ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நான் அனுமன் பக்தன். அனுமனை விரதம் இருந்து வழிபட உகந்த கிழமை எது?

ஆர்.சேதுராமன், திருவூர்

##~##
அனுமனை வழிபடுவதற்கு நாள்- கிழமை எல்லாம் பார்க்கவேண்டிய தேவையில்லை. நேரம் கிடைத்தால், எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். மற்ற அலுவல்களிலிருந்து மனம் முற்றிலும் விடுபட்ட நிலையில் அவனை வழிபடுவது சிறப்பான பலனை அளிக்கும். எந்நேரமும் அவனுடைய நாமாவைச் சொல்லிக்கொண்டு, அலுவல்களுடன் இணைந்து செயல்படுவது, பக்தியை கொச்சைப்படுத்துவதாகும்.

மனம் ஒரு புலனோடு இணையும் வேளையில், அதே அளவோடு அதே நேரம் இன்னொரு புலனோடும் இணையாது. மனம் ஒன்றுதான்; இரண்டு இல்லை. பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல் துலக்குவதில்லை. உடல் அழுக்கை அகற்றுவதற்காக எப்போதும் குளித்துக்கொண்டே இருப்பதில்லை.

அன்றாட அலுவல்களில் சிக்கித் தவிக்கும் இன்னாளில்... வழிபாட்டுக்கென குறிப்பிட்ட வேளையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு. தவிர, நீடித்த பணிவிடையைச் செவ்வனே செய்யவும் இயலும். ஆகையால், வியாழக்கிழமை அன்று அனுமனை வழிபடுங்கள்; அவருடைய அருள் கிடைக்கும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாங்கள் சாம வேதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். என் மகன் (வயது 28), பேசவும் நடக்கவும் முடியாத நிலையில் உள்ளதால், அவனுக்கு உபநயனம் செய்யவில்லை. இதனால் பாவம் ஏற்படுமா?

- ஆர்.சங்கரநாராயணன், சென்னை-2

வாய் பேச முடியாதவருக்கும், காது கேளாதவருக்கும் ஆச்சார்யர் மந்திரம் ஓதி, உபநயனம் செய்து வைக்கலாம் என்கிறது சாஸ்திரம்.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் பிறப்புரிமை இருப்பதால், சட்டத்தைத் தளர்த்தி, அவர்களுக்கும் உபநயனத்தை நடத்தி வைக்கப் பரிந்துரைக்கிறது சனாதனம். உரிய பரிகாரத்துடன் உபநயனத்தை நடத்தி வையுங்கள். தவிர, உபநயனம் அன்த்யேஷ்டியில் அவனுக்கு இடமளிக்கும். பேசாதவர்களும் கேட்காதவர்களும் கல்வி அறிவைப் பெறுவதுண்டல்லவா? ஒருவரது குறையைக் காரணம் காட்டி, அவருக்கான உரிமையை மறுப்பது தவறு. மாற்று வழியில் உரிமையை அளிப்பது சிறப்பு. காது கேளாதவன், பார்த்துத் தெரிந்துகொள்கிறான்; பேச இயலாதவன், சைகையில் தெரிந்துகொள்கிறான்; நடக்க முடியாதவன், தள்ளுவண்டியில் வளைய வருகிறான். அதுபோலவேதான் இதுவும். அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட, உபநயனம் போன்றவை உதவும்; தாழ்வு மனப்பான்மை அகன்று, தெளிவு பெறுவார்கள்.

தற்காலத்தில் சதாபிஷேகத்தின்போது தம்பதி பூஜை  நடைபெறுகிறது. இந்த வைபவம் முன்பெல்லாம் கிடை யாது. தர்மசாஸ்திரங்களில் தம்பதி பூஜை குறித்த சங்கல்பம் மற்றும் மந்திரங்கள் இல்லை என்று பெரியவர்கள் சிலர் கூறுகின்றனர். சதாபிஷேகத்தின்போது, தம்பதி பூஜை நடத்தலாமா?

- வி.லோகசுந்தரம், மதுரை-16

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரிஷி பஞ்சமி விரதத்தில் வசிஷ்டர்- அருந்ததி தம்பதி பூஜை உண்டு. உமா மஹேஸ்வர விரதம், சோமவார விரதம், பிரதோஷ விரதம் போன்ற வழிபாடு களிலும் பார்வதி- பரமேஸ்வர தம்பதி பூஜை உண்டு. க்ஷேத்திராடனம் மேற்கொள்பவர்கள் காசியிலும் ராமேஸ்வரத்திலும் தம்பதி பூஜை செய்வதுண்டு.

புராணங்கள் பரிந்துரைக்கும் விரதங்களும் தர்ம சாஸ்திரங்களில் அடங்கும். நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தீபாவளி ஆகியன தர்மசாஸ்திரத்துடன் இணைந்தவை. 14 வித்யைகளில், தர்மசாஸ்திரமும் புராணமும் அடங்கும் (புராணம் தர்மசாஸ்ரம் ச வித்யாஹி ஏதா: சதுர்தச) தர்மசாஸ்திரத்தின் வாசனையற்ற தலைமுறைகள் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் இன்னாளில், எல்லா முதியவர்களின் தகவல்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்காது. நாம் தான் அக்கறையுடன் தர்மசாஸ்திரத்தை அணுகிப் புரிந்துகொள்ள வேண்டும்.

மகா ருத்ரத்திலும், அதி ருத்ரத்திலும் தம்பதி பூஜை உண்டு. நீரிலும், நெருப்பிலும், வேதம் ஓதுபவர்களிடமும் உமா மகேஸ்வரரைக் குடியிருத்தி பூஜைகளை நடைமுறைப்படுத் திய பிறகு, நேரடியாக தம்பதியில் அவர்களை வரவழைத்து, பூஜித்து மகிழும் நிகழ்வே தம்பதி பூஜை. உமையவளையும் ஈசனையும் மனித வடிவில் பேசும் தெய்வமாகப் பார்க்கிறோம், அந்தத் தம்பதியில்! அவர்களில் உறைந்திருக்கும் ஈசன் தம்பதி, நம் பணிவிடையை ஏற்று வாயார, மந்திர ஒலி வழியாக அருள்புரிகிறார்கள். படிப்படியான பணிவிடையின் எல்லை அது. அதில் தனி மகிழ்ச்சி இருக்கும். அவர்களது வாழ்த்து பொருள் படைத்ததாகும்.

வேதம் ஓதுபவரிடம் வேதப் பொருளான பரம்பொருள் உறைந்திருப்பார். வேதம் படித்த தம்பதியை பூஜிப்பது சிறப்பு என்ற கோணத்தில் தம்பதி பூஜை எழுந்தது.

ஆவணி மாதம்- வளர்பிறை சதுர்த்தியில், கணபதியை விரதம் வாயிலாக வழிபடுவது உண்டு. அந்த விரதத்தில்... நீரிலும் நெருப்பிலும் வேதம் ஓதுபவர்களிலும் அவரை வரவழைத்துப் பணிவிடை செய்வதுண்டு. அதன் நிறைவாக வேதம் ஓதும் பிரம்மசாரியை வரவேற்று, அவரில் கணபதியை நினைத்து வழிபடுவதுண்டு. அதேபோல், அருந்ததி பூஜையிலும் சுமங்கலியிடம் அருந்ததியை வழிபடுவோம். நவராத்திரியில் 9 கன்யைகளை வழிபடுவோம். இப்படி, தகுதியுள்ள ஆணிலும் பெண்ணிலும், நேரடியாகத் தெய்வங்களை நினைத்து பூஜை செய்வதை சாஸ்திரம் ஏற்கும். சதாபிஷேகத்தில் மகிழ, நீண்ட ஆயுளைத் தந்த அந்தப் பரம்பொருளை, அந்தத் தம்பதியிடத்தில் கண்டு பூஜிப்பது பொருத்தமாகும். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், பிறகு கிடைக்காமலே போகலாம். தெளிவு பெற்றுச் செயல்படவேண்டும். சதாபிஷேகத்தில் தம்பதி பூஜை செய்ய வேண்டும் என்று தர்மசாஸ்திரம் வற்புறுத்தாது; எனினும், தம்பதி பூஜை செய்வதால், அதன் தரம் குறையாது.

தர்மசாஸ்திரத்துக்கு சம்மதமில்லாத நிச்சயதார்த்தத்தில் புதிய மணமக்களைத் தம்பதிகளாய் இணைப்பதையும், முகூர்த்தத் துக்கு முதல் நாளே அவர்களை தம்பதியாக வைத்து வரவேற்பு அளிப்பதையும் இன்றைய முதியோர்களில் பலர் ஒப்புக்கொள்வதையும் கவனிக்க வேண்டும். தீர விசாரிப்பதே மெய்!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள வில்வ மரக் கிளைகள் பக்கத்து வீட்டின் கொல்லைப்புறம் வரை நீண்டு வளர்ந்துள்ளன.  இதை, அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். எனவே, வில்வ மரத்தை அகற்றவேண்டிய சூழல். ஆனால், வில்வ விருட்சத்தை 'தேவ விருட்சம்’ என்பார்களே! எனவே, அதை வெட்டுவதற்கு மனம் ஒப்பவில்லை. என்ன செய்வது?

- வி.கிருஷ்ணமூர்த்தி, மதுரை-6

பிறருக்கு குந்தகம் வராதபடி முன்னெச்சரிக்கையுடன் வில்வ மரத்தை நட்டு வளர்க்கவேண்டும். மரங்கள், செடி- கொடிகளை வீட்டில் எப்படி நட்டு வளர்க்கவேண்டும் எனும் நடைமுறையைப் புராணம் சொல்லும். விருஷாயுர்வேதம் என்கிற நூல் அதை விளக்கும். தவிர, 'உபவன வினோதம்’ எனும் புராணப் பகுதி, தோட்டம் அமைக்கும் முறையைப் பரிந்துரைக்கும்.

பிறருக்கு குந்தகமாக இருக்கும் மரத்தை அகற்ற வேண்டும். 'அது தெய்வீக மரம்; வெட்டக் கூடாது’ என்கிற தங்களது நம்பிக்கை யைக் காரணம் காட்டக் கூடாது. தங்க ஊசி என்றால், கண்ணைக் குத்திக்கொள்ளலாமா? பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில், அதன் வளர்ச்சியை ஊகித்துச் செயல்பட்டிருக்க வேண்டும். தங்களால்

ஏற்பட்ட குறையைத் தாங்களேதான் களைய வேண்டும். மரத்தை அகற்றி விட்டு, பிறகு கடவுளை மனதாரப் பிரார்த்தித்து, போதுமான இடைவெளி விட்டு மரக்கன்று நடுங்கள்; நன்மை உண்டு.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தேவப் பிரச்னம் பார்ப்பது, கிரக பலன்களின் அடிப்படையிலா, அல்லது தெய்வ அனுக்கிரகத்தின்படி சொல்லப் படுவதா? இதுகுறித்து தர்மசாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளதா? தேவப் பிரச்னத்தின் மகிமையை அறிய ஆசை.

- கே.பரமேஸ்வரன், வள்ளியூர்

பலன் சொல்லும் பகுதியைச் சார்ந்த ஜோதிடத்தின் சிறப்புப் பிரிவு- 'ப்ரச்னம்’. கோயிலில் உறைந்திருக்கும் இறையுருவ ஆராதனையில், தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்த தவறுகளையும் நிறைவுகளையும் கண்டறியப் பயன்படும் 'தேவ ப்ரச்னம்’ என்பது, ஜாதகம் பார்த்துச் சொல்லும் பலன் அல்ல. இறையுருவத்துக்கு ஜாதகம் வராது. இறையுருவங்களுக்கு பூர்வஜென்ம கர்மவினை இல்லை. கடவுளிடம் நமது அணுகுமுறையில் ஏற்பட்ட தவறுகளின் தொகுப்பு, அதனால் விளைந்த சைதன்யத்தின் குறை ஆகியவையே தேவ ப்ரச்னத்தில் ஆராயப்படும். தர்மசாஸ்திரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பலன் சொல்ல கிரகங்களை பயன்படுத்தினாலும், விளக்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

நித்ய பூஜை, சிறப்பு பூஜை, உற்சவ கால பூஜைகள், பூசாரியின் நடைமுறை, அவரது நடத்தை, பூஜைப் பொருட்களின் குறை- நிறை, அறங்காவலர்களின் அணுகுமுறையில் தென்படும் விபரீதங் கள், இறையுருவத்தின் நிறைவு போன்ற விஷயங்கள் ஆராயப்படும். தவறுகளுக் குப் பரிகாரமும், மேம்படுத்த வேண்டிய வழிமுறைகளும் பரிந்துரைக்கப்படும். கேள்வி அறிவால் இதைக் கற்க இயலாது. ஆசிரியரிடம் பயின்று தெரிந்துகொள்ள வேண்டிய கல்வி அது. நல்ல ஜோதிட ஆசிரியரை அணுகுங்கள். அந்தக் கல்வி தங்களுக்கும் சமுதாயத்துக்கும் பயன்படும்.

நான், என் குடும்பத்தைப் பிரிந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில், என்னுடைய 3-வது மகள் மட்டும் தன் கணவன்- குழந்தைகளுடன் வந்து என்னை பார்த்து விட்டுச் சென்றாள். நாங்கள் மீண்டும் இணைவதென்றால், என்ன பரிகாரம் செய்து இணைய வேண்டும்?

- பொன்.குமாரி, சென்னை-23

மகளின் உறவு கல்யாணத்துக்குப் பிறகு சுருங்கி விட்டது; அவள், அவளுடைய கணவனின் குலத்துடன் இணைந்தவள் ஆகிறாள். எனினும், பிறப்பு என்கிற தொடர்பு இருப்பதால், அவளைச் சந்தித்த பிறகு, குலதெய்வத்தை வணங்கி, அவளைத் திரும்பவும் சேர்த்து, உறவைத் தொடரலாம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்