Published:Updated:

நல்லன எல்லாம் தருவாள்!

மே-3 : சித்ரா பெளர்ணமி பி.என்.பரசுராமன்

குழந்தையின் பசியறிந்து அமுதம் ஊட்டுபவள் தாய். 'அன்னையுடன் அறுசுவை போம்’ என்பது ஓளவையார் வாக்கு. பூலோக அன்னைக்கு இவ்வளவு பெருமையென்றால்... தன் குழந்தையைப் போன்று பக்கத்து வீட்டுக்குக் குழந்தையையும் நேசிக்கத் தெரியாத பூலோகத் தாய்க்கே இவ்வளவு பெருமை என்றால், அகில உலகங்களுக்கும் தாயான அம்பிகையின் பெருமையை, யாரால் அளவிட முடியும்? 

தெய்விகத் தாய்மைக்கு அடையாளம்...

நல்லன எல்லாம் தருவாள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தெய்வம் எந்த ஒரு ஜீவனைப் படைத்தாலும், அந்த ஜீவனுக்கு வேண்டிய உணவைப் படைத்துவிட்டு, அதன் பிறகே அந்த ஜீவனைப் படைக்கும். ஆடோ, மாடோ, கன்று ஈனுவதற்கு முன்னால், அவற்றிடம் பாலை உருவாக்கிவிடும். பிறந்த கன்று உடனே தாயிடம் பால் அருந்தும். கன்று பிறப்பதற்கு முன்னதாகவே, அதற்கு வேண்டிய உணவைத் தாயிடம் படைத்ததே... அதுதான் தெய்விகத் தாய்மை! அப்படியான தெய்விகத் தாய்மையையே  சாட்சாத் அம்பிகையையே 'முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள்’ என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

வசந்தமாக வந்து நம்மை வாழ்விப்பவள் அம்பிகை. அதனால்தான், காலங்களிலும் 'வசந்த காலமே’ முதல் இடம்பெற்று இருக்கிறது. அற்குக் கட்டியம் கூறுவதுபோல், மாம்பூக்களின் வாசமும், வேப்பம் பூக்களின் வாசமும் வீசி, மனங்களை வசீகரிக் கின்றன. வருடமும் 'வசந்த ருது’ என்ற வசந்த காலத்துடன் ஆரம்பிக்கிறது.

அப்படிப்பட்ட வசந்த காலம் சித்திரையில் துவங்கு கிறது. எனவே, சித்திரையில் வரும் பெளர்ணமி மிக மிக விசேஷம் வாய்ந்தது. சித்ரா பெளர்ணமி அன்று சந்திரன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, சக்தி மிகுந்த தன் கதிர்களை அப்படியே பூமியில் பாய்ச்சிப் பதிக்கிறது. பற்பல அபூர்வமான மூலிகைகள் அந்தக் கதிர்களை ஏற்று, ஆற்றல் பெறுகின்றன. மேலும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று சந்திரனின் கதிர்களால், பூமியில் சில இடங்களில் (மலைகளில்) உப்பு (நாய்க் குடை போலப்) பூக்கும். இந்த உப்பு மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது.

இவ்வளவு சிறப்புகள் இருந்தும், இவற்றையெல்லாம் அனுபவிக்க, நமக்குக் கொடுப்பினை வேண்டும் அல்லவா? அதற்கு என்ன வழி? அம்பிகையைச் சரணடைய வேண்டியது தான்! அம்பிகையை ஏன் சரணடைய வேண்டும்? தொடர்ந்து படியுங்கள்!

சித்திரகுப்தன் பிறந்த கதை...

எழுதாக் கிளவியான வேதத்தை மூச்சுக் காற்றாகக் கொண்ட சிவபெருமான் அம்பிகையிடம், 'தேவி! அவரவர் செய்யும் புண்ணிய பாவங்களை எழுதிவைக்க ஒருவன் வேண்டும்' என்றார்.

அம்பிகையும், 'ஆமாம் சுவாமி! உங்கள் திருவுளக் கருத்தின் படியே செய்யுங்கள்!' என ஆமோதித்தாள்.

