ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

சென்னை கோயில்கள் தரிசனம்!

சென்னை கோயில்கள் தரிசனம்!

சென்னை கோயில்கள் தரிசனம்!
சென்னை கோயில்கள் தரிசனம்!

வில்லிவாக்கம்
ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள்  

குறும்புக் கண்ணனைத் தாம்புக் கயிற்றால் தாயார் யசோதா கட்டிப் போட்டதால், தாமோதரன் எனும் திருநாமம் உண்டானது அவருக்கு. அந்தத் திருநாமத்துடன், அழகும் கருணையும் பொங்க சென்னை- வில்லிவாக்கத்தில் அருளாட்சி நடத்துகிறார் அவர். தாயாரின் திருநாமம்- ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.

இங்கேயுள்ள மூலவரான ஸ்ரீசௌம்ய தாமோதரப் பெருமாளின் இடுப்பில், தாயார் கட்டிய கயிற்றுத் தழும்பை இன்றைக்கும் தரிசிக்கலாம். ஸ்ரீகண்ணன், ஸ்ரீராமர், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரும் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கும் அற்புதத் தலம் இது!

சென்னை கோயில்கள் தரிசனம்!
##~##
புரட்டாசி மாதத்தில், தாயாருக்குத் திருப்பாவாடை சார்த்தி, ஸ்ரீதாமோதரப் பெருமாளுக்குப் புதிய வஸ்திரம் அணிவித்து, விமரிசையாக நடந்தேறு மாம், உத்ஸவம்! அப்போது, 108 படி அரிசியில் தயிர்சாதம் தயாரித்து, நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். 3-வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த உத்ஸவ விழாவில் பங்கேற்று தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்! 4-வது ஞாயிறன்று லட்சார்ச்சனை நடைபெறும். அதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில், பூவங்கிச் சேவையில் பெருமாளைக் காணக் கண்கோடி வேண்டும். பிள்ளை பாக்கியம் இல்லையே எனக் கலங்கித் தவிப்பவர்களுக்கு வரம் அருளும் அற்புதத் தலம் இது!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வில்லிவாக்கம். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடைதூரத்தில் உள்ள ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள் கோயிலுக்கு வந்து வணங்குங்கள்: வளம் கிட்டும்!

சைதாப்பேட்டை
ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்!

சென்னை கோயில்கள் தரிசனம்!

சீர்மிகு சென்னையின் சைதாப்பேட்டை பகுதியில், ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிங்க பெருமாள் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் திருமால். தாயாரின் திருநாமம்- ஸ்ரீஅலர்மேல்மங்கை தாயார்.

சோளிங்கர் தலத்தின் ஸ்ரீநரசிங்க பெருமாளின் திருநாமத்துடன், திருப்பதி தலத்தின் நாயகனின் திருநாமத்தையும் சேர்த்து ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிங்க பெருமாளாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பதால், மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்களால் போற்றப்படுகிறார் பெருமாள்.

ஸ்ரீராமர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅனுமன், கருடாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.

சென்னை கோயில்கள் தரிசனம்!

புரட்டாசி வந்துவிட்டால், சனிக்கிழமை மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஆலயத்தில் தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! இங்கே விஜயதசமியின்போது, பாரிவேட்டை விழாவும் வெகு பிரசித்தம். தவிர, புரட்டாசி சனிக் கிழமைகளில் முத்தங்கி, புஷ்பங்கி என சேவை சாதிக்கிற ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிங்கரைத் தரிசித்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது நம்பிக்கை!

இங்கே குடிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீஅலர் மேல்மங்கை தாயார் மட்டும் என்னவாம்?! புற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் என்பதால், மிகவும் சக்தி வாய்ந்தவள் எனச் சொல்லி சிலிர்க்கின்றனர், பெண்கள். தொடர்ந்து 27 நாட்கள் இங்கு வந்து, தாயாரை 21 முறை வலம் வந்து தரிசித்தால், புத்திரப் பாக்கியம் கிடைக்கும்; எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கின்றனர், பக்தர்கள்.

சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்மரைத் தரிசியுங்கள்; நலங்கள் யாவும் பெறுங்கள்.

சென்னை கோயில்கள் தரிசனம்!


நங்கநல்லூர்

ஸ்ரீலட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணர்

சென்னை, நங்கநல்லூர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணர் கோயிலுக்கு வந்து வணங்கினால், நினைத்ததெல்லாம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

சென்னை- தாம்பரம் ரயில்பாதையில் உள்ளது பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷன். இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், ஏழூர் அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணர் திருக்கோயில்.

சென்னை கோயில்கள் தரிசனம்!

ஸ்ரீலட்சுமி தாயாரை மடியில் அமர்த்தியபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். இங்கே, ஸ்ரீநவநீதகிருஷ்ணரும் ஸ்ரீகோதண்டராமரும் அருள்கின்றனர். எனவே, ஸ்ரீநரசிம்ம ஜயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராம நவமி ஆகிய வைபவங்கள் வெகு விமரிசையாக இங்கே நடைபெறுகின்றன.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... தலத்தின் துவஜஸ்தம்பம் மற்றும் உத்ஸவத் திருமேனி ஆகியவை திருப்பதி தேவஸ்தான திருத்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவையாம்!

சென்னை கோயில்கள் தரிசனம்!

ஸ்ரீசுதர்சனர், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதத் தலம் இது! இங்கேயுள்ள ஸ்ரீஅனுமனை 'அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர், பக்தர்கள். வெளிநாடுகளுக்குக் கல்வி மற்றும் வேலை நிமித்தமாகச் செல்ல விரும்புபவர்கள், இவரை வணங்கித் தொழுதால், விரைவில் வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். இந்தத் தலத்தில், பிரார்த்தனைச் சக்கரம் விசேஷம். இந்தச் சக்கரத்தில் கை வைத்து வேண்டிக்கொண்டால், நம் பிரார்த்தனைகள் யாவும் விரைவில் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.  

புரட்டாசி மாத ரோகிணியில் ஸ்ரீநவநீத கிருஷ்ணர், புனர்பூச நட்சத்திரன்று ஸ்ரீகோதண்ட ராமர் ஆகியோருக்கு சிறப்புத் திருமஞ்சனம், விசேஷ பூஜைகள் நடைபெறும். விஜயதசமி நாளில், பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வருவது கொள்ளை அழகு! இந்தப் புரட்டாசியில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணரை கண்ணாரக் கண்டு, மனதாரத் தரிசியுங்கள்; மங்கலம் உண்டாகும்!

         - பூ.கொ.சரவணன்
படங்கள்: பா.காயத்ரி அகல்யா