Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 11

எஸ்.கண்ணகோபாலன்

ஸ்ரீசாயிநாதர் ஓர் அவதார புருஷர் என்பதை வெங்கூசாவுக்குப் பிறகு முதன்முதலில் அறிந்துகொள்ளும் பாக்கியம், செங்கல்லை எறிந்து அவரைக் கொலை செய்யத் துணிந்த பாதகர்களுக்கே கிடைத்தது. இரண்டு முறை செங்கல்லை வீசி சாயிநாதரைக் கொல்ல நினைத்தவன், வெங்கூசா முதல் செங்கல்லை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டதையும், இரண்டாவது செங்கல் அவருடைய நெற்றியில் பட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தியதையும் கண்டு திகைத்துப் போனான். தொடர்ந்து, மலட்டு மாட்டில் இருந்து பால் கறந்து, அதை இளைஞன் சாயிநாதரின் கைகளில் பொழிந்து, அதுவரை தாம் பெற்றிருந்த அனைத்து ஸித்திகளையும் அந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கண்டதுமே அவனுக்கு மிதமிஞ்சிய அச்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக மயங்கி விழுந்து, இறந்தே போனான்.

அவனுடன் இருந்தவர்கள் ஓடிச் சென்று வெங்கூசாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். மேலும், இளைஞனைக் கொல்ல நினைத்துச் செங்கல்லை எறிந்தவன் இறந்துபோனதையும் அவருக்குத் தெரிவித்து, அவனை மன்னித்து, எப்படியாவது பிழைக்கச் செய்யவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

ஆனால் வெங்கூசாவோ, ‘‘இனி என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. இதுவரை நான் பெற்றிருந்த அத்தனை சக்திகளையும் இந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். உங்களுடைய பிரார்த்தனையை இனி இந்த இளைஞன்தான் நிறைவேற்றவேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். (இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தாம் பெற்றிருந்த ஸித்திகளை சுவாமி விவேகானந்தருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது நினைவுகூரத் தக்கது).
அதன்பேரில், அவர்கள் சாயிநாதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இறந்தவனைப் பிழைக்கச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பிழை செய்தவனையும் மன்னித் தருள்வதுதானே மகான்களின் இயல்பு?! சாயிநாதரும் அவனைப் பிழைப்பிக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆனாலும், தம் குருநாதரின் சம்மதம் வேண்டி அவரைப் பார்க்க, அவரும் கண்களாலேயே சம்மதம் தெரிவித்தார். உடனே, தான் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த பாலை, இறந்துபோனவனின் வாயில் கொஞ்சம் ஊற்றினார் சாயிநாதர். உடனே, இறந்துகிடந்தவன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுபவன்போல் பிழைத்து எழுந்து உட்கார்ந்தான். தான் கொல்ல நினைத்த இளைஞனே தன்னைப் பிழைக்கச் செய்தது கண்டு வெட்கித் தலைகுனிந்தவனாக சாயிநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 11

வெங்கூசா அவர்களிடம், ‘‘என்னிடம் இத்தனை காலம் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டது பொறாமையும் வஞ்சகமும்தானா? உங்களின் செயல் என்னை மிகவும் வருத்துகிறது. இனியாவது நல்லவர்களாக நடந்துகொள்ளப் பாருங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, சாயிநாதரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 11

வீட்டின் பூஜை அறைக்கு இளைஞனான சாயிநாதரை அழைத்துச் சென்ற வெங்கூசா, ‘‘குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன். உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது. நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.

குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம்.


இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஸ்ரீசாயிநாதரின் அருளால் ஸ்ரீகுமார் பாபா அவர்கள் இயற்றிய அன்ன பாபா நாமாவளிகளில் ஒரு நாமாவளி, ‘ஓம்... சித்திரத்திலும் உயிருடன் இருப்பாய் போற்றி! ஓம்’ என்பதும் ஒன்று. இந்த நாமாவளியின் பின்னணியில், பாபா தம்முடைய ஜீவித காலத்திலேயே நிகழ்த்திய அருளாடல் ஒன்றும் உண்டு.

ஸ்ரீசாயி பிரசாதம் - 11

சாயி சத்சரிதத்தை அவருடைய அருளால் எழுதி இருக்கும் கோவிந்த ரகுநாத தாபோல்கர் என்னும் ஹேமாட் பந்த், ஒருநாள் அதிகாலையில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் சாயிநாதர் தோன்றி, ‘‘இன்று நான் உன் வீட்டுக்குச் சாப்பிட வரப்போகிறேன்’’ என்று கூறினார். உடனே விழித்துக்கொண்ட ஹேமாட் பந்த், ஹோலி பண்டிகை தினமான அன்று பாபா தன்னுடைய வீட்டுக்குச் சாப்பிட வரப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷம் கொண்டவராக அதுபற்றி மனைவியிடம் தெரிவித்தார். ஆனால், அவரின் மனைவிக்கோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. காரணம், எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஷீர்டியில் இருந்து பாபா எப்படி வரமுடியும் என்று நினைத்தாள். ஆனாலும், ஹேமாட் பந்த் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தார்.

பிற்பகல் உணவு நேரத்தில், வீட்டுக் கூடத்தில் வரிசையாகக் கோலம் போட்டு, அதன் நடுவில் இலைகள் போடப்பட்டு, மணைப் பலகைகளும் போடப்பட்டன. பிரதானமான இடத்தில் வண்ணக்கோலம் போடப்பட்டு, சுற்றிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் நடுவில் இலையும் பாபா உட்காருவதற்காக வேலைப்பாடுகள் அமைந்த மணைப் பலகையும் போடப்பட்டது. உற்றார் உறவினர், நண்பர்கள் என எல்லோரும் சாப்பிடுவதற்குத் தயாராகப் பந்தியில் அமர்ந்துவிட்டனர்.  ஆனால், பாபாதான் வந்தபாடாக இல்லை. எத்தனைநேரம்தான் இலையின் முன் காத்துக்கொண்டு இருப்பது? ஹேமாட் பந்த் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்.


இனிமேல் பாபா வருவது சாத்தியமில்லை என்று நினைத்த ஹேமாட் பந்த், எல்லோரையும் சாப்பிடுமாறு சொல்லிய நேரத்தில் சரியாக வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. பாபாதான் வந்துவிட்டதாக நினைத்து ஹேமாட் பந்த் வாசலுக்கு ஓடோடிச் சென்று பார்த்தபோது, அங்கே முஸ்லிம் ஞானியான மெளலானாவின் சிஷ்யர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் நின்றுகொண்டு இருந்தார்.

ஹேமாட் பந்த்தைப் பார்த்ததும் அவர்கள், ‘‘தாங்கள் சாப்பிடப்போகும் நேரத்தில் வந்து தங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் பொருளை உங்களிடம் சேர்ப்பதற்கே நாங்கள் வந்திருக்கிறோம். தயவுசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி, காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு பொருளை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

ஹேமாட் பந்த் அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே சாயிநாதரின் சிற்பம் ஒன்று இருந்தது. ஹேமாட் பந்த்துக்குச் சந்தோஷம் தாளவில்லை. தன் கனவில் வந்து சொன்னதுபோலே சாயிநாதரே சாப்பிட வந்துவிட்டதாக எண்ணி பூரித்துப் போனார். ‘என்னுடைய உருவச்சிலையிலும், உருவப்படத்திலும்கூட நான் உயிர்ப்புடன் இருப்பேன்’ என்று பாபா தாம் சொன்ன வாக்குறுதியை, தன்னைக் கருவியாகக் கொண்டு நிறைவேற்றியதைக் கண்டு மெய்சிலிர்த்துப்போன ஹேமாட் பந்த், நடுநாயகமாகப் போடப்பட்டு இருந்த மணைப் பலகையில் பாபாவின் சிற்பத்தை வைத்து, நைவேத்தியமும் தீபாராதனையும் செய்தார். அனைவரும் பாபாவின் அருளாடலை நினைத்து, ஆனந்தம் கொண்டவர்களாக உணவு உண்டார்கள்.

இதேபோல், மேலும் சில நிகழ்ச்சிகளில் பாபா தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றி இருக்கிறார். அதைப் பற்றிப் பின்னாளில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்தியும் இருக்கிறார்.


பக்தர்களுக்குப் புகலிடமாகத் திகழும் ஸ்ரீ சாயி அஷ்டோத்திர சத நாமாவளியில்...

‘ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:’


‘ஓம் பக்தாவன பிரதிக்ஞாய நம:’

- என்னும் இரண்டு நாமாவளிகள் தொடர்பாக அவர் நிகழ்த்தி இருக்கும் அருளாடல்களை இனி பார்ப்போம்.

- பிரசாதம் பெருகும்