ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

சிவலிங்கத் திருமேனி வடக்குப் பார்த்தபடி கோயில் கொண்டிருப்பது அபூர்வம்! குளித்தலை கடம்பர் கோயிலில், அப்படித்தான் திருக்காட்சி தருகிறார் ஈசன். கல்வெட்டுகளில் 'குளிர்தண்டலை’ எனக் குறிப்பிடப்பட்ட ஊர்,  பிறகு குளித்தலை என மருவியதாம்! இந்தத் தலத்தை 'கடம்பந்துறை’ என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான்.  

##~##

கடம்ப மரங்கள் செறிந்த பகுதியாக, கடம்பாரண்யமாகத் திகழ்ந்த இடத்தில், சிவனார் கோயில் கொண்டதால், ஸ்ரீகடம்பவனநாதர் எனும் திருநாமம் பெற்றார். கடம்ப மரம் சூழ்ந்திருந்ததால் கடம்பந்துறை என்றும், கடம்பர் உறைவதால் கடம்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, இந்தத் திருத்தலம். திருச்சி- கரூர் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில், முசிறிக்கு அருகில் (அதாவது எதிர்க்கரையில்) உள்ளது குளித்தலை.  

சோழ நாட்டின் தென்கரையில் அமைந்தது; கண்வ முனிவருக்கு சிவனார் காட்சி தந்தது; சப்த கன்னியரும் பூஜித்தது; ஆறு தலைகளுடன் ஸ்ரீபிரம்மா காட்சி தருவது; முயலகன் இல்லாமல் ஸ்ரீநடராஜர் தரிசனம் தருவது என, இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம்! வடக்குப் பார்த்த இந்தக் கோயிலை, காசிக்கு நிகரான தலம் என்றும், வடகாசி க்ஷேத்திரம் என்றும் போற்றுகின்றனர்.

ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும், வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. இது வெளிப் பிராகாரமும்கூட! வடக்குச் சுற்றில் முதலில் ஸ்ரீபைரவர் சந்நிதி. வடகிழக்கு மூலையில், கிணறு. கிழக்குச் சுற்றிலும் தெற்குச் சுற்றிலும் நந்த வனம். தென்கிழக்கு மூலையில் வேப்ப மரத்தடியில் நாகர்கள்; மேற்குச் சுற்றில் வில்வ மரத்தடியில் ஸ்ரீவிநாயகர். பக்தர்கள், தங்களது பிரார்த்தனைகளுக்கு

மஞ்சள் முடிவதும், கயிறு கட்டுவதும், தொட்டில் இடுவதும் இந்த மரங்களில்தான். வடமேற்கு மூலையில் அன்னதானக் கூடம். இந்த மண்டபம் ஒருகாலத்தில் நவராத்திரி மண்டபம் எனப்பட்டது. நவராத்திரி காலங்களில் அம்பாள் எழுந்தருள்வது இங்கேதான்!

தேவாரத் திருவுலா!

வலம் வந்து ஸ்வாமி சந்நிதி செல்வதற்கு யத்தனிக்கிறோம். பழைமையான கோயில் என்பதை கட்டுமானத்திலிருந்தும், கோயில் தூண்களிலிருந்தும் அறிய முடிகிறது. முக மண்டபம் போன்ற தொரு அமைப்போடு கூடிய உள்வாயிலில் நுழைந்தால் வருவது, உள்பிராகாரம். வடகிழக்கு மூலையில் ஸ்ரீநடராஜ சபை; இங்கே இரண்டு நடராஜர்கள்; ஒருவர் முயலகன் மீது ஆடுகிறார்; மற்றவர் காலடியில் முயலகனைக் காணோம். முயலகனில்லாத ஆடவல்லான் கொள்ளை அழகு! கிழக்குச் சுற்றில், ஸ்ரீசனீஸ்வரனுக்கு தனிச் சந்நிதி; அடுத்து, நவக்கிரகச் சந்நிதி.

இது, செவ்வாய் பரிகாரத் தலமும்கூட! இதைக் குறிக்கும் வகையில், நவக்கிரகச் சந்நிதியின் பின் சுவரில், ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீஆறுமுகர் காட்சி தருகிறார். நவக்கிரகங்களை வழிபடும் போதே, செவ்வாயின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில், முருகரையும் வழிபடு கிறோம். அங்காரகனான செவ்வாய் தீங்கு செய்யும்போதெல்லாம், அதனை முருகப்பெருமான் நிவர்த்தி செய்வார். தவிர, முருகருக்குக் கடம்பன் என்றொரு திருநாமம் உண்டு. அம்பிகை பராசக்தி, கடம்ப வனத்தில் உறைபவள் (கடம்ப வனவாசினீ); இங்கே ஐயனும் கடம்பநாதராக இருக்கிறார்; ஆகவே, சேயோனான ஆறுமுகரும் கடம்ப அம்சமாக விளங்குகிறார். எனவேதான், இத்தலத்தில் முருகனுக்கு வெகு சிறப்பு!

இங்கு, ஸ்ரீசூரியனுக்கும் ஸ்ரீசந்திரனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிநாயகர் மற்றும் சிவலிங்கம். அடுத்து... நந்தி முன்னால் இருக்க, இந்தப் பெண் வடிவம் யாராக

இருக்கும்? இவர்தான் ஸ்ரீஜேஷ்டாதேவி. மகா லட்சுமியின் மூத்த சகோதரியான இவரை அக்காள் என்பர் (ஜேஷ்டா- மூத்தவள்). கையில் முறமும், துடைப்பமும் தாங்கியவராக இருக்கும் ஜேஷ்டா, நமது தீமைகளையும் துன்பங்களையும் வாரி அள்ளிக் கொண்டுபோய்விடுவதாக ஐதீகம். தெற்குச் சுற்றில் தொடர்ந்து சைவ நால்வர், அறுபத்து மூவர்.

தென்மேற்கு மூலையான கன்னிமூலையில் (இந்தக் கோயிலுக்கு இடம் மாறியதுபோல் தோன்றினாலும்) விநாயகர் சந்நிதி. தொடர்ந்து, முருகனுக்கு இரண்டு சந்நிதிகள்; ஸ்ரீவள்ளி- தெய்வானையோடு கூடிய ஆறுமுகர் அற்புதக் கோலங்களில் அருள்கிறார். அடுத்து,  ஸ்ரீஅகோர வீரபத்திரர், நாகர், பஞ்ச லிங்கங்கள், உற்ஸவத் திருமேனிகள். உள் பிராகார வலத்தை நிறைவு செய்து, அணுக்கன் வாயிலை அடைந்தால், மூலவரின் கருவறை. வணங்கி உள்ளே நோக்க,  ஸ்ரீகடம்பவனேஸ்வரர். கடம்பநாதர், கடம்பத் துறையார் என வணங்கப்படுகிற சிவனார்; சதுர பீட ஆவுடையார்; கம்பீரமான லிங்க பாணம்;

சுயம்புவான இவர் வடக்குப் பார்த்தவர் (வாமதேவ சுயம்பு- சிவனாரின் ஐந்து முகங்களில், வாமதேவம் என்பது வடக்கு நோக்கியது).

இந்தக் கடம்ப வனத்தில், கண்வ முனிவர் தவமிருந்தார். அவருக்காகக் கடம்ப மரத்தி லேயே காட்சி தந்தார், சிவனார். இதனால், கடம்பவன நாதரானார் இறைவன்!

தேவாரத் திருவுலா!

மூலவருக்குப் பின்னால், சுவரில் சப்த கன்னிகைகளின் உருவங்கள்! தூம்ரலோசனன் எனும் அரக்கனை அழிக்க, ஸ்ரீதுர்கையை அனுப்பினார் சிவனார். அவனுடைய மாயாஜாலங்களுக்கு முன்னால் ஸ்ரீதுர்கை துவண்டு போக, உதவியாக சப்தகன்னிகை களையும் அனுப்பினார். எழுவரின் எழுச்சியைத் தாங்க முடியாமல், அரக்கன் ஓட்டம் பிடித்தான். கன்னிகையர் அவனை விரட்டிச் சென்றனர். காத்யாய மகரிஷி யின் ஆஸ்ரமத்தின் அருகே வந்தவன், அங்கு ஒளிந்துகொண்டான். கன்னிகையர், ரிஷியைக் கண்டனர். அரக்கன்தான் மாறுவேடமிட் டிருக்கிறான் என நினைத்து, அவரைக் கொன்றுவிட்டனர். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக்கொள்ள, அதனை நிவர்த்தி செய்வதற்காகத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபட்டனர். கடைசியில், கடம்ப வனேஸ்வரரை வழிபட, தோஷம் நீங்கியது. அரக்கனை ஒழிப்பதற்காக உதவி செய்த அவர்களை ஏற்று, அவர்களுக்கும் உயர்வு தருவதற்காகத் தமக்குப் பின்னாலேயே அவர்களையும் ஸ்வாமி எழுந்தருளச் செய்தார் (தொடர்ந்து நடந்த போரில், ஸ்ரீதுர்கை தூம்ர லோசனனை அழித்து வெற்றி பெற்றாள் என்கிறது இன்னொரு கதை).

கோஷ்ட மூர்த்தங்களில் ஸ்ரீதுர்கை சந்நிதியும் இருக்கும்தானே?! ஆனால், இங்கே சிவனாரை வழிபடும்போதே, சப்தகன்னியரையும் ஸ்ரீதுர்கையையும் வழிபட்டுவிடுவதாக ஐதீகம்! எனவே, ராகு கால ஸ்ரீதுர்கை பூஜை, மூலவர் சந்நிதியில் நடைபெறுகிறது.

அறுபத்து மூவரில், ஐயடிகள் காடவர்கோனும் ஒருவர். மன்னராகத் திகழ்ந்த இவர், சிவத் தொண்டுக்கும் இறை வழிபாட்டுக்கும் இடையூறாக இருக்கும் என்பதால், மகனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுத் தல யாத்திரை சென்றார்; அப்படிக் குளித்தலைக்கு வந்தவர்,

'அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட்டு ஆவி

ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு

கழித்துண்டு அலையாமுன் காவிரியின் தென்பால்

குழித் தண்டலையானைக் கூறு’ - என்று வெண்பா பாடினார். கண்வ முனிவரும் சப்தகன்னிகைகளும் வழிபட்ட ஸ்ரீகடம்ப வனேஸ்வரர், பிரம்மாவுக்கும் காட்சி கொடுத்துள்ளார். தம்முடைய சிருஷ்டி பணியைச் செய்துவரும்போது, களைப்பு மிகுதியால் பலம் குன்றினார் பிரம்மா. படைப்புத் தொழிலைச் சரியாகச் செய்யமுடியாமல் போனது. சிவனாரை வணங்கி, தமது சிக்கலைத் தெரிவித்தார். சிவபெருமானுடைய ஆணைப்படி, குளிர்தண்டலையை அடைந்து, ஆயிரம் வருடங்கள் கடும் தவம் மேற்கொண்டார். காவிரியில் நாள் தோறும் நீராடி, தொடர்ந்து சிவ பூஜை செய்தவருக்கு, ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் திருக்காட்சி தந்தார் சிவனார். இதனால், களைப்பு நீங்கி ஆற்றலைப் பெற்றார் ஸ்ரீபிரம்மா.

தேவாரத் திருவுலா!

பலாச வனம், பிரம்மபுரி போன்ற பெயர்களைக் கொண்ட குளித்தலைக்கு, அக்னிவனம் என்றும் பெயர் உண்டு. இங்கு, அக்னிதேவனும் வழிபட்டுள்ளான். காவிரிதான் பிரதான தீர்த்தம் என்றாலும், பிரம்மா ஏற்படுத்திய பிரம்ம தீர்த்தமும் விசேஷமானது. தல மரமான கடம்பம், அருகில் உள்ளது.

அடுத்து, அம்பாள் சந்நிதி. முற்றிலா முலையம்மை; நின்ற திருக்கோல நாச்சியார். நான்கு திருக்கரங்களோடு தரிசனம் தருகிறார். அம்பிகை கிழக்குப் பார்த்தபடி அருள்கிறார். பால குஜாம்பாள் எனும் வடமொழித் திருநாமம் பெற்ற இந்த அம்பாள், மதுரை மீனாட்சியாகவே கருதப்படுவதால், இந்தத் தலம் 'வட மதுரை’ என்றும்  அழைக்கப்படுகிறது. கடம்ப வனம் என்பதாலும் (மதுரையின் தல மரமும் கடம்பம்; அதுவும் கடம்ப வனமே!) இது பொருந்தும். இந்த அம்பாளை 'இளையவள்’ எனும் தன்மையில், 'பேதை’ என்றே திருநாவுக் கரசர் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.  

'தனகு இருந்ததோர் தன்மையராகிலும்
முனகு தீரத் தொழு எழுமின்களோ
கனகப் புன்சடையான் கடம்பந்துறை
நினைய வல்லவர் நீள் விசும்பாள்வாரே’

உள்ளத்தில் மகிழ்ச்சி மிக்கவராயினும், உங்களுடைய இழிவு தீர்வதற்குக் கடம்பந்துறை இறைவனைத் தொழுங்கள்; செஞ்சடைக் கற்றை கொண்ட இந்த இறைவனை வழிபடுபவர்கள், வானுலகை ஆள்வார்கள் எனப் பாடுகிறார் அப்பர்.

இதுவொரு பிரார்த்தனைத் தலம். அங்காரக (செவ்வாய்) தோஷம், சனி ப்ரீதி போன்றவற்றோடு, கோயில் காவல் தெய்வ மான பரமநாதரை வழிபடுவதும் பிரார்த்தனையின் ஒரு பகுதி. சல்யூட் அடிப்பதுபோல் நெற்றியில் கைவைத்துக் காணப்படுகிற இவருக்குத் தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்புப் பாயசம் நைவேத்தியம் செய்தால், கேட்டதெல்லாம் கிடைக்கும்.

மாசி பிரம்மோத்ஸவம். எனினும், தை மாத பூசத் திருவிழா விசேஷம். சுற்றிலும் உள்ள ஏழு ஆலயங்களின் ஸ்வாமிகளும் புறப்பாடாகி வந்து, ஸ்ரீகடம்ப வனேஸ்வரருடன் காவிரிக் கரை வழியே பயணித்து, பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். ராஜேந்திரம் ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர், பேட்டைவாய்த்தலை ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர், ஐயர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர், கருப்பத்தூர் ஸ்ரீசிம்மபுரீஸ் வரர், ஈங்கோய் மலை ஸ்ரீமரகதாசலேஸ்வரர், முசிறி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், வேளூர் ஸ்ரீதிருக்காமேஸ்வரர் ஆகியோர் சேர்ந்து தரிசனம் தருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

அதேபோல் காலைக் கடம்பர், மதியச் சொக்கர், மாலை ஈங்கோய் நாதர் என்று வழிபடுவதும் (குறிப்பாக, ஐப்பசி துலா ஸ்நான நாட்களில்) விசேஷம்.

ஆலயத்தை விட்டு வெளி யில் வர, எழில் கொஞ்சும் தேர் கண்ணில் படுகிறது. நுட்பமான வேலைப்பாடுகள்; படுநேர்த்தியான தேர்!

'பூமென் கோதை
உமையரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள்
உள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான்
கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் தீவினை
நாசமே’

என்று பாடிய நாவுக்கரசர் வழியில், நாமும் இறைவன் -இறைவியை வழிபட்டு, இத்தலத்திலிருந்து விடை பெறுகிறோம்.

(இன்னும் வரும்)

படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்