Election bannerElection banner
Published:Updated:

அனுமனுக்காக... 24 ராம விக்கிரகங்கள்!

ராமா... ஸ்ரீராமா!

தேனி மாவட்டம், கம்பம் அருகே அமைந்திருக்கிறது ஹனுமந்தன்பட்டி. இங்கே,, சுரபி நதிக்கரையில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். இங்கு அருளும் மூலவர் அனுமனின் திருநாமம்தான் இது. திருப்பெயர் மட்டுமல்ல, அது சொல்லும் கதையும் விசேஷமானதுதான்!

இலங்கைப் போரின்போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்த கதையை நாமறிவோம். அவ்வாறு அவர் மலையைச் சுமந்து வந்துகொண்டிருந்தபோது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டாராம்.

தன்னை வழிமறித்த சனியிடம், ‘‘போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம்’’ என்றாராம் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை செவிமடுக்க வில்லை. ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தாராம். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக தலபுராணம் சொல்கிறது. விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தாராம். இங்கே அனுமன் நின்ற இடத்தில்தான் தற்போது திருக்கோயில் அமைந்திருக்கிறது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், கேரள பூஞ்சாயத்து பகுதியின் மன்னர் கட்டிய கோயில் இது என்கிறார்கள்.

அனுமனுக்காக... 24 ராம விக்கிரகங்கள்!

ஒரு முறை, இந்தப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போதைய மன்னரின் ஆணைப்படி பிரஸ்னம் பார்க்கப்பட்டது.  அதில், இங்கு அருள்பாலிக்கும் அனுமன், ராமக்கல் மெட்டு எனும் இடத்தில் அமைந்துள்ள ரங்கநாத ஸ்வாமி கோயிலுக்குக் காவலுக்குச் சென்றுவிடுவதாகவும், அதனால் இங்குள்ள மூலவருக்குச் சக்தி குறைவதாகவும் தெரியவந்ததாம். எனவே, அனுமனை இங்கேயே நிரந்தரமாக நிலைநிறுத்துவது எப்படி என்று யோசித்தவர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். ராமன் இருக்கும் இடத்தில் அனுமன் நீக்கமற நிறைந்திருப்பார் இல்லையா? எனவே, ராம பாதுகையையும், 24 ராம விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம். அத்துடன், ராம நாம பாராயணமும் தொடர்ந்தது. அதனால் மகிழ்ந்த அனுமனும் இங்கேயே தங்கி, ஊர் செழிக்க அருள்பாலிக்கிறாராம்.

அனுமனுக்காக... 24 ராம விக்கிரகங்கள்!

இன்றைக்கும் ராமநவமி முதலான விசேஷ தினங்களில், இந்தக் கோயிலில் ராமநாம பாராயணத்துடன் விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அத்துடன் சனி பகவானுக்கு அனுமன் அருளிய தலம் என்பதால், சனி தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்து, ராம நாமம் சொல்லி அனுமனை வழிபட, ஜாதகத்தில் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

- ம.மாரிமுத்து,

படங்கள்: சே.சின்னத்துரை

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு