ருவருக்கு மகான்களின் தொடர்பும், அனுக்கிரஹமும் கிடைக்கவேண்டும் என்றால், அவர் நிச்சயம் பூர்வ புண்ணியம் செய்திருக்கவேண்டும். அப்படி இருந்தும், நானாசாஹேப் மூலமாக பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்ட தாத்யா சாஹேப் நூல்கர், தனக்கு ஒரு நல்ல பிராமண சமையல்காரரும், பாபாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க நாக்பூர் ஆரஞ்சுப் பழங்களும் கிடைத்தால், உடனே சென்று பாபாவை தரிசிக்கலாம் என்பதாக ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டார். அவர் இப்படி ஒரு பிரதிக்ஞை செய்துகொண்டதும்கூட பாபாவின் திருவுள்ளம் என்றே கூறலாம். 

தாத்யா பிரதிக்ஞை செய்துகொண்ட சிறிது காலத்துக்கெல்லாம், நானாசாஹேபிடம் வேலை கேட்டு ஒரு பிராமண சமையல்காரர் வந்தார். நானாசாஹேப் அவரை தாத்யாவிடம் அனுப்பி வைத்தார். அடுத்த சில நாள்களிலேயே தாத்யாவுக்கு பார்சலில் ஒரு கூடை நாக்பூர் ஆரஞ்சுகள் வந்து சேர்ந்தன. அவற்றை யார் அனுப்பியது என்று தெரியவில்லை. ஆனாலும், தன்னுடைய பிரதிக்ஞையின்படி பிராமண சமையல்காரரும், பாபாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க நாக்பூர் ஆரஞ்சுகளும் கிடைக்கவே, உடனடியாக ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்தார் தாத்யா. அது முதல் இறுதி வரை பாபாவைப் பிரியாமல் அவருடனேயே இருந்தார். தாத்யாவின் இறுதிக் காலத்தில், பாபாவின் உத்தரவின்படி அவருக்குப் புனித நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டதுடன், பருகுவதற்கு பாபாவின் பாத தீர்த்தமும் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீசாயி பிரசாதம் - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாத்யாவின் மரணம் பற்றி பாபாவுக்குச் சொல்லப்பட்டபோது, ''ஆம். தாத்யா நமக்கு முன்னால் சென்றுவிட்டான். இனி அவன் பிறக்கமாட்டான்'' என்றார் பாபா. பாபாவைப் போன்ற ஒரு சத்குருவின் தொடர்பு கிடைக்கப்பெற்ற எல்லோருக்குமே இப்படியான பூரண அனுக்கிரஹம் கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. அவரவருடைய மனப்பக்குவத்துக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுக்கும் ஏற்ப, படிப்படியாகத்தான் ஒருவர் மகான்களின் தொடர்பினால் பூரணத்துவத்தை அடையமுடியும்.

பாபா, 'எனக்குச் சொந்தமான மனிதன் எங்கிருந்தாலும், அவனை நான் என்னிடம் வரவழைத்துக் கொள்வேன்’ என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அப்படி அவர் நிகழ்த்திய ஓர் அருளாடல்தான், காகா சாஹேப் தீக்ஷிதரின் வாழ்க்கையில் நடந்தது.

காகா சாஹேப் தீக்ஷிதர் லண்டனில் பட்டமேற் படிப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, ஒருமுறை ரயிலில் இருந்து தவறி விழுந்துவிட்டார். அதனால் அவருடைய காலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், காலில் வலி குறைந்தபாடாக இல்லை. படிப்பை முடித்தபிறகு அவர் பம்பாய்க்குத் திரும்பி, பிரபல வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவர் பம்பாயில் இருந்தபோது, தன்னுடைய பால்ய நண்பரான நானாசாஹேபைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கால் வலியைப் பற்றிக் கூறினார். தாத்யாவிடம் சொன்னதுபோலவே, காகா சாஹேபிடமும் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசிக்குமாறு கூறினார் நானாசாஹேப். காகா சாஹேப் தீக்ஷிதரும் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அவர் பம்பாயில் பிரசித்தி பெற்ற வழக்கறிஞராக இருந்தபடியால், அவரால் உடனடியாக ஷீர்டிக்குச் செல்ல முடியவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு, அவர் தன்னுடைய வழக்கறிஞர் பணியின் காரணமாக அகமத் நகருக்குச் செல்ல நேரிட்டது. அகமத் நகரில் பணிகள் முடிந்ததும், காகா சாஹேப் ஷீர்டிக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளருக்கு அவரை யாருடன் ஷீர்டிக்கு அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால், பாபா அவரை ஷீர்டிக்கு அழைத்து அருள்புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டார்.

ஷீர்டியில், பாபாவின் அத்யந்த பக்தரான ஷாமா, அகமத் நகரில் இருந்த தன்னுடைய மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைக்கவே, தன் மனைவியுடன் அகமத் நகருக்குச் சென்றிருந்தார். ஷாமா அங்கு வந்திருப்பது பற்றிய தகவல், காகா சாஹேப் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளருக்குக் கிடைத்தது. உடனே அவர் ஷாமாவிடம் சென்று, காகா சாஹேபை ஷீர்டிக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்று கேட்டார். அந்த நேரத்தில் ஷாமாவின் மாமியாருக்கு உடல்நலம் தேறிவிடவே, ஷாமாவும் ஷீர்டிக்குப் புறப்படத் தயாராக இருந்தார். எனவே, தன்னுடன் காகா சாஹேபை அழைத்துச் செல்லச் சம்மதித்தார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 13

காகா சாஹேப், ஷாமாவுடன் ஷீர்டிக்குப் புறப்பட்ட நேரத்தில், அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர், காகா சாஹேபிடம் ஷீர்டி சாயிபாபாவின் படத்தைக் கொடுத்தார். அந்தப் படம் ஷீர்டியில் உள்ள மேகா என்பவருக்குச் சொந்தமானதாகும். அதன் கண்ணாடி உடைந்துவிடவே, சரிசெய்வதற்காக அகமத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், தம்மை தரிசிக்க விரும்பிய காகாவை, பாபா அவருடைய படத்தின் உருவில், அவரே ஷீர்டிக்கு அழைத்துச் செல்வதுபோல் இருந்தது.

ஷாமாவும் அவருடைய மனைவியும் காகா சாஹேபை அழைத்துக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினர். அதிசயமாக ரயில் குறிப்பிட்ட நேரத்துக்கே வந்து சேர்ந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தபடியால், அவர்களால் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறமுடியவில்லை. அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரி காகாவின் நண்பராக இருக்கவே, அவருடைய உதவியால், அவர்கள் மூவரும் முதல் வகுப்புப் பெட்டியில் வசதியாகப் பயணம் செய்து, கோபர்கானை அடைந்தனர். அவர்கள் அங்கே ரயிலில் இருந்து இறங்கவும், நானா சாஹேப் அங்கே வரவும் சரியாக இருந்தது. அனைவரும் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்தனர். பாபாவை தரிசித்த மாத்திரத்திலேயே தன்னுடைய கால் வலி முற்றிலும் குணம் அடைந்துவிட்டதையும், தன் மனம் முழுக்க சந்தோஷத்தால் நிறைந்திருப்பதையும் உணர்ந்து, பரவசம் அடைந்தார் காகா சாஹேப்.

பாபாவை தரிசிக்க வேண்டுமானால், பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படிப் பூர்வ புண்ணியத்தின் பயனாக ஒருவர் பாபாவை தரிசிக்க விரும்பிவிட்டால், அவரை எப்படியும் தம்மிடத்தே வரவழைத்துக் கொள்வார் பாபா.

ஸ்ரீசாயி பிரசாதம் - 13

லக்மீசந்த் என்பவர், பம்பாயில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார். அவர் பாபாவை தரிசித்தது 1910ம் ஆண்டில். அந்த ஆண்டு இறுதியில்தான் அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்தார். அதற்குமுன், அவருக்கு ஷீர்டியைப் பற்றிய சிந்தனையோ, பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணமோ சிறிதும் இல்லை. அவர் அப்போது பம்பாயின் புறநகர்ப் பகுதியான சான்டாகுரூஸ் பகுதியில் வசித்து வந்தார். ஒருநாள் இரவு, அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதி அற்புதமான கனவுக் காட்சி ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில், தாடியும் தலையில் முண்டாசுமாக மகான் ஒருவர் தோன்றினார். அவரைச் சுற்றிலும் நிறைய பக்தர்கள் காணப்பட்டனர். அந்த மகானின் முகத்தில் நிலவிய சாந்தமும், விழிகளில் கசிந்துருகிய கருணையும் லக்மீசந்த்தின் மனதில் விவரிக்க முடியாத ஆனந்த அனுபவத்தை ஏற்படுத்தியது.

அடுத்த சில நாள்களில், லக்மீசந்த் அவருடைய நண்பர் ஒருவரின் இல்லத்தில், தாஸ்கணு நிகழ்த்திய உபந்நியாசத்தைக் கேட்பதற்காகச் சென்றார். தாஸ்கணு எப்போதுமே தாம் உபந்நியாசம் செய்யும்போது, தனக்கு அருகில் ஸ்ரீசாயிநாதரின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்வது வழக்கம். அந்தப் படத்தைப் பார்த்ததுமே, அதில் இருக்கும் மகான்தான் தன்னுடைய கனவில் தோன்றியவர் என்பது லக்மீசந்துக்குப் புரிந்துவிட்டது. உடனே சென்று, தனக்கு அப்படி ஓர் ஆத்மானந்த அனுபவத்தை வழங்கிய அந்த மகானை தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார் அவர். ஆனாலும், தன்னை ஷீர்டிக்கு அழைத்துச் செல்லக்கூடிய நண்பரை தான் எப்போது சந்திக்கமுடியும் என்ற யோசனையும், ஷீர்டிக்குச் செல்லத் தேவையான பணத்துக்கு என்ன செய்வது என்ற கவலையும் தோன்றி, செய்வதறியாமல் குழம்பினார். உபந்நியாசம் முடிந்ததும் வீட்டுக்கு வந்த லக்மீசந்த் படுக்கச் செல்லும் நேரத்தில், அவருடைய வீட்டுக் கதவை யாரோ தட்டி, அழைக்கும் குரல் கேட்டது.

லக்மீசந்த் எழுந்து சென்று, கதவைத் திறந்து பார்த்தார்.

அங்கே...

 - பிரசாதம் பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism