சிறப்பு கட்டுரை
Published:Updated:

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

நாரதர் உலா !

'நாராயண, நாராயண’ என்று நாம ஸ்மரணம் செய்தவாறே நம் எதிரில் பிரசன்னமானார் நாரதர். 

'வாருங்கள் சுவாமி! இந்தமுறை எந்தக் கோயிலைப் பற்றிக் கலகம் செய்வதாக இருக்கிறீர்?' என்று தமாஷாகக் கேட்டபடி அவரை வரவேற்றோம்.

'பார்த்தீரா, நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு, நான் கலகம் செய்கிறேன் என்று கேலியும் செய்கிறீர்..!' என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டார் நாரதர்.

'அடடா! கேலியெல்லாம் இல்லை சுவாமி! கலகம் பிறந்தால் தான் தெளிவு பிறக்கும் என்று சொல்வதுண்டல்லவா? அந்த அர்த்தத்தில்தான் கேட்டோம். சரி, சொல்லுங்கள்! இந்த முறை தங்கள் விஜயம் எந்தக் கோயிலுக்கு?'

''செவ்வாய் தோஷ பரிகாரத் தலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்குத்தான்'' என்றவர், அங்கே பக்தர்கள் படும் சிரமங்களையும், பக்தர்களால் கோயிலுக்கு ஏற்படும் அவலங்களையும் பட்டியலிடத் தொடங்கினார்.

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

''தினமும் அங்கே சுற்றுலாப் பயணிகளும் பரிகாரம் செய்ய வருபவர்களுமாக ஏராளமான பேர் வருகிறார்கள். ஆனால், போதிய அளவுக்குத் தங்கும் வசதிகள் இல்லை. இது ஒருபுறம் இருக்க, கோயிலுக்குச் செல்லும் வழியில் வரிசையாகக் கடைகள் இருக்கின்றன.

இதனால், பக்தர்கள் நெரிசலில் சிக்கி ரொம்பவும் அவஸ்தைப்படுகிறார்கள். இதுவாவது பரவாயில்லை; ஆண்டவனை தரிசித்து, தங்கள் துயரங்கள் தீரப் பிரார்த்திக்கும்பொருட்டு அதே நினைவாகச் செல்லும் பக்தர்களை ஒரு சில கடைக்காரர்கள் மடக்கி மடக்கி ஏதாவது பொருள் வாங்குமாறு வற்புறுத்துவதும், அப்படி வாங்கவில்லை என்றால் வசைமாரி பொழிவதும் உண்டாம். நான் அங்கே போயிருந்தபோது, பக்தர்கள் சிலர் என்னிடம் இதைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்கள். கோயில் நிர்வாகம் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ செய்தால், பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோயிலுக்கு வந்து போக வசதியாக இருக்கும்'' என்றார்.

'பழநியில் முருகன் வியர்வை மோசடி பற்றிச் சொன்னீரே, அதுபோல் இங்கேயும் ஏதாவது மோசடி உண்டா?'

''மோசடி என்று சொல்லமுடியாது. ஆனால், இங்கே நடக்கும் ஒரு கொள்ளையைப் பார்த்தால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது' என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார் நாரதர்.

'அப்படி என்ன கொள்ளை நடக்கிறது அங்கே?'

'நெல்லூரில் இருந்து வந்திருந்த ஒரு  பக்தரைச் சந்தித்தேன். 'கோயிலுக்குள் நுழையறப்பவே கடைக்காரங்க என் கையைப் பிடிச்சு இழுக்காத குறையா, 'உப்பு, வெல்லம் வாங்கிக் குளத்தில் கரைச்சா தோஷங்கள் போயிடும்’னு வாங்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. 'குளத்தில் இதையெல்லாம் கரைச்சா குளம் அசுத்தமாயிடாதா?’ன்னு கேட்ட துக்கு, 'அப்படின்னா, குளத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு தொட்டியில இதைத் தலையைச் சுத்திப் போட்டு டுங்க’ன்னு சொல்றாங்க. எப்படியாவது என் தலையில ஏதாவது பொருளைக் கட்டணும்கிறதுதான் அவங்களோட நோக்கம்.

எங்க ஊர் ஜோசியர்தான் இந்தக் கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்யும்படி சொன்னார். இவங்க பண்ற அடாவடியைப் பார்த்தா இதுக்கும் சேர்த்து ஏதாவது பரிகாரம் பண்ணணும் போலிருக்கு!’ என்று அழாக்குறையாக என்னிடம் முறையிட்டார் அவர்.'

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

''சரி, இதெல்லாம் கோயிலுக்கு வெளியே நடக்கிற சமாசாரங்கள். கோயிலுக்கு உள்ளே என்ன நிலைமை?''

''பிராகாரத்தில் மேல்கூரை இல்லாததால், உச்சி வேளையில் பக்தர்கள் பிராகாரத்தை வலம் வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மேல்கூரை அமைக்காவிட்டாலும் போகிறது; தரையில் பக்தர்கள் நடப்பதற்கு வசதியாக கார்ப்பெட்டோ அல்லது தேங்காய் நார் விரிப்புகளோ போட்டிருக்கலாம். தவிர, கோயிலுக்குள் போனதுமே முதலில் என் பார்வையில் பட்டது கோசாலைதான். இங்கே 11 பசுக்களும், 2 காளைகளும், சில கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன. கோசாலை ஓட்டுக் கூரை வேய்ந்த கட்டடத்தில்தான் இருக்கிறது என்றாலும், மின்விசிறி வசதி செய்யப்பட்டு இருப்பதைக் குறிப்பிடவேண்டும். ஆனால், கோசாலையின் முன்பகுதி கற்களும் செடிகளுமாக மண்டி, அவலமாகக் காட்சி தருகிறது. அதில் ஏதேனும் விஷ ஜந்துக்கள் இருந்து, அதனால் பசுக்களுக்கும், அவற்றைப் பார்வையிடச் செல்கிற பக்தர்களுக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று கவலையாக இருந்தது எனக்கு!'' என்றார் நாரதர்.

''அந்த வைத்தீஸ்வரன்தான் காப்பாற்ற வேண்டும்!'

'நன்றாகச் சொன்னீர். இங்கே மட்டுமல்ல, கோயிலுக்குள்ளே, ஆண்டவன் சந்நிதானத்திலும் பக்தர்களிடம் அடாவடியாகப் பேசி, காசைப் பறிக்கப் பார்க்கும் ஒரு சில அர்ச்சகர்களிடமிருந்தும் பக்தர்களை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!'

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

'கோயில் நிர்வாகத்தின் சார்பில் அங்கங்கே ஒவ்வொரு பரிகாரத்துக்கும் பூஜைக்கும் என்ன கட்டணம் என்று அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்களே..?' என்றோம்.

'வைத்திருக்கிறார்கள்தான். ஆனால், அதை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதுதான் இங்கே கேள்வி. அதுமட்டுமா, ஏதோ சுவாமியைப் பார்க்க வந்தோமா, வணங்கினோமா, போனோமா என்று பக்தர்களைக் கிளம்பவிடாமல், சுவடி பார்க்க வரும்படி அழைத்து கேன்வாஸ் செய்யும் காரியமும் கோயிலுக்குள் நடக்கிறது!''

''அடக் கடவுளே! அதுசரி, கோயிலுக்குள் சுத்தம் சுகாதாரம் எல்லாம் எப்படி?''

''சுத்தமாக இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், இதற்குக் கோயில் நிர்வாகத்தைக் குறை சொல்லிப் பயனில்லை. பக்தர்களின் அலட்சியம்தான் காரணம். பரிகாரம் செய்ய வந்திருக்கிறோம், பாவங்களைப் போக்கிக் கொள்ள வந்திருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், கோயிலின் புனிதத்தைக் காப்பாற்றுவது நமது கடமை என்கிற அக்கறை இல்லாமல், ஆங்காங்கே எச்சில் துப்புவதும், துண்டுக் காகிதங்களைப் போடுவதுமாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி கோயில் வளாகத்தை அசுத்தம் செய்யும் பக்தர்கள் இதற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள், இந்தப் பாவத்தைப்

போக்கிக்கொள்ள வேறு எந்தத் தலத்துக்குப் போகப் போகிறார்கள் என்று யோசித்தேன்.

பக்தர்கள்தான் இப்படி என்றால், கோயில் அர்ச்சகர்கள்கூட சுவாமி, அம்பாள் சந்நிதிகளை

சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. 'நசநச'வென்று கால் வைக்கவே கூசுகிறது.   கோயில் சுற்றுப்புறமும் சரி, குளமும் சரி... குப்பை கூளங்களாகக் காட்சி அளிக்கிறது.ஆனாலும், ஒவ்வொரு முறையும் கோயில் நடை சார்த்தியதும், கோயில் பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள் என்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.''

''இது எப்படி உங்களுக்குத் தெரியும்?''

''அன்று சாயந்திரம் நான் மீண்டும் கோயிலுக்குச்

சென்றிருந்தேன். காலையில் பார்த்தமாதிரி இல்லாமல் கோயில் சுற்றுப்புறமும் குளமும் சுத்தமாக இருக்கவே, என் கண்களையே நம்ப முடியாமல், அங்கிருந்த ஓர் ஊழியரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்தான் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.'

