Published:Updated:

அற்புதங்கள் பன்னிரண்டு!

கல்லிலே கலைவண்ணம்! கு.ஆனந்தராஜ், படங்கள்: அ.நவின்ராஜ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அற்புதங்களின் உறைவிடம்! பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், 13ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாம். 

இந்த ஆலயத்தின் சிறப்புகள் மொத்தம் 12. அவை...

பவளக்கல் படி: நுழைவு வாயிலில் கதவைத் திறந்ததும், சுமார் 2 அடி அகலத்தில் சிவப்பு நிறத்திலான இரண்டு பவளக்கல் படிகள் உள்ளன. உள்ளே நுழையும் பக்தர்கள் இந்த படிகளில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், அவர்களின் உடல் உஷ்ணத்தைத் தனக்குள் ஈர்த்து, தணிக்கும் சக்தி இந்தக் கல்லுக்கு உண்டாம்.

அற்புதங்கள் பன்னிரண்டு!

விதானச் சிற்பம்: மூலவர் சந்நிதி முன்புறம் உள்ள மண்டப விதானச் சிற்பம் கலைப் பொக்கிஷம்! இதழ் விரித்த தாமரை, அதன் இதழ்களைக் கவ்வியிருக்கும் எட்டு கிளிகள், சுற்றிலும் அன்னப் பறவைகள், மையச் சதுரத்தின் முனைகளில் உள்ள கல் வளையங்கள் கலைத்திறனுக்குச் சான்றாகத் திகழ்கின்றன. சங்கிலிப் பிணைப்பாகத் திகழ்ந்தாலும், வலையங்கள் ஒவ்வொன்றும் தனியே சுழலும் விதத்திலான சிற்ப வேலைப்பாடு பிரமிக்கவைக்கிறது.

சகஸ்ரலிங்கம்: சகஸ்ரலிங்கச் சன்னிதி, இக்கோயிலின் சிற்பச் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது. 1008 சிறிய லிங்கங்களை ஒருங்கே கொண்ட பெரிய சிவலிங்கம்! உற்று நோக்கினால் மட்டுமே சிறு லிங்கங்கள் புலப்படும்.

யாழிகள்: மூலவர் சன்னிதி முன்புறம் உள்ள மண்டபத்தின் தூண் சிற்பங்களாக இடம்பெற்றிருக்கும் யாழிகள் குறிப்பிடத்தக்கவை. முதல் யாழியின் வாயில் வெற்றிடமாகத் திகழ, 2வது மற்றும் 3வது யாழிகளின் வாயில் தலா ஒரு கல் உருளை, 4வது யாழியின் வாயில் 2 கல் உருளைகள், 5வது யாழியின் வாயில் 3 கல் உருளைகள் என அமைத்திருக்கிறார்கள்.

அற்புதங்கள் பன்னிரண்டு!

ஜுரஹரேஸ்வரர்: கோயிலின் உள்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய நிலையில் 3 சிரங்கள், 3 கால்களோடு திகழும் ஜுரஹரேஸ்வரர் தரிசனம் விசேஷமானது! ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, பிரசாதமாகப் பெற்று, நெற்றியில் இட்டுக்கொண்டால், தீராத ஜுரமும் தீரும் என்பது ஐதீகம். அதேபோல், மிளகு ரசம் சாதமும், வடைமாலையும் சமர்ப்பித்து இவரை வழிபட்டால், தீராப் பிணிகளும் தீரும் என்கிறார்கள்.

பாதாள லிங்கம்: மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில், நிலத்துக்குக் கீழே அமைந்திருக்கும் பாதாள லிங்கத்துக்குப் பச்சைக் கற்பூரம் கொண்டு, செவ்வாய்க் கிழமைகளில் அபிஷேகம் செய்து வந்தால், திருமண வரம், புத்திரப்பேறு, தொழில் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒன்பதே கற்களில் ஒரு சன்னிதி: இந்த ஆலயத்தில் ஒன்பதே கற்களால் உருவாக்கப்பட்ட சிறிய சன்னிதி ஒன்றும் உண்டு. ஒருமுறை, சிற்பிகளுக்கும், சுதை வேலைக் கலைஞர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாம். இதில், இரண்டாம் தரப்பினரின் ஒத்துழைப்பைக் கோராமல், சிற்பிகள் அமைத்ததே இந்த ஸித்தி விநாயகர் சன்னிதி!

பிரம்மன்: சிவனார் பிரம்மனின் சிரம் கொய்த புராணமும் இங்கே சிற்ப வடிவில் திகழ்கிறது. ஐந்து தலைகளுடன் ஒரு சிற்பத்தில் காட்சி தரும் பிரம்மன், அடுத்ததில் நான்முகனாகக் காட்சி தருகிறார்.

அற்புதங்கள் பன்னிரண்டு!

தூண்கள்: மகா மண்டபத்தில் இருக்கும் தூண்களும் சிறப்பு பெற்றவையே! சிறிய தூண்கள் இரண்டு, பிரதான தூண் ஒன்று எனத் திகழும் ஒவ்வொரு தூண் தொகுப்பும் ஒரே கல்லால் ஆனவை. சிவ வடிவங்கள், ரதிமன்மதன், பிரம்மனின் கோலங்கள்... என இந்தத் தூண்களில் உள்ள சிற்பங்கள் மிகத் தத்ரூபமானவை.

மனிதனின் முகம்: மகா மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு  மட்டுமே துவாரங்கள் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்புகள் இந்த மனிதனின் காது, மூக்கு, கழுத்துப் பகுதிகளுக்குச் சென்று, பின்னர் மற்றொரு காது வழியாக வெளியேறும் விதமாக மிகச் சிறிய துவாரங்களுடன் திகழ்கிறது இந்தச் சிற்பம்.

சூரிய வணக்கம்: மாசி மாதத்தில் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரியனின் கிரணங்கள் முதலில் கொடிமரத்தில் படிந்து, பிறகு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஊடுருவி, மூலவரின் லிங்கத் திருமேனியைத் தழுவும் வகையிலான ஆலயம் மற்றும் கருவறை அமைப்பு, அதிசயிக்க வைக்கிறது.

அற்புதங்கள் பன்னிரண்டு!

திருக்குளங்கள்: கோயிலுக்கு இரண்டு திருக்குளங்கள். ஒன்று, சுமார் 180 அடி சுற்றளவிலான சுற்றுச் சுவர்களுடன், அவற்றின் மீது 36 நந்திகள் அமைந்திருக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு குளம் வட்ட வடிவிலும், படிக்கட்டுகள் எண்கோண வடிவிலும் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு