'நாராயண, நாராயண..!’ வாசலில் புதுக் குரல் ஒலிக்கவே, வியப்பும் திகைப்புமாய் எட்டிப் பார்த்தோம். ஒரு கையில் தம்புராவும், மற்றொரு கையில் பழமுமாக நாரதர் பிரசன்னமாகி இருந்தார். 

''அடடே, நாரதரா! வாரும், வாரும்! என்ன விஷயம்? ஏதும் கலகம் செய்ய உத்தேசமோ?'' என்று கொஞ்சம் பயத்துடனேயே கேட்டோம்.

''என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆன்மிகத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் உங்களிடம் நான் கலகம் செய்வேனா? அப்படியே கலகம் செய்தாலும், நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அப்படி, உங்கள் மூலமாக சில நன்மைகள் ஏற்படட்டுமே என்றுதான் உம்மிடம் வந்திருக்கிறேன்'' என்றார்.

''ரொம்ப நல்லது! முன்பு நீர் பழத்துடன் சென்று நடத்திய நாடகத்தால், முருகன் கோபித்துக்கொண்டு பழநி மலைக்குச் சென்றுவிட்டான். அதேபோல், இப்போதும் பழத்துடன் வந்திருக்கிறீரே? இதற்கும் பழநிக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதோ?''

''சரியாகச் சொன்னீர். நாம் இப்போது சொல்லப்போவது பழநி கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் குறைகளைப் பற்றித்தான்!'' என்றார் நாரதர்.

''என்ன... பழநிக்குப் போயிருந்தீரா? இதே கெட்டப்பிலா?' என்றோம் ஆச்சரியமாக.

'இப்படியே போயிருந்தாலும், ஏதோ டிராமா ட்ரூப்பிலிருந்து மேக்கப்பைக் கலைக்காமல் வந்துவிட்டார்போல என்றுதான் ஜனங்கள் நினைத்திருப்பார்கள். ஆனாலும், நான் ஜனங்களோடு ஜனமாக ஒரு சாதாரண பக்தன் போலத்தான் அங்கே போனேன். அப்பப்பா... ஓர் அப்பிராணி பக்தனை எப்படியெல்லாம் மொட்டை அடிக்கிறார்கள் அங்கே உள்ள சிலர்!'' என்றவர், பழநியில் பக்தர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைக் கொட்டத் தொடங்கிவிட்டார்.

நாரதர் உலா

''வெளியூர் பக்தர்களிடம் தேட்டை போடுவதற்காகவே பழநி பஸ் ஸ்டாண்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். சடைமுடியும் அழுக்குச் சட்டையுமாக இருந்த ஓர் ஆசாமி என்னிடம் வந்தான். 'முதல் தடவையாக வருகிறவன்’ என்று எப்படித்தான் என்னை மோப்பம் பிடித்தானோ... 'கோயில்ல கூட்டம் அதிகமா இருக்குங்க. தரிசனம் செய்ய ரொம்ப நேரம் ஆகும். நீங்க சீக்கிரமே சிறப்பா தரிசனம் செய்ய ஏற்பாடு பண்றேன். ஆனா, கொஞ்சம் பணம் செலவாகும். பரவாயில்லையா?’ என்று கொக்கி போட்டான். 'சரி, என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிடலாமே’ என்று நினைத்து, தலையை ஆட்டினேன்.

உடனே, பூஜை சாமான்கள் விற்கும் ஒரு கடைக்கு என்னை அழைத்துச் சென்றான். கடைக்காரரிடம் ஜாடை காட்டி ஏதோ சொல்ல, உடனே பூஜை சாமான் பொட்டலங்கள் ரெடியானது. 'எவ்வளவுப்பா?’ என்று கேட்டேன். 1,100 ரூபாய் என்றான். 'என்னப்பா, கொள்ளை விலையா இருக்கே?’ என்றேன். 'அட, நீங்க வேற! அர்ச்சனைத் தட்டு மட்டுமே ரூ.150/’ என்றான். 'ரொம்ப அநியாய விலை!’ என்று நான் சொன்னதும், 'விடுங்க சார், சாமிக்குச் செய்யறதுல கணக்குப் பார்க்காதீங்க’ என்றான்.

'தேவஸ்தானம் சார்பில் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் எதுவும் இல்லையா?’ என்று கேட்டேன். 'இருக்குங்க. மலை மேல ஒண்ணு, அடிவாரத்துல ஒண்ணுன்னு ரெண்டே ரெண்டு கடைங்கதான் இருக்கு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்தக் கோயிலுக்கு அந்த ரெண்டு கடைங்க எப்படிப் போதும்? சரி சரி, வளவளன்னு பேசிட்டிருக்காம, காசைக் கொடுத்துட்டு வாங்க! நேரமாகுது’ என்றான். தேவஸ்தானம் சார்பில் நிறையக் கடைகள் திறந்தால்தான், இதுபோல் கொள்ளை லாபம் அடிப்பவர்கள் திருந்துவார்கள். ஆனால், அப்படிச் செய்யவிடாமல் எந்தச் சக்தி தடுக்கிறது என்றுதான் புரியவில்லை!'' என்று ஆதங்கத்துடன் குறைப்பட்டுக் கொண்டார் நாரதர்.

'சரி, அங்கே பக்தர்களுக்குக் குளியல் வசதியெல்லாம் எப்படி?' என்று கேட்டோம்.

'அதை ஏன் கேட்கிறீர்? தனியார் நடத்தும் வெந்நீர் நிலையங்கள் ஆங்காங்கே இருக்கு.  அங்கே எவ்வளவு கட்டணமோ தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வெந்நீர் நிலையத்துக்கு என்னை அழைத்துச் சென்ற அந்த ஆசாமி வெந்நீர் குளியலுக்கு 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டான். வேற எங்கேயாவது குளித்தால் சொறி, சிரங்குதான் வரும் என்று பயமுறுத்தியதால், வேறு வழி இல்லாமல் அதற்கும் தண்டம் அழுதுவிட்டு வெந்நீர்க் குளியல் போட்டேன்.'

'தேவஸ்தானம் சார்பில் சண்முக நதி, சரவணப்பொய்கைன்னு இரண்டு இடங்களில் பக்தர்களின் வசதிக்காக இலவச வெந்நீர் சப்ளை நிலையங்கள் நடத்தறதா கேள்விப்பட்டோமே?'

'அங்கெல்லாம் கூட்டம் நிற்கிறது. அதெல்லாம் நம் அவசரத்துக்குச் சரிப்பட்டு வராது!' என்றவர், பழநியில் நடைபெறும் இன்னொரு கொள்ளை பற்றியும் விவரித்தார்.

நாரதர் உலா

கோயிலுக்கு வருகிற பெண் பக்தர்கள், நேர்த்திக்கடனாக பழநி கோயிலுக்கு முடிக்காணிக்கை செலுத்துகிறார்கள். இதன்மூலம் கோயிலுக்கு சுமார் 2 1/2 கோடி வருமானம். 7075 செ.மீ. நீளம் உள்ள அடர்த்தியான தலைமுடி 1 கிலோ ரூ.2,000/ வரை விலை போகிறது. அதைப் போட்டி போட்டு வாங்கிச் செல்ல அண்டை மாநிலத்து வியாபாரிகள் பழநியிலேயே முகாமிட்டிருக்கிறார்கள். இதற்கென்றே பல புரோக்கர்கள் கோயிலுக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம். பெண் பக்தர்கள் இப்படிக் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்தவேண்டிய முடிக்காணிக்கை  மூலம் பழநி கோயிலுக்கு எவ்வளவு வருமானம் இழப்பு என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

''அடேங்கப்பா!' என்று பிரமித்த நாம், 'அங்கே நடைபெறும் அன்னதானம் பற்றிச் சொல்லுங்கள்?' என்று கேட்டுக்கொண்டோம்.

''சாப்பாடு ரொம்பச் சுமார்! ஆரம்பத்தில் தரமான பொருள்களைப் பயன்படுத்தி வந்தவர்கள், இப்போதெல்லாம் தரம் குறைந்த பொருள்களையே பயன்படுத்தி வருவதாக அங்கிருந்த பக்தர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்'' என்றவர் தொடர்ந்து,

''தினமும் 5,000 பேர் வரை சாப்பிடும் இந்த அன்னதானக் கூடத்தில் சாதம் வடிக்கும் சுடுநீர், மிஞ்சும் சாம்பார், ரசம் போன்றவற்றை மலைப் பகுதியிலேயே கொட்டிவிடுகிறார்கள். இதனால், மலையின் புனிதத் தன்மை குறைந்து வருவதாகவும், அரிய மூலிகைச் செடிகள் அழிந்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்'' என்றார்.

''இதுபற்றி நீங்கள் அதிகாரிகள் யாரிடமும் பேசிப் பார்த்தீர்களா?'' என்று கேட்டோம்.

''பேசினேனே..? கோயிலின் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கத்தைச் சந்தித்து, நான் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்ட குறைகளைப் பற்றி விளக்கம் கேட்டேன். பெண்களின் முடிக்காணிக்கை மூலம் கோயிலுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்படுவது பற்றிக் கேட்டதற்கு, 'நீங்கள் சொல்வது போன்ற புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளன. ஒருங்கிணைந்த முடிக்காணிக்கை நிலையத்துக்கான கட்டடம் எழுப்பப்பட்டு, ஒரு மாடி வரை முடிந்துவிட்டது. விரைவிலேயே இரண்டாவது மாடியும் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அது முடிந்ததும், நீங்கள் சொல்லும் குறை சரிசெய்யப்பட்டுவிடும்’ என்றார்.

'தனியார் கடைகளில் பூஜை சாமான்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதே?’ என்று கேட்டபோது, விரைவிலேயே பெரியாவுடையார் கோயில் அருகில், தேவஸ்தானம் சார்பில் பூஜை சாமான்களுக்காக ஒரு பெரிய கடையைத் திறக்க இருப்பதாக ராஜமாணிக்கம் என்னிடம் கூறினார்.

''எப்படியோ, பழநி பக்தர்களுக்கு சீக்கிரமே நல்லது நடந்தால் சரி! பங்குனி உத்திரம் வேறு நெருங்குகிறதே!' என்று சொன்ன நாரதர், இன்னும் பல பகீர் விஷயங்கள் இருப்பதாகவும், அதுபற்றிப் பிறகு சொல்வதாகவும் சொல்லிவிட்டு, நம்முடைய பதிலை எதிர்பார்க்காமலே 'நாராயண, நாராயண’ என்றபடி அந்தர் தியானமாகிவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு