Election bannerElection banner
Published:Updated:

சூரபத்மனை ஆட்கொள்ளும் செந்தில்வேலன்... - திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்!

சூரபத்மனை ஆட்கொள்ளும் செந்தில்வேலன்... - திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்!
சூரபத்மனை ஆட்கொள்ளும் செந்தில்வேலன்... - திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்!

சூரபத்மனை ஆட்கொள்ளும் செந்தில்வேலன்... - திருச்செந்தூரில் சூரசம்ஹார கோலாகலம்!

நான்முகனின் பிள்ளையான காஸ்யப ரிஷிக்கும் சுக்கிரனின் மகளான மாயாவுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் மற்றும் அஜமுகி. சிவபெருமானைகுறித்து இந்த சகோதரர்கள் இயற்றிய தவத்தால் அண்டங்கள் யாவையும் ஆளும் ஆற்றலைப் பெற்றார்கள். தகுதிக்கு மீறிய வரங்களைப் பெற்றதால் இந்த அசுரர்கள் தேவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினர். சூரர்களை சம்ஹாரம் செய்து, தேவர்களின் துயர்களை நீக்கவே சிவபெருமானால் படைக்கப்பட்டார் முருகப்பெருமான். சூரசம்ஹாரத்துக்காக சிவகுமாரனாக அவதரித்தவர் முருகப் பெருமான்.

சூரபத்மன் என்னும் ஆணவம், சிங்கமுகன் எனும் கண்மம், தாரகாசுரன் என்ற மாயை ஆகிய மும்மலங்களால் ஏற்படக்கூடிய தீமைகளை ஒழிக்கவே ஞானம் எனும் முருகப்பெருமான் தோன்றி அவர்களோடு ஆறுநாள்கள் போரிட்டு வென்றார். இந்த வீர நிகழ்ச்சியே கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின் இறுதி நாளான ஆறாம் நாளில்தான் சூரசம்ஹாரம் என்னும் சூரபத்மனின் வதம் நடைபெறுகிறது. இன்று நடைபெறவிருக்கும் இந்த விழாவின் மகத்துவம் மற்றும் சிறப்புகளைப் பற்றி இங்கு காண்போம். 

வெற்றித்திருமகனாக, வேதம் போற்றும் விமலனாக முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களோடு வீரமஹேந்திரபுரியை நோக்கி கிளம்பினார். அப்போது அன்னை தந்த வேலும், தந்தை தந்த பாசுபதாஸ்திரமும் முருகப்பெருமான் கரங்களில் மின்னின. வீரபாகு உள்ளிட்ட லட்சத்து ஒன்பது சகோதரர்கள் கொண்ட படை, முருகப்பெருமானுக்கு பின்புறமாக அணிவகுத்து வந்தது. பாவிகள் நிறைந்த மஹேந்திரபுரியை முருகப்பெருமானின் பாதங்கள் தீண்டக்கூடாது என்பதால் திருச்செந்தூரின் கடற்கரையருகிலேயே தங்கி, அசுரர்களை எதிர்த்து போர்புரியத் தொடங்கினார். 

கிரவுஞ்சகிரியைப் பிளந்து தாரகனை சம்ஹரித்த முருகப் பெருமான் தொடர்ந்து  தருமகோபன், அக்கினிமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகன் என வரிசையாக சூரபத்மனின் உறவுகளை வதம் செய்தார். சூரபத்மன் அநேக மாயவித்தைகளைப் புரிந்து போரிட்டுக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் சமாளிக்கமுடியாமல், மரமாக மாறி நின்றான். மரமாக மாறி நிற்பவன் என்பது முருகப் பெருமானுக்குத் தெரியாதா என்ன? 

இனியும் அவனை விட்டு வைக்கக்கூடாது என்று திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், தன் அன்னை அருளிய சக்தி வேலை ஏவினார். மரமாக மாயவேடத்தில் இருந்த சூரன் பிளக்கப்பட்டான். பிளக்கப்பட்ட சூரனின் உடல் பாகங்கள் இரண்டும் மயிலாகவும், சேவலாகவும் உருமாறின. முருகப் பெருமான் மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்தாலும், அவனை வாகனமாகவும், கொடியாகவும் ஆட்கொண்டு அருளினார் என்பதில்தான் முருகப் பெருமானின் அருள்திறம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது. சூரனை சம்ஹரித்து ஆட்கொண்ட முருகப் பெருமான், வெற்றிவேலனாகக் காட்சி அளித்தார்.

வருடம்தோறும் பல முருகன் தலங்களில் ஐப்பசி கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், திருச்செந்தூரில் நடைபெறுவது மிகவும் விசேஷமானது. காரணம், முருகனின் படைவீடுகளில் சூரசம்ஹாரம் நிகழ்ந்த படைவீடு அல்லவா அது!

 ஆண்டுதோறும் ஐப்பசி சஷ்டியில் நடைபெறும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண உலகெங்கும் இருந்து பக்தர்கள் கூடுவர். 

சூரசம்ஹார தினத்தன்று மாலை முருகப்பெருமான் ஜயந்திநாதராக கடற்கரைக்குப் புறப்படுவார். அங்கு எதிர்ப்படும் சூரனை எதிர்கொள்வார். பல்வேறு வடிவங்களை எடுக்கும் சூரபத்மனை வேல் கொண்டு சம்ஹரிக்கும் விழா அங்கு நடைபெறும். இறுதியாக மாமரத்தை பிளந்து சூரபத்மனை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியோடு சூரசம்ஹாரம் நிறைவு பெறும். மாமரத்தைப் பிளந்து சூரபத்மனை  சம்ஹரித்த செயலை இன்றும் மக்கள் 'சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்' என வேடிக்கையாகச் சொல்வதுண்டு. 

சூரனை வதம் செய்த முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக அவருக்கு சாயா அபிஷேகம் நடைபெறும். 'சாயா' என்றால் நிழல். அதாவது ஜயந்திநாதருக்கு எதிரே வைக்கப்படும் கண்ணாடிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இதனால் குளிர்ந்து போகும் முருகப்பெருமான் அதன்பிறகு வெற்றித்திருமகனாக வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தந்து அருள் செய்வார். இத்தோடு கந்த சஷ்டி விரதம் முடித்துக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை அங்கே செலுத்துவார்கள். சூரனை சம்ஹரிக்க நடந்த 6 நாள் போர் சூரசம்ஹாரத்தோடு நிறைவடைகிறது சரி, அது விரதங்களில் சிறந்ததான கந்த சஷ்டி விரதம் ஆனது எப்படி என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் தேவர்கள் யாவரும் இந்த போர் நடைபெற்ற நாள்களில் விரதமிருந்து முருகனின் வெற்றிக்காக வேண்டினார்கள் என்பதால் அந்த நாள்கள் கந்த சஷ்டி விரதமானது என்கிறார்.  

தமிழகத்தின் பெரிய திருவிழாக்களில் முக்கியமான விழாவான சூரசம்ஹாரம் திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. திருச்செந்தூர் மட்டுமின்றி எல்லா முருகன் ஆலயங்களிலும் இது விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகளை அழித்த இந்த சூரசம்ஹார திருவிழாவை நேரில் கண்டாலோ, கண்டவர்கள் சொல்வதைக் கேட்டாலோ எதிரிகள் பயமே இருக்காது என்பது ஞானநூல்கள் சொல்லும் கருத்து. அதன்படி இன்று முருகனை தரிசித்து சிறப்புற்று வாழ்வோம். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு