சிறப்பு கட்டுரை
Published:Updated:

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

எஸ்.கண்ணகோபாலன்

ண்ணும் உணவுக்குச் சுவை சேர்ப்பது உப்பு. அதனால்தான், 'உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், நமக்கெல்லாம் அருள்புரியவேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட பெருமாள், அதற்காகவே உப்பின் சுவையை வேண்டாம் என்று மறுத்துத் தியாகம் செய்தார் என்றால், நாம் எந்த அளவுக்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்?! 

பெருமாள் அப்படி ஓர் அருளாடல் புரிந்த திருத்தலம்தான் நாம் இப்போது 'ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காகத் தரிசிக்கப் போகும் உப்புவேலூர் என்னும் உன்னதத் திருத்தலம்.

இத்தலத்தில் எழுந்தருள சித்தம் கொண்ட பகவான், அதற்காக ஒரு காரணத்தையும் சிருஷ்டித்துக்கொண்டார். சிவபெருமானின் பரம பக்தரான மார்க்கண்டேய மகரிஷியின் வளர்ப்பு மகளாக அவதாரம் செய்திருந்த பூமிதேவி பிராட்டியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் காரணம்.

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

தமது எண்ணப்படியே பூவுலகுக்கு வந்த பகவான், மார்க்கண்டேய மகரிஷியிடம் வந்து, பூமிதேவி பிராட்டியாரைத் தனக்குத் திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்டார். தம்மிடம் வந்து பெண் கேட்பது சாட்சாத் அந்த நாராயண மூர்த்தியே என்பது தெரிந்திருந்தும், மார்க்கண்டேய மகரிஷிக்குத் தம் வளர்ப்பு மகளான பூமிதேவி பிராட்டியாரை அவருக்குத் திருமணம் செய்துவைக்க மனம் வரவில்லை. காரணம், பூமிதேவியிடம் அவருக்கு இருந்த அவ்வளவு அன்பும் பாசமும்! திருமணம் செய்து கொடுத்தால் அவளைப் பிரிய நேரிடுமே என்ற வருத்தத்தோடு, தாயன்பு என்பதே தெரியாமல் வளர்ந்த தம் மகள் சிறு பெண்ணாயிற்றே, அவளுக்குச் சரியாகச் சமைக்கக் கூடத் தெரியாதே என்ற கலக்கமும் சேர்ந்துகொண்டது.

ஆனால், பெண் கேட்டு வந்திருப்பது பகவான்; என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த மார்க்கண்டேய மகரிஷி, பகவானிடம் தயங்கித் தயங்கி, ''ஐயனே, நான் அன்புடன் வளர்த்த பூமிதேவியைத் தங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இருந்தாலும், இவளை மிகச் செல்லமாக வளர்த்து விட்டேன். இவளுக்குச் சரியாக உப்பு போட்டு சமைக்கக்கூடத் தெரியாது. தாங்கள் இவளைத் திருமணம் செய்துகொண்டால், இவளால் எப்படித் தங்களுக்கு ருசியாகச் சமைத்துப் போட முடியும் என்றுதான் யோசிக்கிறேன்'' என்றார்.

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

பகவானோ விடுவதாக இல்லை. ''அதனால் என்ன? நான் உப்பு இல்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன். அது பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்'' என்று சமாதானம் சொன்னார்.

ஸ்ரீ மன் நாராயணன் இவ்விதம் சொன்னபிறகும் மறுக்கமுடியுமா மார்க்கண்டேய மகரிஷியால்?! தேவர்களும் முனிவர்களும் புடைசூழ தம்முடைய செல்வ மகளான பூமிதேவியை பகவானுக்குத் திருமணம் செய்துவைத்தார். அன்றுமுதல், பகவான் இந்தத் திருத்தலத்திலேயே அர்ச்சாவதார மூர்த்தியாய் எழுந்தருளி, நாடி வரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கி அருள்புரிந்து வருகிறார். அவருடைய நோக்கமே அதுதானே?! நமக்கெல்லாம் நாளும் அருள் புரியவேண்டும் என்பதற்காகத்தானே அவர் உப்பின் சுவையை யும் தியாகம் செய்தார்?! (உப்பிலியப்பன் கோயிலில் வழங்கப்பெறும் திருக் கதையே இத்தலத்தின் கதையாக இப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது).

உப்புவேலூர் திருத்தலம், புராணச் சிறப்புடன் தொன்மை வாய்ந்ததாகவும் திகழ்கிறது. இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளின் திருப்பெயர் 'திருவிருந்த பெருமாள்’ என்பதாகும்.

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

புராதனச் சிறப்புகள் கொண்ட இந்தத் திருத்தலம், சொல்லவே வெட்கமும் வேதனையும் கொள்ளும் அளவுக்குச் சிதிலம் அடைந்து கிடந்தது. 'எத்தனை காலம்தான் இது இப்படியே இருப்பது? இதற்கு ஒரு விடிவே கிடையாதா? கோயிலில் பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்புற நடைபெறாதா?’ என்று ஊர் மக்கள் வேதனையும் தவிப்புமாகக் காத்திருந்தார்கள். எதற்கும் காலம் கனிய வேண்டும் அல்லவா?

காலம் கைகூடிவர, ஊர்மக்கள் ஒன்றிணைந்து ஒரு திருப்பணிக் கமிட்டி அமைத்து, திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். திருப்பணிகள் பற்றி ரமேஷ் மற்றும் சுப்பராயலு ஆகியோரிடம் கேட்டபோது,

''எங்கள் ஊரான முன்னூரிலும் ஸ்ரீ தேவிபூதேவி சமேத அருளாளப் பெருமாள் கோயில் இப்படித்தான் சிதிலம் அடைந்திருந்தது. பின்னர், நாங்கள் முயற்சி எடுத்து திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் செய்தோம். அதுபற்றிக் கேள்விப்பட்ட உப்பு வேலூர் பெரியவர்கள், எங்களின் உதவியையும் ஆலோசனையையும் கேட்டு வரவே, அதை இறைவன் இட்ட கட்டளையாக நினைத்து எங்களையும் இந்தக் கோயிலின் திருப்பணி

யில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்' என்றவர் கள் தொடர்ந்து ''திருத்தலத்தின் தாயாரான செங்கமலவல்லித் தாயார், ஆண்டாள் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் அமைக்க உத்தேசித்துள்ளோம். மேலும், ஆழ்வார் சந்நிதி, சுதர்சனர் சந்நிதி புதுப்பிக்கவேண்டி இருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்து, கூடிய சீக்கிரமே சம்ப்ரோக்ஷணம் நடக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். பகவான்தான் அருள்செய்யவேண்டும்'' என்றார்கள்.

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

ஒரு தாய் தன் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு பத்தியம் இருப்பதுபோல், நமக்கெல்லாம் அருள்புரியவேண்டும் என்பதற் காகவே, உப்பில்லாத உணவை ஏற்றுக்கொண்ட பெருமாளின் தாய்மை அன்புக்கு என்றென்றும் நாம் பாத்திரமாக வேண்டாமா? அதற்குத் திருவிருந்த பெருமாளின் திருக்கோயில் புதுப் பொலிவு பெற்று, நித்திய பூஜைகளும் விழாக்களும் சிறப்புற நடைபெறவேண்டும் அல்லவா? அப்போதுதானே பகவானின் பரிபூரண சாந்நித்தியம் திருக்கோயிலில் நிலைத்திருந்து, வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் சேர்க்கும்?

பரந்தாமனின் திருக்கோயில் புதுப்பொலிவு பெற்றிட, நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம். பூமிதேவி சமேத திருவிருந்த பெருமாளின் பேரருளுடன் 'அகல கில்லேன்’ என்று அடம்பிடித்து, பெருமாளின் திருமார்பிலேயே உறைந்திருக்கும் திருமாமகளின் திருவருளையும் சேர்த்துப் பெறுவோம்!

படங்கள்: தே.சிலம்பரசன்

எங்கே இருக்கிறது?

உப்பினை மறுத்த ஒப்பிலா பெருமாள் !

திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.

திண்டிவனத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.