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு, உலகாளும் நாயகனும் தனது மாப்பிள்ளையுமான சிவனாரை மட்டும் அழைக்காமல் புறக்கணித்த சோகக் கதை யாருக்குத்தான் தெரியாது!

அந்த அவமானம் கோபமாக மாற, கோபத்தில் கண்கள் சிவக்க, கடும் உக்கிரத்துடன் சிவனார் உருவாக்கிய திருவுருவம்தான் வீரபத்திரர். சிவனாரின் மொத்தச் சக்தியையும் ஒருங்கே கொண்ட வீரபத்திரர், யாகத்தைச் சீர்குலைத்து, தட்சனை அழித்தொழித்தார்.

வீரபத்திரரை வணங்கினால், மனதில் உள்ள பயங்கள் யாவும் நீங்கி, தைரியம் பெறலாம்; சிவனருள் கிடைக்கப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

ஆலயம் தேடுவோம்!

தமிழகத்தில், வீரபத்திரருக்கு ஆலயங் கள் வெகு குறைவு! கும்பகோணம்- தாராசுரத்தில் ஸ்ரீவீரபத்திரருக்கு அழகிய ஆலயம் அமைக்கப் பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. தற்போது, இந்தக் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தவிர, வீரபத்திரர் தவமிருந்து வழிபட்ட சிவாலயங்கள் சில உண்டு. அவற்றில், வீரபாண்டி ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று!

ஆலயம் தேடுவோம்!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது வீரபாண்டி. அந்தக் காலத்தில் வீரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்ட இந்த ஊரில், அழகே உருவெனக் கொண்டு திகழ்கிறது ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில். தென்பெண்ணையாற்றங்கரைக்கு அருகில், வன்னி மரமும், கொன்றை மரமும் ஸ்தல விருட்சங்களாக உள்ள இந்தத் தலத்தில், ஸ்ரீவீரபத்திரர் சிவனாரை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு ஈசன் ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்தருளிய ஒப்பற்ற திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வீரபாண்டி. இங்கே, ஊரின் மையப் பகுதியில் அழகுறக் கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர். தமிழில், ஸ்ரீஒப்பிலாமணீஸ்வரர் என்பர்.

இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

வேத வியாசர் அருளிய வேதங்களில், அவரிடமிருந்து சாம வேதத்தைக் கற்றறிந்தவர், ஜைமினி முனிவர். தென் பெண்ணையாற்றங்கரையில், வன்னி மரங்களும் கொன்றை மரங்களும் சூழ்ந்த வனப்பகுதியில், தினமும் சிவனாரை மனமுருகப் பிரார்த்தித்துப் பூஜைகள் செய்து வந்தார் ஜைமினி முனிவர். அப்போது சிவனருளால், 'சாமகான வேதம்’ எனும் இசைத் தொகுப்பை அமைத்தார் அவர்.

சிவனாரின் அன்பையும் அருளையும் பெறுவதற்காக ராவணன், சாம கானம் பாடியதாகச் சொல்கிறது புராணம். 'சாமவேதம் ஓதுபவர்’ என்று ஈசனைப் புகழ்ந்து பாடியுள்ளார் அப்பர் பெருமான். அத்தனை மகத்துவம் வாய்ந்த சாம கான வேதத்தை ஜைமினி முனிவர் தொகுத்தருளிய தலம் இது என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர்.

ஸ்ரீவீரபத்திரரும் ஜைமினி முனிவரும் வணங்கி வழிபட்டு அருள் பெற்ற திருத்தலம் இது என்பதால், மன்னர் பெரு மக்களும் பெருஞ்செல்வந்தர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, சிவனாரை வணங்கி வழிபட்டனர்; மனதுள் தைரியம் பெற்றனர்; கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கினர். இங்கே வழிபடுவதால் கிடைக்கும் பலன்களைக் கண்கூடாகக் கண்டு பூரித்துப் போனவர்கள், இந்தத் தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்தனர்.

இந்தத் தலத்தின் நாயகி- ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகை. இவளும் வரப்பிரசாதிதான்! செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வந்து, ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங் களும் பெருகும்; கன்னிப் பெண்கள், நல்ல கணவ னைக் கைப்பிடிப்பார்கள்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

ஆலயம் தேடுவோம்!

