Published:Updated:

கேள்வி - பதில்

இன்றைய சூழலில்... மனக்கட்டுப்பாடு சாத்தியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

இன்றைய சூழலில்... மனக்கட்டுப்பாடு சாத்தியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? நாளிதழ்களைப் புரட்டினாலும் சரி, செய்தி சேனல்களைப் பார்த்தாலும் சரி, நாடெங்கிலும் நாள்தோறும் நூற்றுக்குக் குறையாத குற்றச் செயல்கள். முன்பு இருந்ததைவிடவும் இப்போதுள்ள மனிதர்களிடம் மனக்கட்டுப்பாடு தளர்ந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. மனதைக் கட்டுப்படுத்த என்னதான் வழி? அல்லது, இப்போதுள்ள சூழலில், மனக்கட்டுப்பாடு எல்லாம் சாத்தியம் இல்லாதது; எல்லாம் இறைவன் விட்ட வழி என்று இருந்துவிடவேண்டியதுதானா?  

சரஸ்வதி சுந்தரம், சென்னை 44

முதல் கண்ணோட்டம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடல் இறுதிவரை சீராக இயங்க, ஓயாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த உடலுக்கு இளைப்பாற இடம் அளிக்க வேண்டும். இயற்கை, இரவை அளித்து உறங்கி இளைப்பாற ஒத்துழைத்தது. அந்த நேரத்திலும் செயல் பட்டுக் கொண்டிருக்கும் உடல் உருப்படி மனம். அது, எப்போதும் செயலாற்றிக் கொண்டு இருக்கும். அந்த மனம் தளரும் தறுவாயில், அதற்கும் இளைப்பாற இடம் அளிக்க வேண்டும். மனதை மற்ற அலுவல்களில் இருந்து விடுவித்து, முனைப்புடன் கடவுளின் திருவுருவத்தில் இணைத்து நிலைநிறுத்த வேண்டும்.

கேள்வி - பதில்

? வழிபாட்டிலும் மனம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கும். பிறகெப்படி மனதுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்?

ஓர் உருவத்தில் இணைந்த மனம் வேறெதிலும் செயல்படாது.  அலைபாயாது ஒன்றில் மட்டுமே நிலைத்துவிடும். இப்படியான நிலையே, அதற்கு இளைப்பாறுதலாக அமைந்துவிடும்.

மனம் ஓய்வெடுக்கும்படி செயல்படுவதே இளைப்பாறல். அசைந்துகொண்டே இருக்கும் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும். அதற்குத் தேவையான ஓய்வை அளித்துப் பழக்கப்படுத்த வேண்டும். மனதுக்குப் பற்றற்ற நிலை இருக்கவேண்டும். இவை இரண்டும் மனதைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும் (அப்யாசேசை கெளந்தேய வைராக்யேணச கிருஹ்யதெ). அந்த நிலையில் மனம் போனபடிக்கு நாம் போகாமல், நம் சொல்படிக்கு மனம் செயல்படும். இந்தத் தகுதி பண்டைய ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மகான்களிடம் இருந்தது. ரிஷிகள் தவத்தால் மனதைக் கட்டுப்படுத்து வார்கள். லோகாயத சிந்தனையில் மனதைச் சிக்கவிடாமல் மனதின் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். ஆசையின் ஈர்ப்பில் தன்னிச்சை யாகச் செயல்படும் மனம், நம்மையும் வலுக்கட்டாய மாக இழுத்துத் துயரத்தில் இணைத்துவிடும்.

? வழிபாடு தவிர, வேறு வழி கிடையாதா?

'எல்லா அலுவல்களில் இருந்தும் மனதைத் துண்டித்துவிடு. மனதில் பதிந்த மாசுக்களை, தியானத்தில் மனதை இணைத்து அகற்றிவிடு. சிந்திக்கத் தகவல் கிடைக்காத மனம், கடவுளிடம் ஊன்றிவிடும். அப்போது அது வலிமை பெற்றுவிடும். எதிலும் வெற்றியைச் சந்திக்கலாம். துயரம் தொடாத மகிழ்ச்சியை நுகரலாம்’ என்று பதஞ்ஜலி தனது யோக சூத்திரத்தில் தகவல் தருகிறார் (யோக: சித்தவிருத்திநிரோத:....).

ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மகான்களிடம் மனக் கட்டுப்பாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களிடமே நமது அடக்க முடியாத ஆசைகளை நிறைவேற்ற அருளவேண்டும் என்று வேண்டுகிறோம். தேர்வில் வெற்றிபெற வேண்டும், திருமணம் விருப்பப்படி நிறைவேற வேண்டும், பொருளாதாரத்தில் நிறைவு பெற வேண்டும், குழந்தைச் செல்வங்கள் பெருக வேண்டும், நீடூழி வாழ வேண்டும், எந்தத் துயரமும் என்னைத் தொடக்கூடாது, வீடு, வாகனம், விரும்பிய இடத்தில் வேலை வாய்ப்பு, ஆடம்பரப் பொருள்கள் அத்தனையும் வேண்டும் என்றெல்லாம் வேண்டுவோம். ஆனால், அந்த மகான்களின் மனம் லோகாயத விஷயங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டதால், நாம் விரும்பும் அத்தனையும் அவர்களுக்குக் கழிவுப்பொருட்களாகவே தென்படும். அவற்றை அளிப்பதில் அவர்களுக்கு சிரமமே இல்லை; சகலத்தையும் வாரி வாரி அளிப்பார்கள். அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு நிரந்தர பக்தராக மாறிவிடுவோம். அவர்கள் அருளில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனம், லோகாயத வாழ்க்கையில் இணைந்துவிடும்.

? இல்லறத்தான் ஒருவன் லோகாயதத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடியாதே? மேலும், அதனால் மனதுக்கு என்ன குறை நேர்ந்துவிடப் போகிறது?

உபயோகப் பொருள்களிடம் இருந்து விடுபட வேண்டிய மனதை ஆசையில் திளைக்க வைத்து விடுகிறோமே! காலப்போக்கில் மனதை அடக்கும் திறமையற்று, லோகாயத வாழ்க்கையில் இணைந்து, தரம் தாழ்ந்துவிடுவோம். முதுமை நம்மைத் தனிமைப்படுத்தும்போது விழித்துக்கொள்வோம். அப்போது, கடவுளை நினைத்துக் கரைவோம். காலம் கடந்த விழிப்பு பயனற்றுப் போய்விடும்.

தன்னிச்சையாக உபயோகப் பொருள்களில் இருந்து விடுபட்டு கடவுள் திருவுருவத்தை தியானம் செய்யப் பரிந்துரைக்கும்போது, காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்துவிட்டு, உபயோகப் பொருட்கள் அத்தனையும் கசப்பான அனுபவத்தை ஊட்டும்போது, மனதைத் திருப்ப முற்படுகிறோம். பழக்கம் இல்லாததால் மனம் சொன்னதைக் கேட்காது. துயரத்தை நுகர்ந்து தவித்துத் தளர்கிறோம். இன்றைக்கு, அதிக அளவிலான பெற்றோர்கள் முதியோர் இல்லத்தைத் தேடி அலையும் நிலைக்கு, சரியான தருணத்தில் மனக் கட்டுப்பாட்டை ஏற்காததும் ஒரு காரணமாகும். புலனடக்கத்தைக் கையாளாமல், மன அமைதியை எட்ட இயலாது. ஆறாவது அறிவு பெற்றவன், அறிவுபூர்வமாக சிந்தித்து தன்னை உயர்த்த புலனடக்கத்தை ஏற்கவேண்டும். எல்லாம் துறந்த முனிவர்களை அணுகி, உபயோகப் பொருள்களை வேண்டும் நாம், அவரது அந்த நிலைக்கு புலனடக்கமே காரணம் என்பதை உணர மறுக்கிறோம்.

? அவர்களுக்கு அதுதான் இலக்கணம்; நமக்கு அப்படி இல்லையே?

பாமரர்களைப் பாமரர்களாகவே வைத்துப் பாதுகாக்கக் கூடாது. அவர்களுடைய சிந்தனை யைத் தட்டி எழுப்பி, தன்னிச்சையாகத் தங்களை உயர்த்திக்கொள்ளும் தகுதியை அவர்களுக்கு

ஊட்டி, உயர்த்தவேண்டும். நாமும் பாமரர்கள் நிலைக்கு இறங்கி வந்து, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்துவைத்து, அவர்களது சிந்தனையை முடக்கிவைக்கக் கூடாது. ஸனாதனம், ஒட்டுமொத்த பாமரர்களும் உயர்வை எட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், எண்ணிக்கையில் அடங்கா மனக்கட்டுப்பாட்டு வழிகளையும், புலனடக்கத்தின் பெருமைகளையும் விளக்கிக் கூறி உதவியிருக்கிறது. அதை ஒதுக்கி, மனம் போன

போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, துயரத்தில் ஆழ்ந்து தவிப்பவர்களிடம், உபயோகப் பொருள்களில் ஆசையை வளர்ப்பது தவறு.

தன் கையே தனக்கு உதவி, தன் காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனக்கட்டுப் பாட்டை ஏற்க வேண்டும். தினம் தினம் கடவு ளின் திருவுருவத்தை மனதில் இருத்தி, மற்ற அலுவல்களில் மனம் சிதறாமல் பார்த்துக் கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முனைப்புடன் ஒருநிலைப்பட்ட மனத்துடன் இறையுருவத்தில் மனம் ஒன்றிவிட்டால், சிறுகச் சிறுக மனம் கட்டுக்குள் வந்துவிடும். மனதை வென்றுவிட்டால், அமைதியும், ஆற்றலும், மகிழ்ச்சியும் தானாகவே வந்து சேரும். முயற்சியில் இறங்கினால் சுமையாகத் தோன்றாது. முன்னேறுவதற்குக் கடவுள் அளித்த பரிந்துரை அது.

இரண்டாவது கண்ணோட்டம்

தங்களது கூற்று, இன்றைய சூழலுக்குப் பொருந்தாது. இயற்கை அளித்த செல்வங்களைச் சுவைத்து மகிழ வேண்டும். அதற்காகத்தான் செல்வங்களை இயற்கை வாரி வழங்கியிருக்கிறது. மனமும், புலன்களும் படைக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான்!

மற்ற உயிரினங்களில் மனம் இல்லை; சிந்தனை செய்யும் தகுதியும் இல்லை. அறிவுப் புலன்கள் ஐந்தும் இல்லை. படைப்புகளிலேயே பொருள்களை முழுமையாக நுகரும் தகுதி, மனித இனத்துக்கு மட்டும்தான் உண்டு. அதை உணர்ந்து மகிழ்வதே அவனது வாழ்க்கையின் குறிக்கோள். எனவே, மனக் கட்டுப்பாடோ புலனடக்கமோ தேவையில்லாத ஒன்று. புலன் விரும்பியதை ஏற்று மகிழலாம். மனதுக்குப் பிடித்ததைப் பெற்று மகிழலாம். அவற்றுக்கென்று கட்டுப்பாடுகளைச் சுமத்தி, அவை சுதந்திரமாக விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முட்டுக்கட்டை போடக் கூடாது. கடவுளின் அருளோ, மகான்களின் பரிந்துரையோ, ஸனாதனத்தின் ஒத்துழைப்போ நமக்குத் தேவை இல்லை.

? பிறகெப்படி மனதையும் புலன்களையும் பேணுவது?  

உடலும், மனமும், புலன்களும் விருப்பப் படி செயல்பட, அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்தால் போதுமானது. அவை தடை யில்லாமல் இயங்க, அவற்றின் சுகாதாரத்தைப் பாதுகாத்து,  தகுதியைத் தக்கவைக்க முற்பட் டாலே போதுமானது. அறிவுப் புலன்கள் அத்தனைப் பொருள்களின் இயல்பையும் அறிந்து கொள்ளும். மனம் அவற்றைச் சுவைத்து மகிழும். இப்படியிருக்க கடவுள், மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரின் தலையீடெல்லாம் தேவையற்றது!

மனிதனுக்குப் படைப்பிலேயே சுதந்திரம் அளித்திருக்கிறது இயற்கை. பிறரின் உதவியை நாடவேண்டிய கட்டாயத்துக்கு இயற்கை அவனைத் தள்ளவில்லை. பண்டைய நாளில் அன்றைய சமுதாயத்துக்கு வேண்டுமானால் மகான்களின் பரிந்துரைகள் பயனளித்து இருக்க லாம். அடித்தட்டு மக்களை மனரீதியில் உயர்வை எட்டவைக்கப் புலனடக்கமும், மனக்கட்டுப்பாடும் தேவைப்பட்டிருக்கலாம். இன்று முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஆற்றலை தன்வசப்படுத்தும் அளவுக்கு சிந்தனை வளம் பெற்றிருக்கிறோம். கடலிலும், வானிலும் பயணம் மேற்கொண்டு, உலகத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்து, அதன் செயல்பாடுகளை அறிந்து, தனக்கு இசைவாக செயல்பட வைக்கிறார்கள். இந்த நிலையில், மக்களுக்கு வழிகாட்ட மன அடக்கத்தையும் புலனடக்கத்தையும் பரிந்துரைப்பது வியப்பாக இருக்கிறது.

? நீங்கள் குறிப்பிடும் சாதனைகளை நிகழ்த்திய சிந்தனையாளர்கள் எல்லாம் மனதைத் தங்கள் வசப்படுத்தியதால் மட்டுமே சாதிக்க முடிந்தது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். மனம் செம்மையாகாமல் சிந்தனையும் செயலும் எப்படிச் சிறக்கும்?

என்ன சொன்னாலும் சரி... நுகர்பொருள்கள் புலன்களை ஈர்க்கும்போது, நுகரவிடாமல் தடுப்பது தவறு. விரும்பியதை ஏற்கத் துடிக்கும் மனதை திசை திருப்பச் சொல்வது அறிவீனம். நாம் எல்லோரும் கடவுளின் படைப்பு. அவரின் குழந்தைகள். நாம் கேட்டுத்தான் எதையும்

பெறவேண்டும் என்பதில்லை. தனது படைப்பு களை அவர் கண்காணித்து வருவார். அதற்கு இணையாக நாம் செயல்பட வேண்டிய கட்டா யம் இல்லை. குழந்தைக்குத் தாய் தன்னிச் சையாகப் பால் கொடுத்து வளர்ப்பாள்; தன்னிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று எண்ண மாட்டாள்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானம் ஆயுளை நீட்டித்திருக்கிறது. புலன்களையும், மனதையும் சோர்வு அடையாமல் செய்யும் வழிமுறைகளைத் தந்திருக்கிறது. பலவிதமான நுகர்பொருள்களை அறிமுகம் செய்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தில் அறிவின் முதிர்ச்சியும் சிந்தனை வளமும் செழிப்புற்று இருக்கின்றன. மக்கள் மேலும் மேலும் பல நுகர்பொருள் படைப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேலுலக சுகம் (சுவர்க்கம்) கீழ் உலகிலேயே கிடைத்துவிடுகிறது. உடலுறுப்புகள் அழிந்தாலும், மாற்றுப்பொருளில் விரும்பியதை அடைந்து விடுவோம். இயற்கையாகக் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றாலும், செயற்கை முறையில் பெற முடியும். மனம் தற்போது மகிழ்ச்சியில் கூத்தாடிக்கொண்டிருக்கிறது. புலன்களும் தகுதியை இழக்கவில்லை. இழந்தாலும், மாற்றுவழியில் அந்த இழப்பை நிரப்பிவிடலாம். இப்படியிருக்க, காலத்துக்கு ஒவ்வாத அறிவுரையை அளிப்பது விரும்பத்தக்கதல்ல.

மனிதன் தன்னால் இயலாதபோது, கடவுளை வேண்டுகிறான். மனிதனுக்கு இயலாத ஒன்றும் இல்லை. மனிதன் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள விஞ்ஞானம் வலிய வந்து கை கொடுக்கும்போது, வலுக்கட்டாயமாகக் கடவுள் வழிபாட்டை இழுத்துப் போட்டுக்கொள்வது தேவையற்றது. துயரம் தொடாத வாழ்க்கையை நாமே ஏற்படுத்திக்கொள்ள இயலும்.

மூன்றாவது கண்ணோட்டம்

தகவல்களை ஆழ்ந்து ஆராயாமல் சொன்ன தங்களது கருத்து ஏற்புடையது அல்ல. மனி தனானவன் சமுதாயத்துடன் இணைந்து வாழ வேண்டும். அதற்கேற்ற மனப்பக்குவம் வேண்டும். அவன் சுதந்திரமாகச் செயல்பட இயலாது.

? எனில், நாமெல்லோரும் சுதந்திர தேசத்து அடிமைகளா?

கேள்வி - பதில்

அப்படியில்லை. சுதந்திரம் என்பது மனம் போனபடியெல்லாம் வாழ்வதற்காக அல்ல. பிறர் சுதந்திரத்துக்கும் வழிவிட்டுச் செயல்பட வேண்டிய கட்டாயம் அவனுக்கு உண்டு. மீறி னால், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் அவனைத் தண்டிக்கும். அதுபோல், நமது விருப்பப்படி நுகர்பொருளை ஏற்பதும் முடியாத ஒன்று. புலன்கள் வலுவிழக்க, மனமும் தளர்ந்துவிடும். பிறகு, மருத்துவமனையைச் சரணடைய வேண்டி வரும்.

அடுத்து, இயற்கை தந்த செல்வம். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தனியொ ருவன் தனது விருப்பத்துக்கு ஏற்ப அதைத் தனதாக்கிக்கொள்ள இயலாது. சட்டம் எச்சரிக் கும். விருப்பப்படி மனைவியை மாற்றிக்கொள்ள முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே தேர்வு செய்ய இயலும். சுதந்திரம் உண்டு; ஆனால், கட்டுப்பாட்டுடன்தான் அதைச் செயல்படுத்த இயலும். வருமானத்தில் ஒரு பங்கை அரசாங்கத் துக்கு அளித்தால் மட்டுமே, வாழ சுதந்திரம் இருக்கும். வெளிநாட்டு நுகர்பொருளை நுகரவும் அரசாங்கத்தின் அனுமதி தேவை. விஞ்ஞான வளர்ச்சி ஏற ஏற, மனிதனின் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்கும். லோகாயத வாழ்க்கையின் சுவையை நுகரவும், ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே ஆக வேண்டும். உடல் எனும் இயந்திரம் தானியங்கியல்ல. அது, ஆன்மாவின் இணைப்பிலும், மனதின் தூண்டுதலிலும்தான் இயங்க வேண்டும். மனதைக் கவனிக்காமல், புலன்களின் செயல்பாட்டில் நுகர் பொருள்களில் இன்பம் காண இயலாது. புலன்களுக்கும் மனதுக்கும் நுகர்பொருளின் தரத்தை நிர்ணயம் செய்ய இயலாது. இன்பத்தை அளிக்கும் பொருள்கள் அத்தனையும் முடிவில் துன்பத்தையே உணரவைக்கும். ஆசையில் கட்டுண்ட மனம் பொருள்களின் தராதரத்தை அறியாது. ஆசை, அதை ஏற்க வைத்து, துயரத்துக்கே

வழிவகுக்கும். பொருளில் இருக்கும் மனப்பற்று என்பது துயரத்துக்கான மூலம். பற்றைத் துறந்தால் மனம் அமைதி பெறும். மனதுக்குக் கட்டுப் பட்டவன் எப்படி சுதந்திரன் ஆவான்? மனதை தன் வசப்படுத்தினால் சுதந்திரம் கிடைக்கும்.

? அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்கக் கூடாது என்பது எந்த வகையில் சுதந்திரம் ஆகும்? புரியவில்லை!

நுகர்பொருளை அனுபவிக்க நாம் பிறக் வில்லை. ஊண், உறக்கம், உடலுறவு இம்மூன்றும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. மனிதன் ஆறாவது அறிவு பெற்றவன்; அறத்தை ஏற்றுக் கொண்டவன்; அதன் வழியில் செயல்படுபவன் என்கிற நோக்கில் அவன் வேறுபடுகிறான். அவன் உலக இயக்கத்துக்கு ஒத்துழைக்கத் தோன்றியவன். ஆடு, மாடுகள் போல வாழ்ந்து மடிபவன் அல்ல. அவனுக்கென்று ஒரு கொள்கை, கட்டுப்பாடு, அறம் எல்லாம் உண்டு. அவற்றை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் உண்டு. இவையெல்லாம் அவன் சமுதாயத்தோடு இணைந்து வாழத் தேவைப்படுகின்றன.

மனம் அறத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு விடும். அதை அடக்க, திசைதிருப்பத் திறமை வேண்டும். மனம், அதன் போக்கில் போகாமல் நேர் வழியில் திரும்பிச் செயல்பட, நமது ஆணைப்படி அது செயல்பட்டாக வேண்டும்.

மனக் கட்டுப்பாட்டால் மட்டுமே அது இயலும். ஆசைகளின் ஊற்றான மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கு உகந்த விஞ்ஞானக் கருவிகள்

இல்லை. மனதை வைத்தே அதைத் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. இறைவனை மனதில் இருத்தி, அவனது சிந்தனையில் ஆழ்ந்தால் மனதின் தூசு அகன்றுவிடும். தெளிவு பெற்ற மனம் அற வழியில் செயல்படச் சம்மதித்துவிடும். கடவுள் தியானத்தில் ஆழ்ந்து பழக்கப்பட்டுவிட்டால், காலப்போக்கில் மனம் தன்வசமாகிவிடும்.

? சரி! அதனால் என்ன லாபம்? அதை விளக்குங்கள்!

மனதின் தூண்டுதலில் உடல், புலன்கள் இயங்கவேண்டும். எதிரிடையான ஆசைகளில் கட்டுண்ட மனம் தவறான வழியில் புலன்களையும் வழிநடத்திவிடும். மனதுக்குக் கட்டுப்படும் நாம் உள்ளதை உள்ளபடி அறியமாட்டோம். மனக்கட்டுப்பாடு, அதுவழி புலனடக்கம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை தடம் புரளாமல் பயணிக்கும். மனத் தூய்மையில்லாத சில சீர்திருத்தவாதிகளின்

விளையாட்டில், எத்தனையோ கொந்தளிப்புகளை சமுதாயம் சந்தித்திருக்கிறது. இன்னும் சிலரது விளையாட்டு ஓய்ந்தபாடில்லை. லோகாயத வாழ்க்கையோ, ஆன்மிக வாழ்க்கையோ எதுவானாலும் அதன் வெற்றிக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். ஆகவே, பிறப்பின் தத்துவமே லோகாயத வாழ்க்கைதான் என்கிற கோட்பாடு ஏற்கத் தக்கதல்ல.

கேள்வி - பதில்

பொறுப்புள்ள மனித இனத்துக்கென்று கடமைகள் பல உண்டு. அவற்றை நிறைவேற்றி, அவற்றின்வழி இன்புற்று இருப்பதுதான் வாழ்க்கை யின் கோட்பாடு. மக்களை மனக்கட்டுப்பாடு முயற்சியில் ஈடுபட வைத்தால், மன உயர்வில் தெளிவு ஏற்பட்டு, சமுதாய வாழ்க்கை செம்மை யாகும். அடிக்கடி சீர்திருத்தவாதிகள் தோன்ற வேண்டிய அவசியம் இருக்காது. கடவுளுக்குப் பிரதிநிதியான மகான்களும் அவதாரம் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. மனதால் உயர்ந்தவன்தான் உயர்ந்தவன். பாமரர்களை மனதாலும் சிந்தனையாலும் உயர்வுபெறச் செய்யவேண்டும்.

அதைத் தவிர்த்து, அவர்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்றி தற்பெருமை ஈட்டுவதில் பெருமை இல்லை. இன்னாளில் மனதை திசை திருப்புவது கடினம் என்று எண்ணி, அவர்களுக்கு எளிய முறையில் பரிகாரம் அளித்துப் பராமரிப்பது சிறப்பல்ல. எதையும் சுலபமாக அடைய இயலாது. கஷ்டப்பட்டுத்தான் அடைய வேண்டும். அதில் தனி மகிழ்ச்சி இருக்கும். தினமும் மனதின் மாசு அகல, தெளிவு பெற, இறையுருவத்தில் மனதை இணைத்து அதில் ஊன்றவைத்துப் பழக்கப்படுத்தினால், காலப்போக்கில் மனம் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். துயரம் தொடாத மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும். அதற்கு மாற்று வழி, இன்றுவரை உருவாகவில்லை.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனமும் ஆன்மாவும் உடலில் இணைந்தவை. அவற்றைப் புறக்கணித்துவிட்டு, உடலைச் செழிக்கவைக்க இயலாது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஆன்மாவோடு இணைந்த மனம்தான் உடலியக்கத்துக்கு ஆதாரம். மனதின் தூண்டுதலில் உடல் இயங்கும். மனம் நினைக்கும். அதை, வாக்கு சொல் வடிவில் வெளியிடும். செயல் புலன்கள் அதை நடைமுறைப்படுத்தும். மனதின் ஆணைதான் சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். அதன் தூய்மையைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம். உலகில் நிகழும் அத்தனை கோலாகலங்களுக்கும், கோளாறுகளுக்கும் மனத்தூண்டுதலே காரணம். தூய்மையற்ற மனம் தவறான வழியைக் காட்டும். தூய்மையான மனம் நேர்வழியைக் காட்டும். கஷ்டமாக இருந்தாலும் மனக்கட்டுப்பாட்டைப் பேணிக்காக்க முற்படுவது, வாழ்க்கையின் முழு வெற்றிக்கு உதவும். அதற்கு, தினமும் குறிப்பிட்ட வேளையில் இறையுருவத்தை மனதில் இணைத்து, அதில் நிலைகொள்ள வைப்பது ஒன்றே சிறந்த வழி!

பதில்கள் தொடரும்...