உடனே சிவபெருமான் புன்னகையுடன், ''அப்படியானால், உன் திருக்கரங்களால் ஒரு பொற்பலகையைக் கொண்டு வா'' என்றார். அம்பிகையும் ஒரு பொற்பலகையைக் கொண்டு வந்து சிவபெருமானின் திருமுன்னால் வைத்தாள்.

அந்தப் பொற்பலகையில் ஓர் அழகான வடிவத்தை வரைந்த சிவபெருமான், ''தேவி, இந்த ஓவியத்தைப் பார்!'' என்றார். அம்பிகை தன்னுடைய கருணை பொங்கும் விழிகளால் அந்த ஓவியத்தை ஆழ்ந்து பார்த்து, ''மகனே வா!' என்று சொல்ல, ஓவியக் குழந்தை உயிர் பெற்று வந்தது. அந்தக் குழந்தைதான் சித்திர புத்திரர்!

அம்பிகையின் அருளால், அக்குழந்தை அவதரித்த நாள் சித்ரா பெளர்ணமி. சித்திரத்தில் இருந்து அவதரித்ததால், சித்திரை மாதம் அவதரித்ததால், 'சித்திரபுத்திரர்’ எனத் திருநாமம் பெற்றார். இவரே, பின்னர் இந்திரன்  இந்திராணி தம்பதிக்குக் குழந்தை யாக அவதரித்து, சித்திரக் குப்தன் என்று பெயர் பெற்றார் (இது சுருக்கமான திருக்கதையே). 'குப்தம்’ என்றால் மறைவாக  வெகு ரகசியமாக என்பது பொருள். என்னதான் மறைவாக, வெகு ரகசியமாக நாம் பாவங்கள் செய்தாலும், அவற்றையெல்லாம் குறித்துவைப்பவர், இந்தச் சித்திரகுப்தன்.

ஆசையும் கோபமும் தூண்ட, நாம் பாவங் களைச் செய்கிறோம். அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், அம்பிகையைச் சரண்புக வேண்டும். இதை உணர்த்தும் விதமாக...

தேடியுனைச் சரண் அடைந்தேன் தேசமுத்துமாரி

கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்...

நல்லன எல்லாம் தருவாள்!

என்று பாடத் தொடங்கிய பாரதியார், பாடலை நிறைவு செய்யும்போது, 'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்’ என அறுதியிட்டுக் கூறுகிறார். பாரதியார் மட்டுமல்ல, படைக்கும் கடவுளான பிரம்மதேவரே அம்பிகையைச் சரண் அடைந்து அருள் பெற்ற திருக்கதை உண்டு.

சித்ரா பெளர்ணமியில் கிடைத்த திருவருள்!

பிரம்மதேவரின் பலகாலத் தவத்துக்கு இரங்கி சிவபெருமானும் அம்பிகையும் அவருக்குத் தரிசனம் தந்து, படைக்கும் தொழிலைச் செய்ய ஆற்றல் தந்து அருள் புரிந்தார்கள். அப்படி நான்முகன் அருள்பெற்ற திருத்தலம், 'ஆதிபுரி’ எனும் திருநாமம் பூண்ட திருவொற்றியூர். இங்கே ஸ்வாமியின் திருநாமம் ஆதிபுரீஸ்வரர்; அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி  வடிவுடையம்பாள். பிரம்மதேவர் இங்கு அம்பிகையை வழிபட்ட திருநாள் சித்திரா பொளர்ணமி.

சித்திரா பௌர்ணமி புண்ணிய தினத்தன்று இந்த அம்பிகையுடன் சேர்த்து இன்னும் இரு அம்பிகைகளையும் தரிசிப்பது, காலங்காலமாக இருந்து வருகிறது.

காலையில், சென்னையை அடுத்துள்ள மேலூரில் எழுந்தருளியிருக்கும் திருவுடையம்மன். மதியம் உச்சிப் பொழுதில், திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் வடிவுடை நாயகி. மாலையில் சென்னையை அடுத்த அம்பத்தூர்  திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கும் கொடியிடை நாயகி. இந்த முறைப்படி, இந்த  மூன்று அம்பிகைகளையும் சித்ராபெளர்ணமி தினத்தில் தரிசித்தால், பாவ வினைகள் தீரும்; புண்ணியம் சேரும்.

அடுத்ததாக, நினைப்பவர் மனதையே கோயிலாகக் கொண்டு இன்னல் தீர்க்கும் ஓர் அம்பிகையின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

அன்னையைத் தேடி...

ஆடல் வல்லானான நடராஜர் திருநடனம் புரியும் சிதம்பரத்தில், விபரீதம் விளைந்தது. நாமும்தான் கொஞ்சம் ஆடுவோமே என்று இயற்கைச்சீற்றம் விளைந்ததைப் போல, இடி, மழை, மின்னல் எனும் மூன்றும் கூட்டணி அமைத்து சிதம்பரத்தையே புரட்டிப் போட்டன. உணவும், பஞ்சமும், உயிர்ப் பயமும் ஆட்டிப் படைக்க, அவிழ்த்துக் கவிழ்த்த நெல்லிக்காய் மூட்டையைப்போல மக்கள் சிதறினார்கள். அப்படிக் சிதறியவர்களில், மூன்று குடும்பத்தார்கள் மதுரையை அடைந்தார்கள்.

மன்றாடியார் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் வைர வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்களின்

நல்லன எல்லாம் தருவாள்!

குல தெய்வம் மதுரை மீனாட்சி. அதன் காரணமாகவே அவர்கள், மதுரைக்குச் சென்றார்கள். ஆனால் அங்கும் அவர்களால் தங்க முடியவில்லை. அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று.

அப்போது, அவர்களில் இளையவராக இருந்த மன்றாடியார் ஒருவர் (இனிமேல் இவரை, வைர வியாபாரி என்றே பார்க்கலாம்) மதுரை பொற்றாமரைக் குளத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத் துக்கொண்டார். அதன் மூலம் மீனாட்சி அம்பாளே தன்னுடன் இருப்பதாக, அவருக்கு நினைப்பு. அந்தச் சிறு கல்லும் அவர் மூட்டையில் இடம் பெற்றது.

மதுரையில் இருந்து புறப்பட்ட அவர்களின் பயணம் கேரளா வில் பல்லசேனா என்ற இடத்தை அடைந்ததும் நின்றது.

அங்கிருந்த வளப்பமும், நீர் நிலைகளும், அவற்றுக்கு மேலாக, அங்கிருந் தவர்களின் தூய்மையான உள்ளங்களும், வைர வியாபாரி களின் பயணத்தை நிறுத்தின. எல்லோரும் அங்கேயே நிலைத்து, நன்றாகச் செழித்து வாழ்ந்தார்கள்.

தேடி வந்து கோயில் கொண்டாள்!

மதுரையில் இருந்து கல்லைக் கொண்டு வந்த வியாபாரி, அதைப் பிரியாமல் மீனாட்சியாகவே கருதி வழிபட்டு வந்தார். அதேநேரம், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தால், மதுரைக்குப் போய் அன்னை மீனாட்சியைத் தரிசித்து விட்டே பயணத்தை மேற்கொண்டார்.

வியாபாரம் நன்கு வளர்ந்தது. கூடவே, வைர வியாபாரியின் வைரம் பாய்ந்த உடலில் முதுமையும் வளர்ந்தது. அவர் சொன்ன படியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவரது உடல், இப்போது தான் இழுத்த இழுப்புக்கு அவரை வளைத்துப் பாடாய்ப் படுத்தியது. இந்த நிலையிலும், ஒருமுறை அவர் மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். புறப்பட்டவர், அந்த ஊர்க் குளக்கரையில் மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்து விட்டு, அவற்றை மறைத்தாற் போன்று ஒரு பனையோலைக் குடையையும் வைத்துவிட்டு குளத்தில் இறங்கி நீராடினார்.

நீராடும்போது, அவரது உள்ளம் குமைந்தது. 'தாயே! தேவி மீனாட்சி! உன் தரிசனம் எனக்குக் கிட்டாதா? முதுமை என்னை முடக்கிவிட்டதே! தரிசனம் தரக்கூடாதா தாயே!' என்று புலம்பிய படியே, நீராடிவிட்டுக் கரையேறினார்.

அதன்பின், கரையில் தான் வைத்திருந்த பனையோலைக் குடையையும், மூட்டை முடிச்சுகளையும் அவர் எடுக்க முயற்சி செய்தபோது, அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை. உடனே, ஒட்டுமொத்தமாக எடுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு, மூட்டையில் இருந்த பொருட்களை தனித்தனியே வெளியில் எடுத்தார். கடைசியில்... அவர் மீனாட்சி அம்பாளாகக் கருதி வைத்திருந்த சிறு கல் மட்டும் எஞ்சி இருந்தது. அதை அசைக்கக் கூட முடியவில்லை. அதேபோல் குடையையும் நகர்த்தமுடிய வில்லை!

வைர வியாபாரி மனம் நடுங்கிப்போய், கேரளாவில் அப்போ திருந்த பிரபல ஜோதிடரிடம் நடந்தவற்றையெல்லாம் சொல்லி 'என்னவோ தெரியவில்லை, அம்பிகைக்கு என் மேல் கோபம்' எனப் புலம்பினார்.

ஜோதிடர் சற்று நேரம் ஜோதிடம் பார்த்துவிட்டுக் கூறினார்:

'ஐயா, வைர வியாபாரியே! அம்பாளுக்குப் போய் உங்கள் மேல் கோபமா? கருணையை அள்ளிக் கொட்டியிருக்கிறாள் அவள். உங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, உங்கள் பக்திக்காக அவளே இங்கு வந்துவிட்டாள். அதனால்தான், அவள் குடிகொண்ட அந்தக் கல்லையும் குடையையும் உங்களால் எடுக்க முடியவில்லை. அம்பாள் குடிகொண்ட அங்கேயே கோயில் உருவாகட்டும். அனைவரும் அவளை வணங்கி அருள் பெறட்டும்' என்றார்.

நல்லன எல்லாம் தருவாள்!

வைர வியாபாரிக்குக் கண்கள் பனித்தன. கைகளைக் குவித்து 'தாயே! இந்த எளியேனுக்காகத் தேடி வந்து தரிசனம் தந்தாயா?'' என்று நெக்குருகியவர், கல்லும் குடையும் இருந்த இடத்திலேயே அன்னை மீனாட்சிக்கு அழகானதோர் ஆலயம் எழுப்பினார்.

கல்லிலும் குடையிலும் அம்பிகை குடிவந்ததால், அந்த இடம் 'குடமந்து’ என இன்னும் அழைக்கப்படுகிறது. அம்பிகை அருள் வெளிப்பட்ட, 'சித்திரை அஸ்தம்’ அன்று இந்த திருத்தலத்தில் வெகு விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

கேரளாவில், பாலக்காட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவில் 'மீன் குளத்தி அம்மன் கோயில்’ என அழைக்கப்படுகிறது. அன்னை மீனாட்சி, துள்ளிக்குதிக்கும் மீன்கள் நிறைந்த குளத்தின் கரையில் எழுந்தருளி இருப்பதால், 'மீன் குளத்தி அம்மன்’ என்ற பெயரும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

இத்திருக்கோயிலுக்கு பிள்ளை வரம் கேட்டு வருபவர்கள், கணவன்  மனைவி பிணக்கு தீர வருபவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டி வருபவர்கள், ஆரோக்கியம் வேண்டி வருபவர்கள்... எனப் பலரும், குறைகள் நீங்கி மகிழ்வதும், நன்றிக்கடனாக மறுபடியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுப் போவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

'சந்திரவதனி’ எனத் துதிக்கப்படும் அம்பிகை சந்திரனைப் போன்ற அழகு நிறைந்தவள் மட்டுல்ல, சந்திரனைப் போன்றே குளுமையும் நிறைந்தவள். அப்படியான சந்திரவதனி, நம் தாபத்தை யும், துக்கத்தையும் தணித்து, நமக்கு சர்வ மங்கலங்களையும், நல்லன எல்லாவற்றையும் வழங்கிட, அவளை வேண்டிப் பணிவோம்.