Published:Updated:

மங்கலம் பொங்கட்டும்!

சுபம்... நன்மை...வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ங்கலம் என்றால் அழகு, சுபம், நன்மை, தாலி என்று பொருள். வேதம் ஓதும் அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட (இறையிலி) கிராமங்களை 'மங்கலம்’ என்ற பெயரில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமானும் உமாதேவியும் கணங்களுடன் மகா கயிலாயத்தில் கொலு வீற்றிருக்கும் திருமாளிகை வாயில்களில் அஷ்டமங்கலங்கள் ஏந்திய தேவ மகளிர் (அஷ்ட ரம்பையர்) நிற்கின்றனர்.

 அஷ்ட மங்கலங்கள் என்பன, எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையைப் போற்றி அளிக்கப்பட்ட மங்கலப் பொருட்களாகும். அவை: பூரண கும்பம், அடுக்கு தீபம், ஸ்வஸ்திகம், இரட்டை சாமரம் (விசிறி), கொடி, சங்கு, ஸ்ரீ வத்ஸம், கண்ணாடி. அஷ்ட மங்கல பொருட்களில் தோட்டி (அங்குசம்), முரசு, இரட்டை மீன்கள் ஆகியவற்றை இணைத்துச் சொல்லும் வேறு விதமான பட்டியலும் உண்டு.

இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவுள்ளது, நம் சமுதாய வாழ்வில் இன்றியமையாத மங்கலப் பொருட்களாகும். அவை: மஞ்சள், குங்குமம், புஷ்பம், திருவிளக்கு, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு.

மங்கலப் பொருட்களில் முதன்மையானது மஞ்சள். சகல சுப நிகழ்ச்சிகளிலும், கோயிலில் அபிஷேகப் பொருட்களிலும் மஞ்சளுக்கே முதல் மரியாதை! சமையலிலும் பங்குண்டு. பெண்கள் முகத்தில், உடலில் மஞ்சளைத் தேய்த்துக் குளிப்பது வழக்கம். இது மிகச்சிறந்த கிருமிநாசினி.

மங்கலம்  பொங்கட்டும்!

எந்த பூஜையும் தொடங்குமுன் மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைப்பர். ஆசீர்வாதம் செய்ய அரிசியில் மஞ்சள் தடவி, அட்சதை தயாரிப்பர். தாலிக் கயிற்றில் மஞ்சள் பூசுவர். அக்காலத்தில் தாலிக்கயிற்றில் மஞ்சள் துண்டு ஒன்றை கட்டி முடித்து வைப்பது வழக்கம். சில வகுப்பினர், திருமணத்தின்போது மஞ்சள் நீரில் நனைத்த துணியையே மணமக்களுக்கு உடுத்துவது வழக்கம். மணமக்களின் முக்கியமான விளையாட்டு மஞ்சள் நீராட்டு. மேலும், வாசல் கதவுகளில் பொட்டு இடவும், புதிய ஆடையிலும் மற்றும் புதுக்கணக்கு எழுதத் தொடங்கும்போது நோட்டிலும் பொட்டு வைக்கவும், உண்டியல் மூடுவதற்கான துணியிலும், ஆரத்தியில் கரைக்கவும் மங்கலப் பொருளாகப் பயன்படுகிறது மஞ்சள்.  மேலும், அடிபட்ட புண்ணில் தடவ, கை வீக்கத்துக்குப் பற்றுப் போட, இருமல் நீங்க பாலில் கலந்து பருக... என நோய் நீக்கும் மருந்தாகவும் மஞ்சள் திகழ்கிறது.

'ஹரித்ரா’ என்று வடமொழியிலும், மஞ்சள், அரிசனம், உருத்திரம், கசாபம், கர்ப்பகம், காஞ்சல், கிறகன், தேசனி, நிசாகு, குளவிந்தம், கோட்டம், சோணிதம், மாதளை எனத் தமிழிலும் பல பெயர்கள் மஞ்சளுக்கு உண்டு.

மஞ்சளுக்கு அடுத்த மங்கலப் பொருள் குங்குமம். மஞ்சள்தூள், வெங்காரம், நல்லெண்ணெய் கூட்டணியில் உருவாவது குங்குமம். சுமங்கலியின் அடையாளச் சின்னம் குங்குமமே! மணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம். ஏனெனில், நெற்றி வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது இந்து சமய நம்பிக்கை. மங்கல விழாக்களுக்குக் குங்குமம் கொடுத்து அழைப்பது நமது பாரம்பரியம். மங்கல நாட்களில் வீட்டின் வாயிற்படியில் குங்குமத் திலகம் வைப்பது வழக்கம். நவராத்திரி பூஜை ஆயுத பூஜையின்போது பாடப் புத்தகங்கள், வியாபார கணக்குப் புத்தகங்கள், வீட்டு அலமாரிகள் முதல் இரும்பு ஆயுதங்கள் வரை அத்தனைக்கும் சந்தன குங்குமப் பொட்டுவைத்து மகிழ்வார்கள். இதனால் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

'புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு’ என்பார் திருமூலர். 'பொன் வைக்கும் இடத்திலே பூ வைத்தல்’ என்பது பழமொழி. மங்கையரை 'பூவையர்’ என்றும் அழைப்பர். மங்கைப் பருவத்தை அடைந்த பெண்ணை 'பூப்படைந்தாள்’ என்று அழைப்பது வழக்கம். மன்மதனும் மலர்க்கணை (மலரம்பு) விட்டு காதலைத் தூண்டுவானாம். வணிகம் தொடங்கும்போது பூக்களை வைத்துத் தொடங்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. பூக்களின் பெயரால் இசையும் இசைக் கருவிகளும் இருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய பூக்களின் பெயரால் யாழ் வகையும், பண் வகையும் உள்ளன. மேலும், ஆம்பல் இசையும் அல்லிக்கூத்தும் உண்டு. அக்காலத்தில், திருமண நிறைவில் மணமக்களை வாழ்த்த, முல்லை மலரை நெல்லோடு சேர்த்துத் தூவினர்.

மங்கலம்  பொங்கட்டும்!

மகளிரும் குழந்தைகளும் தலையிலிருந்து தொங்கி நெற்றியின் நடுவில் படுமாறு (நெற்றிச்சுட்டி போன்று) சூட்டுவது 'சூட்டு’ என்பதாகும். கண்ணி, கோதை, சிகழிகை, இண்டை, சூட்டு ஆகிய ஐந்து வகைகளும் தலையில் சூட்டும் பூமாலை வகையாம்! அதேபோல், நீண்ட நார் மூலம் பூக்களை அடுக்கித் தொடுப்பது 'மாலை’. திரண்ட தேர் உருளை போலக் கட்டப்பட்டு மார்பில் நிறைந்து புரளும் மாலை வகை 'தார்’ எனப்படும். முனைகள் இணைக்கப்படாது மார்பில் தொங்கி அசைவது 'தொங்கல்’ என்பதாகும். அக்காலத்தில் பூத்தொடுத்தலும் ஒரு கல்வியாக இருந்ததை 'எண்ணல், எழுதுதல், இலைக் கிள்ளல், பூத்தொடுத்தல்’ என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

ஜோதி வடிவமான இறைவனைக் காட்டும் ஜோதியே திருவிளக்காகும். தெய்வமாகவே கருதப்படுவதால் அதனை அருள்விளக்கு என்றழைப்பர். புற இருளை மட்டும் போக்கும் நிலையில் அமைவது விளக்கு. புற இருள் அக இருள் இரண்டையும் போக்குவது திருவிளக்கு!

வீட்டிலும் சரி, வெளியிடங்களிலும் சரி... திருவிளக்கை ஏற்றிய பிறகுதான் மற்ற மங்கல நிகழ்ச்சிகளைத் தொடங்குவர். விளக்குகளில் குத்துவிளக்கு, பாவை விளக்கு, கை விளக்கு, சர விளக்கு, தூண்டா விளக்கு எனப் பலவகை உண்டு. அக்காலத்தில் நெய்விளக்கு தீபம் காட்டித்தான் பூஜையைப் பூர்த்தி செய்வார்கள். கற்பூரம் நடுவில் வந்து சேர்ந்தது. அதுவும் கலப்படமாகிவிட்டது. அதன் புகை உடலுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, நெய் தீபமே ஏற்றது. தீபத்துக்கு உரிய கார்த்திகை மாதம் முழுவதும் காலையும், மாலையும் திருவிளக்கு ஏற்றுவது நல்ல பலன்களைத் தரும். இதனை, 'கார்த்திகை விளக்கீடு’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

வெப்பம் நீக்கி குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது சந்தனம். அனைத்து மங்கல விழாக்களிலும் வரவேற்பில், முதலில் அனைவரிடமும் நீட்டுவது சந்தனப் பேழையைத்தான். ஆரம், ஈங்கம், குசந்தனம், குலவிரி, கோவாரம், சந்தனம், சந்திலகம், சந்து, சாதகம், சிசிரம், சீதம், செலிட்டம், சேலேகம், சேலோதம், மலையாரம் ஆகிய பெயர்களும் சந்தனத்துக்கு உண்டு. இறைவனுக்குச் சந்தன அபிஷேகம் செய்தால் செல்வம், சுவர்க்க போகம் கிடைக்கும். கடவுள் சிலைகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் விசேஷம்! வைத்தீஸ்வரன்கோவில் சந்தன அபிஷேக தீர்த்தம், நோய் தீர்க்கும் மகத்துவம் மிக்கது. அக்காலத்தில் ஆண்கள் மார்பில் சந்தனம் பூசி மகிழ்வர். அதேபோல், வயிறு நிறைய உண்டபின் வயிற்றில் சந்தனம் பூசினால், விரைவில் செரிமானம் ஆகிவிடும் என்பர். இன்றைய நாளில் திருமண விழாவில் கன்னங்களிலும், மோவாயிலும், கைகளிலும் சந்தனம் பூசுவது வழக்கத்தில் உள்ளது.

திருக்கோயில் வைபவங்களிலும், இறைச் சடங்குகளிலும் முக்கிய இடம் பெறுவது தேங்காய். கும்பத்தின் (குடத்தின்) மேலே பூரணமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள மங்கலப் பொருள் தேங்காய். கோயில்களில் நம் வினைகள் சிதற, விநாயகருக்கு தேங்காயை 'சிதறுகாய்’ உடைப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது. அம்மன் வழிபாட்டுத் தலங்களில் தேங்காயை உடைக்கும் போது அது நரபலியாக ஏற்கப்பட்டது. எனவே, உயிர்ப் பலிக்கு மாற்றாக தேங்காயை இந்து மதத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். தேங்காயை மட்டையுடன் தானம் செய்வது, கோ தானம் செய்வதற்குச் சமம் என்பார்கள்.

மங்கலம்  பொங்கட்டும்!

சிவனுக்கும் மூன்று கண்கள்; தேங்காய்க்கும் மூன்று கண்கள். சிவனாருக்கும் ஓடு உண்டு (கபாலம்); தேங்காய்க்கும் ஓடு உண்டு. சிவன் கல்லால் அடியுற்றார் (சாக்கிய நாயனார் திருக்கதை); தேங்காயும் தினம் தினம் கல்லில் அடிபடுகிறது. ஹோமம், யாகம், மஹா பூர்ணாஹுதியில் தேங்காய்க் கொப்பரை முதலிடம் பெறும். தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்தால்தான் பூஜை நிறைவுபெறும். தேங்காய் எண்ணெய் புண்ணை ஆற்றும்; பலகாரத்துக்குச் சுவை கொடுக்கும். இப்படிப் பலவிதமான பயன்பாடுகள் மிக்க தேங்காய்க்கு இலாங்கலி, சாமபோத்திரி, தென், நெய்யரி, தெங்கு என்ற பெயர்களும் உண்டு.

பூஜை பொருட்களில் 'பழம்’ என்ற பெருமை வாழைப் பழத்துக்கு மட்டுமே உண்டு. ஆம்! பழம்பெருமை உடையது அல்லவா? முக்கனி கூட்டணியிலும் வாழைக்குப் பங்குண்டு. அசோனம், அரம்பை, கதலி, காவாகிலி, சமி, சகுந்தம், சோகிலி, ததபத்ரி, தந்துவிக்ரியை, மடல், மோசகம் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. வாழைப் பழங்களில் பூவன், மொந்தன், பேயன், கர்ப்பூரவல்லி (தேன்கதலி), ரஸ்தாளி, மலைப்பழம், செவ்வாழை, நேந்திரம், நற்கொம்பு, பச்சை, பூவில்லா வாழை, பச்சைநாடன், ஏலக்கி என்று எத்தனையோ ரகங்கள் உண்டு. ஆயினும், பூவன் வாழைப்பழத்தையே பெரும்பாலோர் பூஜைக்கு ஏற்றதாகக் கொள்வர். பூவன் என்பது (தாமரை) பூவில் அமர்ந்த பிரம்மனுக்கு உரியது. முகுந்தன் (திருமால்) திரிந்து மொந்தன் ஆயிற்று. சிவபெருமானுக்கு பேயன் என்றொரு பெயர். எனவே, பேயன் அவருக்கு உரியது. இது மிக உயர்ந்த வகை. தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிட, மலச்சிக்கல் இருக்காது. மலைப்பழம் கொண்டு பஞ்சாமிர்தம் செய்தால், பல மாதங்கள் ஆனாலும் கெடாது.

வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தது தாம்பூலம். இதற்கு 'சுருளமுது’ என்றும் பெயர். 'பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்வது’ என்ற சமுதாயப் பழக்கம் திருமண நிச்சயதார்த்தத்தில் காணலாம். இதைப் பற்றிய முதற் குறிப்பு, குப்தர் காலத்து (ஐந்தாம் நூற்றாண்டு) கல்வெட்டில் காண முடிகிறது. வெற்றிலை பாக்கு இல்லாமல் எந்த ஒரு இந்து மதச் சமுதாயச் சடங்கும் இல்லை. திருக்கோயில் வழிபாட்டிலும் அது முக்கியமானது.

தாம்பூலம் சுவைப்பது பற்றிய இலக்கிய ஆதாரம் சிலப்பதிகாரத்தில் உள்ளது. இதற்கு 'அடைப்பம்’ 'வெற்றிலைச் செல்வம்’ என்ற பெயர்களும் உண்டு. சிவனாகினி, சூக்குளி, சூளின், தாம்பூரவல்லி, திரையல், நாகவல்லி, மடியிற்குருவி, மண்ணில் வேந்தன் வரிவம் என்று பல பெயர்களைக் கொண்ட வெற்றிலை, பூப்பதோ காய்ப்பதோ இல்லை. வெறும் இலை மட்டும் உடையதால் வெற்று இலை வெற்றிலை என்று பெயர் பெற்றது. இது மிகச் சிறந்த மருத்துவ குணமுடையது. வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புடன் சேர்ந்து வாயைச் சிவக்கவைக்கும். இது செரிமான சக்தியை அளிப்பது. கமுகு, அந்திர வசனம், கிமுகம், கூந்தல், கைச்சி, சகுந்தம், சுரஞ்சனம், தற்பதி, தாலம், மதுரபாகம், அடக்கை போன்ற பல பெயர்களை உடையது பாக்கு. வெற்றிலைப் பெட்டி, பாக்குப் பெட்டி உருவங்கள் தாங்கிய நாணயத்தை மலேசிய நாட்டில் வெளியிட்டுள்ளார்கள். அதனை அந்நாட்டு கலாசார பாரம்பரியமாகக் காண்கிறார்கள்.

அஷ்ட மங்கலப் பொருட்களைப் பார்த்தோம். இவை தவிர, இன்னும் பல மங்கலப் பொருட்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்க நான்கை அறிந்து, 12ம் ஆண்டுச் சிறப்பிதழுக்குச் சிறப்பு சேர்ப்போம்.

* இனிப்பு பொருட்களில் மகாலட்சுமிக்கு மிகப் பிரியம் உண்டு. திருமணக் கூடங்கள், வேள்விச் சாலைகள் முதலானவை திருமகளின் இருப்பிடங்கள் என்பதால், அங்கு வருவோருக்கு லட்டு முதலான இனிப்பு வழங்குவது சிறப்பு.

* லட்சுமியின் அம்சம், உப்பு. அவளைப் போலவே உப்பும் கடலில் பிறப்பது. இன்றைக்கும் சில பகுதிகளில் கிரகப்பிரவேசத்தின்போது முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களில் உப்பும் இடம்பெறும்.

* திருமகள் வில்வத்தில் நிலைத்திருப்பதாக அவளுக்கான சகஸ்ரநாமம் போற்றுகிறது. ஆக, வில்வ மரத்தை வழிபடுவதும், வீட்டில் வில்வ கனியை வைத்துப் பூஜிப்பதும் மங்கலத்தை அளிக்கும்.

* பூஜிக்கத்தக்க மகாபாக்கியமுள்ள, தூய்மை நிறைந்த இல்லத்தரசிகளையும் கிரகலட்சுமியாகப் புராணங்கள் போற்றுகின்றன. அவர்களைச் சிறப்பித்துப் போற்ற நம் வீடும், குடும்பமும் செழித்தோங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு