கோடீஸ்வரர் ஒருவர் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டத் தீர்மானித்தார். அதற்காக ஆறு ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்பந்தம் செய்தார். ஒரு கட்டடம் கட்ட எதற்காக ஆறு ஒப்பந்தக்காரர்கள் என, ஆராய்ச்சிக் குளத்தில் இறங்கவேண்டாம்.

ஒவ்வொரு மாடி கட்ட ஒவ்வோர் ஒப்பந்தக்காரராக 5 மாடிகளுக்கும் ஐவர், அஸ்திவாரத்துக்கு ஒருவர் என 6 ஒப்பந்தக் காரர்களை ஏற்பாடு செய்தார் கோடீஸ்வரர்.

பூஜை போட நாள் குறிக்கப்பட்டது. ஒப்பந்தக் காரர்களில் ஐவர் மட்டும் வந்திருந்தார்கள். அஸ்திவாரம் போட வேண்டியவர் வரவில்லை. அதற்காகப் பூமி பூஜையை நிறுத்த முடியுமா என்ன? பூமி பூஜையை நடத்தி முடித்தார் கோடீஸ்வரர். அது முடிந்ததும், ''சரி... சரி... சீக்கரமா இப்பவே வேலையை ஆரம்பிங்க'' என்றார் செல்வந்தர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்திருந்த ஐவரும் திகைத்தார்கள். ''எப்படி சார்? அஸ்திவாரம் போட வேண்டியவர் வரல. அவர் அஸ்திவாரம் கட்டாம, நாங்க எப்படிக் கட்டடம் எழுப்ப முடியும்?'' எனக் கேட்டார்கள்.

கோடீஸ்வரர் சிரித்தார்; மறுத்தார்.

அடிப்படையை அறிந்தோமா..?

''என்னய்யா பேசறீங்க? அஸ்திவாரம் வெளில, கண்ணுக்குத் தெரிஞ்சுக்கிட்டா இருக்குது? அது பாட்டுல, மண்ணுக்குள்ளதானே கெடக்குது. அவர் வந்து கட்டறப்போ, அஸ்திவாரத்தப் பார்த்துக்கலாம். அதுக்கு முன்னாடி, மேலவாக்குல அஞ்சு மாடிகளையும் நீங்க கட்டி முடிங்க!'' என்றார்.

கேட்டவர்கள் எல்லோரும் சிரித்து விட்டார்கள். நமக்கும் சிரிப்பு வருகிறதல்லவா?

அஸ்திவாரம் இல்லாமல், எத்தனைக் கட்டடங்கள் கட்டினாலும், அவை நிற்குமா? பலன் இருக்குமா? அந்தக் கோடீஸ்வரருக்குப் பணத்தைக் கொடுத்த ஆண்டவன், மூளை யைக் கொடுக்கவில்லையே... பாவம்!’ என்போம்.

இனிமேல் இது கதையல்ல. அந்தக் கோடீஸ்வரரும் வேறு யாருமல்ல. நாம்தான்!

அடிப்படையைத் தெரிந்துகொள்ளாமல், மேலும் மேலும் தேடிக்கொண்டு அலைகிறோமே தவிர, அறிய வேண்டியதை அறிந்துகொள்ளவில்லை.

நாம் யார்? உயிரா, உடம்பா?, இந்த இரண்டும் எவ்வாறு சேர்ந்தன? நாம் ஏன் பிறந்தோம்? இந்தக் கேள்விகள் எல்லாம் நமக்குள் தோன்ற வேண்டும். நமக்குத் தோன்றுகின்றனவோ இல்லையோ, ஒரு சீடனுக்குத் தோன்றியது. அவன் குருநாதரிடம் கேட்கிறான். குருநாதர் பதில் சொல்கிறார் என்ற முறையில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

பதில் சொல்லிக் கொண்டு வந்த குருநாதர், உலகின் தோற்றத்தைச் சொல்லி வீடுபேறு அடைபவர்களுக்கு உண்டான சகாயத்தை

யும் சொன்னார். கூடவே, நல்லவற்றை உணரவிடாமல், தெரிந்து தெளியவிடாமல் செய்யும் மறைப்புகள் குறித்தும் சொன்னார்.

மறைப்புகள் என்றால், ஏதோ சுவரை வைத்தோ, மற்ற தடுப்புகளை வைத்தோ செய்யப்பட்ட மறைப்புகள் என எண்ணக் கூடாது. உதாரணமாக, நமக்கு எல்லாம் தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள் (இந்த எண்ணம் நம்மில் பெரும்பாலோர்க்கு உண்டு). நல்லது கெட்டது எல்லாம் நமக்குத் தெரியும்.

அப்படியானால், நாம் அனைவரும் நன்றாக இருக்கவேண்டுமே! ஆனால், நிலைமை அப்படி இல்லையே!

எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும்... நடப்பது என்ன என்பதைப் பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும்தான் தினந்தோறும் பார்க்கிறோமே. ஒரே களேபரம், அமைதியின்மை, நிம்மதியின்மை!

நல்லது  கெட்டது என அனைத்தும் தெரிந்த நாம் இப்படி அமைதியை இழந்து அல்லல்படக் காரணம் என்ன?

வேறொன்றுமில்லை! நல்லதைக் கெட்ட தாகவும்; கெட்டதை நல்லதாகவும் எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் 'மறைப்பு’ என்கிறது கைவல்லிய நவநீதம்.

நல்லதை நல்லதாக எண்ணிக் கடைப்பிடிக்க முடியவில்லை. கெட்டதைக் கெட்டதாக உணர்ந்து, விலக்க முடியவில்லை. இதையே 'மறைப்பு’ என்கிறார் குருநாதர். அப்படிப்பட்ட அந்த 'மறைப்பை’ மிகவும் பொல்லாதது என்கிறார். கூடவே, மற்றொன்றையும் கூறுகிறார்.

ஊற்றமாம் பகல் காலம் போல்

உபகாரம் நிசியில் உண்டோ?

மாற்றம் என் உரைப்பேன் மைந்தா!

மறைப்பது மிகப் பொல்லாதே

(தத்துவ விளக்கப் படலம் 47)

இந்தப் பாடலில், மறைப்பை மிகவும் பொல்லாததாகச் சொன்ன குருநாதர், அதற்கு முன்னால் பகலையும் இரவையும் குறிப்பிட்டு, பகலைப் போல இரவினால் உபகாரம் உண்டா? எனவும் குறிப்பிடுகிறார். இது ஏதோ, கொஞ்சம் புரிவதுபோல இருக்கிறது.

பகல் பொழுது அதாவது, வெளிச்சம் இருந்தால்தான் நாலு இடங்களுக்கு... அங்கு இங்கு போய், யாரையாவது பார்த்து, எதையாவது செய்து உயிர் வாழ முடிகிறது. ஆகையால், பகல் பொழுதில் உள்ள இந்த சௌகரியம் இரவில் இல்லை எனப் பாடல் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

ஆனால்... இப்பாடலில் குறிப்பிடப்படும் பகலையும் இரவையும் நாம் உணர வேண்டுமானால், கீதையைப் பார்க்க வேண்டும்.

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism