Published:Updated:

பசுவைப் போற்றுவோம் - 4

குலம் காக்கும் கோமாதாரெ.சு.வெங்கடேஷ்

“எனக்கு மூணு பொம்பளைப் புள்ளைங்க. ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். நஷ்டத்தால கம்பெனிய மூடிட்டாங்க. வேற வேலை கெடைக்கல. என்ன செய்யுறதுனு புரியல. பிள்ளைங்கள வேற கரையேத்தியாகணுமே! அப்பதான் எங்க குலத் தொழில் கைகொடுத்துச்சு. எங்க அப்பா, தாத்தா எல்லாம் மாடு வளர்த்துப் பொழப்பு நடத்தி வந்தாங்க. அதனால எனக்கும் மாடு வளர்ப்பு பத்தின விஷயங்கள் நல்லா தெரியும். ஏற்கெனவே இருந்த ரெண்டு மாட்டோட இன்னும் ரெண்டு மாடுங்க வாங்கி இப்போ பால் வியாபரம் பண்ணிட்டு இருக்கேன். இதுல கெடைக்கிற வருமானத்த வச்சுதான் மூணு பிள்ளைங்களையும் படிக்க வைக்கிறேன். நானும் பசுக்களை நல்லா பாத்துக்கறேன். பசுக்களும் என்னையும் என் குடும்பத்தையும் நல்லா பாத்துக்குதுங்க. இவங்கதான் எனக்குத் தாய், தகப்பன், தெய்வம் எல்லாமே!” என்று நெகிழும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குணசேகரன், தொடர்ந்து கூறிய மற்றொரு விஷயம் சற்று சிந்திக்கக்கூடியதாக இருந்தது.

 “பால் வித்து வருமானம் வந்தாலும், அது குடும்பம் நடத்தவே சரியா இருக்கு. நாளைக்கே பிள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சி பண்ணிப் பார்க்கணும்னா, என்கிட்ட பெருசா சேமிப்பு ஏதும் இல்ல. அத நெனச்சா கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு” என்றார். இது அவருடைய மனக்குமுறல் மட்டுமல்ல, ஜீவனத்துக்காக பசுமாட்டையே நம்பி இருக்கும் பலருடைய யதார்த்த நிலை இப்படித்தான் இருக்கிறது. அத்தனைபேரின் பிரதிநிதியாக நம்மிடம் பேசிய குணசேகரனிடம், “உங்கள் பசுவின் கறவை நின்று போன பிறகு அதை என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வியை முன்வைத்தோம். சற்றே யோசித்தவர் பிறகு தயக்கத்துடன், ‘‘பசுமாடுங்களும் நம்மைப் பெத்த தாய் தகப்பன் மாதிரிதானுங்களே? கறவை நின்னுபோனதும் துரத்தி விட்டுற முடியுமா? அது ஒரு மனுஷன் செய்யக்கூடிய செயலா? அதனால, என்னால முடிஞ்சவரைக்கும் அதுங்களைக் காப்பாத்துவேன். முடியாதப்ப கோயிலுக்கோ இல்லைன்னா கோசாலைக்கோ கொடுத்துட வேண்டியதுதான்’’ என்றார்.

சுரபி கோசாலை நடத்தி வரும் சேலத்தைச் சேர்ந்தவரும் ‘பாரதிய கோவம்ச ரக்‌ஷன் சம்வர்தன் பரிஷத்’ என்னும் அமைப்பின் தமிழகத் தலைவராக இருப்பவருமான ஆத்மானந்தா மற்றும் கோவையில் ஸ்ரீ காமதுகா கோசாலை நடத்தி வரும் சண்முகம் ஆகியோரிடம் பேசினோம்.

“தவிர்க்க முடியாத சூழலில் பலர் வந்தவரை லாபம் என்று கறவை நின்ற மாடுகளை அடிமாடாக விற்றுவிடுகிறார்கள். பசு என்றாலே, இவர்கள் கண்ணில் தெரிவது பாலாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் பாலைவிட பசுவிடமிருந்து கிடைக்கும் கோமியம் மற்றும் மூத்திரத்தின் மூலம் அதிக வருமானம் பெறலாம்” என்றார்கள் அவர்கள்.

