Published:Updated:

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

Published:Updated:
கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்
##~##
'நா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்’ என்ற எண்ணம் கொண்ட எவரும் சிறப்புறுவது இல்லை. இதற்கு, நான்முகன் மட்டும் விதிவிலக்கா என்ன?! அவரும், அகந்தைக்கு ஆட்பட்டு இன்னலைச் சந்தித்த சம்பவம் ஒன்றுண்டு!

ஒருமுறை, தனது சிருஷ்டி தொழில் குறித்து கர்வம் கொண்டார் பிரம்மதேவன். படைப்புக் கடவுளுக்கு ஆணவம் தகுமா? அவரே கர்வம் கொண்டால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?! எனவே, பிரம்மனுக்கு பாடம் புகட்ட சித்தம் கொண்டார் திருமால். பிரமாண்டமான ஒரு பூதத்தைப் படைத்து பிரம்மனிடம் அனுப்பினார். தனது படைப்பில் அடங்காத பூதத்தைக் கண்ட பிரம்மன் குழம்பினார். பூதம், அவரை துரத்தியது. எங்கெங்கோ ஓடியும் தப்பிக்க முடியாத நான்முகன், மாலவனைச் சரணடைந்தார். மாலவன் சிரித்தார்... ''பூதத்தை அனுப்பியது நானே. உனது கர்வம் அகலவே அவ்வாறு செய்தேன்!'' என்றவர், பூதத்தை மறையச் செய்தார்.

நான்முகன், தனது தவறுணர்ந்தார். எனினும் அகந்தையின் விளைவாக, படைக் கும் திறனும், வேத அறிவும் அவரை விட்டு நீங்கின. மனம் கலங்கிய பிரம்மன், மீண்டும் அவற்றை அருளும்படி திருமாலைப் பணிந்தார். ''பூலோகம் சென்று தவம் செய்'' என்று அருள்புரிந்தார் திருமால்.

பிரம்மனும் பூலோகம் வந்தார்; தவத்தில் ஆழ்ந்தார். காலங்கள் உருண்டோ டின. பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த நாராயணர், அவருக்குக் காட்சி தந்து, அஸ்வமேத யாகம் செய்யும்படி பணித்தார். அதன்படி, அந்த இடத்திலேயே யாகம் நிகழ்த்த சித்தம் கொண்டார் பிரம்மன். கலைவாணி, காயத்ரிதேவி சமேதராக, யாக ஏற்பாடுகளில் தீவிரமானார். அக்னியை அழைத்து, யாக குண்டத்தில் ஜ்வாலையை எழுப்பப் பணித்தார். ஆனால், ஜ்வாலை எழும்பவில்லை. யாகத் துவக்கத்தில் ஏதோ குறையுள்ளது என்றான் அக்னி. அப்போது, ''காயத்ரிதேவிக்கு ஐந்து முகங்கள். உங்களுக்கோ நான்கு முகங்கள். இதுவே காரணம்...'' என்று குறிப்பால் உணர்த்தினாள் கலைவாணி.

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

உடனே, தன்னுடைய ஐந்து திருமுகங்களில் ஒன்றை தனது வல்லமையால் மறையச் செய்த காயத்ரிதேவி, அந்த முகத்தை பிரம்மனின் 4-வது முகத்தில் ஐக்கியப்படுத்தினாள். மறுகணம் யாக குண்டம் ஜ்வாலையுடன் ஜொலித்தது. தேவர்களும், ரிஷிகளும் சூழ சிறப்பாக யாகம் நிகழ்ந்தேற... யாக அக்னியில் இருந்து மகாலட்சுமி சமேதராக தரிசனம் தந்த மகாவிஷ்ணு, சதுர் வேதங்கள், அவற்றின் பொருள், உபநிடதங்கள், ஏழுகோடி மந்திரங்கள் ஆகியவற்றை பிரம்மனுக்கு உபதேசித்தார்!

மேலும், அங்கிருந்த அனைவரும் புண்ணிய தீர்த்தமாடும் விதமாக, தனது கதாயுதத்தால் பூமியில் அடித்து நதிப் பிரவாகத்தையும் உருவாக்கினார் ஸ்ரீவிஷ்ணு! பிறகு, பிரம்மனின் வேண்டுகோள்படி அங்கேயே கோயில் கொண்டார்.

பிரம்மன் தவமிருந்தும் யாகம் நிகழ்த்தியும் அருள் பெற்ற திருத்தலம்- கும்பகோணம். 'ஹரி நதி’ என எல்லோரும் போற்றிய... திருமால் உருவாக்கிய அந்த நதி- அரசலாறு. பிரம்மனுக்கு வேதோபதேசம் செய்ததால், இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு ஸ்ரீவேதநாராயணர் என்று திருநாமம்; தாயார்- ஸ்ரீவேதவல்லி.

கும்பகோணம் ஸ்ரீஉச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த பெருமாள் ஆலயம். இது அமைந்திருக்கும் வீதிக்கு, 'பிரம்மன்கோயில் தெரு’ என்றே பெயர்!

ஸ்ரீவேதநாராயணர்-வேதவல்லி தாயார் மட்டுமா? இவர்களது சந்நிதிக்கு வலப்புறம் பிரம்மனும் தன் தேவியருடன் சந்நிதி கொண்டுள்ளார். 'யாகத்தின்போது ஆணும்பெண்ணும் சமமாக இருக்கவேண்டும்’ என்பதற்கிணங்க, காயத்ரி தேவியின் திருமுகத்தை ஏற்ற பிரம்மன்,  நான்கு முகங்களில் 4-வதாக காயத்ரிதேவியின் முகம் கொண்டு திகழ்கிறாராம். ஸ்ரீவேதநாராயணர் சந்நிதிக்கு இடப்புறம், ருத்ராம்சமாக ஸ்ரீநரசிம்மரும் தாயாருடன் அருள்கிறார். ஆக, இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட, மும்மூர்த்தியரையும் ஒருங்கே வழி பட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் ஸ்ரீவேதவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேங்கடா சலபதி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இங்கு, மாதம்தோறும் ரோகிணி நட்சத்திர திரு நாளன்று, பிரம்மதேவருக்கு விசேஷ அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். மார்கழி- ரோகிணி நட்சத்திர நாளில், இன்னும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தத் தினத்தில், இங்கு வந்து வழிபடுவது விசேஷமாம்! தவிர, மார்கழியில் பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலை நான்கு மணிக்கே சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் துவங்கப்பெறுவது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம்!  ''ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து பிரம்மதேவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட, தோஷங்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்து வாழ்க்கை ஏற்றமுறும்'' என்கிறார் இந்த ஆலயத்தின் ராஜாமணி பட்டாச்சார்யர்.

இந்தத் தலத்தில் 'பிரம்ம சங்கல்பம்’ செய்து வழிபடுவது, மிகுந்த பலன்களைப் பெற்றுத் தரும். பிரம்ம சங்கல்பத்தின்போது, வேதநாராயண பெருமாளுக்கு அஷ்டோத்திரம் ஜபிக்கப்பட்டு, பிரம்மனிடம் சங்கல்பம் செய்வதுடன், ஸ்ரீநரசிம்மருக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.  இதனால் மும்மூர்த்தியரின் அருளால், தொழிலில் மேன்மையும் குடும்பத்தில் நிம்மதியும் பெறலாம்!

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்

மூக்குத்தி தரிசனம்!

கும்பகோணம் ஸ்ரீவேதநாராயணர் ஆலயம்

ஸ்ரீகாயத்ரிதேவி தனது ஐந்தாவது திருமுகத்தை, பிரம்ம தேவனின் 4-வது முகத்துடன் பொருத்தியதையட்டி, ஸ்ரீபிரம்ம தேவரின் அந்தத் திருமுகம் பெண் அம்சமாக மூக்குத்தியுடன் திகழ்கிறது! ரோகிணி நட்சத்திர தினத்தன்று பூஜையின்போது... பின்புறம் நோக்கியிருக்கும் பிரம்மனின் அந்தத் திருமுகத்தை, கண்ணாடியில் பிரதிபலிக்கவைத்து, பக்தர்கள் தரிசிக்கும்படி செய்கிறார்கள்.

ரோகிணி நட்சத்திர திருநாளில் பிரம்மதேவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, மூக்குத்தி (முக) தரிசனம் செய்வதால், எல்லா வகையான இன்னல்களும் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும் என்று பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், குழந்தைகள் கல்வியில் மேலோங்கவும், இளம் பெண்கள் கல்யாண வரம் பெறவும், குழந்தையில்லாதவர்கள் மழலைச் செல்வம் வேண்டியும் மூக்குத்தி தரிசனம் செய்து பிரம்மனின் பேரருளைப் பெற்றுச் செல்கின்றனர். மார்கழி மாத ரோகிணியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism