Published:Updated:

தற்கொலை பாவமா...

தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது?ஷேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தற்கொலை பாவமா...

தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது?ஷேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? சகலத்திலும் போட்டியும் போராட்டமும் மிகுந்த தற்காலச் சூழலில், பிரச்னைகளும் அதன் தொடர்ச்சியாக மன அழுத்தமும் மனிதர்களிடம் மிகுதியாகிவிட்டன. விளைவு, நாளுக்கு நாள் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதுதான் இப்படி என்றால், நோயின் கொடூரப் பிடியில் சிக்கி வாடுபவர்களை கருணைக் கொலை செய்வதும் சர்வசாதாரணமாகிவிட்டது. இவையெல்லாம் மிகத் தவறான நடவடிக்கைகள் என்பது என் கருத்து. ஆனால், மருத்துவராகிய என் நண்பர் ஒருவர், 'வேறு வழியில்லாத நிலையில் இப்படியொரு முடிவெடுப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது’ என்கிறார். இதற்கு என்னதான் தீர்வு?  

கே.சீதாராமன், மதுரை1

முதல் கோணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்கொலை தவறு என்கிறது ஸனாதானம். மனிதனுக்கு உயிரும் சொந்தம் இல்லை (ஆன்மா); உடலும் சொந்தம் இல்லை. ஆன்மா குடியிருக்க, பொதுவான பஞ்சபூதங்களில் இருந்து பெறப்பட்டது உடல். ஆன்மா வெளியேறி பரமாத்மாவில் இணைந்து விடும். உடம்பில் இருக்கும் ஐம்பெரும் பூதங்களும் வெளியில் இருக்கும் பஞ்ச பூதங்களுடன் இணைந்துவிடும். ஆசாபாசங்களும், அதன் மூலம் தோன்றிய சொந்தபந்தங்களும், ஆசைகளால் விளைந்த கர்ம வினைகளும் தான் அவனுக்குச் சொந்தம்.உயிர் பிரிந்ததும் அவனது அத்தனைத் தொடர்புகளும் அறுந்து விடும். உடலில் ஆன்மாவைக் குடியிருத்துவதும், வெளியேற்றுவதும் அவனது அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆனால், தற்கொலையில் நிர்பந்தமாக ஆன்மாவை வெளியேற வைக்கிறான் மனிதன். அது மிகத் தவறு.

? தர்க்கரீதியாக உங்கள் கருத்து சரியாகப் படலாம். ஆனால், யதார்த்த நிலைக்கு ஏற்புடையது அல்ல. எந்த வகையில் தற்கொலை தவறானது என்கிறீர்கள்?

தற்கொலையை பாவ வரிசையில் சேர்த்துள்ளது தர்மசாஸ்திரம். இயற்கையின் நியதிக்கு எதிரிடையான செயல்பாடு குற்றமாகும். அதன் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு. இயற்கை விரும்பாத வேளையில் வலுக்கட்டாயமாக ஆன்மாவை வெளியேற்றுவது என்பது, ஆன்மாவின் ஒத்துழைப்பில் கிடைத்த மிச்சமிருக்கும் வாழ்க்கையைப் பறிப்பதாகும். 'உயிர் (ஆன்மா) எனது கட்டுப்பாட்டில் இல்லை. வெளியேறும் ஆன்மாவைத் தடுப்பதோ, வெளியேற்றுவதோ மருத்துவனின் கட்டுப்பாட்டில் இல்லை’ என்கிறது ஆயுர்வேதம் (நவைத்ய: ப்ரபுராயுஷ:) பிணியை அகற்றுவதுதான் மருத்துவரின் வேலை. மற்றபடி, உயிரைத் தக்க வைப்பதோ, பிரியவைப்பதோ அவரால் இயலாது.

மாறாப்பிணியானாலும் சிகிச்சையைத் தொடரச் சொல்லும் ஆயுர்வேதம். சிகிச்சை பலன் அளிக்காமல் ஆன்மா வெளியேறலாம். ஆனால், மருத்துவ உதவி கிடைக்காமல் வெளியேறினால், அதுவும் தற்கொலைக்கு ஒப்பானதே என்கிறது ஆயுர்வேதம் (ப்ராணை: கண்டகதைநபி).

தற்கொலை பாவமா...

? தொடரும் பிரச்னைகளால், வாழ்க்கையின் மீதான பற்றுதல் அற்றுப்போன ஒருவன்தான் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறான். அவன் வரையில் அது சரிதானே?

பற்றறுத்தல் என்பதெல்லாம் துறவிகளுக்குத்தான் சாத்தியம். முற்றும் துறந்த துறவிகள் பேரறிவை எட்டியவர்கள். தென்படும் பொருட்களிலும் உடலிலும் அவர்களுக்குப் பற்றற்றுப் போய்விடும்.  எனினும், ஆன்மா (உயிர்) வெளியேறாததால் அதைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அதை இழப்பதில் அவர்களுக்கு வருத்தம் இருக்காது. ஆனாலும், உடலுக்கு உணவளித்துப் பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உணவை ஏற்காமல் இருந்தால், வலுக்கட்டாயமாக ஆன்மாவை வெளியேற்றியதாக ஆகும். உணவு உட்கொள்ளாமல் இருந்து உயிர் பிரிய முயற்சி செய்தால், அது தற்கொலையாக மாறிவிடும். இப்படியான செயல்பாடு மறுபிறவிக்குக் காரணமாகிவிடும். பற்றற்ற நிலையை அடைந்த பிறகும், ஆன்மா வெளியேறும் வரையிலும் காத்திருக்காமல், பொறுமை இழந்து அதை வெளியேற்றினால், மறுபிறவியற்ற நிலை ஏற்படாது. இந்தத் தவற்றை அனுபவிக்க மற்றொரு பிறவியை ஏற்கவேண்டியது வரும்.

இது தெரியாமல், துறவிகள் வளைய வருவதையும், உணவு அருந்துவதையும் பார்த்துப் பகுத்தறிவுவாதிகள் போலிச் சாமியார் என்று முத்திரை குத்தி, மன அமைதி பெறுகிறார்கள். காஷாயம் ஒன்றைத் தவிர, மற்ற விஷயத்தில் துறவியும் தானும் ஒன்றே என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருக்கும். ஆசாபாசங்களில் மூழ்கி துயரத்தில் சிக்கி வெளிவரவும் முடியாமல், அதை ஜீரணிக்கவும் முடியாமல் தவிக்கும் பகுத்தறிவுவாதிகள் எங்கே... வண்டியேறுவதற்காக பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணி போன்று பரமாத்மாவில் ஒன்றக் காத்திருக்கும் துறவிகள் எங்கே? ஆக, தனது சிந்தனையால் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாத வெகுளி என்றே அவர்களைச் சொல்லவேண்டும்.

ஆன்ம ஞானம் பெற்றவனின் பெருமையில் பொறாமை கொண்டு, தன்னால் அந்த இடத்தை எட்டிப்பிடிக்க இயலாத நிலையில், தாழ்வு மனப்பான்மையால் துறவிகளிடம் பகையை வளர்த்துக் கொண்டு போராடிக்கொண்டிருப்பான் பகுத்தறிவுவாதி. வரவழைத் துக் கொண்ட பகை என்பதால், அது இறுதி மூச்சு வரை தொடரும்.இப்படிப்பட்ட வர்களால், வாழ்வில் உண்மையான இன்பத்தைச் சுவைக்க நேரம் இருக்காது. பகை மனதில் பதிந்து இருப்பதால், அமைதியும் இருக்காது.

துறவி ஸித்தி அடைந்தபிறகும், இவர்களின் பகை விலகாது. துறவிக்கும் பகைக்கும் சம்பந்தமில்லை. இவர்களுடைய மனம் தன்னிச்சையாகவே பகையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, பாதிப்பு துறவிக்கு இல்லை; இவர்களுக்குத்தான்.

? எனில், பிரச்னைகளைக் களையவேண்டும் எனில், எல்லோ ரும் துறவிகளாகிவிட வேண்டும் என்கிறீர்களா?

தவறாகப் புரிந்துகொண்டீர்கள். முற்றும் துறந்த துறவிகள்கூட தன்னிச்சையாக உயிரைத் துறக்க துணியமாட்டார்கள் என்று சொல்லவருகிறேன்.

பண்டைய அறநூல்கள் அத்தனையும் தற்கொலையைத் தவறு என்கின்றன. உடலில் ஆன்மாவானது தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டாமல் ஒட்டிக்கொண்டிருக்கும். மற்ற உருப்படிகள் போல் நெருங்கிய ஒட்டுதல் இருக்காது. ஆன்மா வெளியேற 9 வழிகள் உடலில் உண்டு. அது, தனது விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அது வெளியேறாமல் இருப்பது ஆச்சரியம். அதை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது பாவம் ஆகவே, தற்கொலை தவிர்க்கப்பட வேண்டும்.

இரண்டாவது கோணம்

மாறாப் பிணியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான் ஒருவன். மருத்துவ உதவி கிடைத்தும் பிணியின் தாக்கம் அவனை வாட்டு கிறது. பிறருடைய உதவியில் வாழவேண்டிய கட்டாயம். தினம் தினம் செத்துப் பிழைக்கிறான். இந்த நிலையில், ஆன்மாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது எப்படித் தவறாகும்?

தற்கொலை பாவமா...

இதுபோன்ற நிலையில் 'கருணைக் கொலை தவறு’ என்று நினைத்து, மருத்துவ உதவியில் ஆழ்ந்தால், அது அவனது துயரத்தை நீட்டிக்கவே செய்யும். அதுவும் தவறுதான். அவன் துயரத்தில் இருந்து விடுபட இந்த ஒரு வழிதான் உண்டு. ஆகவே, துயரத்தில் இருந்து மீட்பதற்காக, ஆன்மாவைக் கட்டாயமாக வெளியேற்றுவது தவறாகாது.

பாம்பு தீண்டிய விரலை வெட்டி எறிந்து பாதுகாப்பைத் தேடுவோம். மதுமேகத்தில் புரையேறிய காலை இழக்கச் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். இங்கெல்லாம் குறிப்பிட்ட நோயால் ஏற்படும் தொடர்பை அகற்றுவதற்கு இழப்பை ஏற்போம். அது போன்று துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆன்மாவைக் கட்டாயமாக வெளியேற்றுவது தவறாகாது.

? நீங்கள் சொல்வது போன்று காலை இழப்பதும், பாதிக்கப் பட்ட பிற அவயவங்களை இழப்பதும் எதற்காக? உயிரைக் காப்பாற்றத்தானே?

எங்கள் கருத்தின் அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.   உறுப்போ, உயிரோ... கடும் துயரத்தைக் களைய அவற்றை இழப்பதில் தவறு இல்லை என்கிறோம்.

கோமாவில் படுத்தவன் எழுந்து நடமாட முடியாமலும், நினைவு இழந்தும் அவதிப்படுகிறான். வருடக்கணக்கில் படுக்கையில் இருப்பதால், உடலில் புண் ஏற்பட்டுத் துன்புறுத்துகிறது. இந்த நிலை நீடிப்பது நரகம். இதிலிருந்து விடுபட, அவனை மரணத்தைத் தழுவ வைப்பது தகும். அடிபட்டு ஊனமுற்று, மரணப்படுக்கையில் சாய்ந்தான் ஒருவன். ஒன்றன் பின் ஒன்றாக பல பிணிகள் அவனைத் தொற்றிக்கொண்டன. மருத்துவருக்கு அவனுடைய பிணிகள் சவாலாக அமைந்திருந்தன. இந்த நிலையில், தன்னிச்சையாக உயிரை மாய்த்துக்கொள்வது, அவன் படும்  துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

ஒரு விலங்கு அவதிப்படுவதைக் கண்ணுற்ற மகான் ஒருவர், அதன் உயிரைப் பறிக்க சம்மதித்தார் என்ற செவிவழித் தகவல் உண்டு. எல்லோருக்கும் பிரியமான பொருள் உயிர். எவரும் மனமுவந்து அதைத் துறக்க மாட்டார்கள். நிம்மதி இழந்து தவிக்கும் போது, செய்வதறியாது மரணத்தைத் தழுவுவது உண்டு. எனவே, அதை குறையாகவோ குற்றமாகவோ பார்க்கக்கூடாது.

மரண தண்டனையின் மூலம் ஒருவன் விரும்பாத மரணத்தை ஏற்கவைக்கிறோம். சித்திரவதைகளால் ஒருவனை மனம் நொந்து மரணத்தைத் தழுவவைக்கிறோம். அவமானத்தைத் தழுவிய தாட்சாயினி தன்னிச்சையாகவே உடலைத் துறந்தாள். கணவனின் இழப்பால் ஏற்பட்ட துயரம் தாங்காமல், மறுபிறவியில் அவரோடு இணைய, தன்னுடைய உடலைத் துறந்தவர்களும் உண்டு.

? பிரச்னைகளையும், துயரங்களையும் காரணம் காட்டி தற்கொலைகளை நியாயப்படுத்தினால், பின்பு எவருமே இவ்வுலகில் வாழ முடியாதே?

எல்லோருக்கும் பிரச்னைகள் உண்டு என்றாலும், கண்ணுக்கெட் டிய தீர்வுகளும் இருக்கும். தீர்வுகளோ, வேறு வழிகளோ இல்லாத நிலையில்தான் தற்கொலையே தீர்வு என்றாகிறது.

கடுமையாக வாட்டி வதைக்கும் துயரம் பொறுக்க முடியாமல், ஒரு நொடிப் பொழுதில் தவறான முடிவை ஏற்பது உண்டு. இங்கு உயிர் துறக்க மனம் இருக்காது. ஆனால், துயரத்தின் கடுமை அவனுடைய சிந்தனையைத் திசைதிருப்பி, அதை ஏற்கவைக்கிறது. அது அவனுடைய தவறல்ல. ஒருவேளை, தற்கொலைக்கு அவன் முயற்சிக்கும்போது, ஏதேனும் இடையூறு தோன்றி, அவனுடைய மனம் அந்தச் சிந்தனையில் இருந்து விடுபட்டால், முயற்சியில் இருந்து பின்வாங்கியிருப்பான். ஆக, விருப்பம் இல்லாத நிலையி லும் தன்னையும் மீறிச் செயல்படவைக்கும் சூழலில் நிகழ்வது, அவன் தெரிந்து செய்த தவறாகாது. மனப் பிணியாளரின் தற்கொலையைத் தவறாகப் பார்ப்பதில்லை. மனப்பிணியில் மாட்டிக்கொண்டவன் செய்த கொலையை குற்றமாக மதிப்பீடு செய்வதில்லை. எல்லா தற்கொலைகளும் மனமுவந்து ஏற்கப்படுவதில்லை.

? இயற்கைக்கு முரணாக தற்கொலையை மனமுவந்து ஏற்பவர்கள், பிரச்னைகளை மனமுவந்து ஏற்று எதிர்கொள்ளலாமே?

இங்கே பிரச்னைகள் என்பது சூழலைப் பொறுத்தது. எதிரியிடம் சிக்கிச் சித்ரவதைக்கு உள்ளாக வேண்டி வருமோ என்கிற பயத்தில் தற்கொலையை ஏற்பது உண்டு. ரகசியத்தைக் காப்பாற்ற, வாக்குறுதியை நிறைவேற்ற, குடும்ப வாரிசுகளின் வாழ்க்கை வளம்பெறுவதற்குப் போதுமான பொருளை இலக்காக வைத்து உயிர் துறப்பவர்களும் உண்டு. மனித வெடிகுண்டாக உயிர் துறப்பவர்களில் பலர் அதில் அடங்குவார்கள்.

போரில் தனிமரமாக நின்ற ராவணன், 'சீதையை அளித்துவிடு! மன்னித்துவிடுகிறேன்’ என்ற ராமன் வார்த்தையை ஏற்றிருந்தால், மரணத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவனுடைய மனசாட்சி உயிருள்ள பிணமாக வாழ விருப்பம் இல்லாமல், மறுநாள் உயிரை தன்னிச்சையாகத் துறக்கும் வகையில், ராம பாணத்துக்கு இரையானான். மாரீசன், தன் உயிரை மாய்த்துக்கொள்ள பொன்மான் வடிவில் ராமன் முன் தோன்றினான். சுக்ரீவனின் ஆணையை நிறைவேற்றுவதில் தோல்வி கண்ட வானர சைன்யம், கடற்கரையில் உண்ணாவிரதத்தால் உயிர் துறக்கத் தயாராகி விட்டது. சுக்ரீவனிடம் தோல்வியை ஒப்புக்கொண்டால், சிரச்சேதம் உண்டு. அதற்குப் பயந்து தாங்களே உயிர் துறக்க சித்தமா னார்கள் வானரர்கள்!

இவையெல்லாம் ஒரு குறிக்கோளை வைத்து ஏற்பட்டவை. இவற்றையெல்லாம் ஏற்கும் நாம், துயரத்தின் தாக்கம் பொறுக்க முடியாமல், அவற்றிலிருந்து வெளிவரக் கடைப்பிடிக்கும் தற்கொலையை தவறாகக் கருதக்கூடாது.

மூன்றாவது கோணம்

கோழைகள், மனம் வளம் குன்றியவர்கள், சிந்தனை வளம் குன்றியவர்கள் ஆகியோர் தற்கொலையில் சிக்கிவிடுவார்கள். வரப்போகும் ஆபத்தை பூதாகரமாக மதிப்பீடு செய்து, அது தன்னை ஆட்கொண்டு மீள முடியாத அளவுக்குத் துயரத்தைத் திணித்துவிடும் என்று பயந்து, அதனிடமிருந்து வெளிவர வாய்ப்பில்லை என்ற முடிவில், அது தன்னை நெருங்குமுன்பே உயிரைத் துறந்துவிடுவோம் என்கிற எண்ணத்தில் தற்கொலை ஏற்கப்படுகிறது.

தற்கொலை பாவமா...

? உயிரையே துறக்கத் துணிந்தவர்களை கோழை என்று எப்படிக் கருதுவது?

சரிதான்! உயிரையே துறக்கத் துணிந்தவர்கள், பிரச்னைகளை எதிர்கொண்டு உயிர்வாழத் துணியலாமே என்பதுதான் எங்கள் கருத்து. நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. அவன் மேல்முறையீடு செய்தான். மேல் முறையீட்டிலும் தண்டனை நிச்சயமாகிறது. ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டான்.

'நண்டும்சுண்டுமான மூன்று குழந்தைகள்; பார்வை இழந்த மனைவி; எனது இழப்பில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், எந்த சொந்த பந்தங்களும் இல்லை’ என்கிற தகவலில் மனம்  உருகிய ஜனாதிபதி கருணை மனுவை ஏற்று, அவனை விடுதலை செய்தார்.

இங்கு ஆபத்தில் சிக்கிய நிலையிலும் மனம் தடுமாறாமல், ஆழ்ந்த சிந்தனையின் மூலம் கருணை மனு வாயிலாக வெளிவர முடிந்தது. எடுத்த காரியத்தில், உகந்த அணுகுமுறையோடு வெற்றி கிட்டும் வரை அவனது செயல்பாடு இருந்தது. அதுபோன்று, திட சித்தம் இருப்பவர்கள் தற்கொலையைத் தவிர்ப்பார்கள்.

வாழ்க்கை கசந்து தற்கொலைக்குத் துணிந்தான் ஒருவன். 'உனது வருங்காலம் செழிப்பான வாழ்க்கையை அளிக்கக் காத்திருக்கிறது. நீ உயிருடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்’ என்று அறிவுரை கிடைக்க, முடிவை மாற்றிக்கொண்டான் (ஒதி ஜீவந்தமா னந்தோ நரம்வர்ஷசதாதபி). காதலித்தவள் கைக்கு எட்டாமல் போகும் வேளையில், மனம் வேதனையில் ஆழ்ந்துவிடும். கிடைக்காது என்று தெரிந்த பிறகும், மனதை மாற்றிக்கொள்ள

இயலாமல், அந்த ஏக்கம் வலுப்பெற்றுத் துன்புறுத்தும் வேளையில், அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, ஒரு நொடியில் தற்கொலையை ஏற்றுக்கொண்டுவிடும்.

பலவீனமான மனம், அவளை அடையும் முயற்சியில் ஈடுபடாமல், தன்னையே நொந்துகொண்டு தவற்றை ஏற்றுக்கொள்ளும். அவள் இல்லாத நிலையிலும் தனது வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளத் துணிவு இல்லாமல், விபரீத முடிவுக்குத் தயாராகிவிடும். சிந்தனை வளம் குன்றியவர்களில் இது நடந்துவிடும்.

? நீங்களே காரணத்தை விரிவாக விளக்கவும் செய்கிறீர்கள்; தற்கொலை தவறு என்றும் சொல்கிறீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

காரணங்களை விளக்குவது சரியென்று சொல்வதற்காக இல்லை. அந்த பலவீனங்களைத் தவிர்த்தால் தற்கொலையையும் தவிர்க்கலாம் என்பதற்காகச் சொல்லப்பட்டது.

வேறு சில காரணங்களும் உண்டு. தனது விருப்பம் நிறைவேறாது என்று தெரிந்தவுடன், பிறரது அனுதாபத்தில் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியாகத் தற்கொலை முயற்சியைக் கையில் எடுப்பவர்களும் உண்டு. 'காதலனோடு சேர்த்துவைக்காமல் இருந்தால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சொல்வதுடன் நில்லாமல், பலபேர் தன்னைக் கவனிக்கும் வேளையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களும் உண்டு.

இங்கே, அவள் தற்கொலைக்கு மனப்பூர்வமாகத் தயார் இல்லை. மற்றவர்களை உதவிக்கு அழைக்க, அந்த முயற்சியைப் பயன்படுத்துகிறாள்.

பூச்சிக்கொல்லி மருந்தை அளவோடு உட்கொள்வாள். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு வெளிவந்துவிடுவாள்.அவள்மீது அனுதாபம் கொள்ளும் மற்றவர்களின் உதவியில் காதலன் கிடைத்து விடுவான். ஆக, தற்கொலை எண்ணமே அவளிடம் இருக்காது. பொதுமக்களும் இதைக் காதலின் இறுக்கமாக எடுத்துக்கொண்டு, அவர்களைச் சேர்த்துவைப்பக்ச் சேவையாக எண்ணுவார்கள் உண்மையான உண்ணாவிரதத்தால் சாம்ராஜ்ஜியத்தையே வென்றார் ஒருவர். அதை வைத்துக்கொண்டு இன்றைக்கு எத்தனையோ போலி உண்ணாவிரதங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. வலுக்கட்டாயமாக உண்ணா விரதத்தை முடித்து வைக்க ஒரு பெரியவரையும், குளிர்பானத்தையும் தயார் நிலையில் வைத்தபிறகே, உண்ணாவிரதம் ஆரம்பமாகும்.

? ஆக, இந்த விஷயத்திலும் போலி முயற்சிகள் உண்டு என்கிறீர்களா?

ஆமாம்! பயமுறுத்தி அனுதாபத்தைப் பெற்று விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, போலி தற்கொலைகளும் அரங்கேறும். சில நேரம் துரதிர்ஷ்டவசமாக போலி தற்கொலையானது, நிஜத் தற்கொலையாக மாறிவிடுவது உண்டு. உண்ணாவிரத தருணத்தில் இயற்கையாகவே மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானால், தியாகியாக மாறலாம். உண்ணாவிரதத்தில் உடல்நலம் குன்றினால், அரசாங்கச் செலவில் மருத்துவ வசதியும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். குறிக்கோளுக்காக உயிர்துறக்கத் தயாரானவர் என்கிற பெருமை அவரது பொது வாழ்வை சிறப்பாக்க ஒத்துழைக்கும்.

ஆசையின் அடக்கமுடியாத வேட்கையை 'காதல்’ என்று பெருமைப்படுத்துவோம். மற்ற ஆசைகளைத் துறக்கப் பரிந்துரைப் போம். இந்த ஆசையை இணைக்க முற்படுவோம். அது காலப்போக்கில் தாம்பத்தியத்தில் இணைய, காதலை முதல் தரமாக மதிப்பீடு செய்துவிட்டோம். காதல் திருமணத்தில் எண்ணிக்கையில் அதிகமான திருமண முறிவு தென்படுகிறது. அன்பில் இணைந்தால் முறிவு தோன்றாது. ஆசையில் இணைந்த தால் முறிவு அரங்கேறியது. சிந்தனையோட்டம் சூழலுக்கு உகந்தபடி திசை திரும்புவது உண்டு.

காதலியை அடைய தற்கொலைக்கு முயற்சிப்பவன், காதலி மற்றொருவனை விரும்புகிறாள் என்று தெரிந்தவுடன் தற்கொலை முயற்சியில் இருந்து பின்வாங்கும் நிகழ்வுகளும் உண்டு. விருப்பம் நிறைவேறவில்லை என்கிற துயரம் விலக அதைச் சுவைப்பவன், அழிவதில் ஈடுபடுவது எப்படிப் பொருந்தும்? பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்! தனக்குக் கிடைக்காத அந்தக் காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று காதலியை அழித்த காதலனும் உண்டு. தனது விருப்பம் நிறைவேற வழியில்லை என்ற நிலையில், சிந்தனை திசை திரும்பி, எதற்கும் சம்பந்தம் இல்லாத தனது உயிரைத் துறக்கத் துணிந்துவிடுவது தவறு.

? சரி! தற்கொலையைத் தவிர்க்க என்னதான் வழி?

பெரும்பாலும், அவமானத்தால் சமுதாயத்தில் தலைகாட்ட முடியாத நிலையில், அந்த அவமானத்தில் இருந்து வெளிவரும் முயற்சியில் சிந்தனையைத் திருப்பாமல், உயிரை மாய்க்கத் துணிகிறார்கள். இது தவறாகும். குற்றமற்ற உயிருக்குத் தண்டனை அளிப்பது தவறாகும். தற்கொலை முயற்சி செய்தவனைக் குற்றம் புரிந்தவனாக நினைத்துத் தண்டனை அளிப்பது உண்டு.

ஆசையை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியைத் தழுவிய நிலையில், வேறு வழியின்றி தன்னை அழிக்கும் முயற்சியில் சிந்தனை திரும்பிவிடும். இந்த முயற்சிக்கு தடங்கல் இல்லாத நிலை, தவறான சிந்தனைக்கு ஒத்துழைத்து விடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க, சிறு வயதிலிருந்தே நற்பண்புகளை ஊட்டி வளர்க்கவேண்டும். அதன் தாக்கத்தில் மனம் திடமாகி, தகவலை ஆராயும் சிந்தனையில் இறங்கி, வெற்றி காண முயலும். தன்னை அழித்துக்கொள்ளும் கோழைத்தனத்தை ஏற்காது. சந்திக்கும் மனிதர்களோடு மனம் திறந்து பழகும் இயல்பு, கிடைத்த தகவலை ஆராய்ந்து எடுத்துக்கொள்ளும்; அல்லது, விலக்கிக் கொள்ளும்.

துணிவு, ஏற்றுக்கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரையில் முயன்று செயல்படும் பாங்கு, தகவல் தந்தவனின் உள் கருத்தை ஆராய்ந்து ஏற்பது போன்றவற்றைப் பெற்ற திட மனமானது, ஒருநாளும் தன்னுயிரை மாய்க்கத் துணியாது. மனம் சார்ந்த விஷயங்கள் சட்டத்துக்கு உட்படாது. கல்விக் கூடங்களில், பாடத் திட்டத்தில் நீதிநெறிகளைப் போதித்து வந்த நாளில் தற்கொலை குறைவாகவே இருந்தது. தற்போது அது பெருகிவிட்டது.

உற்பத்தியில் குழந்தைகள் பிறப்பு குறைவு; பிறந்த மனிதர்களிலும் கணிசமான அளவு தற்கொலையால் குறைவது, நாட்டின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. பாடத்திட்டத்தில் சிற்றின்பப் பகுதியைத் திணிக்கத் துடிக்கும் சீர்திருத்தவாதிகள், நீதி நெறியையும் போதிக்க சிபாரிசு செய்யவேண்டும். பண்டைய நாளில் அளவு கடந்த துயரத்தைச் சந்தித்தவர்கள் இருந்தார்கள். ஆனால், அதற்குப் பரிகாரமாக தற்கொலைக் குற்றத்தை ஒருபோதும் ஏற்கவில்லை.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

நாம் வாழப் பிறந்தவர்கள். இயற்கையானது பிறப்புக்கு நாள் குறித்ததுபோன்று, இறப்புக்கும் நாள் குறித்துவிட்டது. அது அதன் வேலை. தானாகவே வந்து சேரும் இறப்பை இடையிலேயே எதிர்கொண்டு வரவேற்பது வீண் வேலை. மட்டுமின்றி, அப்படியான செயல் இயற்கையின் செயல்பாட்டில் தலையிடுவதாகும். அது குற்றம்!

இன்று பகலுக்குள் எதிரியை அழிக்க முடியாவிட்டால் நெருப்பில் உடலைத் துறப்பேன் என்றான் அர்ஜுனன். இயற்கைக்கு மாறான செயல்பாட்டை உணர்ந்த கண்ணன், எதிரியைக் காட்டிக்கொடுத்து அழிக்கவைத்து, தவற்றிலிருந்து அர்ஜுனனை மீட்டார். போரில் சொந்தபந்தங்களை மாய்ப்பது தவறு என்று போரில் இருந்து பின்வாங்கினான் அர்ஜுனன். அப்போது, 'இயற்கை குறித்த வேளையில்தான் அவர்கள் மரணத்தைச் சந்திப்பார்கள். அந்த வேளையில் உன் பாணம் அவர்களைத் தொடும். அதற்கு இடையில் உன்னால் ஒரு உயிரைக்கூடப் பறிக்க இயலாது. (மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமஅத்ரம் பவஸவ்யஸாசின்). என்று அறிவுறுத்தினார் கண்ணன்.

நமக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் வலுக்கட்டாயமாக நுழைவது எத்தகைய பாவம்? அதோடு நிற்காமல் தன்னையும் இடையில் அழித்துக்கொள்வது பாதகம் ஆகும். கல்வி முறையின் கோளாறு நம் குழந்தைகளை பாதிக்கிறது. கடவுள் கண் திறக்க வேண்டும். ஆன்மா நிரபராதி; எதிலும் சம்பந்தப்படாதது. அதைத் தண்டிப்பது குற்றம்!

பதில்கள் தொடரும்...