Published:Updated:

பெருகட்டும் லட்சுமி கடாட்சம்!

திருமகளே வருக...திருமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவொற்றியூர் இறைவன் ஸ்ரீ படம்பக்க நாதர் திருவருள் பெற்று பிரம்மதேவன் படைப்புத் தொழில் தடங்கல்கள் நீங்கப் பெற்றத் திருநாள், பிட்சாடனரான ஈஸ்வரன், அன்னபூரணியிடம் பிட்சை பெற்ற திருநாள், பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி, பல அரிய மருத்துவ மூலிகை விருட்சங்களை உருவாக்கிய நாள்...  இப்படிப் பல புராண மகத்துவங்களைக்கொண்ட புண்ணியத் திருநாள் அட்சய திரிதியை. 

இந்த வரிசையில் அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழ்கிறது அட்சயதிரிதியை. ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங்கள் நிகழ்ந்த தினமும் இதுவே. திருமகளின் திருவருளால் குபேர மூர்த்தி ஐஸ்வர்ய நிதிக் கலசங்களைப் பெற்றதும் இந்தத் திருநாளில்தான் என்கின்றன ஞான நூல்கள்.

ஆக, இந்தத் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும்.  நாமும் அலைமகளின் மகிமைகளை அறிந்து மகிழ்வோமா?!

பெருகட்டும் லட்சுமி கடாட்சம்!

* உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் மகாலட்சுமியின் வடிவங்களே ஆகும். அவளே விளைபொருட்களில் தான்ய லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், பசுக்கூட்டத்தில் கோ லட்சுமியாகவும் திகழ்வதாகக் கூறுவர். மேலும் அன்ன லட்சுமி, மகுட லட்சுமி, மோட்ச லட்சுமி என்றும் அவளைப் போற்றுகிறார்கள். அதாவது சிறந்ததில் சிறந்ததாக அவள் சாந்நித்தியம் விளங்குவதை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவார்கள்.

* பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழி படுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு நிலைகளிலும் அருளும் திருமகளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் ஸித்திக்கும்.

* தாமரையில் விரும்பி உறைவதால் தாமரையாள், பத்மா, பத்மவாசினி, பத்மினி, நளினி, நளினாசனி, கமலவல்லி, கமலினி, கமலா, நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு. ஆக தாமரைப் பூ சமர்ப்பித்து திருமகளை வழிபடுவது சிறப்பு. அதேபோல் தாமரை பூத்துக்குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

* வில்வமரத்துக்கு லட்சுமி வாசம் என்பது பெயராகும். அதாவது வில்வத்தில் லட்சுமி வசிக்கிறாள் என்று பொருள். வெள்ளிக் கிழமைகளில் லட்சுமிதேவியை வில்வத்தால் அர்ச்சிப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

* வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன. ஸ்ரீ சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம்.

* அடியார்கள் பலரும் திருமகள் திருவருளைப் பெறும் வகையில் அவளைப் போற்றி துதித்துள்ளனர். ஸ்ரீ ஆதிசங்கரர் தமக்கு நெல்லிக்கனி ஈந்த பெண்ணின் இல்லத்தில் வறுமை நீங்கும் பொருட்டு கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதும், அதனால் மகிழ்ந்து  

லட்சுமிதேவி பொன்மழை பொழிய அருளியதும் அற்புதச் சம்பவம்.

ஸ்ரீ நிகமாந்த தேசிகர்

லட்சுமிதேவியை துதித்துப் போற்றியிருக் கிறார். ஒருமுறை, இவரிடம் வந்து திருமணத்துக்குப் பொருள் கேட்டார் ஏழை ஒருவர். அந்த அன்பருக்கு அருளும்படி திருமகளைப் பிரார்த்தித்து ஸ்ரீ நிகமாந்த தேசிகர் பாடியருளியதே ஸ்ரீ ஸ்துதி. இதைக்கேட்டு மகிழ்ந்த லட்சுமிதேவி, ஏழைக்கு அருள் செய்தாள் என்பார்கள்.

* கூரத்தாழ்வானின் புதல்வரான பராசரபட்டர், திருவரங்க நாயகி யான திருமகளைத் துதித்து இவர் பாடியருளிய நூல் ஸ்ரீ குணரத்ன கோசம். திருவின் அருள் பொங்கும் இந்த துதிப் பாடல்களைப் பாடி திருமகளை வழிபடுவதால், நம் வறுமைகள்யாவும் நீங்கும்.

இந்திரன் திருமகளைப் போற்றி எட்டு ஸ்லோகங்களால் துதித்த மகாலட்சுமி அஷ்டகம் எனும் ஸ்தோத்திரம் ஒன்று உண்டு. இதை அனுதினமும்... ஒருமுறை படித்தால் பாவங்கள் விலகும்; இருமுறை படித்தால் தான்யங்கள் செழிக்கும்; மூன்று காலமும் படித்தால் சத்ருபயம் நீங்கும், மஹாலட்சுமியின் அனுக்ரஹம் பரிபூரணமாக வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

புனிதமிகு அட்சய திரிதியை தினத்தில், அந்த அஷ்டகத்தில் ஒரு பாடலையாவது பாடி உள்ளம் உருக திருமகளை வழிபடுங்கள். அவள் நம் உள்ளத்திலும், இல்லத்திலும் குடியேறி நீங்காதிருந்து, வளம் பெருக வரம் தருவாள்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!

கருத்து: மஹா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தியவளுமான மஹாலட்சுமிதேவியே, உன்னை வணங்குகிறோம்.

கோதை மலர் மங்கை வாழிடம்

அறப்பள்ளீச்சர சதகம் என்றொரு நூல் திருமகளின் இருப்பிடங்களாக சிலவற்றை விவரிக்கிறது.

பெருகட்டும் லட்சுமி கடாட்சம்!

நற்பரி முகத்திலே மன்னவரிடத்திலே

நாகரிகர் மாமனையிலே

நளின மலர் தன்னிலே கூவிளந் தருவிலே

நறைகொண்ட பைந்துளவிலே

கற்புடையவர் வடிவிலே கடலிலே கொடியிலே

கல்யாண வாயில் தனிலே

கடிநக ரிடத்திலே நற்செந்நெல் விளைவிலே

கதிர்பெறு விளக்கதினிலே

பொற்புடைய சங்கிலே மிக்கோர்கள் வாக்கிலே

பொய்யாத பேர் பாலிலே

பூந்தடந் தன்னிலே பாற்குடத் திடையிலே

போதகத்தின் சிரசிலே

அற்பெருங் கோதை மலர் மங்கை வாழிடம் என்பர்

அண்ணல் எமதருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்

அறப்பளீ சுர தேவனே

கருத்து: நல்ல குதிரையின் முகத்திலும், தருமத்தின் வழியில் நடக்கும் தலைவனிடமும், போற்றத்தக்க நாகரிக குணம் கொண்ட சான்றோர் இல்லங்களிலும், அழகிய பூக்களிலும், வில்வ மரத்திலும், துளசிச் செடிகளிலும், கற்புடைய பெண்கள் வடிவிலும், கடலிலும், தேசத்தின் கொடியிலும், திருமணம் முதலான சுபகாரியங்கள் நிகழும் மாளிகையின் வாயிலிலும், பாதுகாக்கப்பட்ட நகரிலும், செந்நெல் விளையும் நிலங்களிலும், வலம்புரிச் சங்குகளிடத்தும், பெரியோர் வாக்காகவும், பொய் பேசாத நல்லவர்களிடமும், பூக்கள் நிறைந்த தடாகத்திலும், பாற்குடங்களுக்கு இடையேயும், யானையின் சிரசிலும் மகாலட்சுமி நீங்காது உறைகின்றாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு