சிறப்பு கட்டுரை
Published:Updated:

அழுதால் பெறலாமே..!

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..! எஸ்.கண்ணன்கோபாலன்

தான் விரும்பும் ஒன்றைப் பெற என்ன செய்யவேண்டும் என்பது பற்றிப் பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அப்படித்தான் அந்தக் குழந்தையும் 'அழுதால் பெறலாம்’ என்று தெரிந்து வைத்திருந்தது. ஆனால், அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் சாதாரண குழந்தை இல்லை. அவதாரக் குழந்தை! ஒரு தம்பதியர் தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை. 

புறச் சமயம் வலுவுற்று, இந்துச் சமயம் நலிவுற்று இருந்த காலம் அது. இந்துச் சமயத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக, பிரளய காலத்திலும் அழியாத பெருமை பெற்ற

திருத்தலமான திருத்தோணிபுரம் என்னும் சீர்காழி திருத்தலத்தில் வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் விரும்பினார். வேதியர்குலம் விளங்க வந்த சிவபாத இருதயரின் விருப்பமே தன்னுடைய விருப்பமாகவும் கொண்டிருந்தவர் அவர்தம் மனைவி பகவதியார். கருத்தொருமித்த அந்தத் தம்பதியர் அதற்காகத் தோணியப்பரின் அருள் வேண்டி தவம் இயற்றினார்கள்.

அழுதால் பெறலாமே..!

வேதநெறி தழைத்தோங்கவும் மண்ணுலகம் செழித்துச் சிறக்கவும் பிள்ளை வரம் வேண்டித் தவம் இருந்தவர்களின் தவப் பயனாக, சித்திரைத் திங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் அவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்த்தது. அந்தக் குழந்தை, திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் பெற்ற தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தைதான் தனக்கு வேண்டியதைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தது. அது விரும்பிப் பெற்றதும் அதனுடைய நலனுக்காக அல்ல; மண்ணுலக மாந்தர்தம் நலனுக்காக என்பதுதான் நாம் செய்த தவப்பயன்.

புராதன சநாதன தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த அந்தக் குழந்தை, தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறவேண்டும் என்றால், சிவஞானம் கைவரப் பெற வேண்டும் என்பதை

உணர்ந்து, உரிய நேரத்துக்குக் காத்திருந்தது. அந்த நேரமும் வந்தது.

அழுதால் பெறலாமே..!

ஒருநாள் தோணியப்பர் ஆலய திருக் குளத்துக்கு நீராடச் சென்றார் சிவபாத இருதயர். சம்பந்தக் குழந்தை தானும் வருவேன் என்று அடம்பிடித்தது. அடம் பிடிக்கும் மழலையை அலட்சியப்படுத்த முடியுமா என்ன? வேறு வழி இன்றி, சிவபாதர் குழந்தை சம்பந்தரையும் அழைத்துச் சென்றார். கோயிலுக்குச் சென்றவர், குழந்தையைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு, குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை தோணியப்பரிடம் ஒப்படைத்து, நீரில் மூழ்கி மந்திரங்களை ஜபிக்கத் தொடங்கிவிட்டார்.

அதுதான் நேரம் என்று அந்தக் குழந்தையும் தனக்கு வேண்டியதைப் பெற முடிவு செய்துவிட்டது. தன் கொவ்வைச் செவ்வாய் திறந்து வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. மழலையின் அழுகுரல் கேட்டு மனம் கலங்கிய அன்னை உமையவள் சிவனாரை நோக்க, அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவனார் தம் கண்களாலேயே சம்மதித்தார்.

உடனே அம்பிகை, தங்கக் கிண் ணத்தில் பால் சுரந்து, அத்துடன் சிவஞானம் என்னும் இன்னமுதத்தை யும் கலந்து எடுத்து வந்து, அழும் குழந்தையைத் தன் மடியில் இருத்தி, ஊட்டி மறைந்தாள். நீராடி முடித்துக் கரையேறிய சிவபாதர், குழந்தையை நெருங்கினார். குழந்தையின் இதழோரம் பால் வடிந்திருப்பது கண்டு, 'யார் கொடுத்த எச்சில் பாலை நீ குடித்தாய்?’ என்று அடிப்பதுபோல் மிரட்டினார். தன் மலர் முகத்தை பயந்ததுபோல் வைத்துக்கொண்ட அந்தக் குழந்தை, தனது தளிர்க்கரங்களை மேலே நீட்டி, 'தோடுடைய செவியன்’ என்று பாடத் தொடங்கி, பாலமுதுடன் சிவஞானம் என்னும் உயர் அமுதத்தையும் சேர்த்துத் தனக்குப் புகட்டியது தோடுடைய செவியனான சிவபெருமானின் தேவியாம் அன்னை உமையவளே என்று குறிப்பால் உணர்த்தியது.

அழுதால் பெறலாமே..!

குழலினும் இனிய மழலை மொழியில் குழந்தை பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமான் உமையம்மையுடன் ஞானசம்பந்தருக்கும் சிவபாதருக்கும் திருக்காட்சி தந்து அருளினார். புறச் சமயம் நலிய நலிய, புராதன சநாதன சமயம் பொலியப் பொலிய அவதரித்த அந்த ஞானக் குழந்தைக்கு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அன்னை உமையவள் ஞானப் பால் புகட்டியதை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் 'திருமுலைப்பால் விழா’ என்ற பெயரில் சீர்காழியில் நடைபெற்று வரும் விழாவையே நாம் இப்போது தரிசிக்க இருக்கிறோம்.

24.4.15 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் நடைபெற இருந்த அந்த வைபவத்தை தரிசிக்க காலை 9 மணிக்கே நாம் ஆலயத்துக்குச் சென்றுவிட்டோம். காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கோயிலுக்குள் நிறைந்துவிட்டார்கள். நாம் சென்றபோது, மலைக்கோயிலில் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த மலைக்கோயிலில்தான் சிவபெருமான் உமையம்மையுடன் திருக்காட்சி தருகிறார். சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக அலங்காரங்கள் முடிவதற்குள், கோயிலின் வடபகுதியில் அமைந்திருக்கும் சம்பந்தர் கோயிலுக்குச் சென்று வர நினைத்து, அங்கே செல்கிறோம். அப்போது சம்பந்தருக்கு அபிஷேகங்கள் முடிந்து, அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அழுதால் பெறலாமே..!

பிற்பகல் 12 மணியளவில், தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஆலயத்துக்கு வர இருப்பதா கவும், அதன் பிறகே திருஞான சம்பந்தருக்கு தீபாராதனைகள் நடைபெற்று, குளக்கரைக்கு எழுந்தருள்வார் என்றும் அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சம்பந்தருக்காக வண்ண வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்கு தயாராக இருந்தது. அப்போது ஒருவர் மற்றவரிடம், குருமகா சந்நிதானம்  உடல்நிலை அசௌகர்யமாக இருப்பதால், அவர் வருவது சந்தேகம்தான் என்றும், அப்படியே வருவதாக இருந்தாலும் தாமதமாகத்தான் வருவார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தது நமக்குக் கேட்டது.

'சரி, அதற்குள் தோணியப்பர் கோயிலுக்குச் சென்று வரலாமே’ என்று நினைத்து, திரும்பவும் மலைக்கோயிலுக்குச் சென்றோம்.

சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக அலங்காரங்கள் முடிந்து, சுவாமி அம்பிகையுடன் வெள்ளி ரிஷபத்திலும், மற்றொரு வெள்ளிச் சப்பரத்தில் அம்பிகையும் எழுந்தருளி இருந்தனர். அம்பிகையின் சப்பரத்தில் தங்கக் குடம் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. சம்பந்தரின் அழுகைக் குரலுக்காக அம்மையப்பர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், 'எப்போது திருமுலைப்பால் வைபவம் நடைபெறும்’ என்று ஏக்கமும் தவிப்புமாகக் காத்துக்கொண்டிருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் விதவிதமான பாத்திரங்களில் பால் கொண்டு வந்திருந்ததையும் காணமுடிந்தது.

அழுதால் பெறலாமே..!

என்னதான் வயதின் காரணமாகத் தமக்குச் சில அசௌகர்யங்கள் இருந்தாலும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்துவிட்டார்கள். அவருடன் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகளும் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகளும் வந்திருந்தார்கள். குருமகா சந்நிதானம் வருகை தந்த உடனே, திருஞானசம்பந்தருக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், திருஞானசம்பந்தர் பல்லக்கில் எழுந்தருள, புறப்பாடு தொடங்கியது. தெற்குப் பிராகாரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியதும், குருமகா சந்நிதானம் அவர்கள், வைபவத்தை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, திருமுலைப்பால் வைபவம் குறித்து அருளுரை ஆற்றினார்கள். அவர் தம்முடைய அருளுரையில்...

''இன்று மிகச் சிறந்த நாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திருத்தலத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அம்பிகையே நேரில் வந்து பால் கொடுத்துப் பசியாற்றிய நாள். சேக்கிழார் பெருமான் பாடுகிறார்...

'எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி

உண்ணடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற்கிண்ணம் அளித்து

அண்ணலை அங்கழுகைதீர்த் தங்கணனார் அருள்புரிந்தார்.’

அம்பாள், நினைப்பதற்கும் பெறுவதற்கும் அரியதான சிவஞானமான இனிய அமுதத்தை பாலுடனே குழைத்து, தம்மை எதிர்நோக்கிய பிள்ளையின் கண்ணீரைத் துடைத்து அருளி, 'பாலமுதத்தை உண்பாயாக’ என்று உண்ணச் செய்தார்.

அம்பிகையினால் ஞானப் பால் ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தர், சிவபெருமானுடைய திருவடிகளையே சிந்தித்தலான திருப்பெருகும் சிவஞானத்தையும், பிறப்பும் இறப்பும் வராமல் தடுக்கும் குணத்துடன் கூடிய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் உணரப் பெற்றார். அப்படித் தாம் உணர்ந்ததை நாம் எல்லோரும் உணரும்படிச் செய்தார்.

நாம் எல்லோரும் உணர்ந்து உய்யும்படிச் செய்த திருஞானசம்பந்த பெருமானின் திருவடி களைப் பணிந்து, ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களுடன் நல்ல செயல்களையும் செய்து வந்தால், நம் மனமும் சிறக்கும்; நாடும் செழிக்கும்'' என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, திருஞானசம்பந்தர் மேற்குப் பிராகாரத்துக்கு எழுந்தருள, அந்த இடத்தில் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அருளுரை ஆற்றினார்கள்.

அழுதால் பெறலாமே..!

''திருஞானசம்பந்தரின் அவதாரத் திருநாள் இன்று. அவருடைய அவதாரத்துக்கான காரணங் களாக பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமான். தொண்டர் மனம் களிப்பு

அடையவும், எட்டுத் திசைகளிலும் தூய திருநீற்று நெறி சிறந்து விளங்கவும், ஏழு உலகங்களிலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், எட்டுத் திசைகளின் பெருமைகள் யாவற்றையும் தென் திசையின் பெருமை வெற்றி கொண்டு மேன்மை அடையவும், செழுமை வாய்ந்த தமிழ் மொழியே மற்ற மொழி வழக்குகளை வெல்லவும் என்பதாகப் பதினாறு காரணங்களைக் கூறுகிறார் சேக்கிழார் பெருமான்.

அப்படி அவதரித்த திருஞான சம்பந்தப் பெருமான், நாமெல்லாம் உய்வு பெற அன்று அழுதார் அதனால்தான் நாம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறோம். அன்று அவருக்கு அம்பிகை திருமுலைப் பால் ஊட்டினாள்.

'திருமுலைப்பால் உண்டவர் மறுமுலைப் பால் உண்ணார்’ என்பது இந்தப் பகுதியில் சொல்லப்படும் ஒரு வழக்கு மொழி. அதேபோல், இந்த வைபவத்தை தரிசிக்க வந்திருப்ப வர்களும் மறுபிறவி இல்லாத பேரின்ப நிலையை அடைவார்கள்'' என்று தமது உரையில் குறிப்பிட்டார் அவர்.

தொடர்ந்து, வடக்குப் பிராகாரத்துக்கு வந்து சேர்ந்தது பல்லக்கு. ஞானக் குழந்தையாக அவதரித்த திருஞானசம்பந்தரின் தெய்விகமான வாழ்க்கை குறித்து பக்தர்களின் மனம் நெகிழ்ச்சி அடையும் விதத்தில் அழகாக எடுத்துக் கூறினார் திருஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள்.

அவருடைய அருளுரை முடிந்த பிறகு, திருஞான சம்பந்தர் திருக்குளத்தின் தென் கரைக்கு எழுந்தருளினார். நெருக்கியடித்த பக்தர்களின் ஆரவாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனாலும், பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கணக்கான காவலர்கள், எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக் கொண் டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோருடைய மனதிலும் குளக்கரைக்கு எழுந்தருளிவிட்ட சம்பந்தக் குழந்தைக்கு அம்பிகை எப்போது வந்து பால் ஊட்டுவாள் என்ற எதிர்பார்ப்பு! சம்பந்தக் குழந்தையின் பசி ஆற்றவும், பக்தர்களின் ஏக்கம் தீர்ந்து மகிழ்ச்சி பெருகவும் திருவுள்ளம் கொண்டவள் போல், மலைக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக ஞானசம்பந்தரின் பல்லக்கு இருக்கும் குளக்கரைக்கு எழுந்தருளினாள் அம்பிகை.

சற்றைக்கெல்லாம் மங்கல இசை முழங்க, அம்பிகையின் வெள்ளிச் சப்பரத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கக் குடத்தில் இருந்த பாலை, ஒரு சிவாசார்யர் தங்கக் கிண்ணத்தில் நிரப்பி அதை குருமகா சந்நிதானம் அவர்களிடம்

வழங்க, அதை மகா சந்நிதானம் அவர்கள், திருஞானசம்பந்தர் பல்லக்கில் இருந்த சிவாசார்யரிடம் அளித்தார்.

அவர் அந்தப் பாலை ஒரு வெள்ளிக் கரண்டியில் எடுத்து ஞானசம்பந்தருக்குப் புகட்டினார். அதேநேரத்தில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை உயரே தூக்கி, ஞானசம்பந்தக் குழந்தைக்குப் புகட்டுவதுபோல் நைவேத்தியம் செய்தார்கள்.

அப்போது அவர்களின் முகங்களில் தெரிந்த பரவசத்தைப் பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பாக இருந்தது. குறிப்பாக, பெண்களின் முகத்தில் பரவசத்துடன் தாய்மை அன்பும், தங்களுக்கும் ஞானசம்பந்தர்போல் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்தே பிரதிபலித்தது.

அழுத குழந்தைக்குப் பால் புகட்டிய மகிழ்ச்சி அம்பிகைக்கு; பாலுடன் உயர் சிவஞான அமுதமும்

சேர்த்துப் பருகிய களிப்பு குழந்தைக்கு! ஆனாலும், பக்தர்களின் முகத்திலோ, சம்பந்தக் குழந்தைக்கும் சிவபாதருக்கும் உமையம்மையுடன் சிவபெருமான் எப்போது திருக்காட்சி தருவாரோ என்பதாக இன்னும் ஓர் எதிர்பார்ப்பு! எல்லோ ருடைய கண்களும் மலைக்கோயிலின் வடக்கு வாசலையே பார்த்திருக்கவே, நாமும் அந்தப் பக்கமாகவே பார்த்தோம். காரணம், அந்த வழியாக அம்பிகை எழுந்தருளியதால், அம்மையப்பரும் அந்த வழியாகத்தான் எழுந்தருள்வார் என்கிற எண்ணம் நமக்கு!

சற்றைக்கெல்லாம் மங்கல இசை முழங்க, சிவ பெருமான் உமை அன்னையுடன் கிழக்கு வாசல் வழியாக எழுந்தருளி, சம்பந்தக் குழந்தைக்கும் சிவபாதருக்கும் திவ்விய தரிசனம் தந்தருளினார்.  கெட்டிமேளம் முழங்க அம்மையப்பருக்கும், சைவநெறி தழைக்க வந்த சம்பந்தக் குழந்தைக்கும் தீபாராதனை நடைபெற்றது.

மாந்தர்குலம் செழிக்க வந்த சம்பந்தக் குழந்தையையும், குழந்தைக்கு அன்புடன் திருமுலைப்பால் புகட்டிய அம்பிகையையும், குழந்தைக்கும் சிவபாதருக்கும் திவ்விய தரிசனம் அருளிய அம்மையப்பரையும் தரிசித்த நம் மனதில், இறைவனிடம் நமக்கு வேண்டியதைப் பெறவேண்டுமானால், அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டதை உணர முடிந்தது.

ஆம்! இறைவனிடம் நாம் ஒன்றைப் பெறவேண்டுமானால், கண்ணீர் பெருக்கி அழவேண்டும். அப்படி நாம் அழும்போது நம்முடைய பாவங்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்துபோவதுடன், நமக்கு வேண்டியதை இறைவன் நிச்சயமாக அருள்புரிவான் என்பது உறுதி!

இப்படி ஓர் அற்புதமான வழியை, 'தான் அழுது’ நமக்கு உணர்த்திய, 'சீதவள வயல்புகலி திருஞான சம்பந்தன் பாதமலர் தலைகொண்டு'  பணிந்து வணங்கிய மனநிறைவுடன் அங்கிருந்து புறப்படுகிறோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்