Published:Updated:

’தமிழகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக யுனெஸ்கோ அறிவிக்கலாம்!’ - வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் புகழாரம்

’தமிழகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக யுனெஸ்கோ அறிவிக்கலாம்!’ - வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் புகழாரம்
’தமிழகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக யுனெஸ்கோ அறிவிக்கலாம்!’ - வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் புகழாரம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலுள்ள சமணர் படுக்கை சிற்பங்கள், வெட்டுவான் கோயில் ஆகியவற்றைக் காண, வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் கழுகுமலைக்கு வந்தனர்.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் இந்தியாவிலுள்ள மிகவும் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிநாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்திய சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், உள்நாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் என 150 பேர் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி, அவர்களை 10 குழுக்களாகப் பிரித்து, இந்தியா முழுவதுமுள்ள பழைமை வாய்ந்த இடங்கள், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடச்செய்து, அதன் வரலாற்றுச் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சில குழுவினர், மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் குழுவினர், இன்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு வந்தனர். அவர்களுக்கு தாமரைப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கழுகுமலைச் சிற்பங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம், ‘’மதுரை ஆனை மலையில் இருப்பதைப் போலவே, பல  நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சமணர்கள் காலத்துச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மலையின் நடுவில், ஒரே இடத்தில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டு, அதன் கீழ் தமிழ் வட்டெழுத்துக்களில் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், சமணர்கள் தங்கள் பெற்றோர், மகள் ஆகியோரின் நினைவாகவும் சிற்பங்கள் செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு சிற்பமும் சிறந்த கலைநயத்துடன்  செதுக்கப்பட்டுள்ளது.

இடையில், சின்னச்சின்ன குகைகளும் உள்ளன. இந்த மலையின் இன்னொரு சிறப்பு, வெட்டுவான் கோயில். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே கோயிலைச் செதுக்கியுள்ள வெட்டுவான் கோயில் வேலைப்பாடுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடைவரைக் கோயிலை தமிழகத்தில் வேறெங்கும் நாங்கள் பார்த்ததில்லை. இந்தியாவில், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குப் பிறகு, இரண்டாவதாக இங்குதான் பார்த்தோம். அதனால்தான் இதைத் ‘தென்னகத்தின் எல்லோரா என்று  சொல்கிறார்கள் என நினைக்கிறோம். இதுமட்டுமல்ல, தமிழகமே வரலாற்றுச் சிறப்புமிக்கது. யுனெஸ்கோ, தமிழகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக அறிவிக்கும் வகையில் பல தொன்மையான, மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் சின்னங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு இடமும் ஒரு பொக்கிஷம். இந்தப் பயணம், எங்களுக்கு முழு மன நிறைவை அளித்துள்ளது’’ என்றனர்