சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ
ராமன் எங்கே?
ராமன் முடிசூட்டு விழாவைப் பாடும் கம்பனின் பாடலில் அனுமன், அங்கதன், பரதன், சத்ருக்னன், இலக்குவன், சடையப்ப வள்ளல் ஆகியோர் இடம் பெறுகின்றனர். ஆனால் யாருக்கு முடி

சூடுதலோ அவன் பெயர் இடம் பெறவில்லை. ஏன் தெரியுமா?
என்னையும் எனது மனைவியையும் ஒரு விருந்திற்கு அழைத்திருந்தார்கள். அவள் வர இயலவில்லை. நான் மட்டும் சென்றிருந்தேன். விருந்தில் கலந்து கொண்டு திரும்பியதும் என் மனைவி 'விருந்தில் என்ன பரிமாறினார்கள்’ என்று கேட்டாள். நான் 'சோறு’ என்று ஆரம்பித்தேன். அவள் தடுத்து 'சோறு இல்லாமலா விருந்து, அதைச் சொல்வானேன்! அதை விடுத்து மற்ற பொருட்களைக் கூறுங்களேன்'' என்றாள்.
அது போல, யாருக்கு முடிசூட்டு விழாவோ அவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லையல்லவா? ஆகவேதான் கம்பன் அப்பாடலில் ராமனை விட்டு விட்டான்.
கம்பன் விழாவில் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்
* 1.10.1978 ஆனந்த விகடன் இதழில் இருந்து...
வரதட்சிணை கேட்காதே!
'கன்யா சுல்கம்’ என்று நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பது கன்னிகைக்கு மாப்பிள்ளையின் தகப்பனார் கொடுக்க வேண்டிய பணமாகும். திருமாங்கல்யம், புடவை, நகைகள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வாங்க வேண்டியவை. பெண்ணின் தகப்பனாரிடம் வரதட்சிணை வாங்குவது சரியல்ல. இதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை. வரதட்சிணை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'வரதட்சிணை வாங்குவதில்லை’ என்று மனத்துக்குள் நாமே சட்டம் செய்து கொள்ள வேண்டும்.
வரதட்சிணை வாங்கியதாகப் புராணத்திலும் கிடையாது. வில்லை முறித்தவுடன் ராமன் சீதையைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அது தகப்பனார் நிச்சயம் செய்யவேண்டிய விஷயம் என்று ராமன் கூறிவிட்டான். தசரத சக்ரவர்த்தி பல முனி சிரேஷ்டர்களை தமது சபைக்கு வரவழைத்து ஜனக மகராஜனின் பூர்வோத்திரம், குடும்பச் சிறப்பு ஆகியவற்றைக் கேட்டறிந்துகொண்டு, பின்னர்தான் கல்யாணத்திற்கு இசைந்தார். உடனே முதலில் கல்யாணச் செலவுக்கான பணத்தை ஜனகனுக்கு அனுப்பி வைத்தார். ஜனகனிடம் தசரதன் வரதட்சிணை கேட்கவில்லை.
ஸ்ரீஅஹோபிலமடம் ஜீயர்.
* 16.2.1964 ஆனந்த விகடன் இதழில் இருந்து...
''வண்மை இல்லை; உண்மை இல்லை!'
''அந்தச் சமுதாயத்திலே வண்மையும் இல்லை, உண்மையும் இல்லை!' என்று பிரசங்கிக்கிறான் கவிஞன். கேட்கிறவர்கள் பிரமித்துப் போகிறார்கள். அடுத்து, ''வலிமையும் இல்லை, பேரறிவும் இல்லை!' என்று வருணிக்கிறான். திடுக்கிட்டுப் போகிறார்கள், ''அப்படியும் ஒரு சமுதாயமா?' என்று.
அருகே ஆருயிர்த் தோழனான சடையப்பன் நின்றுகொண்டிருந்தான். கவிஞன், வள்ளலை நோக்கிக் கொஞ்சம் குறும்பாகச் சிரித்துக்கொண்டு, ''நான் கண்ட அந்த லட்சிய சமுதாயத்திலே, அன்பா! உன்னைப்போன்ற வள்ளல்களும் இல்லை!' என்று சொல்லிவிட்டான்.
வள்ளலும் இளநகை அரும்பி, ''கவிஞனே! உன்னைப் போன்ற மேதாவிகள்தானே ஒரு சமுதாயத்தைப் போஷிக்கும் உண்மையான வள்ளல்கள்?' என்று கேட்டான். கம்பனோ, ''அங்கே மேதாவியும் இல்லை!' என்று தலை அசைத்துக்கொண்டே, பாடினான் அந்த அதிசயமான சமுதாயத்தை:
வண்மை இல்லை, ஓர்
வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர்
செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய்
உரையி லாமையால்;
ஒண்மை இல்லை, பல்
கேள்வி ஓங்கலால்!
ஒரு புறாவுக்காகத் தன் உடம்புச் சதையை அரிந்துகொடுத்த சிபிச் சக்கரவர்த்தி தோன்றிய

ராஜ்யத்திலே 'வண்மை’ இல்லையாம். 'அந்த ராஜ்யமே லட்சிய சமுதாயம் ஆகும்போது வண்மை இருக்க முடியாது!’ என்கிறான். ஏன்? ஒரு கைக்குக் கீழே தாழ்ந்திருக்கும் தரித்திரக் கைகள் இரண்டு என்பதை வெளியிடுவதுதானே வண்மை?
தருமபுத்திரன், ஆயிரக்கணக்காண ஏழைகளுக்குச் சாப்பாடு போட்ட பின்பே தான் சாப்பிடுவதாகச் சொன்னானாம் ஒரு பெரியவரிடம். அவரோ, ''அட பாவி! அத்தனை ஏழைகளா உன்னுடைய ராஜ்யத்திலே? அதுவும் ஒரு ராஜ்யமா?' என்று வருந்தினாராம், அந்த வண்மையைக் குறித்து.
'திண்மை’ வாய்ந்த வல்லரசு, எதிர்ப்பை யும் பகைமை உணர்ச்சியையும் வெளிப்பட முடியாதபடி அடக்கிக்காட்டுவதுதானே? பகையே இல்லை என்றால், கொலைக் கருவிகளோடு கூடிய வல்லரசு எதற்காக?
அரிச்சந்திரன் தோன்றிய நாட்டிலே உண்மையும் இல்லையாம். 'உண்மைக்கு ஒருவன்’ என்று புகழப்பட்டான் அரிச் சந்திரன். அப்படியானால் பிறரெல்லாம் பொய்யர்களா? அப்படியே ஒருவனை மேதாவியென்று சுட்டிக் காட்டுவதற்கும், கல்வி கேள்வியற்ற பாமரர்கள் பலர் இருக்க வேண்டியதுதானே?
எனவே, கம்பன் கண்ட லட்சிய சமுதாயம் வேறு விதமாக அமைந்திருந்தது. அங்கே வறுமை இல்லாததால் வண்மையும் இல்லை; பகைவர் இல்லாததால் பராக்கிரமமும் இல்லை; பொய் இல்லாததால் உண்மையும் இல்லை. நாடெங்கும் கல்வி கேள்விகள் ஓங்கிக் கொண்டேயிருந்தன; ஆகவே அந்த நாட்டில் 'இவர் பண்டிதமணி, அவர் மகா வித்துவான்; இவர் மகாமகோபாத்தியாயர்; அவர் மேதாவி' என்றெல்லாம் சுட்டிக் காட்ட முடியாது.
மண்ணிலே இறங்கிய விண்ணுலகம்!
மோட்ச லோகத்துக்கு எத்தனையோ ஏணிகள், எத்தனையோ சமயவாதிகளால் தயார் செய்யப்பட்டிருக்கின்றன! 'இந்த லோகத்திலுள்ள குறைபாடுகளையெல்லாம் நிறை செய்யும் பரிபூர்ண லோகம் அது: அங்கே ஏறிப் போய்விட்டால் ஒரு கவலை கிடையாது, ஒரு பயம் கிடையாது; ஒரே பேரின்பம்தான்!' என்று கருதித்தானே அத்தனை ஏணிகள் சார்த்தப்பட்டிருக்கின்றன?
ஆனால், அந்தப் பரலோகத்தில் இருப்பவர்களோ, 'ஏற வைத்த ஏணி வழியாக இறங்கி வந்துவிடலாமா?' என்று யோசிக்கிறார்களாம். 'இது என்ன ஹாஸ்யம்? என்ன வினோத, விபரீத யோசனை! என்ன நாஸ்திக புத்தி!' என்றெல்லாம் ஆஸ்திகர்கள் அதிசயப்படலாம்.
அப்படியானால் அவர்கள் கம்ப ராமா யணம் நகரப் படலத்தின் முதற் செய்யுளை வாசித்துப் பார்க்க வேண்டும்.
செவ்விய, மதுரம் சேர்ந்தன, பொருளில்
சீரிய, கூடிய, தீஞ்சொல்
வவ்விய கவிஞர் அனைவரும்,
வட நூல்முனிவரும் புகழ்ந்தது; வரம்பில்
எவ்வுல கத்தோர் யாவரும் தவஞ்செய்(து)
ஏறுவான் ஆதரிக் கின்ற
அவ்வுல கத்தோர் இழிவதற்(கு), அருத்தி
புரிகின்ற(து) அயோத்திமா நகரம்.
பூலோகம் முதலிய பல உலகங்களி லிருந்தும் ஏணி வைக்கப் பார்க்கிறார் களாம் பரலோகத்தை நோக்கி. அந்த ஏணிகளுக்கெல்லாம் பொது வாகத் தவம் என்ற ஒரு பெயர் கொடுக்கப்பட் டிருக்கிறது, இந்தப் பாட்டிலே. 'அப்படி ஒரு ஏணி கிடைத்தால்...' என்று அந்தப் பர மண்டலவாசிகளும் யோசிக்கிறார்களாம். 'நாம் இறங்கி விடலாமே அயோத்திமா நகரத் திற்கு!' என்றுதான் ஆசைப்படுகிறார்களாம்; தவம் செய்யப் பார்க்கிறார்களாம்.
நல்லது; 'இந்துக்களுக்கு மறுலோக மனப்பான்மை வரம்பில்லாமல் இருக்கிறது' என்று பழிப்பவர் பழிக்கிறார்கள். கம்பனோ, 'பரலோகவாசிகளுக்கும் இகலோக மனப்பான்மை வந்துவிட்டது, அயோத்தியைப் பார்த்ததும்!' என்று பாடுகிறான்.
கலா மோகினிகள்
வானுற நிமிர்ந்தன; வரம்பில் செல்வத்த;
தானுயர் புகழெனத் தயங்கு சோதிய;
ஊனமில் அறநெறி உற்ற; எண்ணிலாக்
கோன்நிகர் குடிகள்தம் கொள்ளை சான்றன!
வானளாவிய செல்வ மாளிகைகளில், வானளாவிய புகழோடு வாழும் பெருமக்களைப் பார்க்கிறோம். அந்த மாசிலா வெண் புகழின் அறிகுறியாக விளங்குகிறதாம் மாளிகைகளின் ஜோதி. இந்த மாளிகைகளில் தர்ம ஜோதியான உள்ளங்களைச் சந்திக்கிறோம். 'இந்த ராஜதானியில் அரசன் ஒருவனில்லை; எண்ணில்லாத அரசர்கள் இருக்கிறார்கள்!' என்ற பிரமிப்பும் ஏற்படுகிறதாம். அதாவது, குடிகளில் ஒவ்வொருவரும் இந்த நாட்டு மன்னனைப் போலவே பெருவாழ்வு வாழ்கிறார்களாம்.
என்ன புதுமையான கொள்கை, பாருங்கள்! புதுமைக் கவியான பாரதி சொல்லுகிறாரே, 'நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்!' என்று. இதே எதிர்கால அரசியல் கொள்கை, ராம ராஜதானியில் அனுஷ்டானத்தில் இருக்கிறதாம்.
இத்தகைய 'ஜோதி மாளிகை'கள் இரவிலும் இப்படி ஒளி வீசுகின்றனவே, இந்த ராஜாங்கத்திலே? நெய் விளக்கா, மாணிக்க விளக்கா? கவிஞனுக்கும் சந்தேகம் ஏற்பட்டுத்தான் தெளிகிறது.
திணிசுடர் நெய்யுடைத் தீவி ளக்கமோ?
மணிவிளக்(கு) அல்லன; மகளிர் மேனியே!
'நெய் விளக்கு வேண்டாம்; மணி விளக்கும் வேண்டாம் இந்த மாளிகைக்கு! இந்தப் பெண்மணிகளின் மேனியாகிய சுடர்விளக்கே போதும்!' என்று தோன்று கிறதாம். இப் பெண்களின் ஜோதிக்குக் காரணமோ, உள்ளத்திலே ஒளிரும் தர்ம மயமான சௌந்தரிய ஜோதி என்பது தெரிந்ததுதானே, இந்தத் தர்ம ராஜ்யத்திலே!
இப் பெண்மணிகளில் சிலர் கலா மோகினிகள். இவர்கள் சித்திரம் எழுதும் காட்சி ஒன்றைக் கவிஞன் காட்டுகிறான்.
தொழுதகை மடந்தையர் சுடர்வி ளக்கெனப்
பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுதுசித் திரங்களும் இமைப்பி லாதவே?
இவர்கள் தாங்கள் எழுதும் சித்திரங் களிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். எழுது கோல் தொடத் தொட, அந்தச் சித்திரங்கள் அப்படியே உயிர் பெறுகின்றன.
உயிர் பெற்று, அவை கண் மலர்ந்து முகம் மலர்ந்து அப்பெண்மணிகளை நோக்குகின்றன. ஆனால், 'கண் இமைக்க வில்லையே! சித்திரம்தானோ?' என்ற சந்தேகமும் ஏற்படத்தான் செய்கிறது நமக்கு.
கவிஞனோ நம்மை நோக்கி,
சுடர்வி ளக்கெனப் பழுதறு மேனியைப்
பார்க்கும் ஆசைகொல்?
என்று வேறொரு சந்தேகக் கேள்வி போடுகிறான். ''அந்தச் சுடர் மேனியைப் பார்க்கும் ஆசையினால்தானோ, அவை அப்படிக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன?'
ராமராஜ்யத்தின் தவப் புதல்விகளான இக் கலா மோகினிகளைப் பார்த்ததும், 'விண்ணும் மண்ணும் சந்திப்பதற்குத் தவம் என்ற அவ்வளவு கஷ்டமான ஏணிகூட வேண்டாம்; கலை என்ற மோகன ஏணியே போதும்!' என்று தோன்றுகிறது. ஆனால் கலையும் கலைஞர்களின் தவம்தானே?
ஓவியம்: சேகர்
* 27.2.44 மற்றும் 12.3.44
ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...
நம் பாட்டிகளும் விஞ்ஞானிகளும்!
''தெற்குத் திசையில் எமன் இருக்கிறான், அவன் பக்கம் கால் நீட்டிப் படுக்கக்கூடாது. ஆகையால் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே' என்று நம் வீட்டில் பாட்டிமார்கள் சொல்வதுண்டு. பாட்டிமார்கள் சொல்வதெல்லாம் மூடப் பழக்கங்கள் என்று சொல்லும் நம்மில் பலருக்குச் சரியான சூடு கொடுத்திருக்கிறார், ஒரு ஜெர்மன் விஞ்ஞானி. ''வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால், பூமியின் காந்த சக்தி உங்களைக் கவர்ந்து இழுக்கும் மயக்கம் வரும். தலை சுற்றல் ஏற்படும் பைத்தியம் கூடப் பிடிக்கலாம். அப்படிப் பைத்தியம் பிடித்த பலர் இப்போது ஜெர்மனியில் இருக்கிறார்கள்' என்கிறார் அந்த விஞ்ஞானி.
2.2.1964 ஆனந்த விகடன் இதழில் இருந்து...