Published:Updated:

ஜய ஜய சங்கர !

அரங்கத்தில்... ஆதிசங்கரர்!வீயெஸ்வி

த ரீதியான குழப்பங்கள் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில்ஸ்ரீ சங்கரரின் அவதாரம் நிகழ்ந்திருக்கிறது. பல்வேறு மத ஸ்தாபகர்கள் பலவகையான தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி, மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். பல்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளானது இந்து மதம். 

அதர்மம் தலை தூக்கியது. தர்மம் நிலை குலைந்தது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வாக்குக் கொடுத்த 'சம்பவாமி யுகே யுகே’வுக்கு அவசரமும் அவசியமும் ஏற்பட, இந்தப் புண்ணிய பூமியில் சங்கரர் அவதரித்தார்.

தனியொரு மனிதராகக் களத்தில் இறங்கி, எதிர்த்து நின்றவர்களுடன் வாதப்போர் புரிந்து, அத்வைத தத்துவத்தை அனைவரும் உணர்ந்து ஒப்புக்கொள்ளும்படியாகச் செய்த மகான் சங்கரர். முப்பத்திரண்டே வயதுக்குள் பாரத தேசத்தை மும்முறை வலம்வந்து, சீடர்கள் பலரைத் தயாரித்து, ஷண்மதங்களை ஸ்தாபித்து, காவிய நூல்கள் பல படைத்து, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் எழுதி, நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட பின்னரும் தலைசிறந்த துறவியாக, ஒப்பற்ற ஞானகுருவாகப் போற்றப்பட்டு வரும் புண்ணிய புருஷர் அவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேரள தேசத்தில், திருசிவப்பேரூர் என்ற திருச்சூருக்குத் தென்கிழக்கே 32 மைல் தொலைவில் இருக்கிறது காலடி. இங்கு அறிஞராக விளங்கிய வித்யாதிராஜனின் புதல்வன் சிவகுரு. ஞானத்தில் பரமசிவன்.

ஜய ஜய சங்கர !

சிவகுருவுக்குத் திருமணமாகி (மனைவி ஆர்யாம்பா) வருடங்கள் பல கடந்துவிட்ட பின்னரும், புத்திர பாக்கியம் கிட்டவில்லை. பரம சிவனை பூஜிக்கிறார்கள். கருணை கொண்டு, சிவ குருவின் கனவில் தோன்றுகிறார் பரமசிவன்.

'அந்தணரே... உமக்கு எப்படிப்பட்ட புதல்வன் வேண்டும்? உலகம் யாவற்றையும் உண்மையாக உணர்ந்து தெளிந்தவனும், எல்லா நற்குணங்களுடன் விளங்குபவனும், ஆனால் நீண்ட ஆயுள் இல்லாதவனுமாக ஒரு புதல்வன் வேண்டுமா? அல்லது, இதற்கு நேர்மாறான குணங்களைக் கொண்ட, ஆனால் நீண்ட காலம் ஜீவித்திருக்கும் நூறு புதல்வர்கள் வேண்டுமா?’ என்று கேட்கிறார். ஆச்சரியமாக, ஆர்யாம்பாவுக்கும் அன்றைக்கு இதே கனவு தோன்றியிருக்கிறது. 'ஞானமும் நற்குணங்களும் நிறைந்த சத்புத்திரனே எங்களுக்கு வேண்டும்!’ என்று இருவரும் ஒரே குரலில் சொல்லி, பரமேஸ்வரனை நமஸ்கரித்தார்கள். 'சரி, என் அம்சமே புதல்வனாக உங்களுக்கு அமைவான்' என்று அருளி, மறைந்துவிட்டார் பரமேஸ்வரன்.

ஐஸ்வர்யமான தேஜஸ், ஆர்யாம்பாவின் வயிற்றில் சிசுவாக உருக் கொண்டது. பரம புண்ணி யமான அந்த அவதாரம், ஒரு நந்தன வருஷத்தில் சுக்ல பஞ்சமியில், சூரியன் நடு உச்சியிலிருக்கும் மத்தியான வேளையில் நிகழ்ந்தது. அன்றைக்கு, பரமசிவனை அதிதேவதையாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரமும்கூட!

ஸ்ரீ சங்கரர் அவதரித்தார்.

ஈஸ்வரனுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்கும்போது, குழந்தைக்கு சங்கர நாமாவைச் சூட்டியதேன்?

'சங்கரம் லோக சம்கரம்’ எனும்படி, லோகத்துக்கெல்லாம் நல்லது செய்பவராக ஈசன் அவதரிக்கும்போது, அவருக்குச் 'சங்கரன்’ என்று பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று ஓர் உள்ளுணர்வு சிவகுருவுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

தேசமொழி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றின் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை ஐந்து வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் சங்கரர். குருகுல வாசம் செய்து, எட்டு வயதுக்குள் மற்ற எல்லா சாஸ்திரங்களையும் படித்துக் கரைகண்டுவிட்டார். சாஸ்திரங்கள் பல படித்தாலும், அவற்றின் சின்னச் சின்ன ஆனந்தங்கள் எல்லாம் அத்வைதப் பேரானந்தத்தில் அமிழ்ந்து கிடப்பவைதான் என்பது சங்கரருக்குப் புரிந்தது. அத்வைத வித்யா மகாநதியிலேயே திளைத்துக் கொண்டிருந்த அவர், அவதார காரணத்தை முன்னிட்டு மற்ற

சாஸ்திரங்களையும் பூர்த்தியாகக் கற்றுத் தேர்ந்தார்.

ஜய ஜய சங்கர !

குருகுலவாச காலத்தில் வீடு வீடாகப் போய் பிக்ஷை எடுத்து வந்த சங்கரர், ஒருநாள் ஏழை அந்தணர் வீட்டுக்குச் செல்கிறார். பிக்ஷை இடுவதற்கு வீட்டில் எந்த உணவும் இல்லை. கலங்கிய அந்தணரின் மனைவி, வாடியிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து கொடுத்து, ''மன்னிக்க வேண்டும்! என்னிடம் இப்போது இருப்பது இந்த ஒரு நெல்லிக்கனி மட்டும்தான்...' என்கிறார், கண்களில் நீர் வழிய.

கருணை உள்ளம் படைத்த சங்கரர், அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கி, சுபிட்சம் அருள, செல்வம் தரும் தெய்வமான திருமகளை வேண்டித் துதித்து, ஒரு ஸ்தோத் திரம் பாடுகிறார். அதுவே 'கனகதாரா ஸ்தவம்’. சங்கரரின் வாக்கிலிருந்து பிறந்த முதல் ஸ்துதி இதுதான்.

மகாலட்சுமியிடம் மன்றாடும் விதமாக, இந்த ஸ்லோகங்களில் யாசிக்கிறார் சங்கரர். ''பொருளில்லாமல் உணவு, உடை, வீடு என எல்லாவற்றுக்கும் தவிக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். இந்தக் குழந்தையை வறுத்தெடுக்கும் ஜன்மாந்திர பாபத்தை உன் குளிர்ந்த சுபிட்சமானது நிவர்த்தி செய்யட்டும். எத்தனையோ காலமாக சுமந்து வந்த பாபத்தைப் போன இடம் தெரியாமல் நிரந்தரமாக ரொம்பத் தொலைவுக்கு விரட்டி, மழையைக் கொட்டட்டும்...' இப்படி, ஸ்தோத்திரம் முழுவதும் சங்கரர் பாடி முடிக்க, மகாலட்சுமி அந்தக் குடிசையைச் சுற்றி ஸ்வர்ணத்தினாலான நெல்லிக்கனிகளாகவே பளபளவென்று பொழிந்துவிட்டாள்.

முதலில், அந்தணரின் மனைவி கண்ணீர்த் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து, சங்கரரின் வாக்கிலிருந்து ஸ்தோத்திர தாரை கொட்டியது. அதைக் கேட்டு மகாலட்சுமி கனக தாரையைக் கொட்டிவிட்டாள்!

இதுபோல் எத்தனை எத்தனை அற்புதங்கள் ஆதிசங்கரர் வாழ்வில்?!

எட்டு வயதில் ஆற்றில் நீராடும்போது, சங்கரரின் காலை முதலை ஒன்று கவ்வியிழுக்க, அதையே காரணமாகக் கொண்டு அன்னையின் சம்மதம் பெற்று சந்நியாஸாச்ரமம் ஏற்றது, நர்மதை நதிக் கரையில் குருநாதர் கோவிந்த பகவத்பாதரைச் சந்தித்து உபதேசம் பெற்றது, காசியில் கங்கைக்குச் செல்லும் வழியில் புலையன் ஒருவனின் ஞானம் கண்டு நமஸ்கரித்து மனீஷா பஞ்சகம் அருளியது, பிரயாகையில் குமாரிலபட்டரைச் சந்தித்தது, அவருடைய அறிவுரைப்படி மாஹிஷ்மதி நகரத்துக்குச் சென்று மண்டனமிச்ரருடன் விவாதம் புரிந்தது, 'காலடி'யில் தாய் ஆர்யாம்பாள் இறந்துபோக, தமது யோகசக்தியால் அவருடைய உடலை எரியூட்டியதுடன், மாத்ருகா பஞ்சகத்தைப் பாடிக் கரைந்து உருகியது... என, ஆதிசங்கரரின் வரலாறு சிலிர்ப்பூட்டக்கூடியது.

நந்தன வருஷம் வைசாக சுக்ல பஞ்சமி யில் அவதரித்த சங்கரருக்கு, ரக்தாக்ஷி வருஷம் வைசாக சுக்ல பஞ்சமியோடு 32 வயது பூர்த்தி யானது. தொடர்ந்து வந்த ஏகாதசியோடு சரீர யாத்திரையை முடித்துக்கொண்டு, அகண்ட சைதன்யமாகிவிட வேண்டும் என்று நினைத்தார் சங்கரர். இறுதியாக அவர் இயற்றியது, 'ஸோபாந பஞ்சகம்’.

ஜய ஜய சங்கர !

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் அவதார வரலாறு எத்தனை முறை சொல்லக் கேட்டாலும், எத்தனை புத்தகங்களில் படித்தாலும் சலிப்பதில்லை. திரையிலும், நாடக மேடையிலும் திரும்பத் திரும்ப நடிக்கப் பெற்றாலும், அந்த மகானின் புனிதக் கதை காண்போரை அலுக்கச் செய்வதில்லை (ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்க்கை அற்புதங்கள் குறித்த விரிவான தகவல்களை  www.vikatan.com ல் காணலாம்).

இந்தத் தத்துவ மகா மேதையின் புண்ணிய வரலாற்றுக்கு நாடக வடிவம் கொடுத்து 'பஜ கோவிந்தம்’ என்று தலைப்பிட்டு மேடையேற்றியிருக்கிறார், மகாலட்சுமி லேடீஸ் நாடகக் குழுவை நடத்தி வரும் பாம்பே ஞானம். சென்ற வருடம் இந்தக் குழு மேடையில் நடித்த 'போதேந்திராள்’ நாடகம் கொடுத்த ஊக்கமும், உந்துதலும்தான் இப்போது ஆதிசங்கரரின் கதையைக் கையில் எடுக்க உதவியிருக்க வேண்டும்.

காஞ்சி மகா பெரியவர், ஆதிசங்கரரின் வரலாற்றைச் சொல்வதாக நாடகம் அமைக்கப் பட்டிருக்கிறது. எனவே, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாடகம் பயணிக்கிறது. சங்கர மடத்தை ஸ்தாபித்தவரின் சிறப்புகளை மகா பெரியவர் தன் பக்தர்களுக்குச் சொல்ல, பின் நோக்கிச் சென்று ஆதிசங்கரரின் அவதார மகிமை கண்முன் விரிகிறது. அதைத் தவிர நடுநடுவே, மைக்கில் ஒலிக்கும் குரல் வழியாகவும் பாம்பே ஞானம் கதை சொல்வது எதற்காக என்பது விளங்கவில்லை. அதேபோல், காஞ்சி முனிவர் நிகழ்த்திய அற்புத, அதிசயங்கள் சிலவற்றையும் நாடகத்தில் இடைச் செருகலாகச் சொல்ல முற்பட்டிருப்பதால், ஆதிசங்கரர் கதையில் ஒரு சில சம்பவங்கள் சொல்லாமலேயே விடுபட்டுப் போய்விட்டன. டூஇன்ஒன் எதற்கு? மகா பெரியவரின் கதையை வைத்து தனியாகவே நான்கு நாடகங்கள் மேடையேற்ற முடியுமே!

பெண்களே அத்தனை வேடங்களையும் ஏற்றிருக்கிறார்கள். வசனங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, நடிப்பவர்களுக்கு வாயசைப் பது மட்டுமே வேலை! அதைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

எட்டு வயது சங்கரனாக அருஷியும், வயதான சங்கரராக பிரியங்காவும் கச்சிதம். காஞ்சி முனிவராக நடித்திருக்கும் பெண்மணி மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுவிடுவது நிஜம்! அவருக்காகக் குரல் கொடுத்திருக்கும் கே.சீனி வாசன், மகா பெரியவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவராம்.

ஏனோதானோ என்றில்லாமல், காட்சி அமைப்புகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டி ருக்கிறார் பாம்பே ஞானம். முதலைக் காட்சி, குமாரிலபட்டரின் பிராயச்சித்த சம்பவம் மாதிரியானவை 'வாவ்’!

சமூக நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் பாம்பே ஞானம். அடுத்த படைப்பிலும் இன்னொரு அவதார புருஷரின் கதையைத்தான் மேடையேற்றப் போகிறார். யாருடையது என்பது சஸ்பென்ஸ்!

படங்கள்: தி.ஹரிஹரன்