Published:Updated:

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

Published:Updated:
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
##~##
தொ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து ஏழு முக விளக்கேற்றி மூகாம்பிகையை வழிபட, களத்திர தோஷம் நீங்கும்; கல்யாண மாலை தோள் சேரும்!

தொடர்ந்து 9 வாரங்கள்... வெள்ளி- செவ்வாய்க் கிழமைகளில் மூகாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, மூன்றுமுக தீபம் ஏற்றி வழிபட, கிரக தோஷங்களையும் நீக்கியருள்வாள் நவக்கிரக நாயகி!

'எல்லாம் சரி... ஆனால், தாய் மூகாம்பிகையை வழிபட, கர்நாடக மாநிலம்- கொல்லூருக்கு அல்லவா போக வேண்டும்?!’ என்கிறீர்களா?!

தேவையில்லை! தன் பக்தர்களுக்குத் திருவருள் புரிய, அவர்களது துயரங்களை எல்லாம் துடைத்தெறிய... நம் தமிழகத்தைத் தேடிவந்து கோயில்கொண்டிருக்கிறாள் ஜெயஜெய ஸ்ரீசாந்த மூகாம்பிகை!

அது, 1980-ஆம் ஆண்டு. பூலோக கயிலாயமாம் சென்னை- மயிலையில், ஸ்ரீராஜராஜேஸ்வரி மடாலயத்தில், சங்கராந்தி பூஜை விமரிசையாக நடைபெற்றது. பூஜைக்கு வந்த எவரோ பை ஒன்றை விட்டுச்செல்ல, அதைத் திறந்து பார்த்த அன்பர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி! மணியாய், மணியின் ஒலியாய், ஒளிரும் அணிபுனைந்த அணியாய்... முகம் மலரக் காட்சி தந்தாள் ஸ்ரீமூகாம்பிகை. அன்பர்கள் வியந்தனர்; முனிவர்களும் மகான்களும் தேடித் தவம் இருக்கும் அம்பிகைச்செல்வம், தங்களை நாடி வந்திருக்கும் காரணம் தெரியாமல் தவித்தனர் அன்பர்கள்.

இறுதியில், கோயில் நிர்வாகியான சாந்தாம்மாள் என்பவர், காஞ்சி மகானைத் தரிசித்து, அம்பாள் விக்கிரகம் குறித்து விவரித்தார். அன்னையின் திருவுளத்தை உணர்ந்த மகாபெரியவர், ''அம்பாள் தமிழத்திலும் கோயில்கொள்ள ஆசைப்படுகிறாள். அவளுக்குக் கோயில் கட்டி வழிபடு'' என்று வழிகாட்டி அருளினார்! அதன்படி, உலகாளும் நாயகியாம், மூகாம்பிகை அம்மைக்கு கோயில் கட்டுவது எனத் தீர்மானித்தனர். ஆனால், எங்கு கட்டுவது? தெரியவில்லை! 'அனைத்தையும் தீர்மானிப்பவள் அவள். இதையும் அவளே பார்த்துக்கொள்வாள்’ என்று எண்ணினர். அன்றிரவு, அந்தப் பெண்மணி சாந்தாம்மாளின் கனவில் தோன்றிய அம்பாள், ''தகப்பன்சாமியான முருகனின் மலைக்கோயிலுக்கும் தகப்பன் சிவனாரின் திருக்கோயிலுக்கும் நடுவில் எனக்குக் கோயில் எழுப்புக'' என ஆணையிட்டு அருளினாள் தேவி.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

ஆஹா... சிவனும் சிவ மைந்தனும் குடியிருக்க, நடுவில் அம்பிகையும் குடியமர்ந்துவிட்டால் எவ்வளவு சிறப்பு?! சரி, அப்படியரு இடம் எது? யோசித்தவர்களின் மனதில் பளிச்சென்று தோன்றிய தலம்- மூன்றாம்கட்டளை. போரூர்- குன்றத்தூர் சாலையில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது மூன்றாம்கட்டளை. குன்றத்தூரில் குமரன் குடியிருக்க, கோவூரில் சிவனார் (பாடல் பெற்ற தலம்) குடியிருக்க, இங்கே மூன்றாம்கட்டளையில், கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள் ஸ்ரீமூகாம்பிகை!

அதுமட்டுமா? மாங்காடு ஸ்ரீகாமாட்சி, திருவேற்காடு ஸ்ரீகருமாரி, மூன்றாம் கட்டளை ஸ்ரீமூகாம்பிகை ஆகியோர் மூவரும் முக்கோண அமைப்பில் அமைந்து, ஆட்சி புரிகின்றனராம்!

கொல்லூர் மூகாம்பிகை தலத்தைப் போலவே, முழுமை பெறாத நிலையிலேயே அமைந்துள்ளது நுழைவாயில் கோபுரம். ஸ்ரீபார்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி மற்றும் ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீதிருமால், ஸ்ரீவிஷ்ணு என ஆறு கடவுளரின் சக்திகளை ஒருங்கே பெற்று, அருள்மழை பொழிகிறாள், சர்வ தேவதை சொரூபியான ஸ்ரீமூகாம்பிகை!

பத்மாசனத்தில், சிம்ம வாகனத்தில், சங்கு- சக்கரம் ஏந்தி, அபய- வரத முத்திரைகள் காட்டி, நான்கு திருக்கரங்களுடன் திகழும் தேவி, சாந்த சொரூபமாகக் காட்சி தருவதால், இவளை ஸ்ரீசாந்த மூகாம்பிகை என அழைக்கின்றனர் ஊர்மக்கள். திருப்பாதத்துக்கு அருகில் லிங்கம் போன்ற அமைப்பு; இந்த லிங்கத் திருமேனிக்குதான் முதல் பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீஆதிசங்கரருக்கு தனிச்சந்நிதி உள்ளது.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

இங்கே, ஸ்ரீமகா சண்டி ஹோமம் சிறப்புற நடைபெறும். தவிர, ஆடி - ஆஷாட நவராத்திரி, தை - மாத மகா நவராத்திரி, பங்குனி - வசந்த நவராத்திரி, புரட்டாசி - சாரதா நவராத்திரி என நான்கு நவராத்திரி பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன. புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாளும், நவசண்டி ஹோமமும் நிறைவுநாளில், சகஸ்ர சண்டி மகா யாகமும் விமரிசையாக நடைபெறும். அப்போது, ஆயிரம் விதமான மூலிகைகளால் ஹோமம் நடைபெறும்! இதில் கலந்துகொண்டு தேவியைத் தரிசிக்க... நோய்கள், பில்லி சூனிய ஏவல் எனச் சகல பிரச்னைகளும் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இதேபோல், டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது, 308 வகை மூலிகைகளாலான கஷாயத்தை, ஸ்ரீசாந்த மூகாம்பிகைக்கு அபிஷேகிப்பர். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்து, அபிஷேகித்த கஷாய தீர்த்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதைப் பருகினால், நவக்கிரக தோஷங்களும் விலகும்; நோய்கள் யாவும் நீங்கும் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பெண்கள்.  

''காஞ்சி பெரியவாளின் அருளாசியுடன் எழுப்பப்பட்ட ஆலயம் இது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... பெண்கள் இங்கே வந்து, பிரார்த்தனை பண்ணினாப் போதும், மலை போலான சிக்கல்களும் பிரச்னைகளும் பனி போல் விலகிவிடும். எல்லாம் சாந்த மூகாம்பிகையின் பெருங்கருணை!'' என்கிறார் சாந்தாம்மாள்.

குழந்தைகளின் நட்சத்திர நாளில் இங்கு வந்து, ஸ்ரீசாந்த மூகாம்பிகைக்குத் தேனபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், மந்தம் மற்றும் ஞாபக மறதியாக இருக்கிற குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

ஸ்ரீலட்சுமி நாராயணருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. திருமணக் கோலத்தில் காட்சி தரும் இவர்களை வணங்கினால், குடும்பத்தில் பிரச்னைகள் விலகி, தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். இதே போல், ஸ்ரீவீரபத்திரர் சந்நிதியும் உள்ளது.

சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீசாந்தமூகாம்பிகையை, இந்த 2011-ஆம் ஆண்டின் துவக்க நாளில், வணங்கி வழிபடுங்கள்; இந்தப் புத்தாண்டு, இனிதாக அமையும்!

- ரா.ஷர்மிளா
படங்கள்: அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism