Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளில் பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்) இருக்கும்போது சுக்கிரனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் மகப்பேறு இல்லாத வளாகவும், பொல்லாதவளாகவும் இருப்பாள் என்கிறது ஜோதிடம்.

பெண்மைக்கு நிறைவு மகப்பேறு. கிடைத்த குழந்தைச் செல்வம் தங்காமல் போவது இனப்பெருக்கத்தின் இடையூறு. இவை இரண்டும் பெண்மைக்கு அழகல்ல. அத்துடன், பெண்மைக்கு எதிரான இயல்பு தென்படுவது (பொல்லாதவளாக இருப்பது), பெண்மைக்கு இழுக்கு. பெண்ணாகப் பிறந்தும் சமுதாயத்துக்குப் பயன்படாமல் போவது, படைப்புத் தத்துவத்துக்கு எதிரிடையானதாகும்.


பிள்ளையார் பிடிக்க குரங்கு உருவம் தோன்றியது. காய்க்காத மரம் விறகுக்காவது உதவும்; எவருக்கும் பயன்படாத வாழ்க்கை சிறப்பல்ல. தோன்றும் ஆசைகளைத் தணித்துக்கொள்வது பிறவிப் பயன் ஆகாது. இனப்பெருக்கத்துக்காகவே பெண்ணினம் தோன்றியது. அது வாய்க்காதவள், எல்லாம் இழந்தவள் ஆகிறாள். ஈன்றெடுத்த குழந்தையை பாசத்துடன் வளர்க்கும் அனுபவம் அவளை மென்மையாகவும், கருணையுள்ளம் படைத்தவளாகவும் மாற்றிவிடும். அந்த அனுபவம் எட்டாத நிலையில் பொல்லாத குணம் தங்கிவிட்டது.

பிறப்பும் பொல்லாத குணமும்!

மந்தரையும் சூர்ப்பணகையும் இதில் அடங்குவர். திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் அனுபவம் இல்லாததால், இயல்பில் பொல்லாதவர்களாக மாறுவது உண்டு. அவர்களிடம் கோபதாபங்களும் எதிர்ப்பும் மேலோங்கியிருக்கும். இப்போது, தகுதி இருந்தும் குழந்தைகளை ஈன்றெடுக்க மறுக்கும் தம்பதிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மனமும் பொல்லாததாக மாறிவிடும். இயற்கைக்கு எதிராகச் செயல்படுபவர்களில் பொல்லாத்தனம் தலைதூக்கும். ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற சொல்வழக்கு பொல்லாத்தனத்தின் அடையாளம். சக்களத்தி குழந்தையை ஈன்றெடுத்தாள். அதை முதல் மனைவி வளர்த்தாள். குழந்தைக்குத் தன்னிடம் இருக்கும் ஈர்ப்பை வைத்து குழந்தை தன்னுடையது என்று வாதாடினாள் முதல் மனைவி. இருவரது வாதமும் தெளிவு இல்லாத நிலையில், நீதிபதி குழந்தையை இருகூறாகப் பிரித்து இருவருக்கும் அளிக்க உத்தரவிட்டார். முதல் மனைவி அதற்கு ஒப்புக்கொண்டாள். சக்களத்தியோ கதறினாள்... ‘குழந்தையைக் கூறுபோடாதீர்கள். அதை அவளுக்கே உரிமையாக்குங்கள்’ என்றாள். இப்படியொரு கதை உண்டு. ஈன்றவளுக்கு இரக்கம் இருந்தது. மற்றவளிடம் பொல்லாத்தனம் இருந்தது!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

கணவனின் குறையும் மனைவியின் குறையும்...

கணவன்- மனைவி இருவரது பங்களிப்பில் குழந்தை உருவாக வேண்டும். கணவனின் குறையில் மலடியாவது உண்டு. கணவனின் குறையில் பிறந்த குழந்தை தங்காமல் இருப்பது உண்டு. போதுமான ஜீவாணுக்கள் இல்லாத பிந்து, குழந்தையை உருவாக்காது. உயிரோட்டம் விடுபட்டுவிட்ட பிந்து, பிறந்த குழந்தையை தங்கவைக்காது. இது கணவனின் குறை.
சினை முட்டை உருவாகாமல் இருப்பது, உருவானாலும் கர்ப்ப பாத்திரம் ஏற்கும் தகுதியை இழந்துவிடுவது... இது அவளிடம் தென்படும் குறை. சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளில் குறை இருக்கும். கணவனிடம் இருக்காது. விஞ்ஞான முறையில் செயற்கையில் உருவாகும் குழந்தைகள் மலட்டுத்தனம் பெற்றவர்களில் உருவாக்கப்படுகிறது. இவர்களில் பலர் சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் அடங்குவர். செயற்கையில் வெளி வந்த குழந்தைகள் செல்லப் பிராணிகளுக்குச் சமமாக வளருவார்கள். பாச நேசங்கள் இருக்காது. அவை இல்லாத நிலையில் பொல்லாத்தனம் தலை தூக்கும்.

இருவரில் ஒருவர் தகுதி இழந்தாலும், மற்றவரது தகுதியையும் இழக்கவைக்கிறது. இந்தத் தவறு தலைதூக்காமல் இருக்க ஆண்மை- பெண்மை இரண்டையும் சோதித்துப் பார்த்து, இணை சேர அனுமதிக்கும் ஜோதிடம். பெண்ணின் இலக்கணம், ஆணின் இலக்கணம் இரண்டையும் இருவரில் இருப்பதை உறுதி செய்த பிறகு, இணையைப் பரிந்துரைக்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம் (லக்ஷணஸம்பன்னாம், லக்ஷணஸம்பன்ன:). இந்தத் தகவல்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, சந்தானகாரகன் வலுவாக இருக்கிறான்; குழந்தைகள் உண்டு; 5-ல் செவ்வாயும் குருவும் இருக்கிறார்கள்; ஆகவே, ஆண் குழந்தைகள் உண்டு; 9-ல் புதன் இருக்கிறான்; பெண் குழந்தைகள் உண்டு; இரு ஜாதகங்களிலும் 6 குழந்தைகள் பிறக்க இடம் உண்டு என்று சொல்லும் துணிவு ஜோதிட மேதைகளுக்கு வரக்கூடாது.

சோதனை அவசியம்

செயற்கைக் குழந்தைகளைப் பெறுவதற்குப்  படையெடுக்கும் தம்பதிகள்் சிலரது விஷயத்தில், ஜோதிடரின் தவறான கணிப்பும் பங்கு பெறாது என்று சொல்வதற்கு இல்லை. பத்துப் பொருத்தங்கள் குழந்தை பாக்கியத்தைச் சுட்டிக்காட்டினாலும், தருணம் வரும்போது உருவாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. உணவு முறையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட கோளாறு, பீஜாணுக்களையும் சினை முட்டைகளையும் தகுதி இழக்கச் செய்துவிடும். சோதனை செய்து பார்த்துதான் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்ய இயலும். சோதனையை அறவே ஒதுக்கிவிட்டு, இருவரில் ஒருவருக்குத் தகுதி இருந்தும் தவறான சேர்க்கையால்  தகுதி இழக்கவைப்பது தகாது. இருவரிடமும் தகுதி இருப்பதை அறிந்து சேர்க்க வேண்டும். இருவரில் ஒருவரது குறை மற்றவரையும் குறையுள்ளவராக்கிவிடுகிறது. இது, ஜோதிடரின் தவற்றாலும் நிகழ வாய்ப்பு உண்டு.


‘எனது ஜோதிட முடிவுகள் தங்களுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தினால், நான் அதற்குப் பொறுப்பாளியல்ல’ என்ற தகவலோடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் ஜோதிட மேதை களிடம் உதிக்கக்கூடாது. ‘ஜோதிடத்தின் இறுதி முடிவை எவராலும் வரையறுக்க இயலாது. படைக்கும் கடவுளுக்கு மட்டுமே இயலும்’ என்று ஜாதகத்தின் முகப்பில் சுட்டிக்காட்டி, தனது கணிப்பு துல்லியமாக இருக்கும் என்பதற்குப் பல பெரிய மனிதர்களின் சிபாரிசுக் கடிதத்தையும் சேர்த்து அளித்து பெருமையை வெளிப்படுத்து பவர்களும் இருக்கிறார்கள்.

சுக்கிர த்ரிம்சாம்சகம்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

இங்கு, ஒற்றைப்படை ராசியில் 25 முதல் 5 பாகைகள் வரையிலும், இரட்டைப்படை ராசியில் முதல் ஐந்து பாகைகளும் சுக்கிர த்ரிம்சாம்சகம் இருக்கும். இரண்டு ஹோரைகளிலும் சந்திரன் பரவியிருப்பான். ஒற்றைப்படை ராசியில் 3-வது த்ரேக்காணமும், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணமும் சுக்கிர த்ரிம்சாம்சத்தில் சரிபாதி இணைந்திருக்கும். ஒற்றைப்படை ராசியில் 3-வது த்ரேக்காணத்தில் சுக்கிரனும், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணத்தில் சனியும் இணைந்திருப்பார்கள். ராசி முழுதும் சனி, ஹோரையில் சந்திரன், த்ரேக்காணத்தில் சுக்கிரனும் சனியும் இருக்கும் தறுவாயில்... சுக்கிர த்ரிம்சாம்சகம் தன்னில் உதித்தவளை மலடியாகவும் அல்லது மகப்பேற்றைச் சந்திக்கவைத்து குழந்தையை இழப்பவளாகவும், இயல்பில் பொல்லாதவளாகவும் (துஷ்டையாகவும்) உருப்பெற வைக்கும்.


