மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே?  

இதுவும் கண்ணனின் பதின்பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிதான். கோகுலத்தில் வழக்கம்போல தனது தோழர்களுடன் மாடு மேய்க்கச் செல்கிறான் கண்ணன். தினமும் யசோதை கட்டுச் சாதம் கட்டிக் கொடுத்து அனுப்புவது வழக்கம். கண்ணன் ஆடிப் பாடி முடித்துவிட்டு, அனைவருடனும் சேர்ந்து கூட்டாஞ்சோறு உண்பான்.

ஆண்டாள் கண்ணனைக் கொண்டாடவென்று பிறந்தவள் இல்லையா?

'கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்’

என்கிறாள் அவள். மற்ற ஆழ்வார்களுக்காவது பெண் பாவம் மட்டும்தான். இவள் பெண்ணாகப் பிறந்ததால், கண்ணனுக்காக வேண்டி ஒரு 'கோபிகை பாவம்’. இவள் பிறந்தது அந்தணர் குலத்தில். தந்தை பெரியாழ்வார், விஷ்ணுசித்தர் என்ற பெயருடன் கூடிய முன்குடுமி சோழிய அர்ச்சகர் பரம்பரை. இந்த வருணத்திலிருந்து அவள் முற்றிலும் விடுபட்டு, ஆய்ச்சிய குலப் பெண்ணாகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். கண்ணனும் இவள் பாசுரங்களில் களிநடனம் புரிகிறான்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3

அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் மாடுமேய்க்கச் செல்லும்போது, அவன் மறந்தானா, அல்லது தாய்மார்கள் வேலை மும்முரத்தில் மறந்தார்களா எனத் தெரியவில்லை; அன்றைக்குக் கட்டுச் சோறு எடுத்துப் போகவில்லை. மாடுகளை மேய்த்துவிட்டு, உச்சி வேளையில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அனைவரும் ஒதுங்குகிறார்கள். கழியில் கட்டி வரும் மூட்டை காலியாகத் தொங்குகிறது. பசி வயிற்றைக் கவ்வுகிறது. அப்போது, அருகில் உள்ள ரிஷிகளின் ஆசிரமத்தில் ஹோமம் வளர்க்கும் ஓசை கேட்கிறது. கண்ணன் தனது கூட்டாளிகளை அனுப்பி, உணவு யாசித்து வரச் சொல்கிறான். யாகம் முடிய மாலை ஆகிவிடும் என்றும், அதுவரையில் காத்திருக்குமாறும் ரிஷிகள் கூறிவிட்டனர். சிறு பிள்ளைகளுக்குப் பசி பொறுக்குமா?

'ரிஷிகளின் ஆசிரமத்துக்கு அருகில் அவர்களுடைய இல்லங்கள் உள்ளன. தளிகை வேலைகளை ரிஷிபத்தினிகள் பார்த்துக் கொண்டிருப்பர். அவர்களிடம் போய், நான் கேட்டேன் என்று உணவு கேட்டு வாருங்கள்' என்கிறான் கண்ணன். ஆனால், திரும்பத் திரும்பப் போய்க் கேட்கப் பிள்ளைகளுக்குச் சங்கடம்.

'கண்ணா, நீயே போய் வாயேன்' என்று ஏவுகின்றனர்.

கண்ணன் நேரே ரிஷிபத்தினிகளிடம் சென்று, 'அம்மா! பசிக்கிறது. உணவு அளியுங்கள்' என்று யாசிக்கிறான்.

எம்பெருமான், தானே முன்வந்து 'எனக்கு அமுது அளியுங்கள்’ என்று கேட்க, அவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

'இது உன் வீடு கண்ணா! உனக்கு வேண்டியதை நீயே எடுத்துக் கொள்' என்கின்றனர்.

இது போதாதா கண்ணனுக்கு? உடனே, தனது சிநேகிதப் பட்டாளத் துடன் வந்து, வயிறார உண்கிறான்.

அப்போது ரிஷிபத்தினிகள், 'அப்பா! உனக்குத் தெரியாதது இல்லை. ஹோமம் பண்ணி, அக்னி மூலமாக அந்தப் பரம்பொருளுக்கு நைவேத்தியம் படைத்த பின்னரே மற்றவர் உண்ணவேண்டும். ஆனால், நீ வந்து உணவு கேட்டபோது அந்த பகவானே வந்து கேட்டதுபோல் இருந்ததால், நாங்கள் மறுக்காமல் உனக்கு உணவு கொடுத்துவிட்டோம். ஆனால், இந்த விஷயம் ரிஷிகளுக்குத் தெரிந்துவிட்டால், நாங்கள் அவர்களுடைய சாபத்துக்கு ஆளாக நேரும். எனவே, இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியக்கூடாது'' என்று கேட்டுக்கொள்ள, கண்ணனும் அதற்குச் சம்மதிக்கிறான்.

ரிஷிபத்தினிகள் யாகம் நடைபெறும் இடத்துக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒரே ஒருத்தி மட்டும் யாகசாலைக்குச் செல்லாமல், கண்ணன்தான் அந்தப் பரம்பொருள் எனப் புரிந்துகொண்டு, அவனுடனே ஐக்கியமாகத் துடிக்கிறாள்.

'கண்ணா! என்னுடைய இந்த தேகத்தை மாய்த்து, எனக்குப் பூரண விடுதலை கொடு!' என்று வேண்டுகிறாள் கண்களில் நீர்மல்க.

அந்த அந்தராத்மாவின் மொழியைப் புரிந்துகொண்ட கண்ணன், அவள் உடலை மாய்த்து, அவளுக்கு முக்தி கொடுத்ததாகச் சரித்திரம். இதை மனதில் கொண்டே, 'தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியை போலே?'' என்று கேட்கிறாள் திருக்கோளூர் பெண்.

4. தசமுகனைச் செற்றேனோ  பிராட்டியைப் போலே?

தசமுகன் என்பது ராவணனைக் குறிக்கிறது. சிறந்த சிவபக்தனும் யாராலும் வெல்லமுடியாத வலிமை படைத்தவனுமான ராவணனை சீதை என்னும் பெண்ணால் எப்படிக் கொல்ல முடியும்?

சீதையைக் கன்னிமாடத்தில் ராமன் கண்டதைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்...

'பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்

தேன்உண் தேனின்தீம்சுவை செஞ்சொற் கவிஇன்பம்’

மருங்கில் மங்கையாம் சீதை. அதாவது, அவளுக்கு இடுப்பே இல்லையாம். அப்படிக் கொடி போன்ற மெல்லிய பெண்ணா அத்தனை பலம் பொருந்திய ராவணனைக் கொன்றிருக்க இயலும்?

'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்

வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்

சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்

கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்.’

இப்படி ஒரு பெண்ணழகுப் பேரோவியத்தை, அவள் பிறன்மனை என்பது தெரிந்தும் நோக்கிய அந்தக் கணமே ராவணனின் பேராண்மை அழிந்தது.

பதினான்கு ஆண்டுகள் தான் வனம் செல்லவிருப்பதாகவும், சீதையை அயோத்தியில் இருக்கும்படியும் ராமன் கேட்டுக்கொள்ள, சீதை மறுத்து உடன் வருவதாகக் கூறுகிறாள். அப்போது ராமன் கூறுகிறான்...

'கல் அரக்கும் கடுமையா அல்ல  நின்

சில் அரக்குண்ட சேவடிப் போது’

அதாவது, அவளுடைய பாதங்கள் மலர்கூட இல்லையாம். அவற்றில் உள்ள போதினைப்போல மிக மெல்லிய பாதமாம். அப்படிப்பட்ட, 'மலரினும் மெல்லிய’ ஜானகியால் எவ்வாறு ராவணனைக் கொன்றிருக்க முடியும்?

ராவணன் இறந்துவிட்டான் யுத்த களத்தில் என்று கேள்விப்பட்டதும், அவன் மனைவி மண்டோதரி ஓடி வருகிறாள்.

இந்தக் காட்சியை,

'கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து,

தடவியதோ ஒருவன் வாளி?'

புறச்சிறையிலிருந்து சீதையை மீட்ட ராமன், ராவணனுடைய மனச்சிறையில்கூட அவள் இருக்கக் கூடாது என்று அம்பு செலுத்தினான்’ என்று, அபார கற்பனையின் மூலம் கம்பர் விளக்குகிறார்.

'திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்

பிறை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ? தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?’ என்கிறாளாம் மண்டோதரி.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3

ராவணனுடைய தவம் மிகப் பெரியது. அந்தத் தவத்தினால் மானிடரைத் தவிர வேறு எந்தத் தேவராலும் தான் வெல்லப்படக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம் பெற்றான். 'தேவர்களே ஜெயிக்க முடியாதபோது, இந்த அற்ப மானிடர்களா நம்மைக் கொன்றுவிட முடியும்?’ என்ற குறைவான மதிப்பீடுதான் அவனை மாய்த்துவிடுகிறது. அளப்பரிய அவன் பெற்ற வரம் பாற்கடலைப் போன்றது. எத்தனை பெரிய பாத்திரம் நிறைய பால் இருந்தாலும், பிறன்மனை நோக்கல் என்னும் ஒரு துளி விஷம் அதில் கலந்துவிட்டதால், அந்த விஷத் துளியானது ராவணனின் உயிர்த் துளியைப் பருகிவிட்டது.

சீதை ராவணனைக் கொல்லவில்லை. அவளுடைய கற்பு என்னும் கனல் அவனைக் கொன்றது. அனுமன் இலங்கை சென்று சீதையைக் கண்டு ஆறுதல் கூறி, மீண்டும் ராமனிடம் வந்ததும், முதலில் அவன் கூறியது, 'கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்பதுதான்.

'விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்

நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்:

இப் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்.

கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடனம் புரியக் கண்டேன்’ என்கிறான் அனுமன்.

பிராட்டிக்கு ராவணனைக் கொல்வது பெரிய விஷயமே இல்லை. 'தாயே! என் முதுகில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் ஒருவருக்கும் தெரியாமல் உங்களைக் கொண்டுபோய் ராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன்’ என்று அனுமன் அழைத்தபோது மறுக்கிறாள் சீதை. காரணம், அப்படிச் செய்தால், அது ராமனின் மகிமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அல்லவா ஆகிவிடும்? அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடாமல் பார்த்துக்கொள்ளச் செய்த சீதைக்கு இலங்காபுரியை அழிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? சரணாகதர்களுக்குத் தங்களைத் தாங்களே ரட்சித்துக்கொள்ள முடியாது; பகவான் ஒருவனுக்கே ரட்சிக்கும் தகுதி உள்ளது. இதை உணர்த்தவே சீதை பொறுமையுடன் இருந்தாள். ஆனாலும், அவளுடைய கற்புக் கனலானது ராவணனைக் கொன்றது.

இதைத்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை, 'தசமுகனைச் செற்றேனோ சீதையைப் போலே?’ என்றாள். 'செற்றேனோ’ என்றால், 'கொன்றேனா’ என்பது பொருள்!

ரகசியம் வெளிப்படும்