மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

'இன்றைய நவநாகரிக சமுதாயத்தில் உடல் அலங்காரத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உள்ளத்தை மேம்படுத்துவதில் இல்லையே?’ என்று குறைப்பட்டுக் கொண்டார் என் நண்பர் ஒருவர். 

'ஆள் பாதி, ஆடை பாதி என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? புறத்தோற்றமும் இன்றைக்கு அவசியம். அலங்காரம் அழகுக்காக மட்டுமின்றி, பணியின் நிமித்தம் என்றாகிவிட்டது. அதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார் மற்றொருவர். நீங்கள் சொல்லுங்கள்... அழகுபடுத்தவேண்டியதும், ஆராதிக்க வேண்டியதும் உடலா, உள்ளமா?

கே.பரமசிவன், கும்பகோணம்

முதல் கோணம்

உடல் தூய்மையைப் பராமரிப்பதில் கவனமாக இருப்போம்.  நீராடி உடல் மாசுக்களை அகற்றுவோம். நறுமணப் பொருள்களை  உடம்பில் சேர்த்து, மணக்கச் செய்வோம். சிகை அலங்காரம், மீசை, தாடி ஆகியவற்றை காலத்துக்கு உகந்த முறையில் அழகு படுத்துவோம். நறுமணம் நீடித்திருக்க புதுப்புது அழகு சாதனங் களைப் பயன்படுத்துவோம்.

தோற்றப் பொலிவு மங்காமல் இருக்க, அடிக்கடி கைக்குட்டை யைப் பயன்படுத்தி, வியர்வையைத் துடைத்துக்கொள்வோம். சுற்றுச்சூழலின் பாதிப்பைத் தவிர்க்க அடுக்கடுக்கான ஆடைகளை அணிவோம். நடக்கத் தோதான, பார்வைக்கு அழகான காலணி களை ஏற்றுப் பராமரிப்போம். சிகை அலங்காரம் கலையாமல் இருக்க, பையில் இருக்கும் சீப்பை அடிக்கடி எடுத்துத் தலைவாரி சரிசெய்துகொள்வோம். வியர்வையால் நனைந்துவிட்டாலோ, அல்லது கடும் வேலையின் காரணமாக ஆடைகள் கலைந்திருந்தாலோ, உடனடியாக மாற்று உடையை ஏற்போம்.

ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?

? இதெல்லாம் அவசியத் தேவைகள். வீண் அலங்காரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பொறுங்கள்... பட்டியல் இன்னும் முடியவில்லை!

முகம் பார்க்கும் கண்ணாடி தென்பட்டால், உடல் அழகு, முக அழகு, சிகை அலங்காரம் கலையாமல் இருக்கிறதா என்று கவனிப்போம். அலங்காரத்துக்கென்றே தனி அறையை ஒதுக்குவோம் (டிரஸ்ஸிங் ரூம்). உள்ளாடைகள், பேன்ட்ஷர்ட், அதற்கும் மேலாக கோட், கழுத்தில் டை, தலையில் சூழலுக்கு ஏற்ற தொப்பி, காலில் ஷூ ஆகிய அத்தனையையும் ஏற்று, இயற்கையான காற்று, தட்பவெப்பம் ஆகியன உடம்பைத் தொடாமல் பார்த்துக்கொள்வோம். அதுமட்டுமா? தூய்மையைப் பராமரிக்கும் உத்தேசத்தில் வீட்டில் உபயோகிக்க, வெளியிடங்களுக்குச் செல்லும்போது உபயோகிக்க என வெவ்வேறு காலணிகளைப் பயன்படுத்துவோம். இப்படி, புலன்கள் விரும்பும் பொருள்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்தி புலன்களின் வேட்கையைத் தணிப்போம்.

தரையில் உட்கார்ந்து உணவருந்தினால் ஆடை அலங்காரம் கலைந்துவிடும். நாற்காலி யில் உட்கார்ந்து, மேஜை மீது வைத்து உணவருந் தினாலும், கை பாகத்திலும் இடுப்பு பாகத்திலும் உடை அலங்காரம் அலங்கோலமாகிவிடும். எனவே, இடது கையில் உணவுத் தட்டை ஏந்திய படி நின்றுகொண்டே உணவருந்துவோம். கையை தண்ணீரில் அலம்பினால், முழுக்கைச் சட்டை நனைந்துவிடுமே! எனவே, காகிதத்தால் (டிஷ்யூ பேப்பர்) சுத்தம் செய்துகொள்பவர்களும் உண்டு. கடைகளில் புத்தாடை வாங்கும்போது உடுத்தி அழகுபார்த்துவிட்டே வாங்குவோம். கடைகளில் அதற்காகவே தனி அறைகள் இருக்கும்.

? சரிதான்! உரிய பதில் தருவீர்கள் என்று பார்த்தால், எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே?

பட்டியலை கவனித்தீர்கள் என்றால், ஒரு விஷயம் நன்கு புலப்படும். இப்படி, உடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தோற்றப்பொலிவு மூலம் சிந்தனையிலும் வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்தவராக நம்மைச் சமுதாயத்துக்கு அறிமுகம் செய்துகொள் கிறோம்; அவ்வளவே!

ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?

விலங்கினங்களில் பெண்மையைவிட ஆண்மை அழகாக இருக்கும். மனித இனத்தில் எதிர்மாறாக பெண்மை இயற்கை அழகுடன் மிளிரும். ஆண்மை செயற்கை அழகில்தான் மிளிர வேண்டும். பெண்மையும் இயற்கை அழகை இரட்டிப்பாக்க பலவிதமான அழகு சாதனங்களைப் பயன்படுத்தும். சிகை அலங்காரத்திலும், ஆடைஅணிகலன்களை ஏற்பதிலும் ஆர்வம் அதிகமிருக்கும். அழகை இரட்டிப்பாக வெளியிடும் எந்த அலங்காரத்தையும் ஏற்பார்கள். காலணிகளிலும் அவர்களுக்கு ஏற்ற தனிவகைகள் உண்டு. முகத்தழகை வெளிப்படுத்துவதில் தனிக் கவனம் இருக்கும். சூழலுக்கு உகந்தவாறு நெற்றித் திலகம்

தென்படும். கலையுணர்வுடன் பாம்பு, பல்லி போன்ற உருவங்கள் நெற்றியில் பளிச்சிடும். காதணிகளும் காலத்துக்கு உகந்தவகையில் அமைந்திருக்கும். அவர்களது கைக்குட்டைகள் மென்மையாகவும், தொடுபுலனுக்கு இதமாகவும் அமைந்திருக்கும். சிலர், சிகையலங்கார விடுதிக்குச் சென்று, அலங்காரம் நீண்ட நேரம் கலையாமல் இருப்பதற்கான வழிவகை செய்து வருவார்கள்.இப்படி, உடலழகைப் பராமரிப்பதில் பெண்மையும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும்.

? அலங்காரத்தில் சிறந்தவர்கள் பெண்களா, ஆண்களா என்பதல்ல பிரச்னை! உடலை ஆராதிப்பதும், அலங்கரிப்பதும் சரியா, தவறா என்பதுதான் எங்கள் கேள்வி.

இப்படியெல்லாம் உடல் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இருபாலரும் அகத்தோற்றத்துக்கு, அதாவது மனதை அழகுபடுத்த முயற்சி செய்வது இல்லையே என்பதை விளக்கவே மேற்கண்ட பட்டியல்.

உடலுக்குள் ஒரு மனம் உண்டு; அதைத் தூய்மைப்படுத்த வேண்டுமே என்ற எண்ணம் பலருக்கு வருவது இல்லை. இன்னும் சிலர், அதில் சுணக்கமுற்றுவிடுகிறார்கள். உள்ளத் தூய்மையில்தான் அவர்களது வாழ்வு செழிக்கும். பிறக்கும்போதே மனதில் கர்மவினையின் மாசு படர்ந்திருக்கும். அதோடு மனம் புலன்கள் வாயிலாக வெளிவந்து, ஆசையில் கட்டுண்டு, வெளியே இருக்கும் ஆடம்பரப் பொருள்களில் ஈர்ப்பு ஏற்பட்டு, அதை அடைய செயல்புலன்களுக்கு உத்தரவிடும். கிடைக்காத  விரக்தியில் கோபம், குரோதம், காழ்ப்பு உணர்ச்சி, பகை, பொறாமை போன்றவை மனதில் நிரம்பி, மாசு படிந்துவிடும். அந்த மாசை அகற்றாத வரையிலும், மதிமயங்கிப்போகும் மனம், உடலை நேரான முறையில் வழிநடத்தாது. உடல் வளமாக இருந்தால் மட்டுமே அலங்காரப் பணி வெற்றி பெறும். உடலின் தவறான செயல்பாட்டால் பிணியைச் சந்தித்து, மருந்துக்கு அடிமையாகி, அலங்காரப்பணியே கசந்துவிடும்.

? சரி, மனதை எப்படிச் செம்மைப்படுத்துவதாம்?

மனதை இயக்கும் ஆன்மாவை (கடவுளை) நினைத்தால், தூசு அகன்றுவிடும். தெளிவுபெற்ற மனம்

ஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா?

பொறுப்போடு உத்தரவு போட்டு, உடலை வலுவாக வைக்கும். மனம் தெளிவுபெற கடவுள் பெயர்கள்தான் பயன்படும். கண்ணுக்குத் தெரியாத மனதில், கண்ணுக்குப் புலப்படாது ஆன்ம வடிவில் குடிகொண்டிருக்கும் கடவுளை அசைபோடும்போது, சிறுகச்சிறுக மாசுக்கள் அகன்று தெளிவுபெறும். கிருஷ்ணா, ராமா, கோவிந்தா, கோபாலா என்று மனதில் அசைபோட்டால் போதும்; மனம் தெளிவு பெறும். இன்பத்தை உணரும் தகுதிபெறும்.

அதில் ஈடுபட மறுத்தால், சீர்திருத்தவாதியின் வலையில் சிக்கி துயரத்தில் ஆழ்ந்துவிட நேரிடும். இன்றைய சீர்திருத்தவாதிகளில் சிலர் சுயநலத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் மனதில் அடித்தளத்தில் ஊன்றியிருக்கும் 'சுயநலம்’, பொதுமக்களின் உள்ளத்தை உயர்த்தும் எண்ணத்தை அவர்களிடம் தலை தூக்காமல் செய்துவிடும். நம்பிக்கைக்கு உகந்த உடலோடும் மனதோடும் இணைந்த உருவமற்ற ஆன்மாவை நினைத்து உரத்த குரலில் காலையிலும் மாலையிலும் கடவுள் பெயரை உச்சரித் தால், அன்றாடம் மாசு அகன்று, வாழ்க்கையின் அடித்தளம் அசையாமல் இருக்கும். அப்போது நாம் செய்யும் உடல் அலங் காரமும் சிறப்புப் பெறும்.

இரண்டாவது  கோணம்

காலத்துக்குப் பொருந்தாத சிந்தனை அரங்கேறாது. பண்டைய நாளில் அழகு சாதனங்களும் இல்லை; அழகுபடுத்திக்கொள்ளும் எண்ணமும் இல்லை. விஞ்ஞானத்தின் வெளிப்பாடான அழகு சாதனங்களை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, அவற்றை ரசிக்கும் மனப்பாங்கும் இருக்காது. ஆக, வளர்ந்த நாகரிகத்தைப் பார்த்துப் பொறாமையில் குறைகூறும் போக்கு உள்நோக்கம் உடையது.

அழகை ரசிக்கத் தெரிந்தவன் ஆடவன். அழகின் ஆற்றலை அறிந்தவள் பெண். கேசம் (தலைமுடி) இருப்பவளால்தான் அலங்காரம் செய்துகொள்ள இயலும். இயற்கை வளங்களை ரசிக்கவும், ருசிக்கவும், மகிழவும் தெரிந்தால் மட்டுமே, உடல் உறுப்புகளும் உள்ளமும் சிறப்புறும். கண்ணுக்குப் புலப்படும் உடலையும் இன்பத்தை உணரும் புலன்களையும் ஒதுக்கிவிட்டு, கண்ணுக்குப் புலப்படாத ஒன்றைச் சுட்டிக்காட்டி (கடவுள்), அதுதான் வாழ்க்கை ஆதாரம் என்று ஓலமிடுவதை மனம் ஒப்பவில்லை.

? ரசிப்பதிலும் அழகுபடுத்துவதிலும் தவறேதும் இல்லை. ஆனால் எதை ரசிப்பது, எது அழகு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

உடல் பராமரிப்பினால்தான் அத்தனை இன்பங்களையும் சுவைக்க முடிகிறது. உடல் தோற்றத்தின் மூலமாகவே எதிர்பாலினங் களிடம் ஒன்றுக்கொன்று ஈர்ப்பு ஏற்படுகிறது; இணைப்பில் இன்பத்தின் சுவை மகிழ்ச்சியளிக்கிறது. எந்தவொரு பொருளாக இருந்தாலும், அதில் தென்படும் அழகு மற்றவர்களை ஈர்த்துவிடும். அதிலிருக்கும் சுவையும் புலனை திருப்திப்படுத்திவிடும்.

ஆள் பாதி, ஆடை பாதி! அலைமகளை சடையன் ஈசனுக்கு அளிக்கவில்லை. பீதாம்பரதாரியான அழகன் மந் நாராயண னுக்கு அளித்தார், அவள் தகப்பன். நேர்காணலில் வெற்றி பெறுவதில், ஆடை அலங்காரத்துக்கும் பங்கு உண்டு. எவ்வளவு அழகு இருந்தாலும், பெண்மையானது வெளி அழகின் சேர்க்கை யால், மேலும் மெருகேறி, ஏற்கவைக்கும். அலங்காரத்தில்தான் திருமணம் சிறக்கும். எனவே, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மற்றவர்களை ஈர்க்க உடல் பராமரிப்பும், உடல் அழகைப் பேணுவதும் தேவை என்பதை நடைமுறையில் தெரிந்துகொண்ட பிறகு, தெரியாத ஒன்றைச் சுட்டிக் காட்டி திசைதிருப்புவது வீண் வேலை.

? திசைதிருப்பும் வேலை என்று எதைச் சொல்கிறீர்கள்?

'அழகு’ சொல்லால் விளக்க இயலாத ஒரு தத்துவம். அது ஆராதனைக்கு உரியது. அதன் மூலம் உடல் உறுப்புகளும் உள்ளமும் மகிழும். அதுவே பேரின்பம்; அதுவே கடவுள் எனச் சொல்ல வருகிறோம்.

நாம் கடவுளையும் அழகுபடுத்தும் பணியில் இறங்குவோம். லிங்க வடிவில் தோன்றியவனை சுந்தரேஸ்வரன் என்போம். ஆறு முகனை அழகு முருகன் என்போம். நரசிம்மத்தை சிங்கபெருமாள் என்போம். அப்படியான அழகைப் பார்த்து ரசிக்கவும், சுவைக்கவும், அதற்கு ஆதாரமான உடலைப் பராமரிப்பது அவசியம். உடல் வீழ்ந்தால் எல்லாம் வீணாகிவிடும். அது இருக்கும் வரையில்தான் அழகுபடுத்த முடியும், ரசிக்க முடியும், இன்பத்தை உணரமுடியும். உடலோடு ஆன்மாவும் மறைந்துவிடும்.

இயற்கை அழகுப் பொருள்களை அள்ளி அளித்து, அவற்றை ரசித்துச் சுவைக்க மனிதர்களையும் படைத்துவைத்திருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். வாழ்ந்து மகிழ்ந்து சிறப்புற வேண்டியவர்களைத் திசைமாற்றி, உப்புச்சப்பு இல்லாத கடவுள் தத்துவத்தின் பக்கம் திருப்பிவிடுவது சிந்தனை வளம் பெறாதவர்களின் விளையாட்டு. கண்ணுக்குப் புலப்படும் பொருளைத் துறந்து, புலப்படாத பொருளில் பெருமை சேர்த்து, தவறான வழிகாட்டுவது சிறப்பல்ல!

மூன்றாவது கோணம்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். 'ஆன்மா’ இருந்தால் மட்டுமே, அதை ஒட்டிய உடல் நிலைக்கும். இயக்குபவன் இன்றி எதுவும் இயங்காது. அழிவை நோக்கி நகரும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்க முற்படுகிறோம்; அழியாத ஆன்மாவை ஒதுக்கிவிடுகிறோம். மனம் தெளிவாக இருந்தால் மட்டுமே உடல் வளம் வலுப்பெறும். தெளிவான மனதைப் பெற, அதைத் தூய்மைப்படுத்தவேண்டியது அவசியம். பார்க்கப் பார்க்கப் புளித்துவிடக்கூடியது புற அழகு. மனம் விரும்பாத எதுவும் அழகாகப் படாது. மனம்தான் அழகை வரையறுக்கிறது. கலங்கிய மனம், உண்மையான அழகைச் சுட்டிக்காட்டாது.

? எங்கு தென்பட்டாலும், அழகு அழகுதான்! அதிலும் உண்மை, போலி என்று உண்டா என்ன?!

அழகை ஒருவன் மெச்சுகிறான் எனில், உண்மையில் அவன் அழகை ஆராதிக்கவில்லை. பிறர் பார்த்து அழகை மெச்சும்போது, அதன் மதிப்பீட்டில் அழகை உணருகிறான். பிறரது மதிப்பீட்டில் மகிழ்கிறான்.  தனக்காக அவன் அலங்கரித்துக் கொள்ளவில்லை. பிறர் பார்த்து மகிழவே அவனுக்கு அலங்காரம் பயன்படுகிறது. அவன் மகிழ்வது போலி அழகில். ஆன்மாவோடு இணைந்த உடலில்தான் அழகு இருக்கும். அது வெளியேறிய பிறகு, அந்த உடலில் அலங்காரம் சிறக்காது. எனவே, அலங்காரம் உடலுக்கு இல்லை; ஆன்மாவுக்குத்தான். ஆன்மாவை நினைத்து உடலை அழகுபடுத்துகிறோம். மனம் எதை விரும்புகிறதோ அதுவே அழகு. அது, ஆன்மாவில் இணைந்தால் ஆன்மா அழகாகப்படும்.

ஆசையிலும் ஆர்வத்திலும் தென்படும் அழகு, அழகே அல்ல. அழகில் இணைந்த காதலர்கள் பலர் விவாகரத்தில் பிரிகிறார்கள். நிலைத்து நிற்கும் தத்துவமல்ல அழகு. ஆன்மா நிலைத்து நிற்கும் பொருள். அதன் இணைப்பில் தெளிவான மனம், எதில் பற்று வைக்கிறதோ அது அழகாகப்படும். இளமையில் அழகுப் பதுமையாக தோன்றியவர்கள் முதுமையில் ஈர்ப்பதில்லை. எனவே, அழியும் உடலழகைப் பராமரிப்பது வீண். அதில் ஈடுபட்டுச் சோர்வடைவோமே தவிர, அழகை நிலைத்திருக்கச் செய்ய முடியாது.

? சரி! உண்மையான அழகு எது என்பதை நீங்களே அடையாளம் காட்டுங்களேன்..?

நாம் பிறப்பெடுத்தது அழகை ரசிப்பதற்காகவும், சுவைப்பதற்காகவும் அல்ல. அறத்தைச் செயல்படுத்தவும், துயரம் தொடாத இன்பத்தைப் பெறவும், உலக இயக்கத்துக்குத் தன் பங்களிப்பைச் செலுத்தவும் தான் பிறப்பெடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவதே உண்மை அழகு.

பொக்கை வாயும், கண்ணாடியும், முதிர்ச்சியடைந்த உருவமும்  கொண்ட மகாத்மா காந்தியை அழகனாகப் பார்ப்பார்கள். ஆசையின் இலக்கணத்தை, அழகு இலக்கணமாக மாற்றிச் சொல்வது அறிவீனம். கட்டுண்டு இருப்பதற்கும் விடுபட்டு இருப்பதற்கும் மனம்தான் காரணம். துயரத்தையும் மகிழ்ச்சியையும் உணர்வது மனம். துயரம் தொடாத மகிழ்ச்சியில், மனம் எதையும் அழகாகப் பார்க்கும். மனதில் குவிந்திருக்கும் மாசுகளை அகற்றி, தெளிவை எட்டவைக்க வேண்டும். மாசற்ற மனம்தான் அழகை உணரும். கொந்தளிக்கும் மனம் எதையும் உணராது. அலங்காரத்தோடு காட்சியளித்தாலும் கண்டுகொள்ளாது. ஆக, மனக்கொந்தளிப்பை அகற்ற, மனம் தூய்மை பெற ஆன்மாவின் (கடவுள்) சிந்தனை அவசியம்.

கடவுள் நினைவு மனதில் இருக்கும் தூசுகளை அகற்றிவிடும். அன்றாடம் சேரும் தூசுகளை அகற்றுவதற்கு, அன்றாடம் கடவுள் பெயரை காலையிலும் மாலையிலும் சொல்ல வேண்டும். நோயில் வீழாமல், அழியாமல் உடலைக் காக்க, கடவுளின் திருப்பெயரே மருந்து. நோய் வந்தாலும், அழிந்தாலும் அலங்காரம் பண்ண இயலாது. விஞ்ஞானமும் வழிகாட்டாது. மெய்ஞ்ஞானம்தான் வேண்டும். லோகாயத சுகத்தைச் சுவைக்க, கடவுளின் அருள் தேவை. இல்லையென்றால் விலங்கினங்கள் போல் மாறி, உயர்ந்த வாழ்க்கையை இழந்துவிடுவோம்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

உடலுக்குள் இருக்கும் உருப்படிகளில் ஆன்மாவும் மனமும் சிறப்புப்பெற்றவை. ஆன்மா உடலை இயக்கும்; மனம் நல் வழியில் செலுத்தும். அவை இரண்டும் மற்ற உருப்படிகள் போல் கண்ணுக்குப் புலப்படாது. வெளித்தோற்றமான உடலையும், புலன்களையும் மட்டும் நம்பிச் செயல்பட நினைப்பது அறியாமை.  அவை எல்லாவற்றின் செயல்பாட்டுக்கும் ஆதாரம் ஆன்மாவும் மனமும்தான். இந்த இரண்டையும் கவனிக்காமல் வெளித்தோற்றத்தை மட்டும் கவனித்தால் ஏமாந்துவிடுவோம்.

லோகாயத வாழ்க்கையில் வெற்றி பெற, ஆன்மாவும் மனமும் வேண்டும். இயக்குபவன் ஆன்மா. அதுவே கடவுள். அதன் சேர்க்கையில் செயல்படுவது மனம். மனம் தூய்மை பெற்றால், செயல்பாடு சிறக்கும்; உடல் ஆரோக்கியம் நிலைக்கும். மனத் தூய்மை பெற ஆண்டவன் அருள் வேண்டும் (ஆன்மா உடலோடு இணைந்திருக்க வேண்டும்). அதை நிறைவுசெய்ய, அவனுடைய பெயரைச் சொன்னால் ஆன்மாவும் இயங்கும்; மனமும் தெளிவு பெறும். அலட்சியப்படுத்தினால் வாழ்க்கை சூன்யமாகிவிடும்.

பதில்கள் தொடரும்...