Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்தில் இருந்து 7வது வீடு சூன்யம். அதில் எந்த கிரகமும் இல்லை. 7ம் வீடு பலவீனமாக உள்ளது. அதை எந்த சுபகிரகமும் பார்க்கவில்லை. பெண் ஜாதகத்தில் இப்படியொரு கிரக அமைப்பு இருந்தால், அவளுக்கு வரப்போகும் கணவன் எல்லோரது நிந்தனைக்கும் ஆளாவான்; சமுதாயம் அவனைப் புருஷனாக மதிக்காது; அவனைத் தூற்றும் என்கிறது ஜோதிடம் (சூன்யே தாபுருஷ:). 

ஆண்மை, கணவனுக்கான இலக்கணம். அது இருந்தும் பரிமளிக்காமல் போனால் அது இழுக்கு. ராசியில் கிரகம் இருந்தால், ராசி உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று பொருள். கிரகத்தின் தொடர்பில் ராசியின் தன்மைகள் பளிச்சிடும். கிரகத்தின் தொடர்பில்லாத ராசி ஜடம். அது தனியே இயங்காது. இல்லாள் (அகத்துக்காரி) இருந்தால் இல்லம் உயிரோட்டத்தோடு இருக்கும். இல்லையெனில், இல்லம் உயிரற்ற ஜடம். அதாவது, அசையாப் பொருள். அதை அசைக்க வைக்க இல்லாள் வேண்டும் (கிரகிணீ க்ருஹமுச்யதெ).

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

செயல் இழக்கும் ராசி

ராசியில் கிரகம் இல்லையெனில், ராசி செயல்படும் தகுதி இழந்துவிட்டது என்று பொருள். வரப்போகும் கணவனுக்கு ஆண்மை இருந்தும், அதன் செயல்பாடு ஸ்தம்பித்துவிடும். அவளுக்குக் கணவனாகச் செயல்பட்டாலும், வெளியுலக நிந்தனை அவளுக்குத் துயரத்தை அளிக்கும். உணர்வுபூர்வமான மகிழ்ச்சி, வாழ்க்கைத் தேவைகளின் நிறைவில் மகிழ்ச்சி என்று இருவகை உண்டு (ஜீவபரமான பலன், லோகாயத பலன்). இரண்டில் ஒன்று இழக்கப்பட்டாலும் குறைதான். அந்தக் குறை மனைவியைப் பாதிக்கும். சூன்யமான வீட்டுக்குடைய கிரகம் பலம் இழந்தவனாக இருந்தால், அந்த வீட்டின் தரம் சரிந்துவிடும். 7க்கு உடையவன் பலம் பெற்றவனாக இருந்தால் மட்டுமே அந்த வீடு செயல்படும்.

வீட்டுக்கு உடைய கிரகம் முற்றிலும் உச்சன் (அத்யுச்சம்), உச்சன் (முழு பலன் பெற்றவன்), மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், சுஹ்ருத்க்ஷேத்ரம், சுபக்ரஹ யோகம், கேந்திரம் அல்லது த்ரிகோணத்தில் இணைந்தவன்... இவையெல்லாம் கிரகத்துக்கு பலம் (திறமை) ஊட்டுபவை.

எதிரிடையாக அதிநீசம் (முற்றிலும் நீசன்), நீசன், சத்ரு க்ஷேத்திரம், மௌட்யம், அஸ்தங்கதம், இரு பாப கிரகங்களுக்கு இடையில் கிடுக்கிப்பிடிபோல் மாட்டிக்கொண்டவன், பாப கிரகத்துடன் சேர்ந்தவன், 6, 8, 12 வீடுகளில் தென்படுபவன்... இவையாவும் கிரகத்தின் பலவீனம். 7க்கு உடைய கிரகம் பலவீனமானால், அந்த வீடும் பலத்தை இழந்துவிடும்.

சந்திரன், புதன், சுக்கிரன், குரு  இந்த நான்கு கிரகங்களும் சுப கிரகங்கள்; தட்ப கிரகங்கள். இயல்பாகவே நன்மை செய்பவை.

* சந்திரன் வளர்பிறையில் நல்லவன்; அதாவது, சுபன். தேய்பிறையின் கெட்டவன்; அதாவது, அசுபன்.

* புதன் பாப கிரகத்துடன் இணைந்தால் அசுபன். அவன் தனியாக இருந்தாலோ, சுப கிரகத்துடன் இணைந்தோலோ சுபன்; அதாவது, நல்லவன்; நன்மையைச் சேர்ப்பவன்.

* சுக்கிரன் தனியாக இருந்தாலோ, சுப கிரகத்தின் சேர்க்கையிலோ சுபன்; நல்லதை அளிப்பவன். பாப கிரகத்துடன் இணைந்தால் (வெப்ப கிரகத்தின் சேர்க்கை) அசுபன்; கெடுதலை அளிப்பவன்.

* குரு தனியே இருந்தாலும், பாப கிரகத்தோடு இணைந்தாலும் சுபனாகவே இருப்பான்.

ஆகவே, இந்த நான்கு கிரகங்களில் ஒன்றின் பார்வை 7ம் இடத்துக்கு இருந்தால், அதன் தாக்கத்தில் உயிரோட்டம் பெற்றுச் செயல்படும். அதிலும் குருவின் பார்வை இருந்தால், செயல் பாட்டில் நம்பிக்கை வலுத்திருக்கும். இந்த சுப கிரகங்களில் ஏதாவது ஒன்றின் பார்வை இல்லாத நிலையில், 7ம் வீடு ஜடமாக மாறி விடும்; செயல்படும் தகுதியை இழந்துவிடும். 7ம் வீட்டுக்கு உரியவன் ஒருவேளை அசுபனாக இருந்தால், அதாவது வெப்ப கிரகமாக இருந்தால், அவன் அந்த வீட்டைப் பொறுத்தவரை நல்லவனாக, அதாவது சுபனாக மாறிவிடுவான். அவனது பார்வை பட்டாலும் 7ம் வீடு இயங்கும். துஷ்டன் தனது வீட்டைச் செம்மையாக வைத்துக்கொள்வான்; அழிக்கமாட்டான். பிறர் வீட்டைத்தான் சூறையாடுவான். இயல்பில், வெப்ப கிரகம் அசுபனானாலும், தனது வீட்டின் செழிப்பைப் பராமரிப்பான். திருடன் வீடும், அதில் வாழ்பவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். அவனது செயல்பாடு சுப கிரகத்தின் செயல்பாடாக மாறிவிடும். 7ம் பாவத்துக்கு அதிபதியான வெப்ப கிரகத்தின் (அசுப) பார்வையும், அந்த பாவத்தை இயங்கச் செய்யும். எல்லா கிரகங்களுக்கும் 7வது வீட்டில் முழுப்பார்வை பதியும். குருவுக்கு 7ஐத் தவிர, 5 மற்றும் 9ம் வீடுகளுக்கும் முழுப்பார்வை உண்டு.

ஒருவரது ஜாதகம் மற்றவருக்குச் செயல்படுமா?

இந்த சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த வீட்டின் இயக்கம் தடைப்படும். அதன்  பலவீனம் வலுப்பெற்று விடும். அது, வலுவிழந்த கணவனைச் சுட்டிக்காட்டும். இந்த நிலை, மனைவியின் விருப்பத்துக்கு இடையூறாக மாறுவதால், அவள் துயரத்தைச் சந்திக்க நேரிடும். கணவன் மனைவி இருவரில், ஒருவரது பலன் மற்றவரிடம் தென்படாது. ஒரு ஜாதகத்தால் அழிவையோ, ஆக்கத்தையோ மற்றொரு ஜாதகத்துக்கு அளிக்க இயலாது. அவரவர் கர்மவினையின் பலன்களை அவரவரே அனுபவிக்க வேண்டும். மனைவியின் கர்மவினைப் பலன் கணவனில் தோன்றாது; கணவனின் கர்மவினைப் பலன்கள் மனைவியிடம் தென்படாது. செயல்பாடு (கர்மவினை) ஒருவருடையது எனில், பலனை மற்றவர் எப்படி அனுபவிப்பார்? வினை விதைத்தவன்தான் அறுவடை செய்து அனுபவிக்க வேண்டும்.

நாம் கண்டது, பெண் ஜாதகத்தில் தென்படும் குறையை. அதைத் தோற்றுவித்ததும், நடைமுறைப்படுத்தி அனுபவிக்க வைத்ததும் அவளின் செயல்பாடுதான் (கர்மவினை). தாம்பத்தியத்தில் நெருடலை உண்டு பண்ணி, அதன் சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாமல் செய்வதற்கு, கணவனின் குறையைப் பயன்படுத்தியது அவளுடைய கர்மவினை. கணவனின் ஜாதகம் அவளுக்குத் தண்டனை அளிக்கவில்லை. அவளது கர்மவினை, அதைக் கேடயமாக கையாண்டு, தனது செயல்பாட்டில் வெற்றி பெற்றது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பெண் ஜாதகத்தில் 8ல் செவ்வாய் இருந்தால், கணவனின் இழப்பு. பெண்ணுக்கு அதாவது மனைவிக்கு 'விதவை’ என்ற குறை ஏற்படுகிறது. அவளது கர்மவினையின் பலனான 'விதவை’ என்கிற நிலையை நடைமுறைப்படுத்த கணவனின் இழப்பைக் கையாளுகிறது. கண்ணில் எண்ணெய்யை வைத்துக்கொண்டு, அலசி ஆராய்ந்து, பெண்ணின் 8ல் செவ்வாய் என்ற நிலையில், ஆணில் 7ல் செவ்வாயைப் பார்த்து, விதவை ஆகவேண்டியவளை சுமங்கலியாக மாற்ற முயன்றாலும், அவளது கர்மவினையின் வலுவில் கணவனின் இழப்பைச் சந்தித்துவிடுவாள். கர்மவினையை மாற்றியமைக்கும் தகுதி ஜோதிட மேதைகளுக்கு இருக்காது.

செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் வைதவ்யத்தை அளிக்கும் (கணவன் இழப்பு). அதற்கு இணையாக மனைவியை இழக்கவைக்கும் ஆண் ஜாதகத்தில் 7ல் செவ்வாயைப் பார்த்துச் சேர்த்து வைத்தாலும், வைதவ்யத்தை மாற்ற இயலாது. செவ்வாய்க்கு செவ்வாயைப் பார்த்து இணையவைக்கும் தகவல், ஜோதிட நூல்களில் இல்லை. பிற்பாடு வந்த ஜோதிட மேதைகளின் அறிமுகம் அது. இருவருக்கும் செவ்வாய் தோஷத்தை வைத்து குறையைத் தீர்க்க இயலாது. கணவன் ஜாதகத்தில் நீண்ட ஆயுள் யோகம் இருந்தால், அவன் மடியமாட்டான். அப்போது மனைவியும் விதவையாக மாட்டாள். செவ்வாயின் இணைப்பு தாம்பத்திய சுகத்தை இழக்கும் பலனை நடைமுறைப்படுத்தும். பெண்ணின் செவ்வாய் தோஷம், வரப்போகும் கணவனின் இழப்புக்குக் காரணமாகாது. தனது கர்மவினைக்கு உகந்த பலன் இருக்குமே தவிர, மற்றவரின் கர்மவினை கணவனைப் பாதிக்காது.

செவ்வாய் தோஷம் தாம்பத்தியத் தின் குறையைச் சுட்டிக் காட்டுகிறது. அதை நடைமுறைப்படுத்த கணவன் இழப்புதான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரில் ஏற்படும் விரிசல், பிரிவு, பகை போன்றவையும் தாம்பத்திய சுகத்தை இழக்கவைத்துவிடும். இவையெல்லாம் தலைதூக்காத நிலையில் மரணத்தை நடைமுறைப்படுத்தும். அப்படி அதை நடைமுறைப்படுத்த கணவனுக்கு அல்பாயுள் யோகம் இருக்க வேண்டும். நீண்ட ஆயுளைப் பெற்றவனை மரணத்துக்கு உட்படுத்தி வைதவ்யத்தை நடைமுறைப்படுத்த, செவ்வாய் அவளது கர்மவினையை மாற்றி அமைக்காது. பெண்ணுக்கு வைதவ்யத்தை உண்டு பண்ண ஆணின் நீண்ட ஆயுளைக் குறைக்க வைக்கும் திறமை எந்த கிரகத்துக்கும் இல்லை. காகம் உட்காரப் பனம் பழம் விழுந்த கதைபோல், பெண்ணுக்கு வைதவ்யம் அனுபவிக்க இருக்கும்போது, கணவனின் அல்பாயுள் ஒத்துழைத்தது என்பதுதான் உண்மை.

இப்படியும் சொல்லலாம். பெண்ணின் கர்மவினை, அவளது தாம்பத்திய சுகத்தை இழக்கவைக்கத் துணிந்தது. இருவரின் சச்சரவிலும், பகையிலும், இறுமாப்பிலும், இயல்பின் மாற்றத்திலும் தாம்பத்திய சுகத்தின் இழப்பை நடைமுறைப்படுத்த இயலும். அதேவேளையில், கணவனின் அல்பாயுஸ்ஸைக் கண்ணுற்ற கர்மவினை, அதைக் கேடயமாகக் கையாண்டு தாம்பத்ய சுகத்தை இழக்கவைத்தது. ஆக, செவ்வாய் தோஷம், அதனால் கணவனின் இழப்பு, மனைவியின் இழப்பு என்கிற கணிப்பில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

கர்மவினையின் செயல்பாடு

விவாகரத்து அறிமுகமான பிறகு வைதவ்யம் இல்லை; கணவன் இழப்பு இல்லை; மனைவியின் இழப்பும் இல்லை. கணவன் இழப்பைச் சந்திக்காமலே விவாகரத்தில் மாற்றுக் கணவரின் மூலமாக தாம்பத்திய சுகத்தை ஏற்கிறாள். மனைவியை இழந்தாலும் பிரிந்தாலும், புது மனைவியின் வாயிலாக தாம்பத்தியத்தைச் சுவைக்கிறான் கணவன். செவ்வாய் தோஷம், கணவன் இழப்பு மனைவி இழப்பு என்கிற கோட்பாடு உண்மையானால், எத்தனையோ பேர் இறந்திருக்க வேண்டுமே?! கணவனுக்கு மனைவியின் இழப்பால் எந்தத் துயரமும் அனுபவத்துக்கு வரவில்லை. புது மனைவியின் சேர்க்கையில் மகிழ்கிறான். கணவன் இழப்பில் எந்தத் துயரத்தையும் மனைவி அனுபவிக்கவில்லை. புதுக் கணவனின் சேர்க்கையில் மகிழ்கிறாள். இப்படியிருக்க, செவ்வாய் தோஷத்தை வைத்து விளையாடுவது ஜோதிடத்துக்குப் புறம்பான ஒன்று.

அதேபோல், தந்தையின் மரணத்தை நிர்ணயிக்க மகனின் ஜாதகத்தைப் பார்ப்பதும், தாயின் மரணத்தை நிர்ணயிக்க கடைசி மகனின் ஜாதகத்தைப் பார்ப்பதும், ஒரு ஜாதகத்தில் குழந்தைச் செல்வத்தின் குறையை, அதன் இணை ஜாதகத்தின் நிறைவை வைத்துக்கொண்டு குழந்தை இருப்பதாகக் கூறுவதும், மனைவியின் பெருமையில் கணவனின் உயர்வைச் சுட்டிக் காட்டுவதும், கணவனின் பெருமை யில் மனைவியின் உயர்வை உறுதி செய்வதும் நம்பிக்கைக்கு உகந்ததல்ல. ஒருவருடைய கர்மவினையின் பலனையே அவரில் நடைமுறைப்படுத்த இயலும். பிறரது கர்மவினைப் பயனை மற்றொருவரில் இணைக்க இயலாது. அவரவர் கர்மவினை யின் பலன்களை, தசா காலங்கள் வாயிலாக வெளியிடுவதுதான் ஜோதிடத்தின் வேலை (யதுபசிதமன்ய ஜன்மன்). செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகங்களிலும் விதவைகளும் உண்டு; மனைவியை இழந்த கணவர்களும் உண்டு!

கர்மவினையும், பிறக்கும் வேளையும்

7ம் வீடு சூன்யம். இங்கு பெண்ணின் கர்மவினைப்படி தரமான தாம்பத்தியம் அனுபவிக்க வாய்ப்பு இல்லை. அதைக் கணவனின் இணைப்பால் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் சுட்டிக்காட்ட, அவள் பிறக்கும் வேளையில், 7ம் வீடு சூன்யமாகவும், 7க்கு உடையவன் பலன் குன்றியும், 7ல் சுப கிரகத்தின் பார்வை அற்றும் இருந்தது. அவள் துயரத்தை எட்டும் விதமாக அவளது பிறப்பின் காலம் அமைந்துவிட்டது. இதை இப்படியும் சொல்லலாம்; அவளது கர்மவினை, தாம்பத்தியத்தை இழக்கும் வகையில் கிரக நிலை இருக்கும் வேளையில் அவளைத் தோன்றவைத்தது.

இன்றைய நாளில், நிறைய ஜோதிட மேதைகள் இருக்கிறார்கள். சிறந்த சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். அலசி ஆராய்ந்து பலன் சொல்பவர்களும் இருக்கிறார்கள். உண்மை விளக்கம் அளிக்கும் திறமை பெற்றவர்களும் இருக்கிறார்கள். வியாபார நோக்கு ஊடுருவியிருப்பதால், சிலரது சிந்தனை திசைமாறிச் செயல்படுகிறது. மக்களின் மகிழ்ச்சிக்குப் பயன்பட வேண்டிய சாஸ்திரம் சுணக்கமுறாமல் வளர்ந்தோங்க, ஜோதிட மேதைகளின் ஒத்துழைப்பு வேண்டும். விழித்துக் கொண்டு அந்தப் பொக்கிஷத்தை காப்பது அறம்.

சிந்திப்போம்...