Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம் - 14

பத்து முட்டாள்கள் !பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

'ஒன்றைக் கொண்டு மற்றொன்றை நீக்கி விட்டு, அந்த ஒன்றையும் தூக்கிப் போட்டு விடுவார்கள்’ என்று பல உதாரணங்களைக் காட்டி, குருநாதர் தந்த விளக்கங்களைச் சென்ற இதழில் பார்த்தோம். இனி, அடுத்த விளக்கத்தைக் காண்போம். 

'தம்பமாய் அதுவும் கூடச்

சவம்சுடு தடி போல் போமே’ என்றார் குருநாதர்.

சுடுகாட்டில் உயிரற்ற உடல்களை எரிக்கும்போது, கையில் ஒரு தடியை வைத்துக்கொண்டு காரியம் பார்ப்பார்கள். எரியும்போது கட்டைகளைத் தள்ள, சில நேரம் பிணம் விறைத்துக் கொண்டு நிமிர்ந்தால், அதை அடித்துப் படுக்க வைக்க என்றெல்லாம், அந்தத் தடி உபயோகமாகும். வேலை முடிந்தவுடன், அந்தத் தடியையும் தூக்கித் தீயில் போட்டுவிடுவார்கள். அது போல... சுத்த மாயையைக் கொண்டு அசுத்த மாயையை நீக்கிவிட்டு, அந்த சுத்த மாயையையும் விலக்கிவிடுவார்கள்.

இதை வாரியார் ஸ்வாமிகள் மிக எளிமையாகச் சொல்லுவார்: ''நடந்து போகும்போது காலில் ஒரு முள் குத்திவிட்டது. காலில் குத்திய முள்ளை வேறொரு முள்ளால் எடுத்துவிட்டு, பிறகு இரண்டு முட்களையும் தூக்கிப் போட்டுவிடுவோம். காலில் குத்திய முள் அசுத்த மாயை; அதை நீக்க உபயோகப்பட்ட முள் சுத்த மாயை.'' இந்த இருவிதமான மாயைகளால், ஏழு விதமான நிலைகள் உண்டாகின்றன என்ற குருநாதர், அந்த ஏழு நிலைகளையும் விளக்குவதற்கு ஒரு கதை கூறுகிறார்.

இது நினக்கு அறியும் வண்ணம்

இப்படி ஒரு திட்டாந்தம்

புதுமையாம் கதை கேள் பத்துப்

புருடர் ஓர் ஆற்றை நீந்தி

உதக தீரத்தில் ஏறி

ஒருவன் ஒன்பது பேர் எண்ணி

அதனொரு தசமன் தான் என்று

அறியாமல் மயங்கி நின்றான் (தத்துவ விளக்கப்படலம் 54)

சில வரிகளிலேயே ஒரு கதையை எவ்வளவு அற்புதமாய் குருநாதர் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? இந்தக் கதை 50 ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.

மனிதனும் தெய்வமாகலாம் - 14

ஓர் ஊரில் பத்து முட்டாள்கள் இருந்தார்கள். ஒருநாள், அவர்கள் நதியைத் தாண்டி கரையேறினார்கள். பிறகு அனைவரும் பத்திரமாகக் கரையேறி விட்டோமா என்று கணக்கிட்டுச் சோதனை செய்தார்கள். ஒருவனைக் காணாமே என்று கலங்கினார்கள். ஒருவன் எண்ணி முடித்ததும், அடுத்தவன் எண்ணினான். அப்போதும் ஒன்பதுபேரே இருந்தார்கள். எப்படி? ஒவ்வொருவனும் எண்ணும்போது, தன்னைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதுதான் காரணம்!

இப்படிக் கணக்கிட்டுவிட்டு, 'பத்தாவது ஆள் இல்லை, காணோம்' என்று ஒவ்வொருவரும் அழுதார்கள். அப்போது, அந்தப் பக்கமாக வந்த ஒரு புண்ணியவான், இவர்கள் கலக்கத்தை அறிந்து, ''ஒன்பது பேரேக் கணக்கிட்ட நீதான் பத்தாவது ஆள்' என்று சொல்லித் தெளிவுபடுத்தினார். முட்டாள்களுக்கு உண்மை புரிந்தது. அழுகை நின்றது. சந்தேகம் தீர்ந்துபோய், மனதில் நிலையான ஆனந்தம் குடிகொண்டது.

இனிமேல் இது கதையல்ல. கைவல்லிய நவநீதத்தில் இக்கதையை, குருநாதர் ஏதோ பொழுது போவதற்காகச் சொல்லவில்லை.

இக் கதையின் மூலம் ஏழு விதமான நிலைகளை சீடனுக்கு விவரிக்கிறார் குருநாதர்.

கதையில்...

1. தன்னைத் தெரியாத நிலையே அஞ்ஞானம்.

2. அந்தப் பத்தாவது ஆளைக் காணோம் என்பது மறைப்பு.

3. பத்தாவது ஆளைக் காணோம் என்று அழுவது கலக்கம்.

4. வழிப்போக்கனின் சொல்லைக் கேட்டு உண்மை உணர்ந்தது  பரோட்சம்.

5. (காணாமல் போன) பத்தாவது ஆளாகத் தன்னைக் கண்டது  அபரோட்ச ஞானம்.

6. அழுகை நின்றது  துயர நீக்கம்.

7. சந்தேகம் நீங்கியது  தடையற்ற ஆனந்தம்.

இத்தகவல்களைச் சொல்லும் பாடல்...

     அறியாத மயல் அஞ்ஞானம்

அவன் இ(ல்)லை காணோம் என்றல்

பிரிய ஆவரண மாகும்

பீடை கொண்டு அழல் விட்சேபம்

நெறியாளன் தசமன் உண்டு

நிற்கின்றான் என்ற சொல்லைக்

குறியாக எண்ணி நோக்கிக்

கொள்வது பரோட்ச ஞானம்

புண்ணிய பதிகள் பின்னும்

புருடர் ஒன்பதின்மர் தம்மை

எண்ணிய நீ பத்து ஆவான்

என்னவே தன்னைக் காணல்

கண்ணினில் கண்ட ஞானம்

கரைதல் போவது நோய் போதல்

திண்ணிய மனதில் ஐயம்

தெளிதல் ஆனந்தமாமே

(கைவல்லிய நவநீதம் 5556)

குருநாதர் சீடனுக்குச் சொன்ன இந்த ஏழிலும், முதல் நிலையிலேயே  நழுவிவிடுவோம்.

அது எப்படி என்றால், சற்று லௌகிகமாகப் பார்க்கலாம். வாருங்கள், கலைவாணரிடம் போவோம். அவர் சொல்கிறார்...

தொடரும்