அருட்களஞ்சியம்
ராக, தேவதா ஸ்வரூபங்கள்
இசை வழியே ஈசனைக் காண இலக்கணம் அமைத்துத் தந்த மகான்களில், வேங்கட மஹி, சார்ங்க தேவர் முதலியவர்களின் வரிசையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர், ஸோமநாதர் என்னும் மகான். இன்று நம் நாட்டில் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து வரும் ருத்ர வீணை என்னும் நாலு தந்திகளுடன் கூடிய வீணையை முதலில் கையாண்டு, நாதோபாஸனை செய்து, ராகங்களின் நாதாத்ம ஸ்வரூபத்தை அனுபவித்து அந்த இன்பத்தை தேவதாத்ம ஸ்வரூபமாக உள்ளத்தில் உருவத்தைக் கண்ட மகான் இவர்.
இவர் செய்துள்ள ‘ராக விபோதம்’ என்ற ஸங்கீத சாஸ்திரத்திலிருந்து நமது நாட்டில் பிராபல்யமாக உள்ள சில முக்கிய ராகங்களின் தேவதாத்ம ஸ்வரூபங்கள், நமது ஸங்கீத வித்துவான்களும் ரஸிகர்களும் பூஜிக்கத்தக்க முறையில் இங்கே சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.
ஹிந்தோளம்: வாத்யமானாலும் வாய்ப்பாட்டானாலும் அதில் ஹிந்தோள ராகத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஒவ்வொரு ரசிகரின் உள்ளத்திலும் தோன்றும் உணர்ச்சி, உல்லாஸமும் கரைகடந்த ஆனந்தமுமேயாகும். இதற்கேற்றாற்போல் நூலிலும் ஹிந்தோள ராக தேவதையின் லக்ஷணம் கீழ்க்கண்ட விதமே குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். ‘‘ஹிந்தோளர் வெண்ணிறமும், நல்ல அழகும் கொண்டவர்; பல மலர்கள் தொடுத்த மாலையை தரித்தவர்; இளநங்கையருடன் ஸஞ்சரிப்பவர்; ஊஞ்சலாடுவதில் அவருக்கு விருப்பம் அதிகம்.”

கல்யாணி: ஏழைக் குடிசையையும் அரண்மனை போல் காணச்செய்யும் கம்பீரம் நிறைந்தது கல்யாணி ராகம். ஸந்த்யா காலத்தில் அதை ஒருவர் நன்றாகப் பாடும்போது, கல்யாணி ராகத்தில் இருக்கும் களிப்பும் ஆழ்ந்த ஆனந்த உணர்வும் கேட்கும் ஒவ்வொருவர் இதயத்திலும் உண்டாவது இயற்கை. ஸாஸ்திரமும் கல்யாணி ராக தெய்வத்தை அப்படித்தான் சித்திரிக்கிறது.