சுக்கிரனும் சந்திரனும் தட்ப கிரகங்கள். சனி வெப்ப கிரகம். சனியின் சேர்க்கையில் சந்திரனின் இயல்பு மாறிவிடும். உலக சுகானுபவங்களை சுக்கிரன் அளித்தாலும், சனியும் சந்திரனும் இணைந்து சுக்கிரனோடு சேருவதால், சுகத்தைச் சந்தித்தாலும் அதன் பயனை எட்டமுடியாமல் செய்துவிடுகிறான். சந்திரன்- பெண்; சுக்கிரனும் பெண். ஆண் அலியான சனியின் சேர்க்கையில் பெண்மை வலுவிழந்து காணப்படுவதால், மகப் பேற்றை எட்டும் தகுதி அல்லது அதைத் தக்கவைக்கும் வலு இல்லாமல் போய்விடுகிறது. சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் ஆகியவற்றில் இணைந்த கிரகங்களும் சுக்கிரனுக்குத் துணைபுரிந்து, அவனது விருப்பப்படி பிறந்தவளின் இயல்பை உருவாக்குகின்றன.

இயல்பும் மகப்பேறும்...

இயல்பு மனம் சார்ந்த விஷயம்; மகப்பேறு உடல் சார்ந்த விஷயம். சனியுடனான இணைப்பில் மனதுக்குக் காரகனான சந்திரன் வலுவிழந்ததால், இயல்பு மாற்றம் ஏற்பட வழிவகுத்தது.தட்ப கிரகமான சந்திரனின் இணைப்பு இருந்தும், சனி பலமாக இருப்பதால், குழந்தையை ஈன்றெடுக்கும் தகுதி இழக்கப்பட்டது. குழந்தை பிறந்து தவறினாலும், குழந்தை பிறக்காமல் இருந்தாலும் பலனில் மாறுபாடு இல்லை. சந்திரன் வளர்பிறையில் சுபனாகவும், தேய்பிறையில் அசுபனாகவும் மாறிக்கொண்டிருப்பதால், இரண்டு தகுதிகளும் அவனிடம் உண்டு. சுக்கிரன் சுபனானாலும், பாப கிரகத்தின் சேர்க்கையில் அசுபனாவான். இப்படியொரு மாறுதலான சேர்க்கையால் தனது இயல்பை மாற்றிக்கொண்டு, சனியின் பொல்லாத்தனத்தை அவளிடம் தோற்றுவித்தான்.

சனியின் பங்களிப்பு!

சனிக்கு துக்க காரகன் என்ற தகுதியுண்டு. தருணம் வரும்போது விழித்துக்கொண்டு துயரத்தை இணைத்துவிடுவான். மரணம் நெருங்கும்போது, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கிரகம் சுணக்கமுற்று இருந்தால், அதனுடைய வேளையில் சனி முந்திக்கொண்டு மரணத்தை நிகழ்த்திவிடுவான் (இஹந்தா பாபக்ருத் சனி:). இங்கு, சந்திரனின் சேர்க்கையால் சுக்கிரன் சுணக்கமுற்றாலும், குரூரமான இயல்பை அவளிடம் நடைமுறைப்படுத்துவதில் சனி விழித்துக்கொண்டு செயல்படுவான். மலடியாக இருப்பாள் அல்லது பிறந்த குழந்தையை இழப்பாள் என்பதில் இருந்து மலடு என்பதையும் தாண்டி குழந்தையை அளித்தாலும், சனி தனது வலிமையால் சுக்கிரன் வாயிலாக அதை இழக்க வைப்பான். அழிப்பவன் சனி என்பதால் அவனது சேர்க்கை வலுப்பெற்றுவிட்டது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்


7-க்கு உடையவன் 12-லும், லக்னாதிபதியும் சந்திர லக்னாதி பதியும் ஒரு பாப கிரகமும் சேர்ந்து 7-ல் இருந்தால், அவனுக்குக் குழந்தையும் இருக்காது, மனைவியும் இருக்கமாட்டாள் என்று சொல்லும். மனைவி இழக்கப்படுவாள் என்று சொன்னாலே குழந்தை இருக்காது என்று தெளிவாகும்போது, மனைவி இழப்பை குழந்தையை ஈன்றெடுத்த பிறகு 7-ல் இருக்கும் பாப கிரகம் நடைமுறைப்படுத்துகிறான் என்று பொருள். மனைவி குழந்தையை ஈன்றெடுத்தாள். மனைவி மறைந்தாள்; குழந்தையும் மறைந்தது. மீண்டும் குழந்தை பிறக்க மனைவி தங்கவில்லை. ஆக, எந்த நிலையிலும் வாரிசு முளைக்காமல் செய்துவிட்டது பாப கிரகம். அதுபோல், இங்கும் குழந்தை பிறந்து இழப்பதால் மலடிக்குச் சமமாகவே தென்பட்டாள் என்று பொருள்.

பரிகாரப் பட்டியல் பலன் தருமா?

இப்படியிருக்க, ஜாதகத்தை ஆழமாக ஆராயாமல் மேம்போக் காகப் பார்த்து, குழந்தை இறந்ததை எதிர்பாராமல் நடந்ததாகக் கருதி, மீண்டும் அவளுக்குக் குழந்தை பிறப்பதற்காகப் பல பரிகாரங்களில் ஈடுபடவைத்து, அலைக்கழிக்கும் எண்ணம் ஜோதிடருக்கு வரக்கூடாது. சேது ஸ்நானம், நாகப் பிரதிஷ்டை, ஸந்தான கோபால யந்திரம், புருஷ சூக்த ஹோமம், சிம்சுமார சாந்தி போன்ற பரிகாரங்களைப் பட்டியலிட்டு நடைமுறைப்படுத்த வைப்பது தகாத செயல். சட்டியில் இருந்தால் மட்டுமே அகப்பையில் அகப்படும். இதை அறிந்தும், முயற்சியில் ஈடுபடவைக்கும் துணிவு இருக்கக்கூடாது.


த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளின் குணாதிசயங்களை விளக்க வந்த பகுதி இது. செவ்வாய் 5, சனி 5, குரு 8, புதன் 7, சுக்கிரன் 5 - இந்த ஐந்து கிரகங்களும் ஒற்றைப்படை ராசியில் 30 பாகைகளைப் பங்கு போட்டுப் பிரித்துக்கொள்வார்கள். இரட்டைப்படை ராசியில் எதிர் வரிசையில் இவர்கள் இருப்பார்கள். பிறந்தவர்களின் குணாதிசயங்களை இறுதி செய்வதில் அவரவரது த்ரிம்சாம்சகம் முன்னுரிமை பெறும். அதை ஒதுக்கிவிட்டு வேறு வழியில் இயல்பை வரையறுக்கும் முயற்சியில் இறங்குவது ஜோதிடத்துக்குப் பெருமை சேர்க்காது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பொறுப்பும் கடமையும்...

5-ம் வீடு சுப வீடு. அதில் சுப கிரகம் இருக்கிறது. சுபக் கிரகப் பார்வை இருக்கிறது. லக்னாதிபதியுடனும் காரகக் கிரகத்துடனும் தொடர்பு இருக்கிறது. ஆனால், குழந்தை பிறக்கவில்லை. விஞ்ஞானமும் மருத்துவமும் கைவிரித்து விட்டன. பரிகாரங்களும் பலனளிக்கவில்லை. குழந்தைக்காக புது பரிகாரத்தை அறிமுகம் செய்யுமுன், த்ரிம்சாம்சகத்தைச் சேர்த்து ஆராய்ந்தால், முடிவு தெரிந்து விடும். சாதாரண பலன்களைப் பின்னுக்குத் தள்ளி த்ரிம்சாம்சக பலன் வென்றுவிடும்.

பண்டைய நாளில், வியாபார நோக்கு கலக்காமல் ஜோதிடம் பயன்பட்டது. அந்தக் கலப்படம் ஜோதிடத்தின் உருவத்தைச் சிதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஜோதிட மேதைகளுக்கு உண்டு. தவசீலர்களான ரிஷிகளும் ஜோதிட மேதைகளும் கட்டிக்காத்த ஜோதிடம் சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு புதுத் தலைமுறைக்கு வரவேண்டும். அதை அவர்களுக்கு ஊட்டும் கடமை இந்தத் தலைமுறைக்கு உண்டு. அப்படி அனைவரும் விழித்துக்கொண்டால் ஜோதிடம் மக்களுக்குப் பயன் பெறும் வகையில் வளர்ந்துவிடும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு