Published:Updated:

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

கண்ணபுரத்து அழகனே, காப்பிட வாராய்..!எஸ்.கண்ணன்கோபாலன்

'கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!’ என்று குலசேகர ஆழ்வாரும், 'மை வளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ’ என்று திருமங்கை ஆழ்வாரும், 'மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்’ என்று நம்மாழ்வாரும் உருகி உருகி  திருக்கண்ணபுரத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருப்பதைப் படிக்கும்போதெல்லாம். அப்படி அந்தப் பெருமாளிடம் என்னதான் வசியம் இருக்கிறதோ என்று வியப்பு எழுவதுண்டு. ஆனால், 5.3.15 அன்று நடைபெற்ற அந்தத் திருக்கண்ணபுர நாயகனின் மாசி மக தீர்த்தவாரியைத் தரிசித்து, அந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணி, அந்தத் திருத்தலத்துக்குச் சென்றபோது, ஆழ்வார்கள் அப்படி உருகி உருகிப் பாடியது மிகவும் சரியே என்று நினைக்கத் தோன்றியது. சொல்லப்போனால், அவர்கள் அந்தக் கண்ணபுரத்து நாயகனை வர்ணித்தது மிகக் குறைவுதான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவன் நம்மையும் வசியப்படுத்திவிட்டான். 

ஆழ்வார்களால் கொண்டாடப்பெற்ற அந்த நாயகனின் திருநாமம் என்ன தெரியுமா? செளரிராஜ பெருமாள்! பெயருக்கு ஏற்றாற்போல், அவருடைய திருமுடியில் சுருள் சுருளாய் கேசம் வளர்ந்திருக்கிறது. இது எதனால் என்பதைப் பிறகு பார்ப்போம். அதற்கு முன், மாசிமக தீர்த்தவாரி விழா பற்றி, ஆலய அர்ச்சகர் சம்பத்குமார் பட்டாச்சார்யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

''இந்தக் கோயிலில் வைகாசி மாதமும், மாசி மாதமும் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. மாசி திருவிழாவின்போது, மகம் நட்சத்திர நாளில் பெருமாள்,திருமலைராயன்பட்டினத்துக் கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுவது மிகவும் விசேஷம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள் ளும் இந்த வைபவத்தில் பல சிறப்பான அம்சங் களும் உண்டு. அதுபற்றி நான் சொல்வதைவிடவும் நீங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்'' என்றவர், நம்மைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

கோயிலில், பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர். அங்கே செளரிராஜ பெருமாளுக்கு அலங்காரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. சற்றுநேரத்தில் கைத்தல சேவையும், தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற இருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.

சற்று நேரத்தில் திரை விலக்கப்பட, கண்கொள்ளா தரிசனம் கிடைத்தது  நமக்கு! மேலிரு கரங்களில் சங்கும், பிரயோக நிலையில் இருக்கும் சக்கரமும் ஏந்தி, இடக்கரத்தைத் தொடையில் வைத்து வலக்கரத்தை தானம் பெறும் வகையில் தான ஹஸ்தமாக வைத்துத் திருக்காட்சி தருகிறார் பெருமாள். அவர் யாரிடம் தானம் பெறுகிறார்? நமக்கெல்லாம் அருளை அள்ளி வழங்கும் பெருமாளே தானம் பெறுவதா என்ற வியப்பு நமக்கு ஏற்பட்டது. அதேபோல், பெருமாளின் மேல் வலக்கரத்தில் பிரயோக நிலையில் சக்கரம் இருப்பதன் காரணமும் நமக்கு விளங்கவில்லை. தவிர, பெருமாளுடன் தேவி, பூமிதேவி, ஆண்டாள் ஆகியோருடன் மற்றுமொரு தாயாரும் இருப்பதைக் கண்டு, அர்ச்சகரிடம் விவரம் கேட்டதில், அந்தத் தாயாரின் பெயர் பத்மினி நாச்சியார் என்று தெரிந்துகொண்டோம். யார் இந்த பத்மினி நாச்சியார்? அவருக்கும் பெருமாளுக்கும் உள்ள உறவுதான் என்ன? இதுபற்றி எல்லாம் பிறகு தொடர்ந்து பார்ப்போம்.

இப்போது நடைபெறப்போகும் கைத்தல சேவையைமுதலில் தரிசித்துவிடுவோம், வாருங்கள்!

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

சந்நிதியில் இருந்து பெருமாளை பட்டாச்சார்யார்கள் எடுத்துக்கொண்டு, ஆட்டியபடியே வருகிறார்கள். மேலும் நான்கு பட்டாச்சார்யார்கள் துணியினால் ஆன ஒரு பந்தலை குடையாகப் பிடித்துக்கொண்டு வருகின்றனர். இதுவே கைத்தல சேவை எனப்படுகிறது. கைத்தலசேவையாக சந்நிதியில் இருந்து புறப்பட்ட பெருமாள், மண்டபத்தில் எழுந்தருளியதும், அலங்காரத்துக்காகத் திரை போடப்பட்டது. அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்பாடு நடப்பதற்கு முன், பெருமாளின் திருமுடியில் கேசம் வளர்ந்திருப்பது பற்றியும், பத்மினி நாச்சியார் பற்றியும் தெரிந்துகொள்ள நினைத்து, சம்பத்குமார் பட்டாச்சார்யாரிடம் விவரம் கேட்டோம்.

''பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அர்ச்சகர் ஒருவருக்காகவே பெருமாள் திருமுடி யில் கேசத்துடன் காட்சி அளிக்கிறார்'' என்று சொன்னவர், தொடர்ந்து அதுகுறித்து விவரித்தார்.

''முற்காலத்தில் இந்தக் கோயிலில் கைங்கர்யம் செய்து வந்த அர்ச்சகர் ஒருவர், பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தாராம். ஒருநாள் இரவு, பூஜைகள் முடிந்து பிரசாதத்துடன் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அவர். அப்போது கோயிலுக்கு அரசர் வந்திருப்பதாகத் தகவல் வரவே, மீண்டும் கோயிலுக்குச் சென்றார். அரசருக்கு மாலை மரியாதைகள் செய்யவேண்டுமே! அதற்காக, தான் வீட்டுக்கு எடுத்து வந்து பிரசாதமாக மனைவியிடம் கொடுத்திருந்த சிறிய மாலையைத் தரும்படி கேட்டார். அவளும் தன் தலையில் சூடிக்கொண்டிருந்த அந்த மாலையை எடுத்துக் கொடுத்தாள்.

கோயிலுக்கு வந்த அர்ச்சகர், பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகள் செய்து, அரசருக்கு மாலை மரியாதைகள் செய்தார். மாலையைப் பெற்றுக்கொண்ட அரசர், அதில் நீண்ட கேசம்

நெளிநெளியாக இருப்பதைப் பார்த்து, பெருமா ளுக்குச் சார்த்தும் மாலையில் அந்தக் கேசம் எப்படி வந்தது என்று அர்ச்சகரிடம் காரணம் கேட்டார். நடுநடுங்கிப்போன அர்ச்சகர் என்ன சொல்வது என்று புரியாத நிலையில், 'பெருமாளின் திருமுடியில் இருந்த கேசம்தான் அது’ என்று சொல்லிவிட்டார். அதைக் கேட்ட அரசர், தான் மறுநாள் காலையில் வருவதாகவும், அப்போது பெருமாளின் திருமுடியில் கேசம் இல்லாவிட்டால் ராஜ தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்றும் எச்சரித்துவிட்டுச் சென்றார்.

அர்ச்சகர் அன்றைய தினம் இரவு முழுக்கப்பெருமாளிடம் கண்ணீர்மல்கப் பிரார்த்தித்தபடியே இருந்தார். மறுநாள் காலையில் கோயிலுக்குச் சென்று பார்த்த அர்ச்சகர் பரவசப்பட்டு நெகிழ்ந்து போனார். காரணம், அழகே வடிவான

அந்தப் பெருமாளின் திருமுடியில் பெண்களுக்கு இருப்பதைப் போலவே அழகிய நீண்ட கேசம் கருகருவெனக் காட்சி அளித்தது. அர்ச்சகர் சொன் னது உண்மைதான் என்பதைத் தெரிந்துகொண்ட அரசர், அவருக்கு சன்மானம் அளித்துக் கெளரவித்

தார். அதுமுதல், இந்தப் பெருமாள் செளரிராஜர் என்ற திருப்பெயர் கொண்டார். பெருமாளின் அந்தக் கேசத்தைக் கண்டால், பெண்களே பொறாமை அடைவார்கள். அந்த அளவுக்குப் பெருமாளின் கேசம் அலைஅலையாக அழகுடன் திகழ்கிறது.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

நாம் இந்த விவரத்தைக் கேட்டு முடிக்கவும் அலங்காரம் முடியவும் சரியாக இருக்கவே, பத்மினி நாச்சியாரைப் பற்றி ஒன்றும் சொல்லாமலே போய்விட்டார் பட்டாச்சாரியார். நமக்கோ பெருமாளின் தான ஹஸ்தம் பற்றியும், பத்மினி நாச்சியார் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற தவிப்பு! பெருமாளை தரிசித்தபடி இருந்த நாம் அப்போது அந்தப் பக்கமாக வந்த கோவிந்தராஜ பட்டாச்சார்யாரிடம், பத்மினி நாச்சியார் பற்றியும், பெருமாளின் கையில் தான ஹஸ்தம் மற்றும் பிரயோக நிலையில் சக்கரம் அமைந்திருப்பது பற்றியும் கேட்டோம். அவர் சொன்ன விவரங்கள் இதோ...

உபரிசிரவஸ் என்ற மன்னன் தவமிருந்து பெருமாளிடம் நாராயண அஸ்திரம் பெற்றான். அவன் ஒருமுறை இந்தத் தலத்துக்கு வந்தபோது சந்தர்ப்பவசத்தால், சிறுவனாக வந்த பெருமாளுடனே போரிட நேர்ந்தது. தான் போரிடுவது பெருமாளுடன் என்பதை அறியாத மன்னன் ஒருகட்டத்தில் நாராயண அஸ்திரத்தை அவர்மீது பிரயோகிக்க, அது அவரின் திருவடியில் சென்று தஞ்சம் அடைந்தது. உண்மையை உணர்ந்த மன்னன் பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தன் மகளான பத்மினி நாச்சியாரை பெருமாளுக்குத் திருமணம் செய்துகொடுக்க விரும்புவதாகக் கூறினான். அவனுடைய அன்புக்குக் கட்டுப்பட்டு, பகவானும் பத்மினி நாச்சியாரைக் கன்னிகாதானமாக ஏற்றுக்கொண்டார். அதனால் பெருமாள் தான ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். இந்த மன்னன் நெய்தல் நிலத்தைச் (கடலும் கடல் சார்ந்த பகுதியும்) சேர்ந்தவன் என்பதால், பத்மினி நாச்சியார் வலைய நாச்சியார் என்று அழைக்கப் பெறுகிறார்.

ஒருமுறை, விகடாக்ஷன் என்ற அசுரன் இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களைத் துன்புறுத்தியதால், அவனை அழிப்ப தற்காகப் பெருமாள் சக்கராயுதத்தைப் பிரயோகம் செய்தார். அதனால்தான் பெருமாளின் திருக்கரத்தில் பிரயோக நிலையில் சக்கரம் இடம் பெற்றுள்ளதாம். இந்த விவரங்களை அவர் சொல்லி முடிக்கவும் பெருமாளின் வீதியுலா தொடங்கவும் சரியாக இருந்தது.

நாம் ஆலயத்தை வலம் வந்தபோது, விபீஷணருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருப்பதைப் பார்த்தோம்.ராமாயணத்துக் கும் இந்தத் தலத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில், யாரைக் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கோயிலின் திவ்விய பிரபந்த அத்யாபகரான நிவாஸ ஐயங்கார் நம்மிடம் வந்து, 'ஏன் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நம்முடைய சந்தேகத்தை அவரிடம் கேட்டோம்.

''நீங்கள் நினைப்பது சரிதான். ராமாயணத்துக் கும் இந்தத் தலத்துக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, ராவண சம்ஹாரத்துக்காகத் தமக்கு உபகாரம் செய்த ஒவ்வொருவருக்கும் ராமபிரான் சன்மானங்கள் அளித்து கெளரவித்தார். விபீஷணருக்குத் தம்முடைய குலதெய்வமான ரங்கநாதரை வழங்கினார். ராமபிரானின் குலதெய்வமே தனக்குக் கிடைத்துவிட்ட பூரிப்புடன் திரும்பினார் விபீஷணர். ஆனால், அந்த அரங்கனுக்கோ இந்தப் புண்ணிய பூமியை விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

ரங்கத்தில் ரங்கநாதரை வைத்துவிட்டு ஸ்நானம் செய்யச் சென்ற விபீஷணர் திரும்ப வந்து ரங்கநாதரை எடுத்தபோது, எடுக்க வரவில்லை. ஆனாலும், ரங்கநாதரின் சயனக் கோலத்தை மனம் குளிர தரிசித்தார். அப்படி தரிசித்தபோது, விபீஷணருக்கு பெருமாளின் நடையழகைக் காணவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன்னுடைய விருப்பத்தை ராமபிரானிடம் மானசீகமாகச் சொல்லிப் பிரார்த்தித்துக்கொண்டார்.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

அப்போது ராமன், 'கிருஷ்ணபுரம் என்னும் திருக்கண்ணபுரத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் உச்சிக் கால பூஜையின்போது நம்முடைய நடையழகைக் காண்பிப்போம்’ என்று அருள்புரிந்தார். அதேபோல், இந்தக் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் உச்சிக் கால பூஜையின்போது, கைத்தல சேவையாக ஶ்ரீ ராமன் சந்நிதிக்கு எதிரில், விபீஷணாழ்வார் சந்நிதிக்கு எழுந்தருளி, தம்முடைய நடையழகைக் காட்டி அருள்கிறார் பெருமாள்'' என்றார் பட்டாச்சார்யார். அவர் சொன்ன விதத்தைப் பார்த்தால், நமக்கே அமா வாசையின்போது அங்கே சென்று பெருமாளின் நடையழகை தரிசிக்கவேண்டும் என்று ஆசை எழுந்தது.

தீர்த்தவாரி வைபவம், மறுநாள் அதிகாலை 2 மணிக்குத்தான் தொடங்கும் என்பதால், நாம் தங்கி இருந்த இடத்துக்குச் சென்றுவிட்டோம். மறுநாள் காலை 6 மணியளவில் திருக்கண்ணபுரத்துக்குச் சென்றபோது, வீதியெங்கும் கோலங்கள் போடப்பட்டு, 'தீர்த்தவாரிக்குச் செல்லும் கண்ணபுர நாயகனே வருக, வருக!’ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தது. எதிரில் வந்த ஓர் அன்பரிடம் கேட்டபோது, அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்ட பெருமாள், அப்போது திருமருகல் வரதராஜ பெருமாளுடன் சீயாத்தமங்கை அருகில் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார். உடனே, நாம் திருமருகலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதனை காட்டப்பட்டது. அங்கிருந்து சீயாத்தமங்கை, நடுக்கடை, திட்டச்சேரி வழியாக ஆலங்குடிச்சேரியில் உள்ள மண்டபத்துக்கு வந்து சேரும் என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, நாம் திட்டச்சேரிக்கு கிளம்பிவிட்டோம்.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

திட்டச்சேரியில் காவல்துறையினர் உஷார் நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது. அதற்கான காரணம் நமக்கு விளங்கவில்லை. அருகில் வந்த ஒரு பெரியவரிடம் நம்முடைய சந்தேகத்தைக் கேட்டோம். திட்டச்சேரியில் இஸ்லாமியர்கள் பெருமளவு வசிப்பதாலும், பெருமாள் செல்லும் பிரதான சாலையில் தர்காவும் மசூதியும் இருப்பதால், எந்த ஒரு கலவரமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் காவல்துறையினர் அங்கே வந்திருக்கிறார்கள் என்பதாக அந்தப் பெரியவர் தெரிவித்தார். அதைக் கேட்டதும் நமக்கே சற்று கலக்கமாகத்தான் இருந்தது.

ஆனால், நாம் கலக்கம் கொண்டதில் அர்த்தமே இல்லை என்பது, பெருமாள் அந்த ஊரைக் கடந்தபோதுதான் தெரிந்தது. அந்த அளவுக்கு எந்த ஒரு சின்ன அசாம்பாவிதமும் அங்கே நிகழாமல், மேள தாளங்கள் முழங்க பெருமாள் திட்டச்சேரியைக் கடந்ததும், நாம் ஆலங்குடிச்சேரிக்கு விரைந்தோம். ஆலங்குடிச்சேரியில் ஒரு கல் மண்டபமும் அதன் எதிரில் பந்தலால் ஒரு மண்டபமும் அமைக்கப் பட்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே திரண்டிருந்தனர். அவர்களில் பலரும் உணவு வகைகளைக் கொண்டு வந்திருந்ததையும் காணமுடிந்தது. நாம் அந்த இடத்தை அடைந்த சற்றுநேரத்தில், பெருமாள் அந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்ட பெருமாள், வழியெங்கும் பக்தர்களுக்குத் தரிசனம் தந்தவராக ஆலங்குடிச்சேரியை அடைந்தபோது மணி 12 ஆகிவிட்டது. பெருமாள் அங்கே எழுந்தருளியதும், பக்தர்கள் கைதட்டி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்களின் கைத்தட்டலும் வாழ்த்து முழக்கமும் பெருமாளை வரவேற்பதற்காக மட்டுமல்ல, இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது என்பது அங்கிருந்த ஓர் அன்பரிடம் பேசியபோது தெரிய வந்தது.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

நாராயணன் என்ற அந்த அன்பர், ''நீங்கள் நினைப்பதுபோல் இங்குள்ளவர்கள் பெருமாளை மட்டும் வரவேற்கவில்லை. அதிகாலையில் இருந்து பெருமாளை வழியெங்கும் தோள்களை விட்டு இறக்காமல் சுமந்தபடியே வரும் தொண்டர் களையும் உற்சாகப்படுத்தி வரவேற்கத்தான் இப்படிக் கைகளைத் தட்டியும் வாழ்த் தொலி எழுப்பியும் வரவேற்கிறார்கள். பல மைல் தூரத்துக்குத் தங்கள் தோள் களை விட்டு இறக்காமல் பெருமாளைச் சுமந்து வரும் இவர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது'' என்றார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை நாம் கண்கூடாகவே பார்க் கவும் செய்தோம். வழியெங்கும் பக்தர் களின் தீபாராதனையை ஏற்றபடி வந்த பெருமாளை, தொண்டர்கள் தங்கள் தோள்களை விட்டு இறக்காமல் சுமந்தபடியே நின்றுகொண்டிருந்த காட்சி நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. அவர்களுக்கு அந்தக் கண்ணபுரத்து அழகன் ஒரு குறையும் வைக்கமாட்டான் என்பது உறுதி!

ஆலங்குடிச்சேரி மண்டபத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்ததும், தொண்டர்களைச் சாப்பிட்டு இளைப்பாறுமாறு அங்கிருந்த பக்தர்கள் உபசரித்ததை நாம் காண நேர்ந்தது. அந்த இடத்தில் பெருமாள் சுமார் ஒரு மணி நேரம் எழுந்தருளி இருப்பார் என்பதைத் தெரிந்துகொண்ட நாம், அடுத்து பெருமாள் எழுந்தருள இருக்கும் திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்குச் சென்றோம். அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுவை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டனர். அந்த மண்டபத்துக்கு வெளியில் கருடவாகனம் பெருமாளின் வருகைக்காகக் காத்திருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கூடி இருந்தனர். எல்லோரும் பெருமாள் எப்போது அங்கே எழுந்தருள்வார் என்ற எதிர்பார்ப்புடனே காத்திருந் தனர். அவர்களை அதிகம் காத்திருக்கச் செய்யாமல், சுமார் 2 மணிக்கு பெருமாள் வெள்ளை மண்டபத்தை அடைந்துவிட்டார்.

ஓர் நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்

அங்கே சுமார் இரண்டு மணி நேரம் பெருமாள் பக்தர்களுக்குச் சேவை சாதித்துவிட்டு, மாலை 4 மணியளவில் கருடசேவையுடன் இணைக்கப்பட்ட பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருள்வார் என்றும், பெருமாளை மீனவ அன்பர்களே கடற்கரைக்குச் சுமந்து வருவார்கள் என்றும் தெரிந்துகொண்டு, அங்கிருந்து கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில் மணலே தெரியாதபடி பக்தர்கள் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தனர்.

மாலை சுமார் 4:30 மணிக் கெல்லாம் திருமருகல் வரதராஜ பெருமாள், காரைக்கோவில்பத்து கோதண்டராமர், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜர், வேங்கடேச பெருமாள், நிரவி கரியமாணிக்க பெருமாள் ஆகியோர் புடைசூழ, கண்ணபுரத்து அழகன் தீர்த்தவாரிக்காக கடற்கரைக்கு எழுந்தருளினார். பெருமாளைச் சுமந்து வந்த மீனவர்கள் கடலில் இறங்கி மூன்று முறை வலம் வந்த பிறகு, கடற்கரையில் தாங்கள் அமைத்திருந்த வலைப் பந்தலில் பெருமாளை எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமும் பூஜைகளும் நிறைவு பெற்றது. இரவு 7:30 மணி வரை பெருமாளுக்கு மீனவ சமுதாயத்தினரின் உபசாரம்தான்! இருக்காதா பின்னே... அந்தச் சமுதாயத்து அரசனான உபரிசிரவஸின் மகளான பத்மினி நாச்சியாரை கன்னிகாதானம் பெற்ற மாப்பிள்ளை அல்லவா செளரிராஜ பெருமாள்! மாப்பிள்ளை உபசாரத்துக்குக் கேட்கவாவேண்டும்?!

மாமனார் வீட்டு உபசாரங்களை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அருள்புரிந்த பெருமாள், பின்னர் திருமலைராயன் பட்டினத் துக்குப் பட்டினப்பிரவேசம் செய்து, வரதராஜ பெருமாள் சந்நிதியில் உள்ள செளரிப் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கே மற்ற கோயில் பெருமாள்கள் எழுந்தருளி, கண்ணபுர அழகனுக்கு மரியாதைகள் செய்து, அவரிடம் இருந்து பதில் மரியாதை பெற்றுக்கொண்டதையும் கண்டோம். மறுநாள் அதிகாலை 4 மணிக்குத்தான் பெருமாள் அங்கிருந்து கண்ணபுரத்துக்குப் புறப்படுவார் என்பதால், அங்கிருந்து கிளம்பிய நம் மனதில்  திரளான மக்கள் காணும்படி, தீர்த்தவாரிக்காக ஊர்ஊராக உலா வந்த அந்த கண்ணபுர அழகனுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டிருக்குமே என்ற எண்ணம் தோன்றியதுமே, பெரியாழ்வாரின்,

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம்

மந்திரமாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்துநின்றார்

சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்

அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்

என்னும் கண்திருஷ்டி போக்கும் பாசுரம் நினைவில் தோன்ற அந்தப் பாசுரத்தைப் பாடிய படியே அந்த அழகனுக்கு கண்திருஷ்டி போக்கிய மனநிறைவுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்

ம.பார்த்திபன்

அடுத்த கட்டுரைக்கு