பசுவைப் போற்றுவோம் - 4

 பசு வதைத் தடுப்பு, அவற்றின் பாதுகாப்பு மற்றும் நாட்டு மாட்டின வளர்ச்சி போன்ற நற்பணிகளில் ஈடுபட்டு வரும்  ஆத்மானந்தா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பசு வதைத் தடுப்பு மற்றும் பசுவிலிருந்து லாபகரமாக பொருட்கள் தயாரிப்பது பற்றிப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் கூறிய விஷயம் ஒவ்வொன்றும் மலைக்க வைப்பதாக இருந்தது. பசுவிடமிருந்து பால் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைத்திருந்த நமக்கு பசுஞ்சாணம் மற்றும் மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பொருட்களைக் காட்டி வியப்பு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘அடிப்படையில் நான் சித்த மருத்துவம் தெரிந்தவன். மாட்டிடமிருந்து கிடைக்கும் பொருட்களில் பெருவகையான மருத்துவத் தன்மை இருக்கிறது. இந்த உண்மை தெரியாமல் மாடுகளை வெட்டுக்குக் கொடுப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படும் பசுக்களை அற்பப் பணத்துக்காக வெட்டுக்குக் கொடுப்பது முட்டாள்தனமான காரியம் மட்டுமல்ல, மிகவும் பாவமான செயலும்கூட! இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்னால் முயன்றதைச் செய்ய நினைத்தேன். பால் பொருட்கள் நீங்கலாக, பசுவிடமிருந்து கிடைக்கக்கூடிய மற்ற பொருட்களைத் தயாரிப்பது எப்படி என்று பசு வளர்ப்போரைப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன்’’ என்றார்.

விபூதி என்றதுமே நம் கண் முன்னே காட்சியளிப் பது சிவபெருமானே! அகிலத்தை ஆளும் சிவ பெருமானின் தோற்றத்தைப் புராணங்கள் ‘சாம்பல் தரித்தோன்’ என்று குறிப்பிடுகின்றன. சாம்பல் எனப்படுவது விபூதிதான். கருவிலிருக்கும் குழந்தைக்கு மருந்தை குழந்தையின் வாயில் ஊட்டுவதில்லை; மருந்தை தானே உட்கொண்டு தன் குழந்தையைக் காக்கிறாள் அன்னை. இதைத்தான் பரமனும் செய்கிறான். தனக்குள் இருக்கும் உலக உயிர்களைக் காக்க, தன் உடலில் விபூதியை பூசிக் கொள்கிறான்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை


மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்


தங்கா வினைகளும் சாரும் சிவகதி 


சிங்காரம் ஆன திருவடி சேர்வரே

- என்று திருமந்திரத்தில், விபூதி பூசுவதன் பலனை விவரிக்கிறார் திருமூலர்.

உலகை ஆளும் பரமன் கவசமாகப் பூசும் திருநீற்றை அனுதினமும் யார் ஒருவர் பூசி வருகிறாரோ, அவரைச் சுற்றியுள்ள துன்பங்கள் விலகி, சிவனின் திருவடி எய்துவர் என்கிறது இந்த மந்திரம். இமயமலையில் உடல்முழுவதும் விபூதி பூசிக்கொண்டு, உறைய வைக்கும் குளிரில் மேலாடை இல்லாமல் சர்வசாதாரணமாகச் சாதுக்களும் சந்நியாசிகளும் யாத்திரை மேற்கொண்டிருப்பார்கள். அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது பெரும் அறிவியல் உண்மை. விபூதியானது உடலில் உள்ள சூட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. வெளியிருந்து வரும் குளிரைத் தடுத்து, உடலைக் காக்கிறது.

கடைகளில் கிடைக்கும் விபூதிகளில் இந்த தன்மை இருக்காது.ஏனென்றால், அவை விபூதியே அல்ல. நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் வாசமற்ற விபூதியே சுத்தமான விபூதி. இந்த விபூதி எப்படி தயாரிக்கப் படுகிறது என்பதைப் பற்றி ஆத்மானந்தாவிடம் கேட்டோம்.

பசுவைப் போற்றுவோம் - 4

“நாட்டு மாடுகளின் சாணத்திலிருந்து செய்யப்படுவதுதான் உண்மையான விபூதி. மற்ற அனைத்தும் பேப்பர் சாம்பல், சுண்ணாம்புப் பவுடர் அல்லது ரசாயனக் கலவையாகத்தான் இருக்கும். முதலில் சாணத்தை எடுத்து, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, களிமண் பதத்துக்கு கொண்டுவர வேண்டும். பின்பு அதை உருட்டி, ஈரப்பதம் போகும் வரை வெயிலில் காயவைக்க வேண்டும். காய்ந்த பின் அதை எடுத்து உமி மற்றும் மண் கொண்டு மூடி, எரிக்க வேண்டும். முழுவதும் எரிந்த பிறகு, வெள்ளை சாம்பல் கட்டிகள் நமக்குக் கிடைக்கும். அதைத் தூளாக்கி சலித்தெடுத்தால் சுத்தமான விபூதி தயார்.ஒரு கிலோ விபூதியின் விலை 200 ரூபாய் வரை போகிறது. 100 கிலோ சாணத்தைக் கொண்டு சுமார் 12 முதல் 15 கிலோ வரை விபூதி தயாரிக்க முடியும். தயாரிப்பதற்கான செலவு ரூ.1250 மட்டுமே! ஆனால், அதில் கிடைக்கும் வருமானம் ரூ.2500.  சாணத்தில் இருந்து கிடைக்கும் விபூதி, ஓர் அற்புதமான கிருமி நாசினி என்பதால் காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். ஈரோடு மாரியம்மன் கோயில் போன்ற தமிழ்நாட்டின் பல கோயில்களில் நாங்கள் தயாரிக்கும் விபூதிதான் பிரசாதமாகக் கொடுக்கப் படுகிறது. சபரிமலையில் மாதம் மூன்று நாட்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். மீண்டும், அடுத்த மாதம் நடை திறக்கும்வரை சுவாமி விக்கிரஹத்தை விபூதி கொண்டு மூடி வைப்பர். இந்தப் புனிதமான காரியத்துக்கும் நாங்கள் தயாரிக்கும் விபூதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதை எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம்” என்று நெகிழ்கிறார் ஆத்மானந்தா.
மாடு வளர்ப்பதற்குப் பெரிய படிப்பு ஏதும் தேவையில்லைதான். ஆனால், பொறியியல் படித்து மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தும்கூட, வேலையை உதறிவிட்டுப் பசுக்களைப் பராமரிப்பதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார் சண்முகம் என்பவர். அவரிடம் பேசினோம்.

“பொறியியல் படிச்சுட்டு ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போ, நாட்டு மாட்டு இனங்கள் வேகமாக அழிவது பற்றித் தெரியவந்தது. நான் விவசாயக் குடும்பத்துல பிறந்தவன், மாடுங்களோடு ஒண்ணுமண்ணா வளர்ந்தவன். அதனாலதானோ என்னவோ மனசு உறுத்த ஆரம்பிச்சது. சட்டுனு வேலைய ராஜினாம செஞ்சுட்டு, கோவை தொண்டாமுத்தூரில் சின்னதா  காமதுகா என்ற கோசாலையைத் தொடங்கினேன். இப்போ இங்கே சுமார் 120 நாட்டு மாடுகளைப் பராமரிச்சுட்டு வரேன். கூடவே, இயற்கை முறையில் 28 வகையான பசுப் பொருட்களை தயாரித்து விக்கிறேன்” என்றவர், கோமூத்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் அர்க் தயாரிப்பையும், அதன் நன்மையையும் பற்றி விளக்கினார். 

“கோமூத்திரத்தைக் கொதிக்க வைத்தால் அதிலிருந்து ஆவி வெளிவரும். அதை குளிர்ந்த நீர் இருக்கும் கலனில் செலுத்தும் போது, திரவ வடிவம் பெறும். இதுவே கோமூத்திர அர்க் எனப்படுகிறது. இதை தினமும் காலையில் 10 முதல் 20 மில்லி வரை குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும், பசி எடுக்கும், உடல் பருமன் குறையும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதில் எந்தவித ரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பொருட்கள் தயாரிப்பு முறை பற்றி, நாக்பூரில் உள்ள ‘கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா’ என்ற அமைப்பினரிடம் கத்துக்கிட்டேன். இதுபோல் 108 பொருட்கள் தயாரிக்கலாம். மாடு வளர்க்கப் பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. ஆனா, நாம மாட்டைப் படிக்கணும். அதோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கணும். மாடு வளர்க்கிறதால் என்னுடைய படிப்பு பயன்படாம போகும்கிறது இல்ல. பசு வளர்ப்புலயும் தொழில்நுட்பத் தேவை நிறைய இருக்கு. அதைப் பூர்த்தி செய்ய நான் படிச்ச படிப்பு உதவும்னு நம்புறேன்” என்றார் மனநிறைவாக.

இவர்களைப் போல இன்னும் பலர், பசுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். அங்கொருவர், இங்கொருவர் என ஒருசிலரது முயற்சியால் மட்டும் மனித குலம் காக்கும் கோமாதாவைக் காப்பாற்றிவிட முடியாது. அதில் இருக்கும் சிக்கல்கள் பலப்பல. ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். நமது பங்கும் இந்தப் புனித சேவைக்குக் கட்டாயம் தேவை. இதில் நம் சிறிய பங்களிப்பும்கூட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இன்றியமையாததாக இருக்கும். அந்தச் சேவையை செம்மையுறச் செய்வது எப்படி?

- அடுத்த இதழில்

படங்கள்: க.தனசேகரன், கு.கார்முகில்வண்ணன்

பசுவிலிருந்து தயாரிக்கக் கூடிய பொருட்கள்:

பசுவைப் போற்றுவோம் - 4


விபூதி, கோமூத்திர அர்க், பஞ்சகவ்யா, பற்பொடி, ஷாம்பூ, கேச எண்ணெய், குளியல் சோப்பு, தூபம், முகப்பற்று, மூட்டு வலித் தைலம், பூச்சிவிரட்டி, பினாயில், கொசுவிரட்டி, பாத்திரம் கழுவும் பவுடர், கண் அழுக்கு நீக்கும் மருந்து... என பசுப் பொருட்களின் பட்டியல் நீளமானது. இவை அனைத்தையும் எந்த வித ரசாயனக் கலப்பும் இல்லாமல் குறைந்த முதலீட்டில் தயாரிக்க முடியும். இதேபோல் 108 வகையான பசுப் பொருட்களைத் தயாரிக்க ஒரு பசுமாடு இருந்தாலே போதுமானது என்பதிலிருந்து பசுவின் சிறப்பை அறியலாம்.

பசு தொழுவத்தில் அங்கப்பிரதட்சணம்!

சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ளது பசுமடம் என்ற கோசாலை. அடிமாட்டுக்குச் செல்லும் பசுக்கள், தானம் பெற்ற பசுக்கள், வயதான பசுக்கள் எனச் சுமார் 150 பசுக்களை இந்தக் கோசாலையில் பராமரித்து வருகின்றனர். பசுவில் இருந்து கிடைக்கும் பால், முதியோர் இல்லம் ஒன்றுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. கோசாலையை எப்படி அமைக்க வேண்டும், சாணத்திலிருந்து பயோ காஸ் தயாரிப்பது எப்படி போன்ற பயிற்சிகளையும் இவர்கள் வழங்கி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையில் கோசாலைக்கு வந்து மாட்டுத் தொழுவத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதால் தீரா நோயும் தீரும், வீட்டில் உள்ள பிரச்னைகள் அகன்று நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. ‘இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; அனுபவபூர்வமான உண்மையும்கூட! ஒருமுறை, குழந்தை இல்லாத தம்பதியர் இங்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்தனர். சில மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் குழந்தைப் பேறு பெற்று, மீண்டும் இங்கு வந்து கோதானம் செய்துவிட்டுச் சென்றனர்’ என்கிறார் ‘பசுமடம்’ நடத்திவரும் மனோகரன்.

அடுத்த கட்டுரைக்கு