'அப்படியானால், இந்த விஷயத்தில் பக்தர் களுக்குத்தான் பொறுப்பு உணர்வு வேண்டும் என்று சொல்லுங்கள்!'

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

'பொறுப்பு உணர்வு மட்டும் போதாது. கொஞ்சம் மனசாட்சியும் வேண்டும். தப்பு செய்கிறோமே என்று உடம்பில் துளியாவது பயம் வேண்டும். காலையில் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வந்தேன். அப்போது சில இடங்களில் துர்நாற்றம் வீசியது. உற்றுப் பார்த்தபோதுதான், கோயிலுக்கு வரும் மக்களில் சிலர் அந்த மூலைகளில் சிறுநீர் கழித்திருப்பது தெரியவந்தது. ம்ஹூம்... பாவம் போக்க வந்த இடத்தில் இப்படிச் செய்து மேலும் பாவத்தைதான் தேடிக் கொள்கிறார்கள்' என்று பெருமூச்சு விட்டார் நாரதர்.

'பிராகாரங்களின் ஓரங்களில் பூச்செடிகள் வைத்து வேலி போட்டுவிட்டால், இப்படி நடக்காமல் செய்யலாம் அல்லவா?'

'உண்மைதான்! கோயில் நிர்வாகம் இதை கவனத்தில் வைத்துச் செயல்பட்டால் நல்லது!'

''இந்தக் குறைகளை எல்லாம் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்துப் பேசினீர்களா?''

''பேசத்தான் ஆசைப்பட்டேன். முடியவில்லை. கோயில் நிர்வாகம் தருமபுர ஆதீனத்துக்கு உட்பட்டது. கோயில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் சுவாமிகளைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றேன். முடியவில்லை. அவரிடம் பேசி ஏதேனும் தகவல் இருந்தால் பிறகு சொல்கிறேன்'' என்றபடி மாயமானார் நாரதர்.

படங்கள்: க.சதீஷ்குமார், ஈ.ஜெ.நந்தகுமார்

ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரச்னைகள் குறித்து வாட்ஸ்அப்பில் நாரதர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:

* கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பிரச்னைகளைச் சொன்னேன். ''திருவிழா நேரம். மதுரைக்கு வரும் பக்தர்கள் மனம்கோணாமல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது எங்கள் கடமை ஆயிற்றே! நீங்கள் சொன்ன பிரச்னைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி சரிசெய்துவிட்டுப் பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்'' என்றார். அதேபோல், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்னைத் தொடர்பு கொணடு, ''இப்போது விசிட் செய்யுங்களேன்'' என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்னபடி சென்றேன். முன்பு எந்த இடத்தில் மாநகராட்சி குழாய் தண்ணீர் வராமல் வறண்டு காட்சியளித்ததோ, அதில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதைத் தவிர, தற்காலிகமாக இன்னும் நாலு இடங்களில் தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

* மக்களின் அவசர மருத்துவத் தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது.

புனிதம் காக்க என்ன வைத்தியம்?!

* போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குச் செல்லும் வழியில் பூட்டிக்கிடந்த கழிவறை திறக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கோயிலைச் சுற்றிலும் உள்ள வழித் தடங்களில் நிழற்குடை அமைக்கும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. மின்விளக்குகளும் நல்ல நிலையில் எரிந்து கொண்டிருந்தன.

* சென்னை தலைமைச் செயலகத்தில் இந்துச் சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜை சந்தித்து மதுரை கோயில் விஷயங்களைச் சொன்னேன். ''மதுரை கோயில் என்றில்லை, தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பெரிய கோயில்களில் காணப்படும் பொதுவான பிரச்னைகளைத் தீர்க்க, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். மேலும், திருவிழா காலங்களில் பக்தர்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்படி சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறேன்.

கோடை காலத்தில், கோயில் பிராகாரங்களில் நடந்து செல்ல பக்தர்கள் கஷ்டப்படுவதை நானே பார்த்திருக்கிறேன். மாண்புமிகு மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதல்படி, கோயில்களின் பிராகார நடைபாதைகளில் குளிர்பூச்சு (கூல் பெயின்ட்) பூசச் சொல்லியிருக்கிறேன். பக்தர்கள் நடக்கும்போது கால் சுடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. தவிர, மதுரை திருக்கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நவீனப்படுத்தப்பட்ட களவு எச்சரிக்கை மணி, சி.சி.டி.வி., ஆகிவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து வருகிறேன்'' என்றார்.