சிறப்பு கட்டுரை
Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிகள் கோணத்தில் (சக்கரத்தின் வளைவில்) இருப்பவை; உபய ராசிகள். அதாவது, ஸ்திரமும் சரமும் கலந்தவை. மிதுனத்தில் முற்பகுதி 15 பாகைகள், ரிஷப (ஸ்திர) ராசிக்கு இணங்க ஸ்திரத்தைப் பெற்றுவிடும். அதன் பிற்பகுதி 15 பாகைகள், கடக (சர) ராசியின் முற்பகுதியை ஒட்டி, சரமாக இருக்கும். இப்படி, ஸ்திர  சரங்கள் சரிசமமாக இணைந்ததால் அது உபய ராசி; இரண்டும் இணைந்த ராசியாக மாறியது. 

இப்படி கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளும் தங்களுக்கு முன்பின் உள்ள ராசிகளின் ஸ்திர, சரத்தை ஒட்டி இரண்டும் இணைந்த உபய ராசிகளாக உருவெடுத்துவிடும். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியன சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள். ஓரிடத்தில் நிலையாக இருக்கும் இயல்பு கொண்டது ஸ்திரம். ஓரிடத்தில் நிலைபெறாமல் அசைந்து கொண்டிருக்கும் இயல்பு கொண்டது சரம். இரண்டு இயல்புகளும் கலந்த தன்மை வாய்ந்தவை உபய ராசிகள்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

7ம் வீடு எப்படி?

பெண் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7ம் வீடு சர ராசியாக அமைந்தால், வரப்போகும் கணவன் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று கொண்டிருப்பான் என்கிறது ஜோதிடம். அவன் தேச சஞ்சாரியாக இருப்பான். திருமணமான பிறகு கணவன் பணிகளின் நிமித்தம் வேறு தேசங்களுக்குச் செல்வதனால், மனைவியைப் பிரிந்து வாழும் சூழலை உருவாக்குவான் என்கிறது ஜோதிடம். இதிலிருந்தே, 7வது வீடாக ஸ்திர ராசி அமைந்தால், திருமணத்துக்குப் பிறகு ஸ்திரமாக அவளுடன் சேர்ந்து இருப்பான். உபய ராசியாக அமைந்தால், வெளியூர் பயணமும் உள்ளூரில் சேர்ந்து வாழும் சூழலும் கலந்து அமையும் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும் என்கிறது ஜோதிடம்

லக்னத்தை வைத்து 7ம் வீடும், சந்திரனை வைத்து 7ம் வீடும் சர ராசியாக இருந்தால், அதில் வலுவுற்ற ஏழாம் வீட்டின் தகுதியின் அடிப்படையில் பலன் உறுதி செய்யப்படும் என்கிறது ஜோதிடம். இங்கு, வரப்போகும் கணவனின் இயல்பு ஆராயப்படுவதால், திருமணத்துக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் பலன் சொல்லப்படுகிறது. பெண்ணின் கர்மவினைப் படி கணவன் தேச சஞ்சாரியாக இருப்பவனா, வீட்டோடு மனைவியோடு இணைந்து வாழ்பவனா அல்லது இரண்டும் கலந்த சூழலில் இருப்பவனா என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.

வாழ்வை தீர்மானிக்கும் கர்மவினை!

பெண்ணின் கர்மவினை திருமணத்துக்குப் பிறகு கணவனைப் பிரிந்து வாழும் சூழலைச் சந்திக்க வைக்குமா, இணைந்து வாழும் சுவாரஸ்யத்தை அனுபவிக்கவைக்குமா, இரண்டும் கலந்த மூன்றாவது அனுபவத்தை உணர வைக்குமா என்பதை உணர்த்த இந்த சர, ஸ்திர, உபய ராசிகளின் துணை பயன்படுகிறது. அவளது கர்ம வினையின் தரத்துக்கு ஏற்ப ராசி அமைந்துவிடும். இது, கணவனின் இயல்பை சுட்டிக் காட்ட வரவில்லை; மனைவியின் திருமண உறவில் கணவனின் பங்கை வலியுறுத்துகிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

திருமணத்துக்கு பிறகு அவன் தேசாந்தரம் செல்லும்படி நேர்ந்தால், திருமண வாழ்க்கையில் நெருடல் இருக்கும். அந்த நெருடலை அனுபவிக்க வைக்க ஏதுவாக, அவளது கர்மவினை

அவள் பிறக்கும் தறுவாயில் 7ம் வீடு சர ராசியாக அமையும்படி செய்கிறது. இணைந்து வாழும் சூழல் இருந்தால், அவளது கர்மவினை பிறக்கும் தறுவாயில் 7ம் வீடு ஸ்திர ராசியாக இருக்கும்படி செய்யும். பிரிதலும், இணைந்திருத்தலும் கலந்த சூழலே அவளுடைய கர்மவினையின் பலன் எனில், பிறக்கும் வேளையில் 7ம் வீடு உபய ராசியாக அமைந்துவிடும். இங்கெல்லாம் திருமணத்துக்குப் பிறகு, கணவனிடம் இருந்து கிடைக்கும் இன்பத்தின் அளவை வரையறுக்கிறது எனலாம். இந்த மூன்றுவிதமான கணவனின் வரவு, அவளது தாம்பத்தியத்துக்கு இழுக்கு அல்லது செழிப்பு என்பதை வரையறுக்க வரவில்லை. தாம்பத்தி யத்தில் கணவனின் பங்கு மாறுபட்டு இருப்பதற்கு, அவளுடைய கர்மவினை காரணமாகிறது என்று பொருள்.

பிரியவைக்கும் பணிச் சூழல்...

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சேர்ந்து வாழ்ந்து அலுவலகம் சென்று வேலை பார்ப்பவர்களும் உண்டு. வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உண்டு. இந்தப் பிரிவை இருவரும் ஏற்று குடும்பம் நடத்தும் தம்பதிகளும் உண்டு. குழந்தைகளின் படிப்பை, பராமரிப்பைச் செழிப்பாக்க, அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த உதவியாக, கணவனை வெளியூர் செல்ல அனுமதிக்கும் பெண்களும் உண்டு. மனைவி வேலையில் இருக்க, அது செளகரியமாகவும் அமைந்துவிட, கணவனை வெளியூர் செல்ல அனுமதிப்பவர்களும் உண்டு. வருங்காலம் செழிப்புற்றுத் திகழ்வதற்கு தோதாக, பொருளாதாரத்தில் முன்னேற விரும்பி, கண வனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கும் பெண்களும் உண்டு.

ரயில்களில் பணிபுரிபவர்களுக்கு வாழ்க்கை யில் ஒரு பகுதி ரயிலிலேயே கழிந்துவிடும். வியாபார நிமித்தமாய் பல ஊர்களுக்கு சென்று வருபவர்களும் உண்டு. வார சந்தைக்காக பல ஊர்களுக்குச் சென்று வருபவர்களும் உண்டு. கோயில் உற்ஸவ காலங்களில் விழாப்பணிகளுக்காக ஊர் ஊராகச் சென்று  வருபவர்களும் உண்டு. அரசாங்கத்தால் வெளியூர் அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலம் வெளியூரில் தங்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும் உண்டு. மூன்று அல்லது ஐந்து வருஷம் எனும் கணக்கில் பணி மாற்றம் ஏற்பட்டு வெளியூர் வாசத்தை ஏற்பவர்களும் உண்டு. இந்த நிலையில் குடும்பத்தோடு ஊர் சுற்ற முடியாமல் குடும்பத்தைப் பிரிந்து வேலை பார்ப்பவர்களும் உண்டு. அதேநேரம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று அங்கேயே தங்கிவிடுபவர்கள், குழந்தைகளையும் மனைவியையும் தன்னோடு சேர்ந்து வாழும்படியான சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு.

ராசிகளின் தராதரம்...

இங்கெல்லாம், மனைவி துயரத்தைச் சந்திப்பாள் என்றோ மகிழ்ச்சியைப் பெறுவாள் என்றோ சொல்லவரவில்லை. சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப விஷயங்களில் கணவனின் முழுக் கவனம் இருக்கும். பிரிந்து வாழும்போது கணவனின் பொறுப்பை

மனைவி ஏற்கவேண்டியது வரும். சேர்ந்தும் பிரிந்தும் வாழும் தறுவாயில் மூன்றாவது ஓர் அனுபவம் இருக்கும். என்ன இருந்தாலும் திருமணம்

இருவரும் சேர்ந்த வாழ வகை செய்கிறது. அதில், எந்த வகையில்  நெருடல் வந்தாலும் அதை ஏற்று பொறுமையோடு இருக்கும் கட்டாயம் வந்துவிடுகிறது. தாம்பத்தியத்தில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கவைப்பது அவளது கர்மவினை.

திருமணத்துக்குப் பிறகு பிரிந்து வாழும் தம்பதிகள், பிரிவை ஏற்றுக்கொண்டாலும், அந்த வேளையில் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் ஆசைகளை அனுபவிக்க முடியாமல் போவது உண்டு. அது அவளது கர்மவினை. இரவில் பணிபுரியும் கணவனை ஏற்கும் நிலையிலும், இவள் தனது ஆசைகளை அடக்கிக்கொள்ள வேண்டியது இருப்பதால், நெருடல் ஏற்படுவது உண்டு. இளமையில் சுவைக்க வேண்டியதை அடைந்தும் அடையமுடியாமல் போவது நெருடல்தான். இந்த மாதிரி அனுபவங்கள் அவள் வாழ்க்கையில் ஏற்படுவதற்கு அவளுடைய கர்மவினையே காரணம். அதை கணவன் வாயிலாக நிறைவேற்றி வைக்கிறது கர்மவினை. அது, ராசியின் தராதரத்தின் வாயிலாக இறுதி வடிவம் பெறுகிறது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பலனை இறுதி செய்வதில் கிரகங்களோ, நட்சத்திரங்களோ மட்டுமே போதாது. ராசியின் தன்மையும் இணையவேண்டும். சில நேரம் கிரகங்களுக்கும், சில நேரம் நட்சத்திரங்களுக்கும், சில நேரம் ராசிகளுக்கும் முன்னுரிமை இருக்கும். ஆக, நட்சத்திரம், ராசி, கிரகங்கள் ஆகிய மூன்றையும் கவனமாக ஆராய்ந்தால் மட்டுமே இறுதி முடிவு பொருத்தமாக இருக்கும்.

ஒற்றைவரி பலாபலன்கள்!

இப்படியிருக்க, மகத்தில் பிறந்தவள் மங்கையர்களில் மாணிக்கமாகத் திகழ்வாள். சிம்ம ராசியில் பிறந்தவளா, அவளை நெருங்க முடியாது. மூலத்தில் பிறந்தவள் எனில் குடும்ப மூலமே அழிந்துவிடும். பூராடத்தில் பிறந்தவளா? தாலிக்கயிறு ஆடாது; அறுந்துவிடும். கஜகேசரி யோகமா? பணத்தில் மிதப்பாள். அவிட்டத்தில் பிறந்தவளா? தவிட்டுப் பானையிலும் பணம் புரளும். நீசபங்க ராஜ யோகமா? எதிலும் வெற்றியடைவாள் என்றெல்லாம் ஒரு வரியில் முடிவை அறிவிக்கும் ஜோதிடர்கள் தோன்றக்கூடாது. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து, எல்லா பலன்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவளது கர்மவினைக்கு உகந்த பலனை இறுதி செய்ய வேண்டும்.

மாகேந்திரப் பொருத்தம் இருக்கிறது; மெச்சும்படியான வாழ்க்கை உண்டு. லக்னத்தில் குரு இருக்கிறார் நீண்ட ஆயுள் உண்டு. 7ல் சுப கிரகம் இருக்கிறது. எனவே, தாம்பத்தியம் இனிக்கும். 5ல் சுப கிரகம் இருக்கிறது. எனவே, மழலைச் செல்வங்கள் உண்டு... இப்படி, ஒன்றை மட்டும் வைத்துப் பலன் சொல்லும் துணிவு ஜோதிட மேதைகளுக்கு வரக்கூடாது. ஜோதிடர், தான் ஒரு சமூகசேவகர் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஜோதிடம் என்பது வேலை வாய்ப்பு அல்ல. அதை வேலை வாய்ப்பாக ஏற்றால், தன்னையும் அறியாமல் தவறிழைக்க நேரிடும். ஆகவேதான், பண்டைய அறிஞர்கள் ஜோதிடத்தை பிழைப் புக்காக ஏற்கவில்லை. நாம்தான் அதை வளர்க்க வியாபார நோக்கை இணைத்தோம். அது, சமுதாயத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜோதிடம் பார்ப்பதில் சலிப்பு ஏற்பட்டு, ஜாதகம் பார்ப்பதையே தவிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  திருமணத்தில் சந்திக்கும் எந்த இடையூறையும் எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் மன வலிமையை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிடரின் மாறுபட்ட விளக்கங்களில் செய்வது அறியாது சோர்வு அடைந்து, தங்கள் மகன், மகள்களிடம் அவர்களுக்கு ஏற்ற இணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்யும் சூழல் வளர்ந்துவருகிறது.இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாக இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

வருங்காலமும் ஜோதிடமும்

விவாகரத்து செய்துகொண்டு மறுமணத்தை நாடுபவர்களுக்கும், விதவைகள் மறுமணத் துக்கும் பொருத்தம் பார்த்துக் கொடுக்கும் சிறப்பு ஜோதிடர்களும் தென்பட ஆரம்பித் திருக்கிறார்கள். மக்களில் எல்லோருமே அப்பாவிகள் அல்ல; அறிவாளிகளும் சிந்தனை யாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் தாழ்ந்த நிலையில் மதிப்பீடு செய்துவிடக் கூடாது. அப்படிச் செய்யும் நிலையில், வருங்காலத்தில் ஜோதிடத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, ஜோதிட பணியை சேவையாக ஏற்று செயல்படுபவர்கள் நினைத்தால், ஜோதிடத்தின் மதிப்பு குன்றாமல் இருக்கும்.

சந்திரனுக்குப் பின்னால் 6 ராசிகள் உண்டு (சந்திரனுடன் சேர்த்து) ; சூரியனுக்கு முன்னால் 6 ராசிகள் உண்டு (சூரியனுடன் சேர்த்து). ராசிச் சக்கரத்தின் சம பங்கில் சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கிறார்கள். சந்திரனுக்குப் பின்னாலும், சூரியனுக்கு முன்னாலும் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும் முறையே அமர்ந்திருப்பார்கள்.

சூரியசந்திரருடன் ஐந்து கிரகங்களின் தொடர்பு சக்கரத்தில் இருக்கும். சூரியன் லக்ன காரகன்; சந்திரன் மனதுக்குக் காரகன். இவர்கள் இருவரையும் வைத்து (அதாவது லக்னகாரகன், சந்திரன் மனதுக்குக்காரகன்)  இவர்களைச் சமமாக பாவித்து பலன் சொல்வதை இறுதி செய்வதற்கு, இரண்டில் பலம் பெற்றிருக்கும் பகுதியை வைத்து நிர்ணயிக்கவேண்டும் என்கிறது ஜோதிடம்.

சூரிய, சந்திரர்கள்...

சூரியனுக்கும் சந்திரனுக்கும் சர ராசி  2, ஸ்திரம்  2, உபயம்  2 என இருக்கும். ராசிச் சக்கிரத்தில் இந்த மூன்று வகை ராசிகளும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் இருக்கும். ராசிச் சக்கரத்தில் சூரியசந்திரர்களின் இணைப்பு, ஸ்திர  சர  உபய ராசிகளின் இணைப்பு, அதுவும் தவிர சக்கரத்தில் கேந்திரத்தில் இணையும் தன்மை, ராசியில் தென்படும் தகுதியை (சரம், ஸ்திரம் உபயம்) வைத்து பலனை

இறுதி செய்கிறது ஜோதிடம்.

ஜடமான ராசியும் அதிபதியின் இணைப்பில் தனது தகுதியில் பலனை இறுதிசெய்துவிடுகிறது. ராசிக்குச் சொன்ன உட் பிரிவுகள் அத்தனையும்... ஒற்றைப்படை, இரட்டைப்படை, ஆண்பெண், நர ராசி, விலங்கின ராசி, ஊர்வன ராசி, ஜல ராசி, காட்டு ராசி, நாட்டு ராசி போன்ற விளக்கங்கள் அத்தனையும் பலன் சொல்வதில் இணைந்துவிடும். ராசியைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் பலன் சொல்வதில் இணைந்துவிடும். அதற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். எந்தெந்த பலன்களில் ராசியில் அடங்கிய தகவல்கள் இணையும் என்பதை அறுதியிட்டு விளக்கம் அளிக்கும் ஜோதிடம். இங்கு சரம், ஸ்திரம், உபயம் என்ற பிரிவுகள் வரப்போகும் கணவனின் இயல்பை இறுதி செய்கின்றன.

சரம், ஸ்திரம், உபயம்...

பெண் ஜாதகத்தில் 7வது ராசி சரமாக இருக்கும் வேளையில், அவள் பிறந்த லக்னமும் சரமாக இருக்கும். 7வது ராசியில் ஸ்திரமானாலும் உபயமானாலும் பிறந்த லக்னமும் ஸ்திரமாகவும் உபயமாகவும் இருக்கும். சர லக்னத்துக்கு 4, 7, 10 வீடுகள் சரமாக இருக்கும். அதுபோல். ஸ்திர லக்னத்துக்கும் உபய லக்னத்துக்கும் 4, 7, 10 வீடுகள் ஸ்திரமாகவும் உபயமாகவும் இருக்கும். உபய லக்னத்துக்கு அதிபதிகளாக குருவும் புதனும் இருப்பார்கள். சந்திரனுக்கு சர லக்னம் இருக்கும். சுக்கிரனுக்கு சரமும் ஸ்திரமும் உண்டு. சூரியனுக்கு ஸ்திர லக்னம் மட்டும் இருக்கும். சனிக்கும் செவ்வாய்க்கும் சரம், ஸ்திரம் இரண்டும் இருக்கும்.

கேந்திரங்களில் (1, 4, 7, 10ல்) எல்லாம் சரமாகவும், எல்லாம் ஸ்திரமாகவும், எல்லாம் உபயமாகவும் இருக் கும். த்ரிகோணங்களில் (1, 5, 9ல்) சரம், ஸ்திரம், உபயம் ஆக மூன்றும் கலந்து இருக்கும். சரத்துக்கு 11வது வீடு ஸ்திரம். ஸ்திரத்துக்கு 11ம் வீடு உபயம். உபயத்துக்கு 11ம் வீடு சரம்  இந்த மாறுதலும் உண்டு. கேந்திர த்ரிகோணங்களில் இந்த மாறுதல் பலனில் மாறுதலை உண்டுபண்ணும். ராசிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இடங்களும் ஜோதிடத்தில் உண்டு.

சிந்திப்போம்...