சிறப்பு கட்டுரை
Published:Updated:

இறையருள் இருக்க... இயற்கை சீற்றங்கள் ஏன்?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் அந்த தேசத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. பூகம்பத்தின் பாதிப்பு நம் நாட்டிலும் சில பகுதிகளில் வெளிப்பட்டது. ஆயிரக்கணக்கில் உயிர்ப் பலிகள்! 

'கருணையே வடிவானவன் இறைவன் எனில், ஏன் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள்?’ என்கிற கேள்விக்கு, என்னைப் போன்றோர் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். தாங்கள்தான் விரிவாக விளக்கவேண்டும்.

கே.பத்மவாசினி, கடலூர்

முதல் கோணம்

ஐம்பெரும் பூதங்களின் கொந்தளிப்பு இயற்கைச் சீற்றம். நிலநடுக்கம், பெருவெள்ளம், எரிமலை, புயல், கொள்ளி மீன் ஆகியவற்றின் தோற்றம் உயிரினங்களுக்குத் துன்பம் விளைவிக்கும். அசையாத நிலம் ஆட்டம் கண்டுவிடுகிறது. அமைதியான மலையும் நெருப்பை உமிழ்கிறது. பெருவெள்ளம் இயல்புக்கு மாறாகக் கரைபுரண்டு ஓடி, நிலத்தை நீர்ப்பரப்பாக மாற்றுகிறது. காற்று, புயல் வடிவம் பெற்று, இயற்கை வளங்களை அழிக்கிறது. கொள்ளி மீன், மக்களின் வாழ்க்கையை தாறுமாறாக்குகிறது.

உலகமே ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருவானது. இந்த ஐந்தும் அதனதன் இயல்பில் இயங்கும் வரையிலும் அமைதி நிலவுகிறது. உலக இயக்கத்துக்கு ஆக்கத்தை அளிக்கும் ஐம்பெரும் பூதங்களின் இயல்பு மாற்றம், பேரழிவைத் தந்துவிடுகிறது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் மனித இனம் சீற்றத்துக்கு இரையாகிவிடுகிறது. மனிதனால் இயற்கையை எதிர்த்துப் போராடி வெற்றிபெற இயலவில்லை.

இறையருள்  இருக்க... இயற்கை சீற்றங்கள் ஏன்?

? எனில், மனிதர்களே காரணம் என்கிறீர்களா?

நிச்சயமாக! 'மனிதப் பிறவிக்கு மட்டுமே உலகம் சொந்தம்’ என்ற சுயநலத்துடன் இயற்கையை எதிர்த்துச் செயல்படும் சிந்தை கொண்டவர்களாக மனிதர்கள் மாறும்போது, அறத்துக்குப் புறம்பான வழிகளை அநாயாசமாகக் கையாண்டு, உறங்கிக் கிடக்கும் பூதங்களை உசுப்பிவிட்டு, சீற்றத்தைச் சந்தித்து இயற்கை அழிவுக்குக் காரணமாகிறார்கள்.

'மக்களின் அறத்துக்குப் புறம்பான செயல்பாடு களே இயற்கைச் சீற்றத்தைத் தோற்றுவிக்கின்றன’ என்று சரகர் தனது நூலில் குறிப்பிடுகிறார் (தஸ்யமூலமதர்ம:). விலங்கினங்களும், செடிகொடிகளும் இயற்கையின் வழிகாட்டுதலில் செயல்பட்டு நிறைவுபெறும். ஆறாவது அறிவு பெற்றவன், இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, இயற்கையைத் தாறுமாறாக்கி, அதைச் சினம் கொள்ள வைத்து அழிவை எதிர்க்கொள்கிறான். வேத கால சிந்தனைகளையும், ரிஷிகளின் சிந்தனை களையும் மூடநம்பிக்கைகளாகச் சித்திரித்து

20வது நூற்றாண்டில் தோன்றிய, வளர்ச்சி குன்றிய சில சிந்தனைகளை அறிவியலாக மதிப்பீடு செய்து, மக்களின் சிந்தனையைத் திசைதிருப்பி, அறத்துக்குப்

புறம்பான செயல்களில் ஈடுபடவைத்து, இயற்கைச் சீற்றத்துக்கு வழிவகுத்தவர்களும் உண்டு.

? விஞ்ஞானம், இயற்கையாக நிலத்துக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களை அல்லவா காரணம் என்கிறது?

இறையருள்  இருக்க... இயற்கை சீற்றங்கள் ஏன்?

விஞ்ஞானம் மூலகாரணத்தை வசதியாக மறந்துவிடும். வேதம், சாஸ்திரம், வானவியல் போன்ற பண்டைய சிந்தனையாளர்களின் கூற்று அப்படியல்ல. ஆனால், அவையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு மூடநம்பிக்கையாகப்படும். தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, குறுகிய சிந்தனைவட்டத்தில் எடுக்கப் படும் முடிவுகளை 'அறிவியல்’ என்று மதிப்பீடு செய்பவர்களும் உண்டு. அறிவு என்றால் ஞானம்.

ஆன்ம ஞானமும் அறிவியலே! அதை ஒதுக்கி விட்டு, லோகாயத வாழ்வில் நிறைவு பெறுவதற்காக, தன் விருப்பத்துக்கு உகந்தவாறு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதை அறிவியல் என்ற கோணத்தில் பார்ப்பவர்கள் ஏராளம். தனது வருங்கால மதிப்பீடு ஒன்றுகூட நடைமுறைக்கு வருவதில்லை என்று தெரிந்தும், அதை அறிவியல் என்று பறைசாற்றும் எண்ணம் உள்நோக்கம் உடையது. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்ற ஔவைப் பாட்டியின் சிந்தனையை மூடநம்பிக்கையாகச் சித்திரிக்கும் இவர்கள் போன்றவர்களின் சிந்தனையை எப்படி ஏற்பது?

? அது சரி, மூலகாரணம் என்று எதைச் சொல்ல வருகிறீர்கள்?

மலைகளைக் குடைந்து சின்னாபின்னமாக் குவதும், நதிகளின் பிரவாஹத்தைத் திசை திருப்புவதும், காட்டை அழித்துக் குடியேறுவதும், மலைகள் மற்றும் குன்றுகள் போன்ற உயரமான பிரதேசங்களைச் சமமாக்கி, அவற்றின் உருவத்தைச் சிதைத்து சுயநலத்தைப் பூர்த்தி செய்வதும், இயற்கையான ஏரிகளையும் குளம் குட்டைகளையும் தங்களது விருப்பத்துக்கு உகந்த வகையில் அழித்துச் செப்பனிட்டுக் குடியேறுவதும்தான் மூல காரணங்கள். புல்வெளிகள், செடிகளும் மரங்களும் நிறைந்த நிலப்பரப்புகள், விலங்கினங்களின் இருப்பிடமான காடுகள் ஆகிய அத்தனையும் மனிதனின் அறிவியலால் தாறுமாறாக்கப்படுவது உண்டு. இப்படி, பொறுத்துக்

கொள்ள முடியாத வகையில் இயற்கையை அழிக்கும் அட்டூழியங்கள் வலுப்பெறும்போது, இயற்கைச் சீற்றங்கள் உதயமாகிவிடும்.

இயற்கை அன்னை தன் மடியை விரித்து, மனிதன் வாழ்ந்து  மகிழத் தேவையான பொருள்கள் அத்தனையையும் வாரியிறைத்துள்ளாள். ஆனால், மனிதனோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, சந்திரனிலும், செவ்வாயிலும், வியாழக் கிரகத்திலும் குடியேற முயற்சிக்கிறான். அந்தக் கோள்களிலும் தனக்கு உகந்தபடி செப்பனிட்டு அறத்துக்குப் புறம்பாகச் செயல்படத் துடிக்கிறான். ஆகாசத்தின் கொந்தளிப்பில் கிரகங்களின் சீற்றம், விண்மீன், கொள்ளிமீன் போன்ற உத்பாதங்கள் தோன்றக் காரணமாகிறான். ஆக்கத்துக்கு என்று சொல்லிக் கொண்டு அழிவில் முற்றுப்புள்ளி வைக்கிறது அறிவியல். இவற்றையெல்லாம் அறிவியலின் சாதனை என்ற பட்டியலில் சேர்ப்பார்கள்.ஆனால், அதுவோ இறுதியில் ஆபத்தை விளைவிக்

கும் பட்டியலில் இணைந்துவிடும். ஆக, அப்பட்ட மான சுயநலத்துடன் உலகை அழிவுப் பாதையில் செலுத்தும் முயற்சியைக் கைவிட்டு, அறவழியில் செயல்பட்டால், ஐம்பெரும் பூதங்கள் அமைதியாக இருக்கும். சீற்றங்கள் ஒருநாளும் தோன்றாது.

இரண்டாவது கோணம்

இன்பமான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகள்தான் அறத்தின் அட்டவணையில் இருக்கும். மனிதன் வாழப் பிறந்தவன். ஆகவே, அவனுடைய விருப்பத்துக்கு இணங்க இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. 'அறம்’ என்ற கோட்பாட்டில் அவனுடைய சுதந்திரத்தைப் பறிப்பது தகாது. பிறக்கும்போதே கிடைத்த சுதந்திரத்தை இழக்கவைக்கும் ஒன்று அவனுக்கு அறமாகாது!

இறையருள்  இருக்க... இயற்கை சீற்றங்கள் ஏன்?

? எனில், பண்டைய அறங்கள் எல்லாம் வீண் என்பதுதான் உங்கள் கருத்தா?

தன்னைப் போக்கித்தான் தர்மம் என்று சொல்லவருகிறோம். மனவளத்தைப் பெருக்கி, இயற்கை ரகசியங்களை உணர்ந்து, மக்களின் பயன்பாட்டுக்குத் திருப்பிவிடுவது சாதனையாகும். நீரிலும், நிலத்திலும், விண்ணிலும் நாம் வாழ இயலும் என்பதைக் கண்டறிந்து, வருங்கால சந்திதியினருக்கு வளம் சேர்ப்பது எப்படித் தவறாகும்? 'தனியொருவனுக்கு உணவில்லை என்றால், உலகத்தையே அழித்துவிடு!’ என்றான் மகாகவி பாரதி. நீர், நெருப்பு, நிலம், வளம் ஆகியவற்றை, நமது வாழ்க்கை செழிப்பதற்கு உகந்த வகையில் பயன்படுத்துவதுதான் ஆறாம் அறிவுக்கு அழகு! புதுச் சிந்தனையாளர்களின் மனதில் இடம் பிடிக்காத அறத்தைப் புதுப்பிப்பது என்பதெல்லாம் கையாலாகாதத்தனம்.

உலகம் தோன்றிய நாளில் அறம் ஆட்சி செய்தது. பலம் பெற்றவன், பலவீனமானவனை அடக்கியாள நினைத்தான். பெரிய மீன் சின்ன மீனை விழுங்கிவிடும். பலம் குன்றியவனுக்கு வாழ்வு அளிக்கத் தலைவன் ஒருவன் தேவைப்பட்டான். அந்தத் தலைவன் அரசனாக மாறினான். அதன்பிறகு அவன் ஏற்படுத்திய கட்டுப்பாடு சட்டமானது என்று சாணக்கியன் கூறுவான். எனவே, அறிவியல் முதிர்ச்சியில் வளர்ந்தோங்கி வீரநடை போடும் உலக இயக்கத்துக்கு அறத்தின் பெயரில் தடைபோடுவது அறியாமை.

? அறிவியல் முதிர்ச்சியில் அப்படியென்ன வளர்ந்தோங்கிவிட்டது இந்த பூவுலகம்?!

நீரிலும், நிலத்திலும், வானிலும் தடையின்றிப் பயணம் மேற்கொள்ள ஊர்திகள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தொடர்புகொள்ள பேசும் கருவிகள், வெப்பதட்பம், பனி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாப் பைத் தரவல்ல இயந்திரங்கள், விதைகளைப் பன்மடங்காகப் பெருக்கும் விஞ்ஞான உரங்கள், சுகாதாரத்தைப் பாதுகாக்க விஞ்ஞான முறையில் வளர்ந்தோங்கிய காயகல்பங்கள், விருப்பப்படி குழந்தைச் செல்வம் பெற பிந்து வங்கிகள், 'வருமுன் காப்போம்’ என்கிற சிந்தனை வளர்ந்து மழை, புயல், வெப்பதட்பம் ஆகியவற்றின் சீற்றங்களை வருமுன் கண்டறிந்து உயிரினங்களைக் காப்பாற் றும் துணிவு, இயற்கைச் சீற்றங்களில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்ற உணவு, மருந்து, இருப்பிடம், வாகனம் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருந்து, அத்தனை மக்களுக்கும் வாழ்வளிக்கும் நடைமுறைகள்... இப்படி ரிஷிகளின் சிந்தனையை மிஞ்சும் அளவுக்குப் பெருமைபெற்றது மனித சிந்தனை.

பலை, அதிபலை மந்திரம் ஓதி பசியைப் போக்கும் விஸ்வாமித்திரர் இன்று இல்லை. கமண்டல நீரைத் தெளித்து ஆட்டை மாடாக்கும் செப்படி வித்தைகளும் இன்று இல்லை. வலது கையை உயர்த்தி அடைக்கலம் அளிக்கும்  அருள் புரியும் முனிவர்களும் இல்லை. பழைய வேஷத்தில் புதிய சிந்தனைகள் கொண்ட முனிவர்கள்தான் வளைய வருகிறார்கள். ஆக, இன்றைய விஞ்ஞானம் பண்டைய சிந்தனையாளர்களை வென்றுவிட்டது.

இறையருள்  இருக்க... இயற்கை சீற்றங்கள் ஏன்?

அறம் அறம் என்று ஓலமிடுவதை நிறுத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான சிந்தனையுடன், ஆபத்திலிருந்து வெளிவருவதற்கு மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம், கோயில் விழாக்கள் அத்தனையும் உருமாறியிருக்கின்றன. எல்லா விஷயங்களிலும் விஞ்ஞானரீதியான புதிய சிந்தனைகள் இடம்பிடித்துவிட்டன. அறம் அஞ்ஞாத வாசம் செய்கிறது. இயற்கைச் சீற்றத்துக்குக் காரணத்தை எட்டமுடியாத சிந்தனை, அறத்தைக் காட்டி தேடலுக்கு முற்றுப்

புள்ளி வைக்கிறது. 'வருமுன் காப்போம்’ என்ற விஷயத்தில் ஆராய்ச்சி வளர்ந்து கொண்டிருக் கிறது. முன்னதாகவே அறிந்து இயற்கைச் சீற்றத்தை

அடியோடு தடுக்கும் முறையை விஞ்ஞானம் அதிவிரைவில் அறிமுகம் செய்து விடும். நேரம் காலம் வரும்போது, அறமும் ஆராய்ச்சியும் மோதிக் கொண்டு, ஆராய்ச்சி வென்றுவிடும்.

மூன்றாவது கோணம்

உடலுக்கு வரும் பிணிகளுக்குச் சிந்தனை மாற்றமே காரணம். உணவு, நல்ல நடைமுறைகள் எல்லாம் தாறுமாறாக மாறும்போது பிணிகள் தோன்றிவிடும். இப்படி எல்லாம் தாறுமாறாக மாறுவதற்கு மனிதனின் சிந்தனையே காரணம். அறத்தின் வழியில் மனம் செயல்படும்போது, பதற்றத்தைச் சந்திக்காத நிலையில், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். ரத்தக்கொதிப்பு, சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு. பதற்றமான மனம், பல பிணிகளுக்கு மூல காரணமாகும்.

? உலக அழிவுக்கான காரணத்தைக் கேட்டால், உடற் பிணிகளை விவரித்துக் கொண்டு இருக்கிறீர்களே?

உலகம் என்கிற உடல், அதில் வாழும் மக்களின் மனப்பதற்றத்தால் உருவான, அறத்துக்குப் புறம்பான செயல்களால் கொந்தளிப்பை அடைந்துவிடுகிறது. அதனால் நிலைகுலையும் உலகின் உருப்படிகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன தங்களது இயல்பில் மாற்றத்தைச் சந்தித்துத் தத்தளிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நீடித்தால் அமைதியுண்டு. அவற்றைச் சீண்டுபவர்கள் மக்கள். 'மக்களின் சிந்தனைமாற்றம், அறத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் இயற்கைச் சீற்றங்களுக்கு

வழிவகுக்கும்’ என்று 'ஜனபதோத்வம்ஸநீயம்’ என்கிற தலைப்பில் விளக்குகிறார் சரகர் (வாயுருத கம் தேச; கால). காற்றில் ஊடுருவும் மாசுக்கள் நீர், நிலம், காலம் ஆகியவற்றில் கலந்து, அவற்றை கொந்தளிப்பு அடையச் செய்யும்.

மனிதன் இயற்கை வளங்களைச் சீண்டிக் கொண்டிருக்கிறான். ஓடும் நதியைத் தடுத்து நிறுத்துகிறான், மலைகளைச் சிதைக்கிறான், காட்டை அழிக்கிறான், நிலத்தைச் சல்லடைபோல் துளைபோட்டுத் துன்புறுத்துகிறான். காட்டில் குடியேறி விலங்கினங்களுக்குத் தீங்கு விளைவிக் கிறான். ஓங்கிவளர்ந்த மரங்களை வெட்டிச் சாய்த்துப் பாலைவனமாக்குகிறான். இவை அத்தனையும் அறத்துக்குப் புறம்பான செயல்களே! இந்தச் செயல்கள் மூலம், தனக்கு வாழ்வு தந்த இயற்கை அன்னையின் அங்கங்களை வெட்டி வீழ்த்துகிறான். அரைச்சாண் வயிற்றை நிரப்ப இத்தனை ஆர்ப்பாட்டங்கள் தேவையா? சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இல்லாத அவன் மனம் அழிப்பதில் ஒன்றிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இயற்கைச் சீற்றங்கள். வராஹமிஹிரர் தனது ப்ருஹத்ஸம்ஹிதையில் 'அறத்துக்குப் புறம்பான செயல்பாடுகளே சீற்றத் துக்குக் காரணம்’ என்று குறிப்பிடுகிறார்.

? எதையும் ஆய்ந்தறிந்து விளக்கவேண்டும். இதுதான் காரணம் என்ற ஒற்றை வரி பதிலில் திருப்தி இல்லையே?

வராஹமிஹிரர் விரிவாகவே விளக்கியிருக் கிறார். 'பூகம்பாத்யாயம்’ என்ற தலைப்பில், இயற்கைச் சீற்றத்தின் காரணத்தை ஆராய்ந்து விளக்கம் அளிக்கிறார் அவர்.  காற்றின் அழுத்தமான

தாக்கத்தில் நிலநடுக்கம் ஏற்படும். நீரில் வாழும் உயிரினங்களின் தாக்கத்தில் கடலில் நிலநடுக்கம்

தோன்றி, சுனாமியாக மாறும். சுற்றுச்சூழல் வெப்ப மயமாக மாறும்போது மலையில் அடங்கி இருக்கும் வெப்பம் நெருப்பை உமிழ்ந்துவிடும். காற்றின் தூண்டுதலால் கடல் கொந்தளிக்க, அதன் நீர் நிலத்தை உள்வாங்கிக் கொள்ளும். அடாத மழையில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து, நிலப்பரப்பை நீர்மயமாக்கிவிடும். இவை அத்தனைக்கும் காரணம் அறத்துக்குப் புறம்பான செயல்பாடு என்கிறார் வராஹமிஹிரர்.

நிலநடுக்கம் தோன்றும் இடத்தில், அதன் அதிர்வுகள் ஆறு மாதங்கள் வரை தொடரும் என்கிறார் (ஷட்பி: மாஸை: கம்போ). நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு, தொடர்ச்சியாக 3, 4, 7, 15, 30 மற்றும் 45வது நாளில் அதன் அதிர்வுகள் தோன்ற வாய்ப்பு உண்டு (த்ரிசதுர்த்தசப்தமதினே மாஸெ பக்ஷெத்ரிபீக்ஷச). அதன் சலனம் நிலைபெறாத நிலையில், அதை ஒட்டிய நிலப் பரப்புகளிலும் நிலநடுக்கம் தோன்றி மறைய வாய்ப்பு உண்டு. அந்த நிலப்பகுதிகள் நடுக்கத்தை எளிதில் ஏற்றுக்

கொண்டுவிடும். பட்ட இடத்திலே படும், கெட்ட குடியே கெடும் என்ற சொல் வழக்குக்கு ஏற்ப, அருகிலுள்ள நிலத்துக்கு நடுக்கம் பரவி, ஆபத்துக்கு வித்திடும். சர்க்கரை வியாதி பற்றிக் கொண்டுவிட்ட உடம்பில், சிறிதளவு இனிப்பும் அதன் தாக்கத்தை வலுவடையச் செய்யும் அல்லவா?

உலகத்தைச் சீண்டும் சிந்தனைக்கு, காரணத்தை எட்ட இயலாது. தனது சீண்டல்தான் எல்லா வற்றுக்கும் காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள, ஆராய்ச்சியில் சோர்வடையும் காலம் வரையிலும் காத்திருக்கவேண்டும். மக்களின் சீண்டல்தான் காரணம் என்ற முடிவுக்கு விஞ்ஞானமும் வந்தே ஆகவேண்டும். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தைத் தேடி அலைகிறது சிந்தனை.

? இயற்கைச் சீற்றத்துக்கும் காரணம் கற்பித்து விட்டீர்கள்; சரி! ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தமாக நிகழும் உயிர்ப்பலிகளுக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

நிலநடுக்கத்தில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் முதியோர் என அத்தனை பேரும் மடிந்துபோகிறார்கள். ஆனால், மற்ற உயிரினங்கள் அழிவது இல்லை. இயற்கை அவற்றுக்குப் பாதுகாப்பு அளித்துவிடுகிறது. மனிதர்களில் அவரவர் கர்மவினைகள் செயல்பட்டு, அத்தனை பேரையும் ஆபத்து தோன்றும் இடத்துக்கு வலுக் கட்டாயமாக வரவழைத்துவிடுகிறது.பல தேசங்களில் இருந்து வந்தவர்களும் உயிர் துறக்கிறார்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்

களோ, அந்தத் தேசத்தில் வாழ்பவன் உயிரோடு இருக்கிறான். அதேபோல், ஆபத்தில் சிக்கியவர் களிலும் பலர் வெளிவந்துவிடுகிறார்கள். 'ஒரே வேளையில் உயிர் துறக்க வேண்டியவர்களை ஒன்றாக இணைத்து, ஆபத்தில் சிக்க வைக்கிறது அவர்களது கர்மவினை’ என்கிறது ஜோதிடம் (ஸுப்தம்ப்ரமத்தம் விஷிமஸ்திதம் வா ரஷந்தி புண்யானி புராக்ருதானி).

'அவர்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் உயிரை இழந்திருக்கமாட்டார்கள்’ என்கிற வாதம், புதுச் சிந்தனையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும். வாகன விபத்து, நீரில் மூழ்கி விபத்து ஆகியவையும் நிகழும். இங்கெல்லாம் வாகனத்தில் ஏறாமல் இருந்திருந்தால், நீராடாமல் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள். இதெல்லாம் பாமர மதிப்பீடு! கர்மவினை நம்மிடம் அனுமதி பெற்றுச் செயல்படாது. அங்கு விஞ்ஞானமும் வேலை செய்யாது. பயங்கரத்தைப் பார்த்து அனுதாபப் படலாமே தவிர, காரணத்தைத் தேட இயலாது.

அசையாத நிலத்தை அசைக்கவும், அடங்கியிருக்கும் நெருப்பை உமிழவைக்கவும், உயிர் வாழ உதவும் காற்றைப் புயலாக மாற்றவும், அளவு கடந்த மழையால் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தவும் மக்களின் தாறுமாறான செயல்பாடுகளால் மட்டுமே முடியும்.

? எனில், விஞ்ஞானமும் அதன் வழியிலான மனிதனின் வினைகளும் வீண் என்கிறீர்களா?

இயற்கைச் சீற்றத்தை இல்லாமல் செய்வதிலோ, அடக்கியாள்வதிலோ விஞ்ஞானம் இன்று வரையிலும் வெற்றிபெறவில்லை. ஏறிக்கொண்டே போகும் வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை; குளிர்சாதனங்களையே சரணடைகிறோம். அடை மழையை நிறுத்த இயலவில்லை; மக்களை வேறு இடத்தில் தங்க வைக்கிறான். புயலைத் தடுக்க இயலவில்லை; சேதத்தை மதிப்பிடுகிறான். இதிலெல்லாம் தோற்றுப்போன சிந்தனை, நிலநடுக்கத்தின் காரணத்தை ஆராய முற்பட்டு, ஆயாசத்தை அடைகிறது.

அறத்தைக் கடைப்பிடித்தால் ஆபத்து இல்லை.

மனிதனைச் சீண்டினால் தண்டனை உண்டு. அதுபோல், இயற்கை வளங்களைச் சீண்டினாலும் இயற்கை தண்டிக்கும். இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பறிப்பவன் மாதிரி, வாழ இடம் கொடுத்த உலகத்தைப் பறிக்கும் செயல், அறத்துக்குப் புறம்பானது. கோபம், தாபம், போட்டி, பொறாமை, திருட்டு, கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை அடக்க விஞ்ஞானம் முன்வருவதில்லை. இவற்றை வளர்த்துவிட்டது விஞ்ஞானம். ஆரம்பத்தில் இனிக்கும் விஞ்ஞானம், முடிவில் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தும். அது அறத்துக்குப் புறம்பாகச் செயல்படுகிறது. வளம் பெற்ற வாழ்க்கையை எட்டியவனும் துயரத்தில் மூழ்கி தத்தளிக்கிறான். அறவழியைப் பின்பற்ற அவன் சிந்தனை செயல்படவில்லை.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

மனம், அறம் இந்த இரண்டையும் தொடாத எந்த ஆராய்ச்சியும் முழுமை பெறாது. மனம் கெட்டுப் போனால், அவனது செயல்கள் பலனளிக்காது. அறம் வாட்டமுற்றால் உலகவியல் நடைமுறைகள் அத்தனையும் தோல்வி அடைந்துவிடும். இந்த

இரண்டின் மாற்றம் ஆபத்தில் சிக்கவைத்து, அழிவைச் சந்திக்கவைக்கும். மனத் தூய்மைக்கு ஆன்மிகம் வேண்டும். புறத் தூய்மைக்கு அறம் வேண்டும். இரண்டின் இழப்பாலும் சீற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். இயற்கைச் சீற்றம் நம்மிடமிருந்துதான் உருவாகிறது. ஆகவே, ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மக்களாட்சிக்கு முந்திய காலங்களில் இத்தனை உக்ரமான சீற்றத்தைச் சந்தித்ததில்லை. அன்றைய நாளில் அறமும் ஆன்மிகமும் இருந்தன. இன்றைக்கு மருந்துக்குக்கூட இல்லை. இன்றைய மனிதன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு, தவறான வழியைத் தேர்ந்தெடுத்துத் துயரத்தை அரவணைத்து, உயிரைத் துறக்கிறான். மின்னல் போல் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. மறந்துபோன அறத்தையும் தன்னுள் இருக்கும் மனதையும் கவனித்தால் இனிதே வாழலாம் என்ற தகவல் எப்போது அவன் காதில் எட்டுமோ, தெரியவில்லை!

பதில்கள் தொடரும்...