சிறப்பு கட்டுரை
Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

கடவுளும் காலமும்!  

கடவுளுக்கும் மனிதனுக்கும் காலம் எப்படி மாறுபட்டு நிற்கிறது என்பதைச் சித்திரிக்க ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே) சொன்ன கதை:

''பக்தன் ஒருவன் கடவுளை அணுகித் தனக்குச் சத்தியத்தைப் போதிக்கும்படி கேட்டான். அப்போது நல்ல கோடை காலம். கடவுளுக்கு ஒரே தாகம். பக்தனை நோக்கி, 'முதலில் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா’ என்றார்.

அவன் ஒரு வீட்டுக் கதவைத் தட்டினான். அழகான பெண் கதவைத் திறந்தாள். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் கொண்டனர். கொஞ்ச நாட்களில் திருமணமும் செய்து கொண்டார்கள். குழந்தைகள் பிறந்தன. காலம் போய்க்கொண்டே இருந்தது. ஒரு நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. நாட்கணக்கில் பெய்து கொண்டே இருந்தது. பிரளயம் போல ஆகிவிட்டது.

இந்த மனிதனின் வீடும் தண்ணீரில் மூழ்கியது. 'கடவுளே’ என்று கூப்பாடு போட்டான். கடவுள் தோன்றினார். 'என்னைக் காப்பாற்றுங்களேன்’ என்று கெஞ்சினான்.

அருட்களஞ்சியம்

''அது சரி, சற்றுநேரத்துக்கு முன்பு, நான் உன்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டேனே, என்ன ஆயிற்று?' என்று திருப்பிக் கேட்டார் கடவுள்.

கே.ராஜாமணி

  11.1.76 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

காபியின் மேல் காதல் ஏன்?

''அநேகமாக இன்று எல்லோரும் 'காபி’ அருந்துகின்றனர். அதன்மேல் ஏன்தான் இப்படியொரு தணியாத மோகம் என்பதற்கு காரணம் சொல்கிறேன், கேளுங்கள்:

வண்ணம், வடிவம், மணம் ஆகிய இம்மூன்றின் கலவையை நாம் 'பூ’ என்கிறோம். அப் 'பூ’வினை முகர்ந்தால் 'சுகானந்தம்’ கிட்டுகிறது. மேலும், சிவன், சக்தி, முருகன் ஆகியவர்களின் கலவையான 'பரம்பொருளை’ தியானித்தால், பேரானந்தம்  முக்தி  கிட்டும்.

இதுபோன்றே காபியும் மூன்று கலவைகளால் ஆனது. பால் சிவனைப் போன்ற வெண்மை நிறம்; டிகாக்‌ஷன் சக்தியைப் போன்று கருமை நிறம்; சர்க்கரை முருகன் பெயரை நினைக்கும்போதும் ஏற்படும் இனிமை. இவற்றால் உண்டாவது காபி. எனவேதான், காபியின் மேல் ஒரு தணியாத மோகமும், பருகும்போது இன்பமும் உண்டாகிறது!''

இவ்வாறு மணங்கமழ எடுத்துரைத்தவர் திருமுருக கிருபானந்த வாரியார்.

லி.ஷண்முகம்.

  30.1.66 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

கல்பகம் கனிந்தது

பொருளைக் கொட்டி அளந்துகொண்டிருக் கிறார்களாம், ஒரு மண்டபத்திலே! வேறொரு மண்டபத்திலே, அன்னம் போல் நடந்து வந்த மாதர்கள் நடனம் செய்துகொண்டிருக்கிறார்கள், கலைஞர்கள் களிக்கும்படி. நாவிலே நடனம் செய்கின்றன வேத வேதாந்தங்கள் என்று சொல்லும்படி, அவற்றை ஓதி விவரித்துக் கொண்டிருக்கிறார்கள் அறிஞர்கள், நாம் பார்க்கும் மூன்றாவது மண்டபத்திலே. நாலாவது மண்டபமும் வித்தியா மண்டபம் தான்; ஆனால், கலைக் கழகம். இங்கே கலைகள் நடம் புரிகின்றன, கலைஞர் இதயங்களிலே!

மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம்;

அன்னமென் னடையவர் ஆடும் மண்டபம்;

உன்னரும் அருமறை ஓது மண்டபம்;

பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்.

இத்தகைய மண்டபங்களிலே, அயோத்தியின் நாலு முக்கிய அரசியல் இலாகாக்களைக் குறிக்கும் நால்வகை மண்டபங்களைத்தான் கவிஞன் சுட்டிக் காட்டுகிறான்.

திருமகளின் நடன மேடையாக ஒரு மண்டபத்தைக் காட்டிவிட்டு, கலைமகளின் நடன மேடைகளாக மூன்று மண்டபங்களைக் காட்டுவதால், பொருட் செல்வத்தைக் காட்டிலும் மும்மடங்கு பொலிகின்றது கலைச் செல்வம் ராம ராஜதானியிலே  என்பது குறிப்பு.

அறிவுக் கல்வியும், அழகுக் கல்வியும்!

கலைகளைக் கவிஞர் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகிறான். நினைத்தற்கும் அரிய (உன்னரு) அருமறை என்பது வேதாந்தம்; தத்துவ ஞான ஆராய்ச்சி முதலிய அறிவுக் கலைகள். எடுத்து உரைப்பதற்கு அரிய (பன்னரு) கலைகளோ, சிற்பம் சித்திரம், நடனம், சங்கீதம், கவிதை ஆகிய அழகுக் கலைகள்.

அருட்களஞ்சியம்

இந்த இரு வகைக் கலைகளும் வாழ்க்கைக்கு இன்றியமை யாதன. அறிவுக் கலைகள் அறிவுப் பயிற்சி தருகின்றன. அறிவுச் செல்வத்தைத் தேடிக் குவிக்கவும் அளக்கவும் உதவு கின்றன. அழகுக் கலைகளோ சௌந்தரிய உணர்ச்சியைப் பெருக்கி, வாழ்க்கைக்கு வளமும் வனப்பும் ஊட்டுகின்றன. அயோத்திவாசிகள் அறிவுக் கல்வியைப் போற்றுவது போல், இதயத்தை வசீகரித்து மலரச் செய்யும் அழகுக் கல்வியையும் காதலிக்கிறார்கள்.

அழகுக் கலைகளில் நாட்டியக் கலைக்கு மட்டும் தனி மண்டபம் என்பது கவனிக்கத்தக்கது. அழகுக் கலைகளுக் கெல்லாம் வேராகவுள்ள பரத நாட்டியத்தை எவ்வளவு விசேஷமாய்ப் போற்றுகிறார்கள் அயோத்திவாசிகள்!

கீத வினோதங்கள்!

அதோ, அறிவு நிலையமான ஒரு மாளிகையிலே பாருங் கள், அருங் கலை வினோதர்களான பெண்கள் பாடிக் கொண்டிருப்பதை! குரலோடு ஒன்றுபட்டு இசைக்கின்றன மகர யாழ் முதலிய இசைக் கருவிகள். அவர்களுடைய இதயத்திலே உள்ள காதல், துயரம், உத்ஸாகம், நம்பிக்கை முதலிய உணர்ச்சிகளெல்லாம் பாட்டாகப் பொங்குகின்றன.

அருட்களஞ்சியம்

அந்த வாய்ப் பாட்டோடு யாழின் இசையும் ஆரோகண அவரோகணக் கிரமத்திலே நிமிர்ந்தும் இறங்கியும் செல்லுகிறது. அதற்கு இசைய மத்தளங்களும் ஒலி செய்கின்றன. மேலும் என்ன நடக்கிறது? பார்த்துக் கொள்ளுங்கள்:

இறங்குவ, மகரயாழ் எடுத்த இன்னிசை;

நிறம்கிளர் பாடலால் நிமிர்வ; அவ்வழி

கறங்குவ வள்விசிக் கருவி: கண்முகிழ்த்(து)

உறங்குவ மகளிரோ(டு)

ஓதும் கிள்ளையே!

இப்படிப் பெண்கள் பாடிக் கொண்டிருக் கும்போது, அவர்கள் வளர்க்கும் கிளிகளும் பக்கத்திலே இருக்கின்றன, 'கிளிகள் வளர்த்த கிளிகள்’ என்று சொல்லும்படி. அவர்களோடு பாட்டையும் ஓதி வருகின்றனவாம். 'சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' அல்லவா? எனினும், அந்த இசை விருந்தால் அப்படியே மயங்கி, கிளிகள் கண்மூடி உறங்கி விடுகின்றனவாம். பாடும் பெண்களுக்கோ உணர்ச்சி மிகுதியால் உறக்கம் பிடிக்கவில்லை. அந்தக் 'கிளிகள்’ மெய்ம்மறந்து பாடிக் கொண்டேயிருக்கிறார்கள்!

இத்தகைய உணர்ச்சிமயமான 'சங்கீதக் கச்சேரி’களை நகரமெங்கும் பார்க்கலாம். 'வீடு தோறும் கலையின் விளக்கம்' என்று புதுமைக் கவிஞரான பாரதி பாடுகிறாரல்லவா? இந்த வாக்கு, இந்த பாரதி கனவு, கம்பனுடைய ராம ராஜ்யத்தின் சாயைதான்! இப்படியெல்லாம் கலைகளை ஒளிரச் செய்யும் பெண்மணிகள் வாழ்க்கையின் விளக்காக விளங்குகிறார்கள் என்பது குறிப்பு.

அரசியலும் கல்வியும்

இத்தகைய ராஜ்யத்திலே, 'வறுமை யில்லாததால் வண்மையும் இல்லை' என்று ஏற்கெனவே சொன்னதையும் ஞாபகப்படுத்திக் கொண்டே, 'களவு இல்லாததால் காவலும் இல்லை!' என்கிறான் கவிஞன்.

அருட்களஞ்சியம்

கள்வார் இலாமைப் பொருட்காவலும்

இல்லை; யாதும்

கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும்

இல்லை மாதோ!

காவல் இல்லாத இந்தப் புதுமை அரசின் பயனாக ஏழைகளும் இல்லை, முதலாளிகளும் இல்லை; எனவே, கள்வர்களும் இல்லையாம்!

எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும்

எய்த லாலே,

இல்லாரும் இல்லை; உடையார்களும்

இல்லை மாதோ!

'எல்லாருக்கும் எல்லாம் உரியன' என்ற கொள்கைக்கு இணங்க, ஆட்சி நடை பெறுகிறதாம்; எனவே, 'இல்லை’ என்ற கொடுமையும் இங்கே இல்லை; 'சுரண்டிப் பிழைத்தல்’ என்ற கொடுமையும் கிடையாது!

ஓவியங்கள்: சேகர்

19.3.44 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

காஞ்சிபுரம் இட்லி!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி ஆலயத் தில் இந்த இட்லியை எப்படித் தயார் செய் கிறார்கள்?

இதற்கு வேண்டியவை: பச்சை அரிசி ஒன்றரை லிட்டர், உளுத்தம் பருப்பு ஒரு லிட்டர், மிளகு 35 கிராம், ஜீரகம் 35 கிராம், வெந்தயம் 35 கிராம், பெருங்காயம் 17 1/2 கிராம், சுக்கு  35 கிராம், உப்பு  அரை லிட்டர், தயிர் அரை லிட்டர், நெய் 350 கிராம்.

முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை ஜலத்தில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, ஆட்டுக் கல்லில் அரைக்கவேண்டும். மிளகு, ஜீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் பொடித்துக் கொண்டு, சுக்கை சிறு சிறு துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றையும், தயிர், உப்பு, நெய் இவற்றையும் அரைத்த மாவில் போட்டு, நன்கு கலக்கி பன்னிரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

நம் தாத்தாக்கள் புஷ்பம் சேகரிக்க உபயோகித்தார்களே, அது மாதிரியான குடலைகளில் வாழையிலையைச் சுற்றி வைத்து, இந்த மாவை நிரப்ப வேண்டும். ஒரு பெரிய மண் பானையில் பாதி ஜலம் வைத்து, குடலைகளை ஜல மட்டத்தின் மேல் வைத்துப் பொருத்தவேண்டும். பானையை மூடி அடுப்பின் மீது வைக்க, சுமார் இரண்டு மணி நேரத்தில் இட்லி தயாராகிவிடும்.

அகிலா வைத்யநாதன்

 28.2.71 ஆனந்த விகடன் இதழில் இருந்து

ஜனகர் மனைவியின் பெயர் என்ன?

விரிவுரையாளர்கள் சீதையின் திருமணத்தைச் சிறப்பாக, இனிக்க இனிக்க எடுத்துரைப்பார்கள். இதைக் கேட்கும் நமக்கு, அந்தத் திருமணத்தை நேரில் காண்பது போன்ற உணர்வும் ஏற்படும்.

பெரும்பாலான ராமாயண விரிவுரையாளர்கள், இந்தச் சந்தர்ப்பத்தில், ஜனகரின் தர்மபத்தினி யார் என்பதைத் தெரிவிப்பது இல்லை.

அருட்களஞ்சியம்

தாரை வார்த்துக் கொடுக்கும்போது மனைவி உடன் இருப்பது விவாகச் சடங்கு முறையாகும். சீதை, ஜனகரின் மனைவி ஈன்றெடுத்த பெண் அல்ல; எனவே, ஜனகர் மனைவியின் பெயர் கூறப்படுவதில்லை எனலாம்.

ஆனால், ஜனகரின் சொந்த மகளான ஊர்மிளையை இதே சந்தர்ப்பத்தில் லட்சுமணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டதே! இந்தச் சந்தர்ப்பத்தின்போதும் ஜனகரின் மனைவி யார் என்று சொல்லப்படுவதில்லை.

'ஜனகருக்கு மனைவி இல்லையா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்கு இதோ பதில்:

ஜனகர் மனைவியின் பெயர் 'தன்யா.’ இவர் ஹிமவானு டைய புத்ரி. தன்யாவுக்குப் பார்வதி, கலாவதி எனும் இரு சகோதரிகளும் உண்டு. ஜனகர் சீதையைத் தாரை வார்த்துக் கொடுத்தபோது தன்யா உடன் இருந்தார்.

ஆதாரம்: ஜே.எல்.சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்டு புது தில்லியிலிருந்து பனார்ஸிதாஸ் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட சிவ புராணம்.

உப்பு. ராஜிபாய்

 11.2.79 ஆனந்த விகடன் இதழில் இருந்து...