இத்தனைப் பெருமைகள் மிகுந்த திருக்கோயில், இன்று தனது பொலிவை இழந்து, பூஜை புனஸ்காரங்களை இழந்திருக்கும் நிலையிலும், தனது சாந்நித்தியத்தை மட்டும் தொலைக்காமல், நாடி வருவோர் அனைவருக்கும் அருளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது.

''எங்கள் ஊரில் உள்ள பிரமாண்டமான இந்தக் கோயில், ஒரு காலத்தில் விழாக்களும் கொண்டாட் டங்களுமாக இருந்தது. தை மாதம் 5-ஆம் தேதி அன்று, கங்கை நீரானது தென்பெண்ணையாற்றில் கலப்பதாக ஐதீகம். அன்றைய தினம், பல்லக்கில் ஸ்வாமி வீதியுலா வந்து, ஆற்றுக்குச் செல்வதும், தீர்த்தவாரி நடப்பதும், மனதுக்கு நிறைவாக இருக்கும். இன்றைக்கும் அந்தச் சம்பிரதாய சாங்கியங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றாலும், பழைய பொலிவு இல்லை. இந்தக் கோயிலுக்குத் திருப்பணி நடைபெற்று, கும்பாபிஷேகம் காண வேண்டும் என்பதுதான் எங்களின் கனவு'' என கண்ணீர் மல்கச் சொல்லும் குப்புசாமிக்கு வயது 78. இவர், திருப்பணிக் குழுவின் தலைவரும்கூட!

கிழக்குப் பார்த்த கோயில் இது. ஸ்வாமி ஒப்பிலா மணீஸ்வரரும் ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகையும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அற்புதமான விக்கிரக மூர்த்தமாக, அனைவருக்கும் ஞானத்தை வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார்.

ஆலயம் தேடுவோம்!

இங்கே உள்ள ஸ்ரீஅஷ்டபுஜ துர்கையும் அருளும் பொருளும் அள்ளித் தருபவள்தான்!

''வைகாசி மாதத்தில், அஷ்டமி நாளின்போது, ஸ்ரீதுர்கையின் சந்நிதிக்கு எதிரே, மகா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். இந்த ஹோமத்தில் கலந்துகொள்வதற்காகத் திருவண்ணா மலை, விழுப்புரம், சென்னை மற்றும் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆகவே, எப்பாடுபட்டேனும் இந்த விழாவை நடத்தி வருகிறோம்.

'கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்’ என்பார்கள். ஆனால், எங்கள் வீரபாண்டி கிராமத்தில் உள்ள இந்த மிகப் பெரிய சிவாலயத்தில், கோபுரங்கள் சிதிலமடைந்த நிலையில், பொம்மைகள் உடைந்து, பரிதாபமாக உள்ளன. கோயிலுக்குத் திருப்பணி செய்து வரும் அதே வேளையில், எப்படியேனும் கோபுரத்தையும் அமைப்பது என முடிவு செய்து, ஐந்தடுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். போதிய நிதி இல்லாததால், கோபுரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது'' என்று பரம்பரை அர்ச்சகரும், பரம்பரை அறங்காவலருமான சுவாமிநாத சிவாச்சார்யர் கவலையும் ஏக்கமுமாகத் தெரிவித்தார்.

நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரத்தைத் தொலைதூரத்தில் இருந்தபடி தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடி விடும் என்கிறது சாஸ்திரம்! அப்பேர்ப்பட்ட கோபுரத்தை, வீரபாண்டி கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது நியாயம்தானே?!

அந்தக் கோபுரம் எழுப்புவதற்குத் தேவை யான மண்ணோ, செங்கல்லோ, பொம்மைகளோ, கலசமோ... நம்மால் முடிந்ததை வழங்கி, ஒப்பிலா மணீஸ்வரரின் அருளையும், ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகையின் பேரருளையும் ஒருசேரப் பெற்று, நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்க வாழ்வோம்!

ஊர் கூடினால்தான் தேர் இழுக்கமுடியும்; அன்பர்கள் கைகொடுத்தால்தான், கோயில் திருப்பணிகள் செவ்வனே நடந்தேறும்!

ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரருக்கு அள்ளிக் கொடுங்கள்; ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகைக்கு மனதார வழங்குங்கள். கோபுர தரிசனம் மட்டுமல்ல; கோபுரத் திருப்பணிக்கு உதவுவதும் கோடிப் புண்ணியம்தான்!

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism