Published:Updated:

கண்டமனூரில் கள்ளழகர் !

ம.மாரிமுத்து

துரை மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, அழகர் கோயில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு எழுந்தருளும் வைபவம் குறித்து நமக்கெல்லாம் தெரியும். அதேபோல், கண்டமனூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரங்க நாத பெருமாளும் வருஷம்தோறும் கள்ளழகர் வேடம் பூண்டு, ஆற்றில் இறங்குகிறார். 

சுமார் 300 வருஷங்களுக்கு முன், ஜமீனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த 64 கிராமங்களுக்குத் தலைமையிடமாக இருந்தது கண்டமனூர். திருமலை நாயக்கர் காலத்தில், ஆந்திரத்தில் இருந்து பெருமளவு மக்கள் இங்கே குடியேறினர். தீவிர வைஷ்ணவர்களாக இருந்த அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவின்போது, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைத் தவறாமல் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனப் பகுதியாக இருந்தபடியால், மதுரைக்குச் செல்வது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, கள்ளழகர் கோயிலைப் போலவே தங்கள் ஊரிலும் ஒரு கோயிலைக் கட்டி, அங்கே ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

கண்டமனூரில் கள்ளழகர் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைப் போலவே, இங்கும் சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து, கோயிலை விட்டு வெளியில் புறப்பாடாகிறார். முதல்நாள் ராஜகம்பளத்தார் திருவீதியில் மண்டகப்படி கண்டு, அங்கேயே தங்குகிறார். இரண்டாம் நாள் கண்டமனூர் மேலத்தெருவிலும்,  மூன்றாம் நாள் தெற்குத்தெருவிலுமாக மூன்று நாட்கள் உள்ளூரிலேயே கருட வாகனத்தில் பவனி வருகிறார். நான்காம் நாள், அருகில் உள்ள கோவிந்த நகரத்துக்குச் செல்கிறார்.

கண்டமனூரில் கள்ளழகர் !

அடுத்த நாளான சித்ரா பௌர்ணமியின்போது, கள்ளழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, கோவிந்த நகரத்தில் உள்ள வைகை ஆற்றில் இறங்குகிறார். மதுரையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நினைவுகூர்ந்து கோபம் கொண்டவராக, வைகையாற்றங் கரையிலேயே பவனி வந்து, அருகிலுள்ள அம்பா சமுத்திரம் கிராமத்தில் மேடேறுகிறார். அன்று இரவு முழுவதும் குதிரை வாகனத்திலேயே அருட்காட்சி தரும் கள்ளழகரை, அம்பாசமுத்திர மக்கள் தேவராட்டம் ஆடி சாந்தப்படுத்துகின்றனர்.  அதிகாலையில் கிளம்பும் கள்ளழகர், மறுநாள் மதியத்துக்குள் கண்டமனூர் திரும்புகிறார்.

இந்த அருள்நிறை திருவிழாவில் கலந்துகொண்டு பெருமாளைத் தரிசித்து வழிபட, வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி