மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

'தாலி பெண்ணுக்கு வேலி’ என்பது அவளுக்கான பாதுகாப்பை உணர்த்துவது அல்ல; அவளுக்கான அடிமை சாஸனம் என்று குறைப்பட்டுக்கொண்டாள் தோழி ஒருத்தி. 

இவள் இப்படியென்றல், இன்னும் சிலர் இருக்கிறார்கள்... நாகரிகத்தின்பொருட்டு தாலியை மறைத்துக்கொள்வது, தாலி அணிவதையே மறந்துவிடுவது என்று நீள்கிறது பட்டியல். இதில் நாளிதழ்களிலும் சேனல்களிலும் விவாதப் பொருளாகிவிட்டது தாலி! உண்மையில் தாலி தேவையா, இல்லையா? இதுகுறித்து

தெளிவான விளக்கத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லுங்களேன்.

சொ.புவனேஷ்வரி, திண்டுக்கல்

முதல் கோணம்

தங்கம், கும்பம், தீபம், தேங்காய், மஞ்சள், பழம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பம் ஆகியன மங்கலப் பொருள்கள். அவற்றில், தங்கம் முதன்மை பெறுகிறது. 'மங்கலம்’ என்றால், நன்மையை நம்மில் இணைப்பவை; நல்லதை ஈட்டித் தருபவை; மன மகிழ்ச்சியை நிறைவுசெய்பவை என்கிறது சாஸ்திரம் (கல்யாணம் மங்களம் சுபம்).

தலையில் சுட்டி, காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்தில் காசு மாலை, முழங்கைக்கு மேல் தோளுக்குக் கீழ் வங்கி, கையில் வளை, விரலில் மோதிரம், இடுப்பில் ஒட்டியாணம், சிறு வயதில் அரைஞாண்/ அரசு இலை  இவை அத்தனையும் பெண்ணாகப் பிறந்தவளின் உடலில் மிளிரும். அத்தனையும் தங்கத்தால் ஆனவை. அத்துடன் நில்லாமல் கன்னத்தில் மஞ்சள், நெற்றியில் மஞ்சள் குங்குமம், வாயில் தாம்பூலம், கூந்தலில் புஷ்பம் ஆகியவையும் இணைந்திருக்கும். ஆண்களிலும் காதில் கடுக்கனும், கழுத்தில் மைனர் செயினும், விரலில் மோதிரமும், சிறு வயதில் தங்க அரைஞாணும், சிலரிடம் தங்கப்பல்லுமாக அவர்களுடைய அழகை இரட்டிப்பாக்கும். இப்படி ஆணிடமும் பெண்ணிடமும் தங்கம் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த அணிகலன்கள் அத்தனையும் அழகுக்கு அழகு சேர்க்கும்.

கே:எனில், தாலியும் அழகு சேர்க்கும் ஓர் ஆபரணம்தானா?

ப: இல்லை! அது அணிகலன் என்ற தகுதியையும் தாண்டி, மனமகிழ்ச்சியை நிறைவு செய்யும். அதனால்தான் அதை அணிகலன் என்று சொல்லாமல் 'மாங்கல்யம்’ என்று சொன்னார்கள். மங்கலத்தைத் தரும் தங்கம் என்றார்கள். அதில் 'திரு’()வை இணைத்து  'திருமாங்கல்யம்’    என்று பெருமைப்படுத்தினார்கள்.

தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?

பண்டைய நாட்களில், ஆண்கள் பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கமாட்டார்கள். முதலில் கழுத்தைப் பார்ப்பார்கள். அதில் திருமாங்கல்யத்தைப் பார்த்ததும் அவளை அன்னையாகவும், சகோதரியாகவும் அவன் மனம் எண்ணிவிடும். அதன் பிறகு, அவனுடைய பார்வை அழகை ரசிக்கும் பார்வையாக இருக்காது; வணங்கும் பார்வையாக மாறிவிடும். ஆக, திருமாங்கல்யம் அவளுக்கு மட்டும் நன்மை செய்யவில்லை; அதைக் காண்பவனையும் நல்வழியில் திருப்பிவிடுகிறது.

ஆணானவன் அன்னையையும் அணைப்பான், மனைவியையும் அணைப்பான், மகளையும் அணைத்துக்கொள்வான். ஆனால், அன்னையின் ஆலிங்கனத்தில் பக்தி இருக்கும்; மனைவியிடம் அன்பு இருக்கும்; மகளிடம் வாத்சல்யம் இருக்கும். இதுதான் பாரதத்தின் தனிப் பண்பு. அதைக் கற்றுக்கொடுப்பது தாலி.

கே:ஆனாலும், தாலி குறித்த விவாதமும் விமர்சனமும் பழங்காலத்தில் இருந்து தொடர்கிறதே?

ப: முன்பு வெளியான பேசாத திரைப்படங்களிலும் தாலி கட்டும் காட்சி உண்டு; பேசும் படத்திலும் மேளதாளத்துடன் மந்திரம் ஓதி தாலி கட்டும் காட்சிகள் பெருமைப்படுத்தப்பட்டன.இடைக் காலத்தில் பகுத்தறிவுவாதிகளின் ஊடுருவல் இருந்தும், தாலி கட்டும் காட்சியை மந்திரத்துடன் இணைத்து தாலிக்கு வலுவூட்டினார்கள். 'மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவனஹேதுனா, கண்டேபத்னாமி சுபகே த்வம் ஜீவ சரத: சசதம்’ என்ற மந்திரத்துடன் இணைந்த  கெட்டிமேளத்தைக் கேட்டால் மட்டுமே, ரசிகர்களின் மனம் கல்யாணம் (மங்கலம்) நிறைவுற்றதாக உணரும். இந்த மந்திரம் அத்தனை பேருக்கும் அத்துப்படி.

சம்பிரதாயத்தை ஒதுக்கும் விஞ்ஞானமுறை திருமணத்திலும் தாலி உண்டு. தலைவரின் கையால் தாலி எடுத்துக்கொடுத்துக் கட்டினால் மட்டுமே திருமணம் நிறைவுபெறும். பதிவுத் திருமணத்திலும் தாலி உண்டு. பாடல்களிலும், வசனங்களிலும் தாலிகட்டுக் கல்யாணத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள், விவாஹரத்தில் பழைய கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைத்து, புதுக் கணவர் மூலம் புதுத் தாலியைக் கட்டி, இரண்டாவது திருமணம் நிறைவுபெற்றதை உறுதி செய்கிறார்கள். அவர்கள் எதை எதிர்க்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

பண்டைய நாளில், ஏதோ பரபரப்பில் வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டால், 'அவள்தான் அவன் மனைவி. அவனே அவளுடைய கணவன். கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான். அதை மாற்ற இயலாது’ என்ற திடமான நம்பிக்கையில் வாழ்ந்தவர்களும் உண்டு. சடங்கு நிறைவேறாமல் இருந்தாலும், தாலி கழுத்தில் ஏறிவிட்டது எனில், அவளே தன் மனைவி என்ற எண்ணம் மனதில் பசுமையாகப் பதிவது, தாலியின் பெருமைக்கு எடுத்துக்காட்டு. அறுபதாம் கல்யாணம், 70ல் ரதசாந்தி, 81ல் சதாபிஷேகம் ஆகிய வைபவங்களிலும் அவள் கழுத்தில் தாலி ஏறும்.

தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?

கே:வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதைப் பெருமையாகச் சொல்லலாமா?

ப: பாலியல் பலாத்காரத்தில் கற்பு இழந்த ஒருவளுக்கு, அவளது கற்பைச் சூறையாடியவனையே தாலி கட்டவைத்து, அவனுக்கு அவளை மனைவியாக்கிய நிகழ்வுகளும் உண்டு. கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பம் தரிக்கும் நிலையிலும், அந்த கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தாலிகட்டவைத்து, அவனுக்கு அவளை மனைவியாக்கிய தகவல்களும் உண்டு. இந்தச் சூழல்களில் எல்லாம் தாலியைக் கொச்சைப்படுத்தினாலும், தவற்றுக்குப் பரிகாரமாக, அவர்களுக்கு நேரான வாழ்வளிக்க தாலி பயன்பட்டது.

சமீப காலங்களில் திருமணம் தொடர்பான திரைப்படக் காட்சிக்காக சொந்தத் தாலியைக் கழற்றிவைத்துவிட்டு, காட்சிக்கான தாலியை ஏற்று, குறிப்பிட்ட அந்தக் காட்சி தத்ரூபமாக அமைய உதவியவர்களும் உண்டு. குளியலறையில் தாலியை மறந்து வைப்பது, ஆவேசத்தில் தாலியைக் கழற்றி கணவனிடம் அளித்து, அவனைத் துறந்து செல்லத் துணிவது போன்ற காட்சிகளும் உண்டு. கணவன் மறைந்தால் தாலி கழன்றுவிடும். தாலியைக் கொச்சைப்படுத்தினாலும் இகழ்ந்தாலும், கணவன் மனைவி என்ற புனித பந்தத்துக்கான இறுகிய இணைப்பு தாலி என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் வேரூன்றி இருக்கிறது. அதுதான், அதன் பெருமைக்கு மாறாச் சான்று.

இரண்டாவது கோணம்

தங்களின் கணிப்பு தவறானது. பண்டைய நாட்களில் 'பெண் எனக்கு அடிமை’ என்று பறைசாற்றவே ஆண்கள் தாலியைக் கையாண்டனர். தாலி கட்டிய மனைவி கணவனுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். பெண்ணினத்தை வசப்படுத்துவதற்காக, ஆண் வர்க்கம் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்திய சடங்கு அது.

கே:ஏமாற்ற ஏற்படுத்தப்பட்ட சடங்கு என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ப: மேலை நாடுகளிலும் கணவன் மனைவிகள் உண்டு. அவர்களிடம் தாலி கட்டும் சம்பிரதாயம் எல்லாம் தென்படாது. அங்கு பெண்ணை அடிமையாக்கும் எண்ணமும் இல்லை. இங்கே, மக்களாட்சி விவாகரத்தை அறிமுகம் செய்யும் வரையிலும் தாலி எனும் விலங்கு மாட்டப்பட்டு, பெண்மை அடிமைப்பட்டு தவித்தது. இப்போது, தாலி கட்டுக் கல்யாணத்தைத் தரம் தாழ்த்தி, பதிவுத் திருமணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவுத் திருமணமும் கணவன் மனைவி என்கிற பந்தத்திற்கு இறுக்கம் கொடுத்திருக்கிறது.

தாலி...அடிமைத்தனமா? அறத்தின் அடையாளமா?

நீங்கள் சொல்வது போன்று கற்பழித்தவளையே கணவனாக்கும் துணிவு, அதன் புனிதத்தை நிலைநாட்டவில்லை; பெண்மையை அடிமையாக்கப் பயன்பட்டது. கல்யாணம் ஆகாமல் குழந்தை அளிக்கிறான் எனில், தாலியைப் பயன்படுத்தி கணவன் மனைவி ஆக்குவது அறிவீனம். விருப்பம் இல்லாத ஆணை நிர்ப்பந்தமாக இணைய வைத்து, அவளது ஆசாபாசங்களுக்கு சமாதி கட்டுவது, பெண் அடிமைத்தனத்துக்கு அத்தாட்சி!

கே:உடலால் இணைந்த இருவரை வாழ்விலும் இணைத்துவைப்பது எப்படித் தவறாகும்?

ப: உள்ளத்தால் இணையவில்லையே! ஆணானவன் விரும்பி அவளைக் கெடுத்தான். அவனது விருப்பத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்தப் பெண்ணின் மனதைக் கண்டுகொள்ளாமல் தாலி கட்டவைப்பது  பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்கிறது.

சமுதாயத்தில் சம உரிமை பெற வேண்டிய பெண்மையை தாலியை வைத்து வென்று விட்டார்கள் ஆண்கள். உடலுறவையும் அளித்து அவனுக்குப் பணிவிடையும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாள் பெண். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று ஓதி ஓதி, சாகும் வரையிலும் அவனுக்கு அவள் சேவகம் செய்ய உதவியது தாலி. அதனால் வேறெந்த நன்மையும் இல்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், கூலி இல்லா சேவகத்தை அளிக்கிறது. அவனுக்கென்று ஒரு மனம் ஓர் எண்ணம் இருப்பது போல், அவளுக்கும் மனம், எண்ணம் எல்லாம் உண்டு அல்லவா? கணவனின் விரல் அசைவுக்கு அவள் அசையலாம். தன்னிச்சையாகச் செயல்படும் தகுதி பறிபோய்விட்டது. கழுத்தில் தொங்கும் தாலியைச் சுட்டிக்காட்டி அவளைப் பணியவைத்தார்கள்.

