Published:Updated:

ஆறுமுக நாவலரும்... அருகில் நிற்பவரும்!

அனுபவம் என்பது...ஷங்கர்பாபு, ஓவியங்கள்: கேசவ்

லயம் தொழுவது சாலவும் நன்று என்று சொன்ன முன்னோர், அந்த நன்று எவை யெல்லாம் என்ற லிஸ்ட்டைத் தந்தார்களா என்று தெரியாது. அப்படி ஒரு பட்டியல் இருக்குமானால், அதில் முதல் இடத்தில் 'மன அமைதி’ என்ற நன்மை குறிப்பிடப்பட்டிருக்கக்கூடும். 

ஏற்கெனவே, மனஅமைதியில் இருக்கும் மனங்கள் இன்னும் அமைதிக்குள் ஆழவும், அமைதி தேடும் மனங்கள் குறைந்தபட்சம் தற்காலிக அமைதியாவது பெறவும் கோயில்கள் உதவுகின்றன என்பதாலும், 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் முன்னோர்கள் சொல்லியிருக்கக்கூடும்.

ஆ லயம் = ஆன்மா லயிக்கின்ற இடம்; கோ (உலகின் அரசன்) இல் = இறைவன் உறையும் இடம், கலைகள் செழித்தோங்க உதவும் இடம் என்றெல்லாம் அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப விளக்கம் கொடுத்தாலும், கோயில்களை நேர்மறை சக்தியும், ஆற்றலும் முழு வீச்சில் இருக்கும் ஆற்றல் சாலைகளாகவே நான் பார்க்கிறேன்.  கோயிலுக்குள் யாருக்கும் பொய் சொல்லத் தோன்று வதில்லை; மனசாட்சிக்கு விரோதமாக நினைப்பதில்லை. குறைந்தபட்சம் கோயிலுக்குள் இருக்கும் வரையிலாவது ஒருவர் தன்னில் நிதானத்தை உணர்கிறார். அதனால்தான் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று திரும்பும் ஒருவ ரைப் பார்த்து காலில் விழுகிறோம்; ஆசி பெறுகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனிதன், தன்னில் இருக்கும் அந்த ஒருவனை  கடவுளின் புனித உணர்வு தழுவும்போது புத்துணர்வு பெறும் ஒருவனை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்பியே திரும்பவும் கோயிலுக்கு வருகிறான்.   கோயில்கள் நேரடியாகத் தலையிட்டு அமைதியின்மைக்குக் காரணமான பிரச்னையைத் தீர்ப்பதில்லை. ஆனால், அவை நாளையாவது தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. கோயில் சொல்லும் கதைகளிலும், மரபுகளிலும் மனிதனின் அக புறப் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகள் ஒளிந்திருக்கின்றன.

ஆறுமுக நாவலரும்... அருகில் நிற்பவரும்!

என் அம்மா எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்தவர். ஆனால், அவர் சொன்ன நரசிம்ம அவதாரத்தின் கதையில், மேனேஜ்மென்ட் பாடங்கள் அணி வகுத்தன. அதில், இரண்யனின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கலாம்.

மனிதனால் மரணம் கூடாது; விலங்கு, பறவை, தேவர், அசுரர் காரணமாக தனக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுவிடக் கூடாது; காலை, மாலை, இரவு, பகல் பொழுதுகளில் ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது; வீட்டில், வெளியில், ஆகாயத்தில் மரணம் நிகழக்கூடாது; ஈட்டி, டைம்பாம், ஏ.கே47, கத்தி வகையறாக்களாலும் உயிராபத்து கூடாது. இது அவன் பெற்றிருக்கும் வரம். பகவான் அதிலுள்ள ஷரத்துக்களைப் புரிந்து கொண்டு 'செக்' வைக்கிறார்.

பிரச்னைகளை ஊன்றிப் பார்த்தால், அதற்கு உள்ளேயே அது தீர்வதற்கான வழிகள் இருக்கும்.

காலையுமற்ற, மாலையுமற்ற அந்தி நேரம்; மனிதனும் இல்லாத விலங்கும் இல்லாத ரூபம்; மேற்படி லிஸ்டில் இல்லாத நகங்களும், பற்களுமே ஆயுதங்கள்; வீட்டிலும் இல்லாமல் வெளியிலும் இல்லாத ஒரு லொகேஷன் வாசற்படி... இரண்ய வதம் நிகழ்கிறது!

வாழ்க்கையின் புதிர்களை அவிழ்க்கும் பதில் களை புராணங்கள் சொல்லும் கதைகளிலிருந்து பெறமுடியும். இவற்றைச் சராசரி மனிதனிடம் பரிச்சயப்படுத்துபவையே கோயில்கள்.

மகாவித்வான் கே.ஆறுமுக நாவலர் கோயிலில் வணங்கும் முறை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...

'கோபுரத்தின் முன் சென்று நின்று, இரண்டு கரங்களையும் தலைமேற் குவித்து, மூல மந்திரத்தை உச்சரித்துக்கொண்டும், தோத்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டும், வேறு விசாரங்கள் ஒன்றும் இல்லாமல், கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், கடவுள் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குள் போக வேண்டும்.

ஐந்து பிராகாரங்கள் உள்ள இடங்களில், அந்த ஐந்து பிராகாரங்களையும் பஞ்ச கோசங்களாக மதித்து, ஒவ்வொரு கோசத்திலும் ஆத்மா உழன்று தெளிந்து, அதையடுத்து மேலே செல்வதாக நினைக்க வேண்டும். ஐந்து பிராகாரங்களையும் கடந்தால், கடவுளது பதத்தை அடையலாம் என்பதை உணர்தல் வேண்டும்.

ஆறுமுக நாவலரும்... அருகில் நிற்பவரும்!

பிராகாரங்களை வலம் வந்து பலி பீடத்தின் அருகில் சென்று, நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத மாத்சரியங்களைப் பலி கொடுத்ததாக உறுதி செய்துகொள்ள வேண்டும்...''

இவையெல்லாம் முறையாகவும், அடைய வேண்டிய உன்னத குறிக்கோளாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு சராசரி மனிதன் கோயிலுக்குள் நுழைந்ததும், 'ஒவ்வொரு கோசத்திலும் உன் ஆத்மாவை உழன்று தெளியவைத்து மேலே அனுப்பிவிட்டாயா?' என்று கேட்டால், நேராகப் பிரசாதம் வாங்கப் போய்விடுவான். அவனால் இந்த நடைமுறைகளைப் பின்பற்றமுடியாது.

ஆனால், அனைவராலும் பின்பற்றக்கூடிய, சாத்தியமான முறை என்னிடம் உள்ளது. அதை நான் பரிந்துரைக்குமுன், கோயில்களில் நாம் காணும் பெரும்பாலான காட்சிகள் சில...

மனதை ஒருமுகப்படுத்தி, பதிலே தெரியாத  இல்லாத கேள்விகளைக் கண்ணீரில் நனைத்து கடவுளிடம் அனுப்பி... மூச்சுத் திணறும் வாழ்க்கை சாகரத்தில் தலைதூக்க, ஒரு நொடிப் பொழுது புத்துணர்வு சுவாசம் கிடைத்ததுபோல், ஒரு நொடிப் பொழுது ஞானம் கிடைத்தால், அதன் வெளிச்சம் இருக்கும் வரையிலும் வாழ்க்கைப் பயணம்; அது தீரும்போது, மீண்டும் அடுத்த ஒளிச் சேகரிப்புக்காக வெளிச்சம் தேடி மீண்டும் கோயிலுக்கு!

அப்படி, இங்கு வந்து மாந்தர்கள் கைகூப்பி வணங்கும்போதுதான் பக்கத்தில் உள்ளவரின் ஃபோன் உரத்த குரலில் சிணுங்கும். மனதை சுலபமாகத் திசைதிருப்பும் ஒரு ரிங்டோன்!

தொடர்ந்து அதைவிடவும் உரத்த குரலில்...

'மாப்ள, கோயில்ல இருக்கேன். அப்புறமா பேசறேன்...'

சிதறும் கவனங்கள்... நழுவும் வெளிச்சங்கள்... பரவும் எரிச்சல்கள்..!

இன்னும்... கீழ்க்காணும் உரையாடல்களை கோயில்களின் பிரார்த்தனை நேரங்களில் நீங்கள் கேட்கவில்லை என்றால், நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

'பத்து நிமிசம் கழிச்சுப் பேசுங்க...''

'என்னது, லோடு இன்னும் வரலியா...?'

'ஐயையோ! அப்படியா, நெசமாவா..?'' தானும் அதிர்ந்து, சக பக்தர்களையும் அதிர வைப்பவர், மறுகணமே எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இறையைத் தொழும் இயந்திரமாக மாறியிருப்பார்.

சிறிய கோயில், பெரிய கோயில் என எந்த விதிவிலக்கும் இன்றி, எங்கும் செல்ஃபோன் வன்முறை.

கோயிலுக்கு உங்களை யாரும் கடத்திக் கொண்டு வரவில்லை. நீங்களாகத்தான் விரும்பி வருகிறீர்கள். வரும்போதே போனை... மிஞ்சிப்போனால் கால்மணி நேரம் இருப்பீர்களா... அந்த நேரத்திலாவது சைலன்ட் மோடில்  வைத்திருக்கலாமே!

'இல்லை, எனக்கு ஒவ்வொரு நொடியும் அழைப்பு வரும். ஒவ்வொரு அழைப்பும் முக்கியமானது. நான் அந்த அளவு முக்கிய மானவன்' என்றால், நல்லது! கடவுள் உங்கள் அளவுக்கு பிஸியானவர் இல்லை. எங்கேயும் ஓடிப் போய்விட மாட்டார். எனவே, நீங்கள் ஓய்வாக இருக்கும்போது கோயிலுக்கு வரலாமே! உங்களாலும் ஒன்றமுடியாமல் அடுத்தவரையும் ஒன்றவிடாமல் செய்துவிட்டு, யாரைத் திருப்தி செய்ய இந்தக் கோயில் செல்லும் சடங்கு?

வந்துசென்ற கோடிக்கணக்கான மனிதர்களின் நம்பிக்கைகள், கண்ணீரில் நெகிழ்ந்த கணங்கள், மகான்களின் தன்னலமற்ற பிரார்த்தனைகள், காற்றில் கலந்திருக்கும் நாயன்மார்களின், ஆழ்வார் களின் பாடல்கள், நாமாவளிகள், கீர்த்தனைகள், ஒலிக்கும் மங்கல இசை, பூஜை மணி, ஆரத்தி தீபம்... 'தான்’ என்ற அகந்தையை விட்டொழித்து ஒரு கணப் பொழுதாவது கடவுளுக்குப் பக்கத்தில் செல்வதற்கு இந்த நெகிழ்வும் சிலிர்ப்புமான சூழலே உதவும் என்கிற நிலையில், அவரைப் பின்னுக்கு இழுப்பது எவ்வளவு பெரிய பாவம்...?

கோயிலிலேயே பொறுமையாகவும், பெருந் தன்மையாகவும் இருக்கவில்லை என்றால், வேறு எங்கு இருக்கப் போகிறோம்?

கோயிலுக்குச் செல்வது புண்ணியமா என்று தெரியாது. ஆனால், கோயிலில் அடுத்தவர் மனம் ஒன்றி வழிபட இடையூறாக இல்லாமல் இருப்பது நிச்சயமாகப் பெரும் புண்ணியம்!