Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 14

எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியங்கள்: ஜெ.பி.

தாஸ்கணு நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்கச் சென்றபோது, மேடையில் அவருக்கு அருகில் இருந்த திருவுருவப் படத்தைப் பார்த்துத் திகைத்துப்போன லக்மீசந்த், அந்த மகானைப் பற்றி தாஸ்கணு விவரித்தபோதுதான், தன்னுடைய கனவில் தோன்றிய மகான் அந்த ஷீர்டி சாயிநாதரே என்பதை அறிந்துகொண்டார். தனக்கு அப்படியோர் ஆத்மானந்த அனுபவத்தை அருளிய அந்த மகானை உடனே சென்று தரிசிக்கவேண்டும் என்பதாக ஒரு விருப்பம் லக்மீசந்த்துக்குத் தோன்றிவிட்டது. ஆனாலும், ஷீர்டிக்குச் செல்லத் தேவையான பணத்துக்கும், தனக்குத் துணையாக வரக்கூடிய நண்பருக்கும் என்ன செய்வது என்ற யோசனையுடனே படுக்கச் சென்ற நேரத்தில், அவருடைய வீட்டுக் கதவைத் தட்டி யாரோ அழைக்கும் குரல் கேட்கவே, லக்மீசந்த் எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தார். 

வெளியே அவரின் நண்பர் சங்கர் ராவ் நின்றுகொண்டு இருந்தார். அவரை மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்தார் லக்மீசந்த். அந்த நண்பர், தான் ஷீர்டிக்குச் செல்லப் போவதாகக் கூறி, துணைக்கு லக்மீசந்த்தும் தன்னோடு வர முடியுமா என்று கேட்டார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த லக்மீசந்த், தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனிடம் 15 ரூபாய் கடனாகப் பெற்றுக்கொள்ள, நண்பர்கள் இருவரும் உடனே ஷீர்டிக்குக் கிளம்பினார்கள்.

ரயில் நிலையத்துக்குச் சென்று பயணச் சீட்டு வாங்குவதற்கும், ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது. ஷீர்டி பயணம் தொடங் கியது. இறைவனின் புகழைப் பாடி பஜனை செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் சங்கர் ராவ். பயணத்தின் இடையே அவர் ரயிலில் பஜனைப் பாடல்களைப் பாட, லக்மீசந்த்தும் சேர்ந்து பாடினார். கூடவே, லக்மீசந்த்துக்கு பாபாவைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்படவே, தாங்கள் இருந்த பெட்டியில் ஷீர்டியைச் சேர்ந்த எவரேனும் பயணம் செய்கிறார்களா என்று விசாரித்தார். ஷீர்டியைச் சேர்ந்த நான்கு அன்பர்கள் பயணம் செய்வது தெரியவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்களிடம் சென்று, ''சாயி பாபா ஒரு பெரிய மகான் என்பதும், அவர் அகமத் நகர பிரதேசத்தில் பெரும்புகழ் பெற்றவர் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், உங்களுடைய சொந்த அனுபவத்தில் நீங்கள் அறிந்திருக்கும் அவருடைய மகிமைகளை எனக்குச் சொல்ல வேண்டுகிறேன்'' என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டனர் லக்மீசந்த்.

அதற்கு அவர்கள், ''சாயி பாபா ஷீர்டியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒரு பெரிய மகான் மட்டும் அல்ல; ஒப்பற்ற சித்த புருஷரும் ஆவார். அவரைப் பற்றி நாங்கள் சொல்வதைவிடவும் நீங்களே உங்கள் அனுபவத்தின் மூலம் அதிகம் தெரிந்துகொள்வீர்கள்'' என்றனர்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 14

நண்பர்கள் இருவரும் கோபர்காங்கில் ரயிலை விட்டு இறங்கி, ஷீர்டிக்குச் செல்வதற் காக ஒரு குதிரை வண்டியில் ஏறினர். கோபர் காங்கில் கொய்யாப் பழங்கள் அதிகம் விளைவதாகவும், கோதாவரி நதிக் கரையில் அவை விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கேள்விப்பட்டிருந்த லக்மீசந்த், பாபாவுக்கு மிகவும் பிரியமான கொய்யாப் பழங்களை வாங்கிச் செல்ல நினைத்தார். ஆனால், வழியில் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி வந்ததால், கொய்யாப் பழங்களை வாங்குவதற்கு மறந்தே போனார். அதுபற்றி நினைவு வந்தபோதோ, குதிரைவண்டி வெகுதூரம் கடந்து வந்துவிட்டிருந்தது. தன் கவனப்பிசகை எண்ணி வருந்தினார் லக்மீசந்த். பாபாவைக் காண வெறுங்கையுடன் செல்கிறோமே என்கிற எண்ணம் அவர் மனதை அரித்தது.

இன்னும் நான்கு கிராமங்களைக் கடந்து சென்றால், ஷீர்டியை அடைந்துவிடலாம். அந்த நேரம் பார்த்து, ஒரு கிழவி தன் தலையில் கொய்யாப் பழங்கள் நிறைந்த கூடையைச் சுமந்தபடி செல்வதைப் பார்த்தார். உடனே குதிரைவண்டியை நிறுத்தச் சொன்ன லக்மீசந்த், நல்ல கொய்யாப் பழங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்குரிய பணத்தை அவளிடம் கொடுத்தார். அந்தக் கிழவி மிச்சம்

இருந்த கொய்யாப் பழங்களையும் அவரிடமே கொடுத்து, தன்னுடைய சார்பில் அவற்றை பாபாவுக்குச் சமர்ப்பித்து விடுமாறு கேட்டுக்கொண்டாள். லக்மீசந்த்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அந்த மகிழ்ச்சியுடனே நண்பருடன் ஷீர்டியை அடைந்த லக்மீசந்த், பூஜைப் பொருட் களை வாங்கிக்கொண்டு துவாரகாமயிக்குச் சென்றனர். பாபாவுக்கு அர்க்யம், பாத்யம், தூப, தீப, தாம்பூல, தக்ஷிணை போன்ற வழிபாட்டுச் சடங்குகளைச் செய்த மனநிறைவுடன், லக்மீசந்த் பாபாவின் பாதத்துக்கு அருகில் அமர்ந்து, அவருடைய திருமுகத்தையே தரிசித்தபடி இருந்தார்.

தம்முடைய கருணை மிகுந்த விழிகளால் லக்மீசந்த்தைக் கனிவுடன் நோக்கிய பாபா, ''அயோக்கியப் பயல்கள்! வழியில் பஜனை செய்துகொண்டே மற்றவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். மற்றவர்களிடம் எதற்காகக் கேட்டுத்

தெரிந்துகொள்ள வேண்டும்? எதையும் தானே நேரில் பார்த்துத்

தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? ஒருவருக்கு ஒரு புனிதமான கனவு வருகிற தென்றால், அது எப்படிப் பொய்யாக முடியும்? ஒருவரிடம் இருந்து கடன் வாங்கியாவது

தரிசனத்துக்கு வரவேண்டிய அவசியம் என்ன? இப்போதாவது உம்முடைய ஆவல் நிறைவேறியதா?'' என்று பாபா யாருக்கோ சொல்வதுபோல் சொன்னார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 14

பாபாவின் அத்தனை வார்த்தைகளும் தன்னை நோக்கிச் சொன்னதாகவே லக்மீசந்த் புரிந்துகொண்டதோடு, மிகுந்த வியப்பும் அடைந்தார். அதன் பிறகு, அவர் ஷீர்டியில் இருந்த ஒவ்வொரு நாளுமே அவருக்கு பாபா பல அற்புத அனுபவங்களை வழங்கி அருளினார்.

சாயிநாதர் தம்முடைய ஜீவித காலத்திலும் சரி, மகா சமாதிக்குப் பிறகும் சரி... தமக்கான பக்தர்களை எப்படியாவது தம்மிடத்தே அழைத்துக் கொள்கிறார். இதை உணர்த்தும் இன்னொரு சம்பவம்...

நம்முடைய நண்பர் ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் சுவாமி விவேகானந்தரிடமும் பெரிதும் பக்தி கொண்டவர். அவர் குமார்பாபா என்பவரை அடிக்கடி சந்திக்கச் செல்வது வழக்கம். பலமுறை அவரைச் சந்தித்து இருந்தாலும், சாயிநாதரின் அருளால் அவர் பல அன்பர்களின் குறைகளைப் போக்கி, அவர் களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படச் செய்திருந்ததை அறிந்திருந்தாலும், நண்பருக்கு சாயிநாதரிடம் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. அவருடைய மனதில் ராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தருமே வியாபித்து இருந்தனர். இன்றைக்கும் அந்த நண்பர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று வருகிறார். ஆனால், சாயிநாதர் அவரை ஆட்கொண்டு அருள் புரியவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டுவிட்டார்.

ஒருநாள், அந்த நண்பர் வழக்கம்போல் குமார்பாபாவை சந்திக்கச் சென்றிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த ஓர் அன்பர், ஆசார்ய ஈ.பரத்வாஜ் என்பவர் எழுதிய, 'சாயியின் திருவிளையாடல்கள்’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட குமார்பாபா, அதை இந்த நண்பரிடம் கொடுத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்று நிதானமாகப் படிக்குமாறு கூறினார். நண்பரும் அப்படியே செய்தார். பாபாவின் அருளாடல்கள் பலவற்றை விவரிக்கும் அந்தப் புத்தகத்தைப் படித்தும்கூட, ஏனோ  அவருக்கு பாபாவிடம் ஈர்ப்பு ஏற்படவே இல்லை. புத்தகத்தின் இறுதியில் இணைப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த விஷயங்கள்தான் இன்னும் படிக்கவேண்டியது பாக்கி இருந்தது. அதையும் படிக்கத் தொடங்கினார் நண்பர். அதில் ஒரு விஷயம், நண்பருக்கு பாபாவின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. கால ஓட்டத்தில் பாபாவின் மகிமைகளை உணர்ந்து, அவரிடம் பூரண பக்தி செலுத்தவும் தொடங்கிவிட்டார் அந்த நண்பர்.

எப்படி நிகழ்ந்தது அந்த அற்புதம்..?

பிரசாதம் பெருகும்