ஸ்ரீ சாயிநாதரின் அஷ்டோத்திர நாமாவளிகளில் 19வது நாமாவளியாக அமைந்திருக்கும், 'ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:’ என்பது, 'தம்முடைய பக்தர்களைக் காப்பாற்றக்கூடிய சக்தியைப் பூரணமாகக் கொண்டவர்’ என்ற பொருளில் அமைந்ததாகும். ஸ்ரீ சாயிநாதரின் பக்தர்கள் எங்கிருந்தாலும் சரி, அங்கிருந்தபடியே தன்னுடைய குறைகளை, தான் படும் துன்பங்களைச் சொல்லி மானசீகமாகப் பிரார்த்தித்துக்கொண்டாலே போதுமானது; அந்தக் கணமே அவருடைய பிரார்த்தனை ஷீர்டியில் இருக்கும் சாயிநாதருக்குத் தெரிந்துவிடும். உடனே, அவர் தன்னுடைய அருளாடலைத் தொடங்கிவிடுவார்.

இப்படியான எத்தனையோ பல அருளாடல்கள், அவருடைய சத்சரிதத்தில் இருந்து அவருடைய அருள் பிரசாதமாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த அருளாடல்கள் அத்தனையுமே பாராயணம் செய்வதற்கும், பலன் பெறுவதற்கும் உகந்தவை என்பதால்தான், சாயிநாதரின் அருட்பிரசாதமாகத் திகழ்கின்றன.

முன் சொன்ன நாமாவளியின் தொடர்பாக சாயி சத்சரிதத்தில் ஓர் அருளாடல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாயிநாதரின் பக்தர்களில் ஒருவரான தாஸ்கணு, தன்னுடைய கீர்த்தனைகளின் மூலமாக சாயிநாதரின் புகழைப் பல இடங்களிலும் பரப்பியவர். அவர் ஒருமுறை, அன்றைய பம்பாய் ராஜதானியில் கெளபீனேஸ்வரர் கோயிலில் பாபாவின் புகழைப் பரப்பும் கீர்த்தனைகளைப் பாடுவதற்காக வந்திருந்தார். அதுபற்றிக் கேள்விப்பட்ட பம்பாய்வாசிகள் பலரும்  தாஸ்கணுவின் கீர்த்தனைகளைக் கேட்பதற்குத் திரளாக வந்திருந்தனர்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 12

பொதுவாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் பலதரப்பட்ட ரசனைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்குக் கீர்த்தனை பாடுபவர்களுடைய அபிநயங்கள் பிடிக்கும்; சிலருக்குக் கீர்த்தனைகளின் இடையில் அவர் சொல்லும் உவமைக் கதைகள் பிடிக்கும்; இன்னும் சிலரோ அவருடைய குரல் வளத்தை ரசிப்பதற்காக மட்டுமே வருவார்கள். ஆனால், அந்தக் கீர்த்தனைகளைக் கேட்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வருபவர்கள்  ஒரு சிலர் மட்டுமே! அவர்களிலும்கூட உறுதியான நம்பிக்கை கொண்டு பலன் பெறுபவர்கள் ஓரிருவர் மட்டுமே. அவர்களில் ஒருவர்தான் சோல்கர்!

தற்காலிக பணியில் இருந்த சோல்கருக்கு, தன்னுடைய சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைப் பராமரிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. நிரந்தரமான வேலை கிடைப்பதற்கான ஒரு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், நல்ல வேலை கிடைத்து, குடும்பத்தை நல்லமுறையில் பராமரிக்க முடியும்.

பாபாவின் புகழைப் போற்றும் வகையில் அமைந்திருந்த  தாஸ்கணுவின் கீர்த்தனைகளைக் கேட்டு, மனம் உருகி நெகிழ்ந்துபோன சோல்கர், அப்போதே அந்த விநாடியே தன் மனதுக்குள் ஒரு பிரார்த்தனையை பாபாவின் திருவடிகளில் சமர்ப்பித்துக் கொண்டார்.

'கருணாமூர்த்தியாகிய சாயிநாதரே! உம்முடைய கருணையால் நான் எழுதப்போகும் போட்டித் தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று, நிரந்தரமான உத்தியோகத்தைப் பெற்றால், ஷீர்டியில் உம்முடைய சந்நிதானத்துக்கு வந்து, கற்கண்டையும் தேங்காயையும் உம்முடைய திருவடிகளில் அர்ப்பணிக்கிறேன்’ என்று சங்கல்பம் செய்துகொண்டார்.

அவருடைய பிரார்த்தனை விரைவிலேயே நிறைவேறவும் செய்தது. தேர்வில் வெற்றி பெற்று, அவர் விரும்பியவண்ணமே நிரந்தர வேலை கிடைக்கப்பெற்றார். ஆனால், பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவரால் உடனடியாக ஷீர்டிக்குச் சென்று, தன்னுடைய காணிக்கையை பாபாவிடம் சமர்ப்பிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சோல்கர், ஒரு தீர்மானம் செய்துகொண்டார். அதன்படி, அன்றுமுதல் அவர் சிறிதும் சர்க்கரை சேர்க்காமலே தேநீர் அருந்தத் தொடங்கினார். இதை ஒரு விரதம்போல சிரத்தையுடன் கடைப்பிடிக்கவும் செய்தார். இப்படியாகச் சில மாதங்கள் சென்றதும், பாபாவின் அருளால் ஷீர்டிக்குச் செல்லும் பேறு பெற்று, கற்கண்டும் தேங்காயும் வாங்கிக்கொண்டு சென்றார்.

ஷீர்டியில், ஜோக் என்பவரின் விருந்தி னராகத் தங்கி இருந்த சோல்கர், அவரை அழைத்துக்கொண்டு துவாரகாமாயிக்குச் சென்றார். அங்கே பாபாவின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, தான் கொண்டு வந்த கற்கண்டையும் தேங்காயையும் அர்ப்பணித்தார் சோல்கர். அவற்றைப் பெற்றுக்கொண்டு சோல்கரைப் பூரணமாக ஆசீர்வதித்தார் பாபா.

ஸ்ரீசாயி பிரசாதம் - 12

சற்றுநேரம் பாபாவின் சந்நிதியில் அமர்ந்திருந்து ஆனந்தம் அடைந்த சோல்கர், பின்பு விடைபெற்றுச் செல்ல நினைத்தபோது, அவருடன் வந்த ஜோக் என்பவரிடம் பாபா சொன்ன வார்த்தைகள், அவரை மிகவும் பரவசம் அடையச் செய்தன. புன்னகையோடு பாபா சொன்ன வார்த்தைகள் இவைதான்...

''ஜோக், உன்னுடைய விருந்தினருக்குச் சர்க்கரை அதிகம் சேர்த்த தேநீரை நிறையக் குடிக்கக் கொடு!''

பாபா சொன்ன வார்த்தைகளில் இருந்த உட்பொருள் ஜோக்குக்குப் புரியவில்லை. மனம் குழம்பியவராக, பாபாவையும் சோல்கரையும் மாறிமாறிப் பார்த்தார். அவருடைய குழப்பத்தைப் புரிந்துகொண்ட சோல்கர், தான் மேற்கொண்டிருந்த விரதத்தைப் பற்றியும், அதை இங்கிருந்தபடியே சாயிநாதர் அறிந்து, தனக்கு அருள்புரிந்த விந்தையைப் பற்றியும் விவரித்துவிட்டு, மீண்டும் பாபாவின் திருவடிகளில் நமஸ்கரித்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினார்.

சாயிநாதரிடம் அவருடைய பக்தர்கள் நேரில் சென்றுதான் தங்களுடைய குறைகளையும் துன்பங்களையும் தெரிவிக்கவேண்டும் என்பதில்லை. நாம் எங்கிருந்து நம்முடைய துன்பங்களைச் சொல்லி அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டாலும், அது அந்தக் கணமே சாயிநாதருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அவர் உடனடியாக நம்முடைய துன்பங்களைப் போக்கி, நமக்கு  ஆனந்தத்தையும் ஆறுதலையும் அருள்புரிவார் என்பது இந்த நாமாவளியின் மூலமாக நாம் புரிந்துகொள்ளலாம்.

அடுத்த நாமாவளி...

'ஓம் பக்தாவன பிரதிக்ஞாய நம:’

பக்தர் ஒரு பிரதிக்ஞையைச் செய்துகொண்டால், அதை உடனே நிறைவேற்றி அருள்புரிபவர் சாயிநாதர் என்று பார்த்தோம். அப்படி ஒரு பிரதிக்ஞையை தம்முடைய பக்தர் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததுமே, தாம் அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்கிற பிரதிக்ஞையை பாபாவும் எடுத்துக்கொள்கிறார்.

பண்டரிபுரத்தில் உதவி நீதிபதியாக இருந்தவர் தத்யாசாஹேப் நூல்கர் என்பவர். ஒருமுறை, அவரைச் சந்திக்க வந்த நானா சாஹேப் சந்தோர்க்கர், அவரிடம் பாபாவின் மகிமைகளைப் பற்றி எடுத்துச்சொல்லி, அவசியம் அவர் பாபாவை வந்து தரிசிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நூல்கருக்கு பாபாவை தரிசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்கூட, தன்னுடைய மனதுக்குள் ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டார். அதாவது, தனக்கு நல்லதொரு சமையல்காரனும், பாபாவை தரிசிக்கச் செல்லும்போது அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்க நாக்பூர் ஆரஞ்சுகளும் கிடைத்தால் மட்டுமே ஷீர்டிக்குச் செல்வது என்பதுதான் அந்த பிரதிக்ஞை. அக்காலத்தில், பண்டரிபுரத்தில் நாக்பூர் ஆரஞ்சுகள் கிடைப்பது அரிதான ஒன்று! தவிர, அப்போது ஆரஞ்சுப்பழங்களுக்கான சீஸனும் இல்லை. அதனால்தான் பாபாவின் மகிமையை சோதிக்க நினைத்தவராக நூல்கர் இப்படி ஒரு பிரதிக்ஞையைச் செய்துகொண்டார் என்றே சொல்லலாம்.

நூல்கர் இப்படி ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டதுமே, அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று தாமும் ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டார் நம்முடைய சாயிநாதர்.

பாபா எப்படி தம்முடைய பிரதிக்ஞையை நிறைவேற்றினார்?

 - பிரசாதம் பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism