Published:Updated:

அகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் !

ஆலயம் தேடுவோம்...எஸ்.கண்ணன்கோபாலன்

'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்று சொல்லக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஒரே ஒருவர்தான். அவரே அகத்திய முனிவர். கயிலையில் நடைபெற்ற  சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் அங்கே கூடி இருந்தபடியால், பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமநிலைக்குக் கொண்டுவரத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அதற்கு அகத்தியர் பெருமானே முற்றிலும் பொருத்தமானவர் என்று முடிவு செய்து, அவரைத் தென்திசை செல்ல ஆணையிட்டார். சிவபெருமான் உட்பட அத்தனை தேவாதி தேவர்களுக்கும் நிகரானவராக சிவபெருமானால் முன்மொழியப்பட்ட பெருமைக்கு உரியவரான அந்தக் குறுமுனிவர், நமக்கு அருளிய அருங்கொடைகளில் ஒன்று தாமிரபரணி என்றால், மற்றொரு கொடை, அவருடைய பெயரால் வழங்கப் பெறும் நூற்றுக்கணக்கான சிவாலயங்கள்! 

ஐயனின் திருவுள்ளப்படி தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்திய முனிவர், போகும் போக்கில் வெறுமனே போய்விடாமல், உலக மக்களாகிய நமக்கெல்லாம் நாளும், நாதன் நமசிவாய பெருமானின் பேரருள் கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது, சிவபெருமான் அவருக்கு அருளிய ஒரு வரம் நினைவுக்கு வந்தது. அகத்தியர் தென்திசைக்குப் புறப்பட்ட வேளையில், அவர் நினைக்கும் இடங்களில் எல்லாம் தாம் அவருக்குத் தரிசனம் தந்து அருள்வதாக சிவபெருமான் கூறி இருந்தார். அதன்படி, அகத்தியர் எங்கெங்கெல்லாம் சிவபெருமானின் தரிசனம் பெற விரும்பினாரோ, அங்கெல்லாம் சிவப் பரம்பொருளைச் சிந்தையில் இருத்தித் தியானிக்க, உமாபதியும் அவருக்குத் திருக்காட்சி அருளினார். அப்படி அகத்திய முனிவரின் காரணமாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் எல்லாம் ஐயன் அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரே அவருக்கு அமைந்தது.

அந்த வகையில், ஐயன் அகத்தீஸ்வரராகக் கோயில் கொண்டிருக் கும் ஒரு திருத்தலமே புத்திரன்கோட்டை.

'சான்றோர் உடைத்து’ என்ற பெருமைக்குரிய தொண்டை மண்டலத்தில், மதுராந்தகம் சூணாம்பேடு சாலையில், மதுராந்தகத் தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது புத்திரன்கோட்டை என்னும் சிற்றூர். இந்த ஊரின் ஆரம்பத்திலேயே அமைந்திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில். ஒருகாலத்தில் நித்திய பூஜைகள் நடைபெற்றுப் பொலிவுடன் திகழ்ந்த இந்தத் திருக்கோயிலின் இன்றைய நிலையைச் சொன்னால், உங்கள் மனம் பதறித் துடிக்கும். அந்த அளவுக்குச் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. இரண்டு பிராகாரங்களுடன் விசாலமான பரப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயிலுக்குள் பிரவேசிக்கிறோம். முகப்பு வாயிலின் இரண்டு பக்கங்களிலும் திண்ணைகள் அமைக்கப்பட்டு இருந்ததைக் கண்டோம். பொதுவாக, மிகப் பழைமையான ஆலயங்களில்தான் இத்தகைய அமைப்பை நாம் காணமுடியும்.

அகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் !

கல்வெட்டுகளாலேயே அமைந்த ஒரு திருக்கோயில் என்று சொல்லும் அளவுக்கு, எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லாமே வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த அரசர்களின் கல்வெட்டுகள். குறிப்பாக, பிற்கால பாண்டியப் பேரரசுக்கு வித்திட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் போன்ற பல பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. பாண்டியர்களால் பெருமளவு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதற்குச் சாட்சியாக கூரைகளில் அங்கங்கே மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகளில்தான் நம்முடைய பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஆயிரமாயிரம் உண்மைகள் புதைந்திருக்கின்றன.

கருவறையின் மங்கிய வெளிச்சத்திலும் ஐயனின் லிங்கத் திருமேனி அருளொளியுடன் பிரகாசிப்பதை நம்மால் தரிசிக்க முடிகிறது. இவர் மிகுந்த வரப்பிரசாதி என்று ஊர்ப் பெரியவர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். அகத்தியரின் பெயரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வர பெருமான், அகத் தீயினை, அதாவது நம்முடைய மனம் எனும் அகத்தைத் தீயெனச் சுட்டெரிக்கும் பேராசை, பொறாமை போன்ற அனைத்தையும் அணைக்கும் அருள்திறம் கொண்டவராகத் திகழ்கிறார். இங்கே இறைவனை அகத்தியர் வழிபட்டதற்குச் சாட்சியாக, ஐயனின் கருவறை வாயிலின் மேலாக, அகத்தியர் சிவபெருமானை பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஐயனை தரிசித்துவிட்டு, பிராகாரத்தை வலம் வருகிறோம். கருவறைச் சுவரில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோரின் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன. மதில் சுவர்களிலும் விநாயகர், நடராஜர் போன்றோரின் திருவுருவச் சிலைகள் அமைந்திருக்கின்றன. இத்தகைய அரிய கலைப் பொக்கிஷங்களைக் கொண்ட ஆலயம் பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டபோது, மனம் வெம்பி வேதனையில் துடித்தது. ஆறுதல் தேடி, அம்பிகையின் சந்நிதிக்குச் செல்கிறோம். முத்தாரம்பிகை என்னும் திருப்பெயருடன் எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. கல்வெட்டுகளில் அம்பிகையின் திருப்பெயர் மரகத வடிவுடை நாச்சியார் என்று காணப்படுகிறது. அம்பிகையை தரிசித்து வெளியில் வந்த நாம், திருக்கோயில் திருப்பணி யில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஊர்ப் பெரியவர்களிடம் பேசினோம்.

அகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் !

''இந்தக் கோயில் ரொம்பக் காலமாகவே சிதிலம் அடைஞ்சிருந்தது. பூஜை புனஸ்காரங் களோ, வழிபாடுகளோ சரிவர நடக்காமலே இருந்து வந்தது. சமீபத்துல இங்கே வந்து ஆசிரமம் அமைச்சிருக்கும் ஸ்வாமினி ஸ்திரானந்த சரஸ்வதி மாதாஜிதான் (இவர் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளிடம் சந்நியாச தீட்சை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது) இந்தக் கோயிலின் அருமை பெருமைகளை எங்களுக்கு எடுத்துச் சொல்லி, கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணிகளைத் தொடங்கும்படி சொன்னார்.

எங்களுக்கும் ஏற்கெனவே உள்ளூர அந்த எண்ணம் இருந்தபடியால், உடனடியாக ஊர்க் கூட்டம் போட்டு, ஒரு திருப்பணிக் கமிட்டியை அமைத்து, திருப்பணிகளைத் தொடங்கினோம். கருவறை விமானங்களை ஓரளவு புதுப்பித்து விட்டோம். ஆனால், போதிய நிதி வசதி இல்லாமல், திருப்பணிகள் தடைப்பட்டுடுச்சு. நாங்களும் எப்படியாவது திருப்பணிகளை முடிச்சு, கும்பாபிஷேகம் நடத்தத்தான் ஆசைப் படுறோம். கடவுள்தான் அருள் செய்யணும்!'' என்றார் திருப்பணிக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கோவிந்தசாமி.

தொடர்ந்து நம்மிடம் பேசிய மற்றொரு உறுப்பினரான மாதவன் என்பவர், ''இங்கே இறைவனை தரிசித்து வணங்கினால் வயிறு சம்பந்தமான பிணிகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்ல, தொடர்ந்து ஆறு பிரதோஷங்கள் இங்கு வந்து சிவபெருமானையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால், புத்திரதோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலம்காலமாக இந்த ஊர்ப் பெரியவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. புத்திரதோஷத்தின் காரணமாக வருந்திய ஒரு சோழ அரசன் இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டு புத்திரப்பேறு பெற்றதாகவும், அதற்குக் காணிக்கையாக கோயிலுக்கு மானியங்கள் கொடுத்ததாகவும் ஊர்ப் பெரியவர்கள் சொல்லக் கேள்வி. இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தால், இந்தத் திருக்கோயில் பற்றிய பல அரிய உண்மைகள் வெளிப்படும். விரைவிலேயே திருப்பணிகள் பூர்த்தி அடைந்து, கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். அத்துடன், இங்குள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள, இந்தத் திருக்கோயில் பற்றியும் நம்முடைய பாரம்பர்யத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லும் பல உண்மைகளும் உலகத்துக்குத் தெரிய வரவேண்டும்'' என்றார்.

அகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் !

அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப் பெற்று வழிபடப் பெற்றதும், ஆண்டாண்டு காலமாக கோடானுகோடி மக்களின் குறைகளை எல்லாம் போக்கி அருள்வதுமான எம் ஐயன் அகத்தீஸ்வரரின் திருக்கோயில் எத்தனைக் காலம்தான் இப்படியே இருப்பது? நம்முடைய மனதைச் சுட்டெரிக்கும் பேராசை, பொறாமை போன்றவற்றை அறவே போக்கி, நமது வாழவில் வளம் சேர்க்கும் ஐயனின் திருக்கோயில் விரைவிலேயே புதுப் பொலிவு பெறவேண்டாமா? அங்கே நித்தம் நித்தம் வரும் பக்தர்கள், ஐயனின் அருளால் தங்களின் குறைகள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கையைப் பெறவேண்டாமா? ஐயனின் ஆலயத் திருப்பணிக்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்தால், ஆலயம் விரைவிலேயே புதுப்பொலிவு பெறும். ஐயனின் பேரருள் மட்டுமின்றி, அங்கே வந்து வழிபட்டுத் தங்களின் குறைகள் எல்லாம் நீங்கி நிம்மதி பெறும் எண்ணற்ற பக்தர்களின் வாழ்த்துக்களும் சேர்ந்து நம்மையும் நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழ வைக்கும்! இது சத்தியம்.

படங்கள்: தே.சிலம்பரசன்

எங்கே இருக்கிறது... எப்படிச் செல்வது?

மதுராந்தகம்சூணாம்பேடு சாலையில் மதுராந்தகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது புத்திரன்கோட்டை என்னும் சிற்றூர். இந்த ஊரின் ஆரம்பத்திலேயே அமைந்திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில். மதுராந்தகத்தில் இருந்தும் சூணாம்பேடில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. புத்திரன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.