கே:தவறான குற்றச்சாட்டு. வேலியாகத் திகழும் உன்னதத்தை கை விலங்காக எண்ணுவது அறிவீனம் அல்லவா?

ப: நீங்கள் சொல்வது போல் தாலி வேலி இல்லை. நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

கழுத்தில் தாலியைப் பார்த்தவுடன், பண்பை எண்ணி மற்ற ஆண்கள் அவளைவிட்டு நகர்ந்துசென்றதாகக் குறிப்பிட்டீர்கள். அப்படியில்லை; 'இவள் வேறொருவனுக்கு அடிமை. நமக்குக் கிடைக்கமாட்டாள்’ என்ற எண்ணத்திலேயே நகர்ந்தான். நளாயினியும், சாவித்ரியும், அகல்யாவும் கணவன் சேவகத்தில் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். அவர்களது ஆசாபாசங்கள் முளையிலேயே வாடிவிட்டன.

மக்களாட்சி மலர்ந்த பிறகு பெண்மை அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்றது. இருவரும் அவரவர் விருப்பப்படி தேர்ந்தெடுத் துக் கொள்கிறார்கள். சரிவரவில்லை என்றால், இருவரும் மனமுவந்து வேறொருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இருவரது சுதந்திரமும் பின்பற்றப்படுகிறது. தாலி அவர்களது விருப்பத்துக்குத் தடையாக இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலியின் நினைவே அவர்களிடம் இல்லை.

ஆக, தாலியானது சம உரிமையுடன் வாழும் பாக்கியத்தை அளிக்கவில்லை. தாலி விருப்பப்படி சேரவும் விடாது; விருப்பப்படி விலகவும் விடாது. மக்களாட்சி விடுதலை அளித்துப் பெருமைப்படுகிறது. இன்று தாலிக்கு எந்தப் பெருமையும் இல்லை. பதிவுத் திருமணம் முடிந்தபிறகு, சாவகாசமாக ஒப்புக்காக தாலி கட்டும் சடங்கு பிறரை திருப்திப்படுத்துவதற்காகவே அரங்கேறுகிறது.

மூன்றாவது கோணம்

தங்களது விளக்கம் ஏற்புடையது அல்ல. விருப்பப்படி செயல்படும் உரிமை, அடிமை விலங்கை அதற்றியதாகச் சொல்ல முடியாது. எவருக்கும் விருப்பப்படி செயல்பட உரிமை இல்லை. சட்ட திட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் கட்டுக்கோப்பு கலையாமல் இருக்கும்.

விருப்பப்படி விவாஹரத்து என்பது விடுதலை அல்ல. மாட்டுச் மந்தையில், நாளுக்கொரு பசுவாக காளை மாடு செயல்படுவதுபோல் மனிதர்கள் செயல்படக் கூடாது. விருப்பப்படி தேர்ந்தெடுத்து, பின்பு சரிவராவிட்டால் அவரைத் துறந்து வேறொருவரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விரும்பத்தக்கதல்ல. நாம் மனித இனம். ஆறறிவு பெற்ற இனம். கட்டுப்பாட்டுடன்தான் வாழ இயலும்; வாழ வேண்டும். ஜமாபந்தி மைக்கூடு போல் செயல்பட அறம் இடமளிக்காது.

கே:சரி, திருமாங்கல்யம் குறித்து அறம் என்னதான் சொல்கிறது?

ப: 'இந்தத் திருமாங்கலயத்தை உனக்கு அணிவிக்கிறேன். எனது வாழ்வுக்கு நீ ஆதாரம்; நீ நீடுழி வாழக் கடவுளை வேண்டுகிறேன்’ என்ற கருத்து 'தாலி’ மந்திரத்தில் உண்டு. இது, அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டவில்லை. திருமணத்தில் ஒலிக்கும் மந்திரங்கள் அத்தனையும் மனைவியின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நிறைவுபெறுவதற்கான கடவுள் வேண்டுதலை உள்ளடக்கியிருக்கும்.

பெண்ணினத்துக்குப் பாதுகாவலர்களாக இருக்கும்படி ஆண்களுக்குக் கட்டளையிடும் ஸனாதனம். சிறு வயதில் தகப்பன் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இளம் வயதில் கணவனும், முதுமையில் புதல்வனும் அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும். தனது பாதுகாப்பைத் தானே ஏற்கும்படியான சுதந்திரம் அளிக்கக்கூடாது. தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் திறன் அவளுக்கு இருந்தாலும், அறத்தின் அடிப்படை அவள் என்பதால், அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது, அறத்தின் பாதுகாப்பாகும் என்கிறது சாஸ்திரம் (பிதாரஷதிகௌமாளா...).

பூஜை முடிந்ததும் கருவறையைப் பூட்டி, கோயிலையும் பூட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்புவார் பூசாரி. இந்த இடத்தில், கடவுளைக் கருவறையில் அடைத்துவைத்துத் துன்புறுத்துவதாக எண்ணவில்லை. அவரை அலட்சியப்படுத்துவதாகவோ, அடிமைப்படுத்துவதாகவோ எண்ணுவது இல்லை. கருவறையைப் பூட்டாமல் சென்றால், மறுநாள் பூஜைக்கு இறையுருவம் இருக்காது! பெண்மைக்குக் கொடுக்கும் பாதுகாப்பை அடிமையாக்குவதாக மதிப்பீடு செய்வது, தங்களின் நோக்கத்தில் உள்ள கோணல்.

கே:பாதுகாப்புக்கான அடையாளம் என்கிறீர்கள், அப்படியோர் அடையாளத்தை உங்களுடைய அறம் ஆண்களுக்குத் தரவில்லையே, ஏன்?

ப: அறத்தின் பார்வையில் பாகுபாடு கிடையாது. ஆணானவன் இன்பத்தை அள்ளி அள்ளி அளித்து மகிழ்ந்து, அவளை மகிழ்விப்பவன். பெண் இன்பத்தை ஏற்றுக்கொண்டு, தானும் மகிழ்ந்து அவனையும் மகிழ்விப்பவள். கொடுத்து மகிழ்பவன், ஏற்று மகிழ்பவள் என்கிற பாகுபாடு பிறப்பிலேயே இருப்பவை. 'அவள் தன்னுடையவள்’ என்ற உரிமை இருந்தால்தான், அவளை மகிழ்விக்க இடமளிக்கும் அறம். அந்த உரிமையை உறுதி செய்கிறது தாலி. விருப்பப்படி எந்தப் பெண்ணையும் இணைத்துக் கொள்ள அறம் இடமளிக்காது. தாலியின் மூலம் உரிமை உறுதியானவளில் மட்டும்தான் இணைவதற்கு அறம் சம்மதிக்கும். அப்படி, உரிமையை உணர்ந்த மனம் உலகத்தையே மறந்து அவளை மகிழ்விப்பதில் இணைந்துவிடும்.

கற்பைப் பறிகொடுத்தவளை எந்த ஆணும் மனமுவந்து ஏற்கமாட்டான். கற்பைச் சூறையாடியவனை எந்தப் பெண்ணும் ஏற்க மாட்டாள். இருவரது திருமண வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறும்போது, அவ்விருவரையும் வேறு வழியின்றி தம்பதியாக ஏற்கவைத்தார்கள். கர்ப்பவதியானவளை எவரும் மணக்க முன்வர மாட்டார்கள், தவறு செய்தவனைத் தவிர; வேறு வழி இல்லை என்பதால் அவர்கள் இணைந்தார்கள். இணைப்புக்குப் பிறகு அவர்களுடைய மனம் ஒன்றிவிடும். சமுதாயக் கட்டுக்கோப்பை உருக்குலையாமல் காப்பாற்ற, அன்றைய நாளில் அதுதான் கை கொடுத்தது.

கே:அதற்காக, தனிமனித உரிமையை மறுப்பது நியாயமா?

ப: திருமணம் என்பது தனிமனித உரிமையுடன் நின்றுவிடாது.  குடும்பமும் சமுதாயமும் அதனுடன் இணைந்திருக்கும். அந்த இரண்டுக்கும் குந்தகம் இல்லாத நிலையில் சுதந்திரத்தைக் கட்டுப்பாடுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படியான நடைமுறை அடிமைத்தனம் ஆகாது; சமுதாயத்தைக் காப்பதாகும்.

திருமணத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் பொருளாக தாலி இருக்கும். தாலியில் திருமாங்கல்யத்துக்கு இருபுறமும் இரு மணிகள் இருக்கும். தாலியில் இறையுருவம் இருக்கும். லிங்க வடிவில் ஈசன் அமர்ந்திருப்பான். மாறுபட்ட இறையுருவங்களும் தென்படும். பிருந்தாவனத்தை ஞாபகப்படுத்தும் துளஸி மாடம் சில தாலியில் தென்படும். வாழ்க்கை பிருந்தாவனமாக மாறவேண்டும். ஈசனின் நினைவில் ஐஸ்வர்யம் பொங்கி வழிய வேண்டும். தூய்மையான தங்கம் வாழ்க்கையின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும், மங்காத தங்கம் (மாங்கல்யம்) மங்காத வாழ்வைத் தர வேண்டும் என்ற எண்ணங்கள், திருமாங்கல்யத்தைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிவிடும். இப்படி, வாழ்க்கைக்கான தேவையை, பார்த்ததும் வெளிப்படுத்தும் விதத்தில் தாலி திகழ்வதால், திருமணத்தின் இணைப்போடு நின்றுவிடாமல், வாழ்க்கை முழுக்க வளமாக இருக்க தாலி (தங்கம்) கட்டும் சம்பிரதாயம் நிச்சயம் வேண்டும்.

தாலியை ஏற்கச் சொன்னது வேதம். உடலில் தங்கம் இணைய வேண்டும் (தஸ்மாத்ஸுவர்ணம் ஹிரண்யம் தார்யம்). 'உமையின் கழுத்தில் ஈசன் தாலி அணிவித்தான்’ என்று சொல்லும் லலிதா சஹஸ்ர நாமம் (காமேச பந்த மாங்கல்ய சூத்திரசோபிதகந்தரா). உலகத்தின் தாய் தந்தையரான ஆதி தம்பதி திருமணத்தில் இணைய தாலியை ஏற்றார்கள். இந்த நல்ல நடைமுறையைவிட, கட்டவிழ்த்து விட்டுப் பெண்மைக்குச் சுதந்திரம் அளிக்கும் கோட்பாடு எந்த விதத்திலும் சிறந்ததல்ல. அதன் பக்க விளைவால் குலமும், மகிழ்ச்சியும், பாசமும், நேசமும் மறைந்ததுதான் நமக்குக் கிடைத்த பலன்!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை!

பெண்களை நுகர்பொருளாக நினைப்பவர் களும் உண்டு; விளம்பரத்துக்குப் பயன்படுத்து பவர்களும் உண்டு; பெண் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு;  குழந்தையைக் கையில் கொடுத்துவிட்டு, விவாகரத்தை ஏற்பவனும் உண்டு; வேலை ஏதும் செய்யாமல் பெண் (மனைவி) சொத்தில் பொழுதைப் போக்குபவனும் உண்டு.

இப்படியெல்லாம் பெண்மையை மறைமுகமாகத் துன்பத்தில் ஆழ்த்தும் நிலை இருக்க, தாலியைக் கழற்றி விடுதலை அளிக்கச் சொல்வது விதண்டாவாதம். தாலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பண்பையும் துடைத்தெறிந்து, சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்பது சீர்திருத்தம் ஆகாது. பெண்ணின் பெருமை தாலியில் இருக்கிறது. தாலி பாக்கியம் கணவனைக் காப்பாற்றுகிறது. தாலி அறத்தைத் தாண்டவிடாத வேலியாக இருக்கிறது.

ஏழ்மையிலும் தங்கம் கிடைக்காத நிலையில், பனை ஓலையில் தாலி செய்து அணிந்ததுண்டு. 'தாலம்’ என்றால் பனைமரம். அதன் ஓலையில் உருவானது தாலி என்றும் சொல்வது உண்டு. மூலப்பொருள் இல்லை என்றாலும், மாற்றுப் பொருளைப் பயன்படுத்துவது அதன் சிறப்பு. பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது தங்கம். பண்டைய நாளில் பண்டம் வாங்க தங்கம் பயன்பட்டது. இன்றும் தங்கத்தை நம்பித்தான் பொருளாதாரம் இருக்கிறது. மனித சிந்தனையில் உதித்த எந்தச் சீர்திருத்தமும் செய்ய இயலாத பெருமையை தாலி (அசையாத பொருள்) நிலைநிறுத்துகிறது.

பதில்கள் தொடரும்...