மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

திருக்கோளூர் பெண் பிள்ளையைப் பார்த்து, அவள் எதற்காக அந்த ஊரை விட்டுச் செல்கிறாள் என்று ராமானுஜர் கேட்டபோது, அந்தப் பெண் சொன்ன மறைபொருள் செறிந்த 81 வாக்கியங்களில் முதலாவது வாக்கியமாக அமைந்திருந்தது, 'அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே?’ என்ற வாக்கியம். இதன் பின்னணியில் அமைந்துள்ள சம்பவம்... 

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே?

கிருஷ்ண பக்தி என்பது வட மாநிலங்களில் மட்டுமல்ல; தென்கோடி வரை பாரத தேசத்தினரால் அனுசரிக்கப்பட்டு வரும் சங்கதியாகும். முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், நிலங்களை வகைப்படுத்தும்போது, காடும் காடு சார்ந்ததுமான நிலப்பரப்பை 'முல்லை’ என்று குறிப்பிட்டு, அந்த நிலத்துக்கு உரிய தெய்வமாக 'மாயோன்’ என்று நாராயணனைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். ராமாயணம், மகாபாரதம் மற்றும் பல சங்க இலக்கியங்களிலும் கிருஷ்ணனின் புகழ் பேசும் பாகவத புராணம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பௌத்த சமயம் சார்ந்த காப்பியம் என்று சொல்லப்படும் சிலப்பதிகாரத்தில், புறஞ்சேர் இருந்த காதையில், மகாபாரதத்தில் கண்ணன் ஆற்றிய பங்கு பற்றி விவரிக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்தே கண்ணபிரானை பாரதம் முழுவதும் கொண்டாடி வந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர். என்றாலும் கூட, அவருக்கு உத்தியோகம் என்னவோ கம்சனின் அரண்மனையில்தான். சில நேரங்களில், இறைவன் நிறைய விஷயங்களில் இப்படி மாற்றிப்போட்டு விடுகிறான்! பரமபக்தனான பிரகலாதன், கிருஷ்ணனை நாராயணனாகவே பார்த்த பீஷ்மர் போன்றோரைப் போல, வயிற்றுப் பிழைப்பு கம்சனிடமும், சிந்தனை கண்ணனிடமும் அக்ரூரருக்கு இருந்தது.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2

கோகுலத்தில் இருந்தவரையில் கண்ணனுக்குப் பரம சுகம். அவன் பக்தர்களுக்கோ அதைவிட வும் பரமானந்தம்! வெண்ணெய் உண்ண வேண்டியது; தலையில் ஒரு முண்டாசைக் கட்டிக்கொண்டு, கையில் ஒரு புல்லாங்குழலையும் எடுத்துக்கொண்டு, 'நானும் மாடு மேய்க்கப் போகிறேன்’ என்று கிளம்பிவிட வேண்டியது; அப்புறமென்ன...

பொழுதுக்கும் கோபாலர்களோடும் கோபியருடனும் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்!  வெறும் கொண்டாட்டத்துடன் விட்டானா என்றால், அதுதான் இல்லை. கம்சனின் கட்டளைப்படி தன்னைக் கொல்ல வந்த பூதனையையும், பறவையாகவும், மாடாகவும், சக்கரமாகவும் வந்த இன்னும் பல அசுரர்களையும் போகிற போக்கில் வதம் செய்தானே!

ஆழ்வார்களும் சரி, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரும் சரி... அவன் கோகுலத்தில் இருந்த காலத்தில் நிகழ்த்திய லீலைகளைத்தான் போற்றிப்

பாடி அனுபவித்து இருக்கிறார்களே தவிர, அவன் துவாரகையில் அரசாண்டதைப் பற்றியோ, பாண்டவர்களின் தூதுவனாக அஸ்தினாபுரம் சென்றது பற்றியோ, அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தது பற்றியோ பாடவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அந்த கோகுலக் கண்ணன்தான் பாட்டுடைத் தலைவன்!

அந்தக் கண்ணனைக் கொல்வதற்கு கம்சன் ஒரு திட்டம் தீட்டுகிறான். புதிதாக தனுர் யாகம் என்ற ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ண, பலராமர்களை அழைத்து வரச் செய்து, ஒரு மல்யுத்தத்தில் அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறான். அதற்கு யாரை அனுப்புவது? இவனுடைய ஆட்களை அனுப்பினால், கண்ணன் ஒரே நொடியில் போட்டுத்தள்ளி விடுகிறான். எனவே, வசுதேவரின் சகோதரரான அக்ரூரை அனுப்பி, இருவரையும் அழைத்து வரச் செய்கிறான். அக்ரூரருக்கு ஒரே குஷி! கண்ணனை நேரில் பார்க்கலாமே; கொஞ்சிப் பேசி மகிழலாமே! அவருடைய உள்ளத்தில் வாஞ்சை பெருகுகிறது. கம்சன் கண்ணனைக் கொல்வதற்குத்தான் அழைத்து வரச் செய்கிறான் என்பதுகூட அவருக்கு மறந்துபோய்விடுகிறது. கண்ணனுடன் தான் இருக்கப்போகும் தருணங்களை மனதில் அசைபோட்டபடியே ரதத்தைச் செலுத்திச் செல்கிறார் அவர். இதை 'பாரிப்பு’ என்பார்கள். பாரிப்பு என்றால், ஒரு நிகழ்ச்சியை அது நிகழ்வதற்கு

முன் அசைபோடுவது. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அர்ச்சிராதிகதி சிந்தனை மிகவும் அவசியம். ஸ்ரீ வைஷ்ணவர்களை 'முமூக்ஷு’ என்று அழைப்பர். இறுதியாக வைகுண்டத்தில் நித்தியவாசம் செய்யப் போகிறவர்கள் என்பது இதன் பொருள். இருப்பினும், அந்த வைகுண்டவாசத்தை தினமும் ஒருமுறையாவது சிந்தையில் நிறுத்தவேண்டியது ஒவ்வொரு வைஷ்ணவரின் கடமையாகும். திருவேங்கட யாத்திரை, அர்ச்சிராதிகதி மனம், அக்ரூர ஞானம் இம்மூன்றையுமே வைஷ்ணவர்களின் இலக்கணமாகக் கூறுவர்.

அப்படிப்பட்ட பாரிப்புடன், அக்ரூரர் யமுனா நதிக்கரையில் உள்ள பிருந்தாவனத்துக்குச் செல்கிறார். கண்ணனுடன் அளவளாவுகிறார். கண்ணனும் கம்ச ராஜ்ஜியத்துக்குள் நுழைவதற்கு ஒரு கேட்பாஸை அல்லவா எதிர்பார்த்து நிற்கிறான்? எனவே, மறுப்பேதும் தெரிவிக்காமல் பலராமனுடன் கம்சனைக் காணச் செல்கிறான்.பிறகு, அவன் கம்சனைக் கொன்றது சரித்திரம். இப்போதும், நந்தகௌன் என்ற இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது. 'அப்படிப்பட்ட அக்ரூரரைப் போல கண்ணனை அழைத்து வருவதற்குப் போனவளா நான்?’ என்று கேட்கிறாள் அந்தப் பெண் பிள்ளை.

2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே?

மகாபாரத மாந்தர்களில் கண்ணனால் மிகவும் போற்றப்பட்டவர் விதுரர். மகாபாரதக் கதை

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2

தெரிந்தவர்களுக்கு விதுரர் கதையும் நிச்சயம் தெரிந்திருக்கும். சத்தியவதியின் மகன் விசித்திர வீரியன் அற்பாயுள் படைத்தவன்; சந்தான பாக்கியம் பெறுவதற்கு முன்பாகவே அவன் மாண்டுவிட,  அம்பிகா, அம்பாலிகா இருவருக்கும் குழந்தைப் பேறு கிடைக்க வியாசரின் துணையை சத்யவதி நாடினாள். அதன்படி வியாசர் அம்பிகாவிடம் சென்றபோது, அவள் வெட்கப்பட்டு தனது தாசியான தோழியை உள்ளேஅனுப்பி விட,அந்த தாசிக்குப் பிறந்தவரே விதுரர். அவருடைய வாழ்நாள் முழுவதும் தாசி மகன் என்ற இழிபெயர் நிழலைப்போல உடன் வருகிறது. ஆனால், விதுரர் மட்டும்தான், துரியோதனன் முறை தவறி சூதாடுவதற்கு தருமனை அழைக்கும்போது தடுக்கிறார்; அரக்கு மாளிகையில் துரியோதனாதி கள் பாண்டவர்களைக் கொல்ல நினைக்கும்போது, அந்தண வேடத்தில் அவர்களை வேறு ஊருக்குப் போகச் செய்து காப்பாற்றுகிறார். நீதி தவறாதவர். திருதராட்டிரனுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வந்தவர். கண்ணன் வெறும் மன்னன் இல்லை, அந்த ஜகன்னாதனே அவன் என்பதை விதுரர் அறிவார். விதுரரைப் பற்றிப் பிரபலமாகச் சொல்லப்படும் கதை இது.

பாண்டவர்களின் தூதுவனாக துவாரகையி லிருந்து தனது தேரில் அத்தினாபுரம் வருகிறான் கண்ணன். மறுநாள் சபை கூடும்போதுதான் தூதுப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். முதல் நாள் இரவு அவன் அங்கே தங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவன் தன் மாளிகையில் தங்கமாட்டானா என்று ஆசை.

கண்ணன், வழியில் உள்ள ஒவ்வொரு மாளிகையாகப் பார்த்துக்கொண்டே வருகிறான். கண்ணில் தென்பட்ட ஒரு பெரிய மாளிகையைப் பார்த்து, ''ஆஹா! இவ்வளவு பெரியதாக இருக் கிறதே, இது யாருடைய மாளிகை?'' என்று கேட் கிறான். உடனே திருதராட்டிரன், ''கண்ணா! இது என் மாளிகை. இங்கேயே தங்கிக்கொள்!'' என்கிறார்.

கண்ணன், வேண்டாம் என்று மறுக் கிறான். அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து, ''அட! இது முந்தைய மாளிகையைவிடப் பெரிதாக இருக்கிறதே! இது யாருடைய திருமாளிகை?'' என்கிறான். குருவம்ச பிதாமகர் பீஷ்மர் முன்வந்து, ''கண்ணா! இது என் மாளிகைதான். நீ இங்கே வசதியாக தங்கிக் கொள்ளலாம்!'' என்கிறார்.

அதையும் மறுத்துவிட்டு, அடுத்த மாளிகையைப் பார்வையிடும் கண்ணன், அதனுள்ளிருந்து சங்கீத சப்தமும் நடன மாதுக்களின் நாட்டிய ஒலியும் ஒலிப்பதைக் கேட்டு, ''இது யாருடைய மாளிகை?'' என்று கேட்கிறான். ''கண்ணா! நீ இதில் தங்கி னால், கேளிக்கைகளுக்குக் குறைவிருக்காது'' என்ற

துரியோதனன், ''இந்த உல்லாச மாளிகை என்னுடையது'' என்கிறான். கண்ணன் ஒரு பார்வைச் சுழிப்பால் அதையும் நிராகரிக்கிறான்.

இறுதியாக, கண்ணன் ஒரு குடிலின் முன்பு நிற்கிறான். சின்ன குடில். ஆனால், அதன் அமைப்பும் தன்மையும் தெய்விகமாக இருந்தன.

''மனதுக்குச் சாந்தியை ஏற்படுத்தும் இந்த மாளிகை யாருடையது?'' என்று கேட்கிறான் கண்ணன். அவனுக்குப் பெரிய மாளிகையும் ஒன்றுதான்; சிறிய குடிலும் ஒன்றுதான்! அகம் சுத்தமாக இருக்க வேண்டும்; அவ்வளவுதான்!

விதுரர் சொன்ன பதில், அவரை மற்றவர் களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

''கண்ணா! இது உன் திருமாளிகைதான்! இங்கே நீ உன் இஷ்டம் போல தங்கிக் கொள்ளலாம்'' என்கிறார்.

கண்ணன் சிரிக்கிறான். ''இதுவரையில் நான் அடியார்களின் மனதையன்றோ குடிலாகக் கொண்டிருக்கிறேன்?' என்கிறான். அதற்கு விதுரர், 'கண்ணா, இது அதேதான்! என் அகம்தான் இந்த அகம். என் அகத்திற்குள் ஏற்கெனவே நீதான் இருக்கிறாய். எனவே, இந்த அகத்திற்குள் குடியேற உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கிறார்.

உலக வழக்கப்படி, வாடகைக்குக் குடியிருப் பவர்தான் வாடகை, அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க வேண்டும். ஆனால், இதயம் என்ற வீட்டுக்குள் பகவானைக் குடிவைக்க வீட்டுச் சொந்தக் காரன்தான் வாடகை, அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க வேண்டும். குடியேறுபவனும் அடாவடிப்

பேர்வழி கிடையாது. 'பூவோ, பழமோ... அதுவும் இல்லையென்றால் ஒரு இலையோ எனக்கு அன்புடன் கொடுத்தால் போதும்; அவர்களின் மனமாகிய வீட்டில் நான் வந்து நிரந்தரமாகக் குடியேறிவிடுவேன்’ என்று சொன்னவன் அல்லவா கண்ணன்? நாம்தான் வீட்டை அவனுக்கு ஒழித்துக் கொடுக்க மனம் இல்லாமல், கண்டதையும் போட்டு நிரப்பி வைத்திருக்கிறோம்!

ஆனால், விதுரர் அப்படி இல்லை. 'உன் அகம்தான் என் அகம்’ என்கிறார். அகம் என்றால், தமிழில் வீடு என்று பொருள்.

அஹம் என்றால் வடமொழியில் அகங்காரம் என்று அர்த்தம். அந்த அஹம் ஒழியும்போது, உள்ளே இருக்கும் அகம் அந்த பகவான் குடியிருக்கும் திருமாளிகையாகத்தானே இருக்கும்?!

அப்படி, 'அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே? இல்லையல்லவா? எனவே, நான் வெளியில் செல்கிறேன்’ என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

 - ரகசியம் வெளிப்படும்