Published:Updated:

`இது கர்ப்பக்கிரகம் !'

மஹா பெரியவா வாக்கு...ரெ.சு.வெங்கடேஷ்

க்தி விகடனில் கடந்த சில இதழ்களாக வந்துகொண்டிருந்த, 'குலம் காக்கும் கோமாதா’ தொடரைப் படித்து வந்த அன்பர்கள் கடிதங்களின் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்திருந்தனர்.

 அப்படி நமக்குக் கிடைத்த கடிதம் ஒன்றில், 'பசுவின் மேன்மையையும், பல ஊர்களில் உள்ள கோசாலைகளைப் பற்றியும் எழுதி இருந்தீர்கள்.

ஆனால், சென்னை, மாம்பலம் பகுதியில் உள்ள கோசாலையைப் பற்றி எப்படி எழுதாமல் விட்டீர்கள் என்று ஆச்சர்யமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது' என்று ஒரு வாசகர் தன் கருத்தைப் பதிவு செய்திருந் தார். உடனே, அவர் குறிப்பிட்டிருந்த அந்தக் கோசாலைக்குச் சென்று பார்த்தபோது, எப்படி இந்தக் கோசாலையை தவறவிட்டோம் என்று சற்று திகைத்துத்தான் போனோம். காரணம், அந்தக் கோசாலை ஏற்பட அனுக்கிரஹம் செய்தவர், நடமாடும் தெய்வம் என மக்களால் போற்றி வணங்கப்பெற்ற காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்!  

`இது கர்ப்பக்கிரகம் !'

காஞ்சி சங்கரமடத்தின் கீழ் இயங்கும் கோ சம்ரக்ஷண சாலை என்னும் அந்தக் கோசாலையின் வரலாற்றைப் பற்றி, கோசாலையை நிர்வகித்து வரும் சந்திசேகரேந்திர சரஸ்வதி டிரஸ்ட்டின் டிரஸ்டியான 'விநாயகர்' முரளியிடம் கேட்டோம்.  '1962ம் ஆண்டு, மகா பெரியவா சென்னைக்கு  வந்திருந்தார். அப்போது,

கோசாலை அமைந்திருக்கும் இந்த இடத்துக்கும் வந்து தங்கி, ஜபம் செய்துவிட்டுச் சென்றார். அன்றைக்கு இந்த இடம் காடு போலத்தான் இருந்தது. எனவே, பெரியவா தங்குவதற்காக வேறு வசதியான இடம் ஒதுக்கிக் கொடுக்கப் பலர் முன்வந்தார்கள். ஆனாலும், பெரியவா இந்த இடத்தில் தங்கவே விருப்பப் பட்டார். அதற்கான காரணம், பல ஆண்டுகளுக்குப் பின்னரே தெரியவந்தது. அக்காலகட்டத்தில் எல்லா வீடுகளிலும் மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. கறவை நின்றபிறகும் பசுவைப் பாதுகாத்துப் போற்றினர். ஆனால், காலப் போக் கில் அந்த வழக்கம் மறையத் தொடங்கியது. கறவை நின்றுபோன பசுக்களைப் பராமரிக்க எவரும் விரும்பவில்லை. அப்படியான பசுக்கள் அழியும் சூழல்.

இதைத் தம்முடைய ஞானதிருஷ்டியினால் முன்கூட்டியே உணர்ந்துகொண்ட மஹா ஸ்வாமிகள், இந்த இடத்தை வாங்கி, இங்கே ஒரு கோசாலை அமைக்குமாறு கூறினார். தமிழகத்தின் அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், காந்தியவாதியும் தமிழகத்தின் அப்போதைய கவர்னருமான பிரபுதாஸ் பட்வாரி மற்றும் பக்தர்கள் பலரின் முயற்சியால் 1978ம் ஆண்டு, மாட்டுப் பொங்கலன்று பெரியவா கொடுத்த நான்கு பசுமாடுகளோடு இந்தக் கோசாலை தொடங்கப்பட்டது. பெரியவர் திருவடிகள் பதிந்த இடம் தெய்விகத் தன்மை பெற்றுவிடும் என்பதற்கு ஆதர்சமாகத் திகழ்கின்றது இந்தக் கோசாலை'' என்றார் விநாயகர் முரளி.

தொடர்ந்து 38 ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வரும் இந்தக் கோசாலையில் சுமார் 100 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 80க்கும் மேற்பட்டவை நாட்டு மாடுகள். வயதான, ஆதரவற்ற, காயம் பட்ட மாடுகளும் இங்கே முறையாக பராமரிக்கப்படுகின்றன. இங்கே போதிய இடம் இல்லாத காரணத்தால், கலவை அருகேயுள்ள சூரையூர், காஞ்சி அருகே ஐயங்கார்குளம், மாம்பாக்கம் என மூன்று இடங்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 100 மாடுகள் வீதம் பராமரித்து வருகிறார்கள். நல்ல கொட்டகை வசதியோடு, மாடுகளுக்குச் சத்தான ஆகாரமும், முறையான மருத்துவ உதவியும் வழங்கப்படுகின்றன. இந்தக்

கோசாலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இதுவரை 40 கோசாலைகள் உருவாகியுள்ளன. இவை அனைத்தும் இந்தக் கோசாலையிலிருந்து கொடுக்கப்பட்ட பசுக்களைக் கொண்டுதான் தொடங்கப்பட்டுள்ளன. பல ஆலயங்களில்கூட இங்கிருந்து கொடுக்கப்பட்ட பசுக்கள்தான் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  

`இது கர்ப்பக்கிரகம் !'

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இங்கு நடக்கும் கோபூஜை மிக விசேஷமானது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் எனச் சுமார் 300 முதல் 500 பேர் வரை இந்த பூஜையில் கலந்துகொள்கின்றனர். பக்தர்கள், தாங்களே பசுக்களை பூஜிப்பது, சிறப்பம்சம். கோபூஜை முடிந்த பிறகு, கூட்டு வழிபாடு ஆரம்பமாகிறது. ஆதிசங்கரர் மற்றும் பரமாசார்யர் படங்களுக்கு முன் ஒரு கலசம் வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் தர்மத்துக்கு உட்பட்ட வேண்டுதல்களை ஒரு சிறிய தாளில் எழுதி உள்ளே போடுகின்றனர். கூட்டு வழிபாட்டின்போது, அந்தக் கலசத்தில் உள்ள பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேற, எல்லோரும் பிரார்த்திக்கின்றனர்.

இந்தக் கோசாலைக்கென்று ஆறு கொள்கைகள் உண்டு. உலக அமைதி நிலைத்திருக்க, பாரத தேசமும் பாரத தர்மமும் வலிமையாக இருக்க வேண்டும்; நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்களின் வெற்றியும், அவர்களின் குடும்ப நன்மையும்; விவசாயிகளின் நலனும், இயற்கை விவசாயத்தின் வளர்ச்சியும்; கோ சம்ரக்ஷணம்; தர்மநியாயத்துக்கு உட்பட்டு கலசத்தில் உள்ள வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும்; இன்றைக்குப் போலவே என்றைக்கும் இந்தக் கோசாலை சிறப்பாக இயங்கவேண்டும். இவையே அந்த ஆறு கொள்கைகள். இவற்றை இங்கு வரும் பக்தர்கள் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டதும், கூட்டு வழிபாடு நிறைவுபெறுகிறது.

மாதந்தோறும் மகா பெரியவாளின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தன்று ஆவஹந்தி ஹோமமும், சுமார் 400 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை நாளிலும் முன்னோர் தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொள்கின்றனர். தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் 5000 பேர் வரை இங்கு வந்து

தர்ப்பணம் மற்றும் பரிகாரங்கள் செய்கிறார்கள். சாதி, பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தர்ப்பணம் செய்ய இங்கே இடமளிக்கப்படுகிறது.

ஞாயிறுதோறும் காயத்ரி ஹோமமும், இஸ்கான் அமைப்பினரின் பஜனையும் நடை பெறுகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், பசு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, அவற்றின் மகத்துவங்கள் குறித்து அறியும் பொருட்டு இங்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

''1984ம் ஆண்டு, ஒரு பெரிய நிறுவனம் மஹா ஸ்வாமிகளிடம், இப்போது கோசாலை இருக்கும் இடத்தில் பெரிய மண்டபம் கட்டித் தருவதாகவும், 10 மாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளுமாறும் கூறிற்று. உடனே மகாபெரியவா, 'கர்ப்பகிருஹத்தின் மேல் யாராவது கட்டடம் கட்டுவாங்களா?’ என்று சொல்லி, மறுத்துவிட்டார். இந்த விஷயத்தை மஹா ஸ்வாமிகளே ஒரு நிகழ்ச்சியின்போது

குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். கோசாலை என்பது கடவுள் வாசம் செய்யும் கர்ப்பக் கிரகம். அதன் புனிதத் தன்மை கெடாமல் பார்த்துக்கொள்வதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம். எந்த ஒரு சேவைக்கும், கோ சாலைக்கென்று பணம் வசூலிப்பது இல்லை. பசுக்களிடம் கிடைக்கும் பாலை மூன்று கோயில்களுக்கும், வேத பாடசாலைக்கும், ஆதரவற்றோர் இல்லத்துக்கும் இலவசமாகக் கொடுத்துவிடுகிறோம். ஞாயிறுதோறும் பஞ்சகவ்யம் இலவசமாகத் தருகிறோம். சுத்தமான பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்படும் விபூதியை (50 கிராம்) 10 ரூபாய்க்குத் தருகிறோம். வறட்டி 3 ரூபாய்க்குத் தருகிறோம். இதில் வசூலாகும் பணத்தையும்கூட இங்கே வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுத்துவிடுவோம்.

ஆக, கோசாலைக்கென்று எந்த வித வருமானமும் இல்லை. அதற்கும் பெரியவா சொன்ன ஒரு வார்த்தைதான் காரணம். 'யாருகிட்டேயும் காசு கேக்காதே; அதுவா வரும்’ என்று அவர் சொன்ன வார்த்தைதான் இன்னும் இந்தக் கோசாலையை இயங்க வைக் கின்றது. அன்பர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு, நல்ல முறையில் பசுக்களைப் பராமரித்து வருகிறோம். இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இது நல்ல முறையில் இயங்க வேண்டும் என்பது ஒன்றே இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரது ஆசையும்!' என்றார் விநாயகர் முரளி.

தேசப் பிதா காந்தியடிகள், மகா பெரியவா மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ஒருமுறை, பாலக் காட்டில் பெரியவரைச் சந்தித்த காந்தி, உணவு உண்ணாமல் மணிக்கணக்கில் பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தாராம். தனக்கு உணவு வழங்க வந்தவர்களிடம், 'எனக்கெதற்கு உணவு? பெரியவரிடம் பேசியதே இன்றைக்கு எனக்கு உணவு!’ என்றாராம்

பெரியவர், காந்தியடிகள் இருவருமே பசுக்களின் நலனை விரும்புபவர்கள். ஒவ்வொரு வருடமும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு முன், பசுப் பாதுகாப்பு மாநாடு நடத்துவாராம் காந்தி. மஹா ஸ்வாமிகள் ஒருபுறம், தேசப்பிதா மறுபுறம் என இரு பெரும் மகான்களும் கோ சம்ரக்ஷணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள் என்றால், பசுப் பாதுகாப்பு என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் உணர வேண்டும். உணர்வதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற கோசாலைகள் உருவாகவும், ஏற்கெனவே இருக்கும் கோசாலைகளைப் பேணிக் காக்கவும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது அவசியம்!

படங்கள்: இரா.யோகேஷ்வரன்

அடுத்த கட்டுரைக்கு